உள்ளடக்கத்துக்குச் செல்

மால்டா முற்றுகை (இரண்டாம் உலகப் போர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்டா முற்றுகை
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி
Service personnel and civilians clear up debris on a heavily bomb-damaged street in Valletta, Malta on 1 May 1942
Service personnel and civilians clear up debris on a heavily bomb-damaged street in Valletta, Malta on 1 May 1942

குண்டுவீச்சினால் சேதமடைந்த தெருவின் இடிபாடுகளை அகற்றும் மால்டா மக்கள் (மே 1, 1942).
நாள் 11 ஜூன் 1940–20 நவம்பர் 1942[1]
இடம் மால்டா
தெளிவான நேச நாட்டு வெற்றி[1][2]
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 மால்ட்டா
 ஆத்திரேலியா
 கனடா
 நியூசிலாந்து
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா
தளவாட வழங்கல் மட்டும்:
 சுதந்திர பிரான்ஸ்
 கிரேக்க நாடு
 போலந்து
 நோர்வே
 ஐக்கிய அமெரிக்கா
 இத்தாலி
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஆண்ட்ரூ கன்னிங்காம்
ஐக்கிய இராச்சியம்வில்லியம் டாபி
ஐக்கிய இராச்சியம் கீத் பார்க்
ஐக்கிய இராச்சியம் ஹியூக் லாய்ட்
நாட்சி ஜெர்மனி ஹான்ஸ் கெய்ஸ்லர்
நாட்சி ஜெர்மனி ஆல்பெர்ட் கெஸ்செல்ரிங்
நாட்சி ஜெர்மனி மார்ட்டின் ஹார்லிங்ஹாசன்
இத்தாலி பிரான்செஸ்கோ பிரிகோலோ
பலம்
716 சண்டை வானூர்திகள்[2] ~ 2,000 போர் வானூர்திகள்
இழப்புகள்
433 சண்டை வானூர்திகள்[2]
40 நீர்மூழ்கிகள்[3]
2 வானூர்தி தாங்கிக் கப்பல்கள்[3]
4 குரூசர் ரக கப்பல்கள்[4]
19 டெஸ்டிராயர்கள்[4]
2,301 வான்படை வீரர்கள்
30,000 கட்டிடங்கள்[5]
1,300 பொதுமக்கள்[5]
357 ஜெர்மானிய வானூர்திகள்
175 இத்தாலிய வானூர்திகள்[2]
இத்தாலிய கடற்படையின் போக்குவரத்துப் பிரிவில் 72 % அழிவு
அச்சு வர்த்தகக் கப்பல்களில் 23% அழிவு[6]
2,304 சரக்குக் கப்பல்கள்[7]
17,240 பேர்[8]
~50 ஜெர்மானிய நீர்மூழ்கிகள்[3]
~16 இத்தாலிய நீர்மூழ்கிகள்[3]

இரண்டாம் உலகப் போரில் மால்டா முற்றுகை (Siege of Malta) என்பது நடுநிலக்கடலில் அமைந்துள்ள மால்டா தீவினை நேச நாட்டுப் படைகளிடமிருந்து கைப்பற்ற அச்சுப் படைகள் மேற்கொண்ட முயற்சிகளைக் குறிக்கிறது. 1940-1942 காலகட்டத்தில் நடைபெற்ற இம்முற்றுகை நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும்.

மால்டா தீவு நடுநிலக்கடலின் கடல்வழிகளையும் சரக்குப் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய இடத்தில் அமைந்திருந்தது. அதனைக் கட்டுப்படுத்துவோர் நடுநிலக்கடல் சரக்கு போக்குவரத்திற்கு இடையூறு செய்ய இயலும். மே 1940 இல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் போர் மூண்ட பின்னர் அங்கு சண்டையில் ஈடுபட்டுள்ள படைகளுக்கு நடுநிலக்கடல் வழியாகத் தளவாடங்களை வழங்குதல் அவசியமானது. இதனால் மால்டாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது. மால்டா நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் உள்ளவரை வடக்கு ஆப்பிரிக்காவில் வெற்றி கடினம் என்பதை உணர்ந்த அச்சு தளபதிகள் அதனைக் கைப்பற்ற முயன்றனர். வான்வழியாக தொடர்ந்து குண்டுவீசியும், கடல்வழிகளை அடைத்து முற்றுகையிட்டு மால்டா மக்களைப் பட்டினி போடுவதன் மூலமும் அத்தீவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயனறன.

ஜூன் 1940 இல் இத்தாலிய வான்படையும் கடற்படையும் மால்டா முற்றுகையைத் தொடங்கின. மால்டா நகரங்கள் மீது தொடர்ச்சியாக குண்டு வீசப்பட்டது. மால்டாவில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானிய வான்படை மற்றும் கடற்படைப்பிரிவுகள் இத்தாக்குதல்களை எளிதில் சமாளித்து விட்டன. ஜனவரி 1941 இல் இத்தாலியர்களால் தனித்து மால்டாவைக் கைப்பற்ற இயலாது என்பதை உணர்ந்த நாசி ஜெர்மனியின் தளபதிகள், அத்தீவைத் தாக்கை தங்கள் வான்படையான லுஃப்ட்வாஃபேவை அனுப்பினர். லுஃப்ட்வாஃவேவின் வரவு மால்டா முற்றுகையைத் தீவிரப்படுத்தியது. வான் ஆதிக்கம் பெற்றிருந்த லுஃப்ட்வாஃபே குண்டுவீசி வானூர்திகள் மால்டா இலக்குகள் மீதும் அப்பகுதியில் காவலுக்கிருந்த பிரித்தானியக் கடற்படைக் கப்பல்கள் மீதும் தொடர்ந்து குண்டுவீசித் தாக்கின. மே 1941 வரை நடந்த முதல் கட்ட மோதல்களில், அச்சு வான்படைகள் பெரு வெற்றி பெற்றன. நடுநிலக்கடல் பகுதியில் நேச நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்து அடியோடு நின்று போனது. மால்டாவின் பொதுமக்கள் நகரங்களை விட்டு வெளியேறி ஊர்ப்புறங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். ஜனவரி-மே காலகட்டத்தில் 2500 டன் எடையுள்ள உயர்ரக வெடிபொருட்களை லுஃப்ட்வாஃபே வானூர்திகள் மால்டாவின் நகரங்கள் மீது வீசியிருந்தன.

ஏப்ரல் 1941 இல் பால்கன் போர்த்தொடர் ஆரம்பமானதால், ஜெர்மானியர்களின் கவனம் சிதறியது. அதில் பங்கேற்பதற்காகப் மால்டாவிலிருந்து பல லுஃப்ட்வாஃபே வான்படைப்பிரிவுகள் பால்கன் குடாப் பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் மால்டா மீதான ஜெர்மானிய வான்தாக்குதல்களின் தீவிரம் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனை பயன்படுத்திக் கொண்டு ஏப்ரல்-அக்டோபர் 1941 காலகட்டத்தில் பிரித்தானியர்கள் புதிய துணைப்படைகளையும் தளவாடங்களையும் மால்டாவுக்கு அனுப்பினர். மால்டாவின் பாதுகாவல் நிலைகளும், படைகளும் பலப்படுத்தப்பட்டன. மால்டாவைத் தளமாகக் கொண்டு நேச நாட்டு வான் மற்றும் கடற்படைகள் அச்சு சரக்குக் கப்பல்கள் மீது எதிர்த்தாக்குதல் தொடுக்கத் தொடங்கின. ஜூன் - நவம்பர் 1941 இல் மால்டா முற்றுகையின் போக்கு நேச நாடுகளுக்கு சார்பாகத் திரும்பியது. நேச நாட்டுத் தாக்குதல்களால் அச்சு நாடுகளின் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை தளவாட வழங்கல் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் டிசம்பர் 1941 இல் மீண்டும் லுஃப்ட்வாஃபே மால்டா தீவினை அடக்க அனுப்பப்பட்டது.

டிசம்பர் 1941இல் அச்சு நாடுகளின் தெற்கு முனை தலைமைத் தளபதியாக ஜெர்மானிய ஃபீல்டு மார்சல் ஆல்பெர்ட் கெஸ்செல்ரிங் நியமிக்கப்பட்டார். கிழக்குப் போர்முனையிலிருந்து பல லுஃப்ட்வாஃபே படைப்பிரிவுகள் மால்டாவுக்குத் திருப்பிவிடப்பட்டன. ஏழு மாதங்களாக நின்று போயிருந்த ஜெர்மானியத் தாக்குதல் மீண்டும் ஆரம்பமானது. மால்டா வான்வெளியில் பிரித்தானிய வான்படைக்கும் லுஃப்ட்வாஃபேக்குமிடையே வான் ஆதிக்கமடைய கடும் சண்டை நிகழ்ந்தது. ஏப்ரல் 1942 இல் லுஃப்ட்வாஃபேவின் கை ஓங்கி மீண்டும் அதற்கு வான் ஆதிக்க நிலை கிட்டியது. ஜூலை அல்லது ஆகஸ்ட் 1942 இல் மால்டா மீது படையெடுக்க அச்சு நாட்டுத் தளபதிகள் திட்டம் வகுத்தன. ஆனால் மே-ஜூன் மாதங்களில் பல புதிய நேச நாட்டு ஸ்பிட்ஃபையர் ரக சண்டை வானூர்தி படைப்பிரிவுகள் மால்டாவுக்கு அனுப்பப்பட்டன. இவற்றின் வருகையால் மீண்டும் சண்டையின் போக்கு மாறியது. ஜூலை மாதத்தில் பிரித்தானிய வான்படை வான் ஆதிக்க நிலையை அடைந்தது. அடுத்த சில மாதங்களில் மால்டாவுக்கு கடல்வழியாக புதிய படைப்பிரிவுகளையும், தளவாடங்களையும் தாங்கிய பல கப்பல் கூட்டங்கள் அனுப்பப்பட்டன. இவற்றின் வரவால், மால்டாவில் நேச நாட்டுப் பாதுகாவல் படைகளின் பலம் பெருகியது. இக்காரணங்களால் அச்சு நாட்டு படையெடுப்புத் திட்டம் கைவிடப்பட்டது.

நேச நாட்டு வான்படை மற்றும் கடற்படைபலம் பெருமளவு அதிகரித்த பின்னர் நடுநிலக் கடலில் கடல் ஆளுமை அடைய அவை ஒரு பெரும் தாக்குதலைத் தொடங்கின. அக்டோபர்-நவம்பர் 1942 இல் நடைபெற்ற இத்தாக்குதலால் கெஸ்செல்ரிங்கின் படைகள் நிலை குலைந்து போயின. மேலும் நவம்பர் 8ம் தேதி நிகழ்ந்த டார்ச் நடவடிக்கையால் நடுநிலக்கடல் பகுதியில் கூடுதலான அமெரிக்கப் படைகள் வந்திறங்கின. மேலும் இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டையில் அச்சுப் படைகளின் தோல்விக்குப் பிறகு வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் நேச நாட்டு வெற்றி உறுதியானது. இக்காரணங்களால் அச்சுப் படைகள் மால்டா முற்றுகையைக் கைவிட்டன. அதன் பின்னர் அவ்வப்போது அச்சு குண்டுவீசிகள் மால்டாவைத் தாக்கி வந்தாலும் முற்றுகை முடிவுக்கு வந்தது.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Taylor 1974, p. 182.
  2. 2.0 2.1 2.2 2.3 Bungay 2002, p. 64.
  3. 3.0 3.1 3.2 3.3 Spooner 1996, p. 5.
  4. 4.0 4.1 Spooner 1996, p. 3.
  5. 5.0 5.1 Spooner 1996, p. 11.
  6. Bungay 2002, p. 66.
  7. Spooner 1996, p. 343.
  8. Spooner 1996, p. 326.

மேற்கோள்கள்

[தொகு]