இரண்டாம் அல்-அலமைன் சண்டை
இரண்டாம் அல்-அலமைன் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி | |||||||
தாக்கும் பிரித்தானியக் காலாட்படை வீரர்கள் (அக்டோபர் 23, 1942) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நேச நாடுகள்: ஐக்கிய இராச்சியம் ஆத்திரேலியா நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா இந்தியா சுதந்திர பிரான்ஸ் கிரேக்க நாடு | அச்சு நாடுகள்: ஜெர்மனி இத்தாலி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஹரால்ட் அலெக்சாந்தர் பெர்னார்ட் மோண்ட்கோமரி | எரிவின் ரோம்மல் கேயார்க் ஸ்டம் † எட்டோரே பாஸ்டிக்கோ |
||||||
பலம் | |||||||
195,000 பேர்[1] 1,029 டாங்குகள் 435 கவச ஊர்திகள்[1] 730 – 750 வானூர்திகள் (530 இயங்கு நிலையில்) 892[2] – 908 பீரங்கிகள்[1] | 116,000 பேர்[3] 547 டாங்குகள் 192 கவச ஊர்திகள் 770 – 900 வானூர்திகள் (480 இயங்கு நிலையில்) |
||||||
இழப்புகள் | |||||||
13,560 பேர் 332 – ~500 டாங்குகள் 111 பீரங்கிகள் 97 வானூர்திகள் | 30,542 பேர் ~500 tanks 84 வானூர்திகள் |
இரண்டாம் அல்-அலமைன் சண்டை (Second Battle of El Alamein) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதுவே மேற்குப் பாலைவன்ப் போர்த்தொடரின் திருப்புமுனையாக அமைந்தது. இதில் நேச நாட்டுத் தளபதி பெர்னார்ட் மோண்ட்கோமரியின் படைகள் ஜெர்மானிய தளபதி ரோம்மலின் தலைமையிலான அச்சுப் படைகளின் கிழக்கு நோக்கி முன்னேற்றத்தை அடியோடு முறியடித்தன. இச்சண்டையில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் சூயசு கால்வாயைக் கைப்பற்றும் அச்சு நாட்டு மேல்நிலை உத்தி வெற்றிபெற வாய்ப்பில்லாமல் போனது. இச்சண்டையே வடக்கு ஆப்பிரிக்க களத்தில் அச்சுப் படைகளின் தோல்வியின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.
பின்புலம்
[தொகு]1940-42 காலகட்டத்தில் வடக்கு ஆப்பிரிக்க போர்முனையில் அச்சுப்படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் தொடர்ந்து சண்டை நிகழ்ந்து வந்தது. இரு தரப்பினரும் வடக்கு ஆப்பிரிக்காவில் கிழக்கு மேற்காக தாக்கியும் பின்வாங்கியும் இரு ஆண்டுகள் சண்டையிட்டனர்.
செப்டம்பர் 1940ல் இத்தாலியின் எகிப்து படையெடுப்பால் தொடங்கிய இப்போர்த்தொடர், மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் என்று அழைக்கப்பட்டது. லிபியாவிலிருந்து எகிப்து மீது படையெடுத்த இத்தாலியப் படைகளை முறியடித்த நேச நாட்டுப் படைகள் அவற்றை விரட்டிக் கொண்டு லிபியாவுக்குள் சென்றன. இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட இத்தாலிக்கு உதவ இட்லர் தளபதி எர்வின் ரோம்மல் தலைமையிலான ஆப்பிரிக்கா கோர் ஜெர்மானியப் படைப்பிரிவை வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினார். ரோம்மலின் போர்த்திறனாலும், புதிதாக வந்திறங்கிய ஜெர்மானியப் படைப்பிரிவுகளின் பலத்தாலும் போரின் போக்கு மாறியது. மீண்டும் 1941ல் ரோம்மலின் தலைமையில் கிழக்கு நோக்கி படையெடுத்தன. நேசநாட்டுப் படைகளை முறியடித்த ரோம்மலின் படைகள் டோப்ருக் நகரை முற்றுகையிட்டன. நீண்ட ஆயத்தங்களுக்குப் பின்னர் நேச நாட்டுப் படைகள் குரூசேடர் நடவடிக்கையின் மூலம் ரோம்மலைத் தோற்கடித்து பின்வாங்கச் செய்தன. 1941ன் இறுதியில் அல்-அகீலா அரண்நிலைகளுக்குப் பின்வாங்கிய ரோம்மலின் படைகள் 1942ல் மீண்டும் கிழக்கு நோக்கிப் படையெடுத்தன. கசாலா சண்டையில் வெற்றி பெற்று டோப்ருக்கைக் கைப்பற்றிய ரோம்மலின் படைகள் எகிப்து எல்லையைத் தாண்டி முன்னேறின.
ரோம்மலின் கிழக்கு திசை முன்னேற்றத்தை முதலாம் எல் அலாமெய்ன்சண்டை, அலாம் எல் அல்ஃபா சண்டை ஆகியவற்றின் மூலம் பிரித்தானியப் படைகள் தடுத்து நிறுத்தின. சில மாத கால மந்தநிலைக்குப் பின்னர் அதுவரை பின்வாங்கிக் கொண்டிருந்த பிரித்தானியப் படைகள் மீண்டும் ரோம்மலின் படைகளை அல்-அலமைனில் தாக்கின. இரண்டாம் அல்-அலமைன் சண்டை நிகழ்ந்த காலகட்டத்தில் வடக்கு ஆப்பிரிக்காவின் மேல்நிலை உத்தி நிலை நேச நாட்டுப் படைகளுக்கு சாதமாக மாறியிருந்தது. நேச நாடுகளின் தளவாட உற்பத்தி பலம் மற்றும் எண்ணிக்கை பலம் ஆகியவை ரோம்மலின் படைகளை இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றிருந்தன. நாளுக்கு நாள் நேசநாட்டுப் படைப்லம் கூடிக் கொண்டே போனது. ஈராண்டுகள் சண்டைகளில் பல பிரித்தானியத் தளபதிகள் மாற்றப்பட்டு இறுதியில் ரோம்மலின் போர்த்திறனிற்கு ஏற்ற திறனுடைய பெர்னார்ட் மோண்ட்கோமரி பிரித்தானிய 8வது ஆர்மியின் தளபதியாகப் பொறுப்பேற்றிருந்தார். இக்காரணங்களால் முதலாம் அல்-அலமைனில் பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றால் வடக்கு ஆப்பிரிக்காவில் ரோம்மலின் தோல்வி உறுதி என்ற நிலை உருவானது. அலாம் எல் அல்ஃபா சண்டைக்குப் பின் கிடைத்த இரு மாத இடைவெளியை இரு தரப்பினரும் தங்கள் படைகளை பலப்படுத்த பயன்படுத்தியிருந்தனர். ரோம்மலின் படைகள் அல்-அலமைன் அரண் நிலைகளைச் சுற்றி பெரும் கண்ணிவெடிக் களங்கள், முட்கம்பி வேலிகள் ஆகிவற்றை அமைத்திருந்தன.
அக்டோபர் 23, 1942ல் இரண்டாம் அல்-அலமைன் சண்டை தொடங்கியது.
சண்டையின் போக்கு
[தொகு]இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. அவை
- நேசநாட்டுப் படைகளின் ஊடுருவல் (அக்டோபர் 23-24)
- அச்சுப் படைகளின் நொறுங்கல் (அக்டோபர் 24-25)
- அச்சுப் படைகளின் எதிர்த்தாக்குதல் (அக்டொபர் 26-28)
- சுப்பர்சார்ஜ் நடவடிக்கை (நவம்பர் 1-2)
- உடைத்து வெளியேற்றம் (நவம்பர் 3-7)
அக்டோபர் 29-30 தேதிகளில் போர்க்களத்தில் மந்த நிலை நிலவியது. இக்காலகட்டத்துக்கு எப்பெயரும் தரப்படவில்லை.
ஊடுருவல்
[தொகு]அக்டோபர் 23 முன்னிரவில் மோண்ட்கோமரியின் படைகள் ஒரு பெரும் பீரங்கித் தாக்குதலுடன் தங்கள் முன்னேற்றத்தைத் தொடங்கின. வட-தெற்காக அமைந்திருந்த அச்சு நாட்டு அரண்கோட்டில் தெற்கில் தாக்குதல் நிகழும் என்று ”பெர்ட்ராம் நடவடிக்கை” என்ற ஏமாற்று நடவடிக்கையின் மூலம் அச்சுத் தளபதிகளை நேச நாட்டுப் படைகள் ஏமாற்றியிருந்தனர். மாறாக வடக்குப் பகுதியில் தாக்குதல் நடைபெற்றது. தனது படைநிலைகளைச் சுற்றி ரோம்மல் உருவாக்கியிருந்த பெரும் கண்ணி வெடி களங்களை ஊடுருவ மோண்ட்கொமரி தனது காலாட்படை டிவிசன்களை பயன்படுத்தினார். டாங்குகள் மேலேறிச் செல்லும் போது அவற்றின் எடையைத் வெடி தூண்டுகோலாகக் கொண்டிருந்த கன்னிவெடிகள் நடந்து செல்லும் எடை குறைந்த காலாட்படை வீரர்கள் மேலேறி செல்லும் பொது வெடிக்கவில்லை. இந்த நடவடிக்கைக்கு லைட்ஃபூட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. காலாட்படைகளுடன் முன்னேறிய சண்டைப் பொறியாளர் படைப்பிரிவுகள் கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்து கண்ணிவெடிக் களங்களிடையே டாங்குகள் முன்னேற குறுகலான பாதைகளை அமைத்தன. 24ம் தேதி அதிகாலை 2.00 மணியளவில் அவ்வாறு உருவாக்கப்பட்ட பாதைகளின் வழியே மோண்ட்கோமரியின் கவச படைப்பிரிவுகள் மெதுவாக முன்னேறத் தொடங்கின. 24ம் தேதி காலை களத்தின் வட பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த டாங்குப் பாதைகளை அகலப்படுத்தப்பட்டன. 24ம் தேதி இரவில் நேச நாட்டுப் படைகளின் ஊடுருவல் முயற்சி முழு வெற்றியுடன் முடிவடைந்தது.
நொறுங்கல்
[தொகு]அடுத்த கட்டமாக அச்சுப்படைகளை பலவீனப்படுத்தும் முயற்சி தொடங்கியது. நேச நாட்டு வான்படை வானூர்திகள் அச்சு அரண்நிலைகளின் மீது இடைவெளி விடாது குண்டுமழை பொழிந்தன. பிரிட்டானியத் தாக்குதல் தொடங்கியதைக் கேள்விப்பட்ட ரோம்மல் ஜெர்மனியிலிருந்து வடக்கு ஆப்பிரிக்காவுக்கு விரைந்தார் (செப்டம்பர் மாதம் தொடர் போரிலிருந்து ஓய்வெடுப்பதற்காக அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது). அவருக்கு பதிலாக தற்காலிகப் பொறுப்பேற்றிருந்த ஜெனரல் கேயார்க் ஸ்டம் அக்டோபர் 24ம் தேதி திடீரென்று மாரடைப்பால் இறந்து போனதால், சண்டையின் மத்தியில் அச்சுப் படை தளபதியற்றுப் போனது. ரோம்மல் 25ம் தேதி போர்முனையினை அடைந்து மீண்டும் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 23ம் தேதி கண்ணிவெடிக் களத்தினூடே குறுகலான பாதையாக உருவாக்கப்பட்டிருந்த நேச நாட்டு டாங்குப் பாதை 25ம் தேதி இரவுக்குள் விரிவுபடுத்தப்பட்டு 6 மைல் அகலம் 5 மைல் ஆழமும் உள்ள ஒரு பெரும் பகுதி நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்திருந்தது. மூன்று நாட்களாக இடைவிடாது நடந்த பீரங்கி மற்றும் வான்வழி குண்டுவீச்சால் எல் அலாமெய்ன் களத்தின் வடக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அச்சுப் படைப்பிரிவுகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருந்தன. ரோம்மல் போர்முனையினை அடைந்த போது அச்சுப் படை அபாயகரமான நிலையில் இருந்தது.
-
நேச நாட்டு முதல் தாக்குதல்: 10pm 23 அக்டோபர்
-
அச்சு கவச டிவிசன்களின் எதிர்த்தாக்குதல்: 6pm 24 அக்டோபர்
-
நேசநாட்டு ஊடுருவல் முயற்சி: 25 அக்டோபர் இரவு
-
ஆஸ்திரேலிய 9வது டிவிசன் மீதான தாக்குதல்: நண்பகல், 25 அக்டோபர்
-
Folgore Parachutist Division attacked from three directions: 10:30pm 25 அக்டோபர்- 26 அக்டோபர் அதிகாலை
-
கிட்னி முகடை நேசநாட்டுப் படைகள் கைப்பற்றின: 5pm 26 அக்டோபர்
-
இரு தரப்பும் படைநிலைகளை மாற்றி அமைக்கின்றன: 26-27 அக்டோபர்
-
கிட்னி முகடு மீதான் அச்சு தாக்குதல் தோல்வி: 8am 27 அக்டோபர்
-
Allies attempt to push back Trento Division: 28 அக்டோபர்
-
ரோம்மல் படைநிலைகளை மாற்றுகிறார்: 29 அக்டோபர்
-
சூப்பர்சார்ஜ் நடவடிக்கை: 11pm 31 அக்டோபர் 1942.
-
அச்சுப் படைகளின் பின்வாங்கல் தொடங்குகிறது 2 நவம்பர்
-
அச்சுப் படைகளின் பின்வாங்கல்: 3 நவம்பர்
-
மீண்டும் சண்டையிட முயல்கின்றன: 3 நவம்பர்
-
இறுதி நேச நாட்டு வெற்றி
எதிர்த்தாக்குதல்
[தொகு]தொடர்ந்து இயங்கா நிலையில் இருந்தால் தனது படைப்பிரிவுகள் அழிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்த ரோம்மல் எல் அலாமெய்ன் களத்தின் வடக்குப் பகுதியில் அக்டோபர் 26 அன்று காலை தனது எதிர்த்தாக்குதலைத் தொடங்கினார். வடக்குக் களத்தில் சண்டை தீவிரமானது. அச்சுப் படைகளின் முன்னேற்றத்தை வான்படை குண்டுவீச்சின் துணையுடன் மோண்ட்கோமரி முறியடித்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் இரு தரப்பினராலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இரு தரப்பு படைகளும் முன்னேற முடியாமல் ஒரு மந்த நிலை உருவானது. புதிய இருப்புப் படைப்பிரிவுகளை ஈடுபடுத்தியும் இரு தளபதிகளாலும் எதிர் தரப்பு படைநிலைகளை ஊடுருவ முடியவில்லை. இரு தரப்பிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டிருந்தன. ஆனால் எண்ணிக்கை பலம் கொண்ட நேச நாட்டுப் படைகளால் எளிதில் இழப்புகளை ஈடுகட்டி புதிய இருப்புப் படைப்பிரிவுகளை களத்துக்கு அனுப்ப முடிந்தது. மேலும் ஏழு நாட்கள் தொடர் போருக்குப் பின்னர் அச்சு நாட்டுப் படைகளின் எரிபொருள் கையிருப்பு கிட்டத்தட்ட தீர்ந்து போயிருந்தது. நேச நாட்டுப் படைகளின் அடுத்த தாக்குதல் முயற்சியை தன் படையினால் சமாளிக்க முடியாது என்பதை ரொம்மல் உணர்ந்தார்.
சூப்பர்சார்ஜ்
[தொகு]அக்டோபர் 30-நவம்பர் 1 ல் ரோம்மல் பின்வாங்க ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் போதே மோண்ட்கோமரி தனது அடுத்த கட்ட தாக்குதலான சூப்பர்சார்ஜ் நடவடிக்கையைத் தொடங்கினார். பெரும் பீரங்கித் தாக்குதலுக்குப் பின்னர் பல நேச நாட்டு கவசப் படைப்பிரிவுகள் அச்சு அரண்நிலைகளை ஒரே நேரத்தில் தாக்கின. தாக்க்குதலில் ஈடுபட்ட முன்னணி கவசப் படைபிரிவுகளுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும் பின் தொடர்ந்து வந்த பிற பிரிவுகள் அச்சு அரண்நிலைகளை ஊடுருவித் தகர்த்தன. இத்தாக்குதலால் ரோம்மலின் எஞ்சிய கவசப் பிரிவுகள் சின்னாபின்னமாகின. சண்டை தொடர்ந்தால் தனது ஒட்டுமொத்த படையும் அழிந்து விடும் என்று அஞ்சிய ரோம்மல் முன் திட்டமிட்டபடி ஃபூக்கா கோட்டிற்கு பின் வாங்க தன் படைப்பிரிவுகளுக்கு உத்தரவிட்டார். நவம்பர் 3ம் தேதி தொடங்கவிருந்த இப்பின்வாங்கல் இட்லரின் தலையீட்டால் தள்ளிப்போனது.
முடிவு
[தொகு]தன் படைகள் பின்வாங்கக் கூடாது என்று இட்லர் பிடிவாதம் பிடித்ததால் பலவீனமடைந்த பல அச்சு படைப்பிரிவுகள் முன்னேறும் நேச நாட்டுப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தோல்வியடைந்த ரோம்மலின் படைகள் வேகமாக களத்தை விட்டு பின்வாங்கத் தொடங்கின. இட்லரின் தலையீட்டால் அவற்றுக்கு எதிர்பார்த்தைதை விட அதிகமான இழப்புகள் நேர்ந்திருந்தன. விரட்டி வரும் நேச நாட்டுப் படைகள் ஃபூக்கா அரண்நிலையையினையும் கைப்பற்றின. நவம்பர் 11 வரை பாலைவனத்தில் தப்பிக்கப் பின்வாங்கும் அச்சுப் படைகளை விடாது விரட்டி மெர்சா மாத்ரூ, சிடி பர்ரானி, சொல்லும், கப்பூசோ கோட்டை, ஆலஃபாயா கணவாய் ஆகியவற்றையும் கைப்பற்றின. எரிபொருள் தீர்ந்த பின்னரே நேச நாட்டுப் படைகளின் விரட்டல் நின்றது.
இவ்வாறு இரண்டாம் எல் அலாமெய்ன் நேச நாட்டுப் படைகளுக்கு பெரும் வெற்றியுடன் முடிவடைந்தது.
விளைவுகள்
[தொகு]எல் அலாமெய்ன் தோல்வியால் இரண்டு ஆண்டுகளில் மூன்றாம் முறையாக அச்சுப் படைகளின் கிழக்கு நோக்கிய முன்னேற்றம் முறியடிக்கப்பட்டு மீண்டும் அவை மேற்கு திசையில் எல் அகீலா அரண்நிலைகளுக்கு பின்வாங்கின. முன் இருமுறையும் நேச நாட்டு தளவாடப் போக்குவரத்து நெருக்கடியால் ரோம்மலின் படைகளை அவற்றால் எல் அகீலாவிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. ஆனால் இம்முறை நேசநாட்டு தளவாட இறக்குமதியும் போக்குவரத்தும் முன்பை விட பன்மடங்கு அதிகப்படுத்தப் பட்டிருந்ததால் மோண்ட்கோமரி உடனடியாக எல் அகீலா மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து ரோம்மலின் படைகளை விரட்டினார். ஜனவரி 1943ல் அச்சுப் படைகள் லிபியாவை விட்டு வெளியேறி துனிசியாவுக்கு பின்வாங்கி விட்டன. திரிப்பொலி நகரம் நேச நாட்டுப் படைகள் வசமானது. இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே டார்ச் நடவடிக்கையின் மூலம் இன்னொரு புறம் அமெரிக்கப் படைகள் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கின. இதனால் வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுபடைகள் இருமுனைப் போர் புரியும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை வடக்கு ஆப்பிரிக்கப் களத்தின் மிக முக்கியமான சண்டையாகக் கருதப்படுகிறது. சூயசு கால்வாயைக் கைப்பற்றும் அச்சுப் படைகளின் ஆப்பிரிக்க மேல்நிலை உத்தியைத் தகர்த்த திருப்புமுனைச் சண்டையாகவும் கருதப்படுகிறது.
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Barr, Niall (2005) [2004]. Pendulum of War: The Three Battles of El Alamein. Woodstock, NY: Overlook Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1585677382.
- Bauer, Eddy (2000) [1979]. The History of World War II (Revised ed.). London, UK: Orbis Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85605-552-3.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Bierman, John (2003) [2002]. War without hate: the desert campaign of 1940-1943 (New ed.). New York: Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0142003947.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Bright, Joan, ed. (1951). The Ninth Queen's oyal Lancers 1936–1945. Aldershot: Gale & Polden.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|month=
(help) - Buffetaut, Yves(1995);Operation Supercharge-La seconde bataille d'El Alamein; Histoire Et Collections
- Carver, Field Marshal Lord (2000) [1962]. El Alamein (New ed.). Ware, Herts. UK: Wordsworth Editions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1840222203.
- Clifford, Alexander (1943). Three against Rommel. London: George G. Harrap.
- Dear, I. C. B. (ed) (2005) [1995]. The Oxford Companion to World War II. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280666-6.
{{cite book}}
:|first=
has generic name (help) - Latimer, Jon (2002). Alamein. London: John Murray. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0719562037.
- Lucas-Phillips, C.E. (1962). Alamein. London: Heinemann. இணையக் கணினி நூலக மைய எண் 3510044.
- Lucas, James Sydney (1983). War in the Desert: The Eighth Army at El Alamein. Beaufort Books.
- Mead, Richard (2007). Churchill's Lions: A biographical guide to the key British generals of World War II. Stroud (UK): Spellmount. pp. 544 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86227-431-0.
- Playfair, Major-General I.S.O.; and Molony, Brigadier C.J.C.; with Flynn R.N., Captain F.C.; Gleave, Group Captain T.P. (2004) [1st. pub. HMSO 1966]. Butler, J.R.M (ed.). The Mediterranean and Middle East, Volume IV: The Destruction of the Axis Forces in Africa. History of the Second World War United Kingdom Military Series. Uckfield, UK: Naval & Military Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84574-068-8.
{{cite book}}
: Unknown parameter|lastauthoramp=
ignored (help) - Rommel, Erwin (1982) [1953]. The Rommel Papers. New York: Da Capo Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0306801570.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Vivian, Cassandra (2000). The Western Desert of Egypt: An Explorer's Handbook. Cairo: American University in Cairo Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 977424527X.
- Walker, Ian W. (2006). Iron Hulls, Iron Hearts; Mussolini's Elite Armoured Divisions in North Africa. Ramsbury: The Crowood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86126-646-4.
- Walker, Ronald (1967). The Official History of New Zealand in the Second World War 1939–1945: Alam Halfa and Alamein. Wellington, NZ: Historical Publications Branch.
- Watson, Bruce Allen (2007) [1999]. Exit Rommel: The Tunisian Campaign, 1942-43. Mechanicsburg PA: Stackpole. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-81173-381-5.