உள்ளடக்கத்துக்குச் செல்

நேர்பாலீர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேர்பாலீர்ப்பு (Homosexuality), ஒருபாலீர்ப்பு, தன்பாலின ஈர்ப்பு அல்லது ஓரினச்சேர்க்கை என்பது ஆணுக்கும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலீர்ப்பைக் குறிக்கும்.

ஒரு நபர் தன் பாலினத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் மீது காதல், ஈர்ப்பு ஏற்படுவதை நேர்பாலீர்ப்பு என அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

நேர்பாலீர்ப்பு என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள் உட்பட காலம் தோன்று இயற்கையாக இருந்து வந்துள்ளது என்பதற்கு அறிவியல்பூர்வமாக ஆதாரம் உள்ளது, ஆனால் பொதுவாக சில மதங்களின் செயற்பாட்டால் சமூகங்களில் வெறுப்பிற்குரிய விடயமாக அணுகப்பட்டது. இன்றளவும் இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதத்தை தனது நாட்டின் முதல் மதமாக ஏற்ற நாடுகளில் நேர்பாலீர்ப்பு என்பது அவமானகரமான விடயமாகவும் சட்டவிரோதமானதாகவும் உள்ளது.

செப்டம்பர் 6, 2018 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் நேர்பாலீர்ப்பு குற்றமற்றது என்று தீர்ப்பு வழங்கியது. இலங்கையில் அடிப்படையில் நேர்பாலீர்ப்பு குறித்த வழக்குகள் பதிவது அரிது. எனினும் அந்நாட்டு உச்சநீதிமன்றதில் இதுகுறித்த தீர்ப்பு எதுவும் இதுவரை வந்தது இல்லை.

வரலாறு

[தொகு]

ஹோமோ செக்ஸ் என்ற சொல்லின் அடிப்படை கிரேக்கச் சொல்லான "ஹோமோ"விலிருந்து வந்ததாகும். கி.பி 1869ல் ஜெர்மனி உளவியல் நிபுணர் கார்ல் மரியா பென் கெர்ட் என்பவர் நேர்பாலீர்ப்பை ஹோமோ செக்ஸ் என்று அழைத்தார். கிரேக்க நாகரீகத்தில் நேர்பாலீர்ப்பைப் போற்றியமைக்கான ஆதாரங்கள் உள்ளன. கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் நேர்பாலீர்ப்பு உள்ள ஆண்களே வீரம் நிறைந்தவர்களாக இருப்பர் என்று தெரிவிக்கின்றார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே நேர்பாலீர்ப்பு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதனால் கிரேக்கத்தில் ஆண் ஓரினச்சேர்க்கையை மிகவும் பெருமைக்குரிய விஷயமாக வீரர்கள் நினைத்தார்கள்.

நான்காம் நூற்றாண்டில் இந்நிலை மாறியது, நேர்பாலீர்ப்பு இயற்கைக்கு விரோதமானதாகவும், இறைவனுக்கு எதிரானதாகவும் கருத்து பரவத்தொடங்கியது. இன்றுவரை கொடுமையான தண்டனைகளையும், மரண தண்டனையையும் தரக்கூடிய குற்றமாக கருதப்படத் தொடங்கியது இந்தகாலத்தில்தான். பாலுறவு என்பது குழந்தை பெறுவதற்காகவே; குழந்தை பெறமுடியாத பாலுறவுகள் தேவையற்றது என்ற எண்ணமே நேர்பாலீர்ப்பை வெறுக்கும் தன்மைக்கு முக்கிய காரணமாகும். மாவீரன் நெப்போலியன் 1804ல் வயதுக்கு வந்த இருவர் நேர்பாலீர்ப்பில் ஈடுபடுதல் குற்றமற்றது என சட்டமியற்றினார்.

இந்தப் பால்நிலை வகுபாடானது 60களில் இடம்பெற்ற ஸ்ரோன்வோல் கலவரங்களைத் தொடர்ந்து பொதுச் சமூகங்களில் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. பல நாடுகள் நேர்பாலீர்ப்பைச் சட்டபூர்வமானதாய் அங்கீகரித்துள்ளன.

நேர்பாலீர்ப்புள்ள ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் பாலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் gay என்கிறார்கள். அதுபோல ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதை lesbian என்கிறார்கள். இவற்றை தமிழில் மகிழ்வன், மகிழினி என்று சுட்டுகிறார்கள். இந்த நேர்பாலீர்ப்பை விரும்பும் நபர்கள் சிலர் இருபாலீர்ப்பை விரும்பும் நபர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.

ஆப்பிரிக்கா

[தொகு]

வரலாற்றில் முதல் நேர்பாலீர்ப்பாளராக கி.மு. 2400ல் வாழ்ந்த Khnumhotep மற்றும் Niankhkhnum ஆகிய நேர்பாலீர்ப்பு ஆண்கள் கருதப்பெறுகின்றனர்.

அமெரிக்கா

[தொகு]

2004 ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் கவின் நெவ்சம் (Gavin Newsom) முதல் முறையாக கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு லெஸ்பியன் தம்பதிக்கு திருமண உரிமத்தை வழங்கினார். ஆனால் இந்த முயற்சிகள் தொடரவில்லை. சட்டப்படி நேர்பாலீர்ப்புடையோர்களின் திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை. நியூ யார்க்கில் நிகழ்ந்த ஸ்டோன்வால் கிளர்ச்சிதான் (Stonewall riots) உலகில் முதல் முதலாக நேர்பாலீர்ப்புடையோருக்காக நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி. ஜூன் 28, 1969 அன்று ஸ்டோன்வால் விடுதியில் நேர்பாலீர்ப்புடையவர்களுக்கு எதிராக காவல்துறை தாக்குதல் தொடுத்தபோது, அவர்கள் வெகுண்டு எழுந்து கலகத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு அலையலையாகப் பரவி உலக கவனத்தை ஈர்த்தது. நேர்பாலீர்ப்புடையோர் சமூகத்திலிருந்து முதல் முறை வெளிப்படையாக அமெரிக்க அரசியலில் உயர் பதவி வகித்தவர் ஹார்வே மில்க். சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் நகர மேற்பார்வையாளராக இவர் பணியாற்றினார். நேர்பாலீர்ப்புடையோருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கும் வகையில் ஓர் அரசாணையை பிரகடனப்படுத்தினார். நேர்பாலீர்ப்புடையோருக்காக 1978ல் சான் பிரான்சிஸ்கோவில் நிகழ்ந்த பிரம்மாண்டமான திருவிழாவில் முதல் முறையாக 2,50,000 பேர் கலந்து கொண்டனர். பாலியல் ரீதியான பாகுபாடுகளைத் தவிர்க்கும் சட்டங்களை 21 அமெரிக்க மாகாணங்களும், பாலின ரீதியான பாகுபாடுகளைத் தவிர்க்கும் சட்டங்களை வாஷிங்டன் உள்ளிட்ட 16 மாகாணங் களும் நிறைவேற்றியுள்ளன. வாஷிங்டன் உள்ளிட்ட 6 மாகாணங்களில் ஒரு பால் திருமணங்கள் அங்கீகரிப்பட்டுள்ளன.[1] 1982ல் அமெரிக்க மாகாணமான விஸ்கான்சினில் முதல் முறையாக பாலியல் ரீதியான பாகுபாடு தடை செய்யப்பட்டது. தொடர்ந்து 1984ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள பெர்க்கலி நகரத்தில் நேர்பாலீர்ப்புடையவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வெர்மோன்ட் மாநிலத்தில் 2000ம் ஆண்டு, நேர்பாலீர்ப்புடையவர்களுக்கான திருமணம் அங்கீகரிக்கப்பட்டது ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் எம். பியான பெர்னிபிராங்க் மற்றும் ஜிம்ரெய்டி ஆகியோர் ஜூலை 7 2012ல் திருமணம் செய்துகொண்டனர். இதன் மூலம் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பேரவை எம்.பி. நேர்பாலீர்ப்புத் திருமணம் செய்து கொண்டதாக பூஸ்டன் குளோப் நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது.[2]

பாகிஸ்தான்

[தொகு]

பாகிஸ்தானைச் சார்ந்த ரெஹனா கவுசார் மற்றும் சோபியா கமர் ஆகிய இரு பெண்களும் நேர்பாலீர்ப்பு இணை ஆவர். இவர்கள் வரலாற்றின் முதல் இசுலாமிய நேர்பாலீர்ப்பாளர்களாகக் கருதப்பெறுகின்றனர்.[3]

நேர்பாலீர்ப்புக்கான காரணங்கள்

[தொகு]
தற்பால்சேர்க்கை சட்ட உடன்பாடு
  தற்பால் திருமணங்கள்
  தற்பால் சேர்ந்து வாழ்தல்
  தற்பால் சேர்ந்து வாழத்தடை
  பன்னாட்டு மணச்சான்றிதழ் அங்கீகாரம்
தற்பால்சேர்க்கை சட்ட எதிர்
  குறைந்த தண்டனை
  அதிக தண்டனை
  ஆயுட்கால சிறை
  மரண தண்டனை

நேர்பாலீர்ப்பு விருப்பத்திற்கு மரபியல் கோட்பாடு, ஹார்மோன் கோட்பாடு, சைக்கோ அனலிடிக்கல் தியரி, பியர் இன்ஃபுளுயன்ஸ் தியரி என்ற நான்கு கோட்பாடுகள் இருந்தாலும் மருத்துவ ஆய்வுகள் ஏற்கவில்லை.[4]

உலகில் நான்கு சதவீத மக்கள் நேர்பாலீர்ப்பை விரும்புகின்றார்கள். இவர்களின் வளர்ப்பிற்கும் இந்த தற்பால்சேர்க்கை விருப்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த பாலியல் தேர்வானது, குறிப்பிட்ட சில குடும்பங்களில் வழிவழியாக தொடர்வதையும், இரட்டையர்களின் தேர்வுகள் ஒரேமாதிரியாக இருப்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.[5] எனவே நேர்பாலீர்ப்பு விருப்பம் வளர்ப்பினால் ஏற்படுதில்லை என்று லண்டன் உளவியல் மையத்தின் ஆய்வாளர் க்லென் வில்சன், கிழக்கு லண்டன் பல்கலைக்கழக உளவியல் உயிரியலாளர் காசி ரகுமான் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

நேர்பாலீர்ப்பில் ஈடுபடாத, ட்ரோசோக்பிலா எனும் பூச்சியில் மரபணுவை மாற்றி சோதித்தபோது, அவை நேர்பாலீர்ப்பில் ஈடுபாடுடன் இருப்பதை கண்டறிந்தனர்.[6]

சூழ்நிலை நேர்பாலீர்ப்பாளர் (Situational Homosexual) என்ற வகையினர் நேர்பாலீர்ப்பில் சூழ்நிலை காரணமாக ஈடுபடுபவர்கள், இவர்களை முழுமையான நேர்பாலீர்ப்பாளர் என நினைத்தல் கூடாதென மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கீழ்வரும் காரணிகளால் நேர்பாலீர்ப்பில் ஈடுபடுகிறார்கள் என்று கூறப்பெறுகிறது.

  • ஒரே விடுதியில் தங்கியிருக்கும் நபர்கள். இவர்களில் ஆண்கள், பெண்கள், மாணவர்களும் அடங்குவர்.
  • ஓரிடத்தில் வேலையின் காரணமாக தங்கியிருப்பவர்கள்.
  • சிறையில் ஓரிடத்தில் இருக்கும் கைதிகள், அலுவகப் பணி காரணமாக தங்கியிருப்பவர்கள்.
  • திருமணம் ஆனபிறகு மனைவியுடன் உறவுகொள்ள இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள்.

நேர்பாலீர்ப்பின் வகைகள்

[தொகு]
  1. வெளிப்படையான நேர்பாலீர்ப்பாளர் (Blatant Homosexual)
  2. பயமில்லாத நேர்பாலீர்ப்பு ஆண் (Desparate Male Homosexual)
  3. சூழ்நிலை நேர்பாலீர்ப்பாளர் (Situational Homosexual)
  4. நேர்பாலீர்ப்புப் பாலியல் தொழிலாளர் (Homosexual prostitutes)
  5. Adjusted Homosexual [7]

ஆண் நேர்பாலீர்ப்பின் செயல்பாடுகளின் அடிப்படையில் அதில் ஈடுபடுகின்றவர்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பெறுகிறார்கள்.

  • பாசிவ் ஹோமோ - உடலுறவுக்கு ஆசனவாயை தருபவர்கள்
  • ஆக்டிவ் ஹோமோ - உடலுறவின் போது, ஆண்குறியை செலுத்துபவர்.[8]

மிருகங்களிடையே நேர்பாலீர்ப்பு

[தொகு]

முற்காலத்தில் நேர்பாலீர்ப்பு ஒரு மனநோய் என்றும், குறைபாடு என்றும் அமெரிக்க மனவியல் கூட்டமைப்பு போன்றவை கருதி வந்தன. ஆனால் 1973ல் ஆய்வுகளின் மூலம் நேர்பாலீர்ப்பு இயற்கையானது என்பதை அறிந்து, இது இயற்கையான உணர்வே என வெளிப்படுத்தினர். சீனாவின் சென்னோங்கியா பகுதியில் உள்ள தங்கநிறக் குரங்குகளை கண்காணித்ததில், அவை நேர்பாலீர்ப்பில் ஈடுபடுவதை அறிந்துகொண்டனர். அதோடு டால்பின்கள், லேமன் அல்பாற்றாஸ்கள், பூனைகள் போன்ற விலங்குகளும் நேர்பாலீர்ப்பில் ஈடுபடுதை ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.[9]

சமயத்தின் பார்வை

[தொகு]

இந்து மதம்

[தொகு]

இந்து மதத்தின் ஒழுக்கக் கோட்பாடுகள் ஸ்மிருதி எனும் நூல்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மிருதிகள் காலத்திற்கு தக்கவாறு மாறுகின்றவை.[10] மனுஸ்மிருதி நேர்பாலீர்ப்பில் ஈடுபடுபவர்கள் குளித்தாலே போதும் என்று கூறுகிறது. வாத்ஸ்யாயனரின் காமசாத்திரம் நூலில் நேர்பாலீர்ப்பாளர்களின் திருமணங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பாற்கடலில் கிடைக்கப்பெற்ற அமுதத்தினை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பிரித்துதருவதற்காக திருமால் மோகினி அவதாரமெடுத்தார். அதனை காணாத சிவபெருமான் மீண்டும் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச்சொன்னார். அந்த மோகினியின் அழகில் மயங்கிய சிவன் அவளுடன் உறவுகொண்டதாகவும், அதனால் ஐயப்பன் பிறந்ததாகவும் ஒரு தொன்மக் கதை உள்ளது. சிலர் இதனை கடவுள்களின் நேர்பாலீர்ப்பு கதையாகக் கருதுகிறார்கள்.

கிறிஸ்துவம்

[தொகு]

ஜான் பாஸ்வெல் என்ற வரலாற்று ஆசிரியர் நேர்பாலீர்ப்பு கிறித்துவத்தின் தொடக்ககாலத்தில் எதிர்க்கப்பெறவில்லை என்கிறார். ஆனால் மதரீதியான எதிர்ப்பு மிகவேகமாக பரவியது, செயின்ட் அகஸ்டின் மற்றும் செயின்ட் தாமஸ் ஆக்வீனாஸ் என்ற மதகுருமார்களின் கூற்றுப்படி, குழந்தை பெற தகுதியற்ற நேர்பாலீர்ப்பு இயற்கைக்கு விரோதமாக இருந்தமையும், நேர்பாலீர்ப்பு ஒரு குறைபாடு என்ற மருத்துவதுறையின் அப்போதைய கண்ணோட்டமும் இந்த எதிர்ப்பினை வலுப்பெறச் செய்தன.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-17. பார்க்கப்பட்ட நாள் 2014-01-13.
  2. http://www.dinamalar.com/News_Detail.asp?id=503203&Print=1 பார்த்த நாள் 17-06-2013
  3. முதல் முறையாக முஸ்லிம் ஓரினச்சேர்க்கை பெண் ஜோடியின் திருமணம் - பணிப்புலம்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி
  5. BA
  6. பாலியல் ஆய்வுகள் கூறுவது என்ன - முனைவர் பத்மஹரி
  7. உயிர் டாக்டர் நாராயாணரெட்டி
  8. ஓரினச்சேர்க்கை விரிவான மருத்துவ அலசல் S.ஜீவராஜன் மாற்று மருத்துவம் அக்டோபர் 2008
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-20. பார்க்கப்பட்ட நாள் 2013-06-02.
  10. http://www.jeyamohan.in/?p=12281

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்பாலீர்ப்பு&oldid=3885536" இலிருந்து மீள்விக்கப்பட்டது