தேசியவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுதந்திரதேவி மக்களை வழிநடத்துகிறது (இயுஜீன் டெலாக்குரோயிக்ஸ், 1830) தேசியவாதக் கலைக்கான ஒரு புகழ்பெற்ற எடுத்துக்காட்டு

தேசியவாதம் என்பது நாட்டினம் ஒன்றின்மீது அக்கறை கொண்ட ஒரு கருத்தியல், உணர்வு, ஒரு பண்பாட்டு வடிவம் அல்லது சமூக இயக்கம் ஆகும். நாட்டினங்கள் என்பதன் வரலாற்று மூலம் குறித்துக் குறிப்பிடத் தக்க கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், ஒரு கருத்தியல், ஒரு சமூக இயக்கம் என்ற வகையிலாவது, தேசியவாதம் என்பது ஐரோப்பாவில் உருவான ஒரு அண்மைக்காலத் தோற்றப்பாடு என்பதைப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இது எப்போது எங்கே தோன்றியது என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும், 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் தோன்றிய மக்கள் இறைமைக்கான போராட்டங்கள் போன்றவற்றோடு இது நெருங்கிய தொடர்பு கொண்டது. அப்போதிருந்து, உலக வரலாற்றில் தேசியவாதம், குறிப்பிடத்தக்க அரசியல், சமூக சக்தியாக இருந்து வந்தது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் உருவானதற்காக முக்கிய காரணமாகவும் இது தொழிற்பட்டதைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.


ஒரு கருத்தியல் என்ற வகையில், தேசியவாதம், மக்கள் இறைமைக் கொள்கையின்படி மக்கள் என்பது நாட்டினம் (nation) என்று கொள்கிறது. அத்துடன், இதன் விளைவாக நாட்டினத் தன்னாட்சி உரிமைக் கொள்கையின் அடிப்படையில் நிறுவப்பட்ட நாட்டின அரசுகளே ஏற்றுக்கொள்ளத் தக்கவை என்கிறது தேசியவாதம். பல நாடுகள் பல இனங்களைக் கொண்டிருக்கின்றன அல்லது நாட்டினத் தகுதி கோரும் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இதனால், தேசியவாதம் பெரும்பாலும் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதுடன், பேரரசுவாத ஆக்கிரமிப்பு, நாட்டின விடுதலை ஆகிய சூழல்களில் போர்கள், பிரிவினை, இனப்படுகொலை போன்றவற்றோடு தொடர்புடையதாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசியவாதம்&oldid=2220636" இருந்து மீள்விக்கப்பட்டது