பெனிட்டோ முசோலினியின் இறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்து, பதவி நீக்கப்பட்ட பெனிட்டோ முசோலினியின் இறப்பு இரண்டாம் உலகப் போரின் இறுதிக் காலப்பகுதியில், 1945 ஏப்ரல் 28 ஆம் தேதி நிகழ்ந்தது. இத்தாலியப் போராட்ட இயக்கத்தைச் சார்ந்தோரால் கியுலினோ டி மெசெக்ரா என்னும் சிறிய ஊரில் அவர் கொல்லப்பட்டார். முதல் தகவல்களின்படி, "கேணல் வலேரியோ" என்னும் போர்ப் பெயரைக் (nom de guerre) கொண்ட கம்யூனிசச் சார்பாளரான வால்ட்டர் ஆடிசியோ என்பவரே முசோலிலினியைச் சுட்டுக் கொன்றதாகச் சொல்லப்பட்டது.[1] எனினும், போர் முடிந்த காலத்தில் இருந்து, முசோலினி இறந்த சூழ்நிலை, அவரைக் கொன்றவர் ஆகியவை தொடர்பில் குழப்பமும், முரண்பாடுகளும், சர்ச்சைகளும் நிலவின.

1940 ஆம் ஆண்டில், முசோலினி தனது நாட்டை, நாசி செருமனியின் சார்பாக இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தினார். ஆனால், விரைவிலேயே அவரது படைகள் தோல்வியைச் சந்தித்தன. 1943 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில், வடக்கு இத்தாலியில் இருந்த செருமன் பொம்மை அரசின் தலைவர் என்ற அளவுக்கு இறங்கிவிட்டார். தெற்கில் நேசநாட்டுப் படைகளின் முன்னேற்றத்தையும், உள்நாட்டில் கலகக்காரர்களையும், அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1945 ஏப்ரலில், நேசநாட்டுப் படைகள் வடக்கு இத்தாலியில் இருந்த கடைசி செருமன் பாதுகாப்பு அரண்களூடாக முன்னேறியதுடன், நகரங்களில் இடம்பெற்ற கலகக்காரர்களின் எழுச்சியும், முசோலினியை எதுவும் செய்யமுடியாதவர் ஆக்கின. ஏப்ரல் 25 ஆம் தேதி அவர் மிலானுக்குத் தப்பி ஓடி, அங்கிருந்து சுவிசு எல்லைக்குச் செல்ல முயற்சி செய்தார். அவரும் அவருடைய வைப்பாட்டியான கிளாரிட்டா பெட்டாச்சியும் ஏப்ரல் 25 ஆம் தேதி டொங்கோ என்னும் ஊருக்கு அண்மையில் கோமோ ஏரியில் பிடிபட்டனர். அடுத்தநாள் பிற்பகலில், அடொல்ப் இட்லர் தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், முசோலினியும், பெட்டாச்சியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முசோலினியினதும், பெட்டாச்சியினதும் உடல்களை மிலானுக்கு எடுத்துச் சென்று "பியாசாலே லொரெட்டோ" (Piazzale Loreto) என்னும் புறநகர்ச் சதுக்கத்தில் வைத்தனர். கோபங்கொண்ட பெரிய மக்கள் கூட்டம் அவ்வுடல்களைப் பல வழிகளிலும் அவமதித்தனர். பின்னர் அங்கிருந்த இரும்பு வளை ஒன்றில் இருந்து அவ்வுடல்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டனர். முதலில் முசோலினியின் உடல் அடையாளம் இல்லாத புதைகுழி ஒன்றில் புதைக்கப்பட்டது. 1946 இல் பாசிச ஆதரவாளர்கள் அவரது உடலைத் தோண்டி எடுத்துச் சென்றனர். நான்கு மாதங்களுக்குப் பின்னர் அதிகாரிகள் அவ்வுடலைக் கண்டுபிடித்து 11 ஆண்டுகள் மறைத்து வைத்திருந்தனர். 1957 இல் முசோலினியின் உடல் எச்சங்கள் அவரது சொந்த ஊரான பிறிடப்பியோவில் உள்ள குடும்ப அடக்கத்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது சமாதி தற்போது புதிய-பாசிசவாதிகளின் யாத்திரைத் தலமாகியுள்ளது. அவர்கள் முசோலினியின் இறப்பை ஒவ்வொரு ஆண்டும் ஊர்வலங்களுடன் நினைவுகூருகின்றனர்.

முந்திய நிகழ்வுகள்[தொகு]

பின்னணி[தொகு]

25 ஏப்ரல் 1945 இல் மிலானில் இருந்த நிர்வாகக் கட்டிடத்தை விட்டு முசோலினி வெளியேறும் காட்சி. இதுவே உயிருடன் அவரது கடைசி ஒளிப்படம் எனக் கருதப்படுகிறது.

1922 இல் முசோலினி ஒரு பாசிசத் தலைவராக இத்தாலியை ஆளத் தொடங்கினார். 1925 க்குப் பின்னர் சர்வாதிகாரி ஆன அவர், 1940 இல் நாட்டை நாசி செருமனியின் சார்பில் இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தினார்.[2] நேசநாட்டுப் படைகள் சிசிலிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, 1943 யூலையில் முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டுக் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் இத்தாலி போரில் நேசநாடுகளின் பக்கம் சேர்ந்துகொண்டது.[3] அதே ஆண்டின் பிற்பகுதியில் செருமன் படைகளின் "கிரான் சாசோ" படை நடவடிக்கை மூலம் முசோலினி சிறையில் இருந்து மீட்கப்பட்டார். பின்னர் வடக்கு இத்தாலியில், கார்டா ஏரிக்கு அருகில் இருந்த சாலோ என்னும் நகரைத் தளமாகக் கொண்டு "இத்தாலிய சமூகக் குடியரசு" என்னும் செருமனியின் பொம்மை அரசு ஒன்றை உருவாக்கிய இட்லர், அதற்கு முசோலினியைத் தலைவர் ஆக்கினார்.[4] சாலோக் குடியரசு என அழைக்கப்பட்ட அந்த அரசு 1944 இல், தெற்கிலிருந்து முன்னேறி வந்த நேசநாட்டுப் படைகளிடம் இருந்து மட்டுமன்றி, உள்நாட்டில், இத்தாலிய உள்நாட்டுப் போர் என அறியப்பட்ட, "இத்தாலிய பாசிச எதிர்ப்பு ஆதரவாளர்"களின் கலகங்களாலும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியது.[5]

இத்தாலியத் தீபகற்பத்தில் மெதுவாக மேல் நோக்கி முன்னேறிய நேசநாடுகளில் படையினர் 1944 கோடையில், ரோமையும், பின்னர் புளோரன்சையும் கைப்பற்றினர். அவ்வாண்டின் இறுதிப் பகுதியில் அவர்கள் வடக்கு இத்தாலியை நோக்கி முன்னேறினர். 1945 ஏப்ரலில் சாலோ குடியரசினதும், அதன் காப்பாளர்களான செருமன் படையினரதும் தோல்வி தவிர்க்க முடியாதது ஆகியது.[6]

ஏப்ரல் நடுப் பகுதியில் இருந்து முசோலினி மிலானில் தங்கியிருந்தார். அவரது அரசாங்கம் அந்நகரின் நிர்வாக அலுவலகத்தில் அமைந்திருந்தது.[7] மாதக் கடைசியில், செருமன் படைகள் பின்வாங்கியபோது, கலகக்காரர்களின் தலைமையான "மேல் இத்தாலிக்கான தேசிய விடுதலைக் குழு" முக்கியமான வடக்கு நகரங்களில் பொது எழுச்சி ஒன்றை அறிவித்தது.[8] மிலான், தேசிய விடுதலைக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து, வடக்கு இத்தாலியில் இருந்த செருமன் படைகள் சரணடையும் வந்துவிட்டதையும் அடுத்து, ஏப்ரல் 25 ஆம் தேதி, முசோலினி நகரை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முயன்றார்.[8][9]

கைப்பற்றலும் கைதும்[தொகு]

மிலானில் இருந்து தப்பிய போது கோமோ ஏரியை அண்டிய முசோலினியின் பாதை (இளஞ் சிவப்புக் கோடு)

1945 ஏப்ரல் 27 ஆம் தேதி, முசோலினியும், அவரது வைப்பாட்டியும், பிற பாசிசவாதத் தலைவர்களும் கோமோ ஏரியின் தென்மேற்குக் கரையில் உள்ள டொங்கோ என்னும் ஊருக்கு அருகில் செருமன் வாகனத் தொடரில் சென்றுகொண்டிருந்தனர். உள்ளூர் பொதுவுடமை ஆதரவுக் குழு ஒன்று அவ்வாகனத் தொடர்மீது தாக்குதல் நடத்தி அதை நிறுத்தியது. தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு இத்தாலிய பாசிசத் தலைவரை அடையாளம் கண்டுகொண்டனர். ஆனால், முதலில் முசோலினியை அவர்கள் காணவில்லை. செருமனியர்களைத் தொடர்ந்து செல்லவிடுவதாகக் கூறி இத்தாலியர்களைத் தம்மிடம் கையளிக்க ஒப்புக்கொள்ள வைத்தனர். பின்னர் தொடரில் இருந்த வண்டி ஒன்றில் முசோலினி இருப்பதையும் கண்டுபிடித்தனர்.[10]

முசோலினியைக் கைதுசெய்த பொதுவுடைமை ஆதரவுப் படையினர், அவரை டொங்கோவுக்குக் கொண்டு சென்றனர். இரவின் ஒரு பகுதியை அவர் உள்ளூர் படை முகாமில் கழித்தார்.[10] டொங்கோவைச் சுற்றியிருந்த பகுதிகளில் சண்டை தொடர்ந்து நடந்துகொண்டு இருந்தது. முசோலினியையும், பெட்டாச்சியையும் பாசிச ஆதரவாளர்கள் மீட்டுக்கொண்டு போக முயற்சி செய்யக்கூடும் எனப் பயந்த பொதுவுடைமை ஆதரவுப்படைகள் அவர்களை அருகில் இருந்த பண்ணை ஒன்றுக்குக் கொண்டு சென்றனர். இருவரையும் வைத்திருப்பதற்கு அது பாதுகாப்பான இடமாக இருக்கும் என அவர்கள் எண்ணினர்.[11] எல்லாமாக ஐம்பதுக்கு மேற்பட்ட பாசிசத் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் அங்கே கைதாகியிருந்தனர். முசோலினி, பெட்டாச்சி ஆகியோரைத் தவிர மேலும் மிக முக்கியமான பதினாறு பாசிசத் தலைவர்களும் அடுத்தநாள் டொங்கோவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பத்துப் பேர் அடுத்தடுத்த இரண்டு இரவுகளில் கொல்லப்பட்டனர்.[12]

முசோலினியின் வைப்பாட்டி கிளாரெட்டா பெட்டாச்சி, அவருடன் பிடிக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொல்வதற்கான ஆணை[தொகு]

முசோலினி விசாரணையின்றிக் கொல்லப்படவேண்டும் எனத் தீர்மானித்தது யார் என்பது தொடர்பில் வேறுபட்ட தகவல்கள் உள்ளன. பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் நாயகம் பல்மிரோ தொக்லியாட்டி, முசோலினி பிடிபடுவதற்கு முன்பே அவரைக் கொல்லத் தான் உத்தரவு இட்டதாகக் கூறினார். 1945 ஏப்ரல் 26 ஆம் தேதி வானொலிச் செய்தி மூலம் இவ்வுத்தரவைத் தான் வழங்கியதாக அவர் கூறினார்.[13] ரோமில் உள்ள அரசாங்கத்தின் துணைப் பிரதமர் என்ற வகையிலும், பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் இந்த உத்தரவைத் தான் வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும், பிரதம மந்திரி இவானோ பொனோமி, அவ்வுத்தரவு தனது அரசாங்கத்தின் ஏற்புடன் வழங்கப்பட்டது என்பதை மறுத்திருந்தார்.[13] மிலானில் இருந்த மூத்த பொதுவுடைமயாளரான லுயிகி லொங்கோ, தேசிய விடுதலைக் குழுவின் தீர்மானத்துக்கு அமையப் பொதுக் கட்டளைத் தலைமையகத்தில் இருந்தே ஆணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறினார்.[13] லொங்கோ பின்னர் வேறொரு கதையையும் கூறியிருந்தார். இதன்படி தானும், தேசிய விடுதலைக் குழுவின் ஒரு பகுதியான செயற்பாட்டுக் கட்சியின் உறுப்பினரான ஃபேர்மோ சொலாரியும், முசோலினி பிடிபட்டதைக் கேள்வியுற்ற உடனேயே அவர் விசாரணையின்றிக் கொல்லப்பட வேண்டும் என உடன்பட்டதாகவும், தானே (லொங்கோ) இதற்கான ஆணையை வழங்கியதாகவும் லொங்கோ கூறினார்.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. Moseley 2004, ப. 275
 2. BBC History
 3. Blinkhorn 2006, ப. 51
 4. Quartermaine 2000, ப. 14, 21
 5. Payne 1996, ப. 413
 6. Sharp Wells 2013, ப. 191–194
 7. Clark 2014, ப. 320
 8. 8.0 8.1 Quartermaine 2000, ப. 130–131
 9. O'Reilly 2001, ப. 244
 10. 10.0 10.1 Bosworth 2014, ப. 31
 11. Neville 2014, ப. 212
 12. Roncacci 2003, ப. 391, 403
 13. 13.0 13.1 13.2 13.3 Moseley 2004, ப. 280–281

உசாத்துணைகள்[தொகு]

நூல்கள்[தொகு]