புடு சிறைச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புடு சிறைச்சாலை
Pudu Prison
Penjara Pudu

இடம்ஜாலான் ஆங் துவா, கோலாலம்பூர், மலேசியா
நிலைபுக்கிட் பிந்தாங் நகர மையம் என மறுவடிவமைப்பு செய்யப்பட்டது)
பாதுகாப்பு வரையறைநடுத்தர பாதுகாப்பு
திறக்கப்பட்ட ஆண்டு1895[1]
மூடப்பட்ட ஆண்டு1996
நிருவாகம்மலேசிய சிறைத் துறை
(1895 - 1996)
அரச மலேசிய காவல் துறை
(2003 - 2008)

புடு சிறைச்சாலை (ஆங்கிலம்: Pudu Prison அல்லது Pudu Jail; மலாய்: Penjara Pudu; சீனம்: 半山芭监狱); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்த ஒரு சிறைச்சாலை ஆகும். கோலாலம்பூரின் முக்கிய பகுதியில் அமைந்து இருந்த புடு சிறைச்சாலை 115 வருடம் பழமை வாய்ந்தது.[2]

இந்தச் சிறைச்சாலை 1891-இல் கட்டத் தொடங்கி 1895-இல் கட்டி முடிக்கப்பட்டது. மலேசியாவின் சுற்றுலா தளமாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் விளங்கி வந்தது. இந்தச் சிறைச்சாலை கோலாலம்பூரில் ஜாலான் ஷாவில் (Jalan Shaw - Jalan Hang Tuah) இருந்தது.

உலகிலேயே மிக நீளமான சுவரோவியம் புடுச் சிறைச்சாலையின் சுவரில்தான் வரையப்பட்டது. இந்தச் சிறைச்சாலையில் கொடுக்கப்படும் பிரம்படிகள் அனைவராலும் பேசும் பொருளானது.[3]

வரலாறு[தொகு]

புடு சிறைச்சாலையின் நுழைவாயில்.

சிறைச்சாலையின் கைதி அறைகள் சிறியவையாகவும் இருட்டாகவும் இருக்கும். அந்த அறைகளில் ஒரே ஒரு சின்ன சாளரம் மட்டுமே இருக்கும். அந்தச் சாளரத்தின் வழியாகத்தான் வெளித் தொடர்புகளும் இருந்தன.

புடு சிறைச்சாலை கட்டப்படுவதற்கு முன்னர் அந்த இடம் ஒரு சீனர் இடுகாடு ஆகும். அந்தக் காலகட்டத்தில் அப்பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்தது. சில சமயங்களில் அந்தக் காடுகளில் புலிகளும் இரைதேடி வருவதுண்டு.

1891-இல் கைதிகளின் ஆள்பலத்தைக் கொண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின.முதன்முதலில் 394 மீட்டர் நீளமுள்ள தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. சிறைச்சாலை கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் பிடித்தன. 1895-இல் கட்டி முடிக்கப்பட்டது. புடு சிறைச்சாலையில் கைதிகளாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் போத்தாக் சின் என்பவர்.

இவர் மலேசியக் குற்றவாளிகளில் மிகவும் பெயர் பெற்றவர். அவரைப் பற்றிய கதைகளை மலேசியர்கள் இன்றும் பேசிக் கொள்வதுண்டு. 1985-இல் ஜிம்மி சுவா என்பவனும் மேலும் அறுவரும், புடு சிறைச்சாலையின் மருத்துவர்களான டாக்டர் ராட்சி ஜாபார், டாக்டர் அப்துல் அஜீஸ் ஆகிய இருவரையும் பிணையாகப் பிடித்துச் சிறைச்சாலை நிர்வாகத்தை நிலைகுலைய வைத்த நிகழ்ச்சியும் இங்கு நடைபெற்றுள்ளது.

அமைப்பு[தொகு]

புடு சிறைச்சாலை 1,38,000 மலாயா டாலர் செலவில் 1895-இல் கட்டப்பட்டது. அதன் முதல் இயக்குநர் ஜே.ஏ.பி.ஏலன் (Lt-Kol J.A.B. Ellen). சிறைச்சாலையின் கட்டுமானப் பொருட்கள் இந்தியா, பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. கட்டிடத்தின் அமைப்பு முறை ’X’ வடிவத்தில் உருவாக்கம் பெற்றது. ஆப்பிரிக்காவில், பொகாம்பியா எனும் இடத்தில் கண்டி சிறைச்சாலை உள்ளது.[4]

அந்தச் சிறைச்சாலையின் அமைப்பில் புடு சிறைச்சாலையும் கட்டப்பட்டது. தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் தூக்கிலிடுவதற்கு முன்னால் கட்டிடத்தின் D பகுதியில் வைக்கப்பட்டனர். அங்குதான் அவர்கள் தூக்குத் தண்டனைக்குத் தயார் படுத்தப்பட்டனர்.

இந்தச் சிறைச்சாலை கட்டப்படும் போது 600 கைதிகள் தங்கும் வசதிகளைக் கொண்டதாகக் கட்டப்பட்டது. ஆனால், 1960களில் கைதிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது. ஆகவே, கூடுதலான கைதி அறைகள் சேர்க்கப்பட்டன. அப்போதும் அறைகள் போதவில்லை. 1985-இல் 6,550 கைதிகள் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.[5]

காலரா நோய்[தொகு]

1895 ஆகஸ்டு மாதம் சிறைச்சாலை வளாகத்தில் காலரா நோய் பரவியது. அதனால், சிறைச்சாலையில் இருந்த சில நூறு கைதிகள் இறந்து போயினர். சிறைச்சாலையின் நீர் பயனீட்டு முறையில் ஏற்பட்ட தவறினால் காலரா நோய் பரவியதாகதாகப் பின்னர் தெரிய வந்தது. முன்பு சீனர் இடுகாடாக இருந்த போது அங்கே ஒரு பழைய கிணறு இருந்தது.

அந்தக் கிணற்றில் இருந்துதான் சிறைச்சாலைக்கு நீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்தக் கிணற்றில் கொடிய விஷக்கிருமிகள் இருந்ததால் கைதிகள் அனைவருக்கும் பரவின. பின்னர், மூன்று ஆண்டுகள் கழித்து 1898-இல் சிறைச்சாலையின் நீர்ப் பிரச்னை தீர்க்கப்பட்டது.[6]

பிரம்படி தண்டனைக்குத் தனிப்பகுதி[தொகு]

தொடக்க காலத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் புடு சிறைச்சாலை மட்டுமே ஒரே ஒரு சிறைச்சாலையாக இருந்தது. குறுகிய கால தண்டனை பெற்ற ஆண்களும் பெண்களும் அந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டனர். அப்போது சிறைச்சாலை வளாகத்திலேயே ஒரு காய்கறித் தோட்டமும் இருந்தது.

அதிலிருந்து கிடைத்த காய்கறிப் பொருட்கள் சிறைச்சாலைக் கைதிகளுக்கு, அப்போதைக்கு போதுமானதாகவும் இருந்தது.

ஆனால். காலப் போக்கில் போதைப்பொருள் குற்றவாளிகள், ஆயுதமேந்திய கொள்ளை, வன்புணர்வு, வன் தாக்குதல், ஒருபால் புணர்வு, நம்பிக்கை மோசடி, வழிப்பறி கொள்ளை, வீட்டை உடைத்து கொள்ளை, மானபங்கம் செய்தல், விலைமாதின் வருமானத்தில் வாழ்தல் போன்ற குற்றங்களுக்காகப் பிரம்படிகள் பெறும் குற்றவாளிகளும் அந்தச் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிரம்படிகள் கொடுக்கச் சிறைச்சாலையில் ஒரு தனிப்பகுதியும் அமைக்கப்பட்டது. அதனால் அதிகமான குற்றவாளிகளைத் தடுத்து வைக்க வேண்டியதாயிற்று. சிறைச்சாலை காய்கறித் தோட்டத்திலிருந்து கிடைத்த காய்கறிப் பொருட்களிலும் பற்றாக்குறை ஏற்பட்டது.

மலேசியாவில் போதைப்பொருள் சட்டம்[தொகு]

இரண்டாவது உலகப் போரின் போது புடு சிறைச்சாலையில் நூற்றுக்கணக்கான போர்க்கைதிகள் அடைத்து வைக்கப்பட்டனர். மலாயாவில் இருந்த ஐரோப்பியர்கள் பலர் இந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சித்ரவதைகளும் செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் ரப்பர்த் தோட்டங்களில் நிர்வாகிகளாக இருந்தவர்கள்.

1976-இல் மலேசியாவில் போதைப்பொருள் சட்டம் அமலுக்கு வந்தது. போதைப்பொருள் குற்றங்களுக்காக 36 பேர் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் மலேசியச் சீனர்களாக இருந்ததால் மலேசியச் சீனச் சமூகத்தினரிடையே அதிருப்தியும் ஏற்பட்டது.

1986-இல் போதைப்பொருள் குற்றத்திற்காகக் கெவின் பார்லோ, பிரியான் சேம்பர்ஸ் எனும் இரு ஆஸ்திரேலியர்கள் இதே சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.[7]

கெவின் பார்லோ - பிரியான் சேம்பர்ஸ் தூக்கு[தொகு]

அதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்த பாப் ஹாவ்க் அவர்களைத் தூக்குமேடைக்கு அனுப்ப வேண்டாம் எனக் கருணை கோரிக்கை விடுத்தார். அந்தக் காலகட்டத்தில் உலகம் முழுமையும், போதைப்பொருள் குற்றங்களுக்காக ஏறக்குறைய 100 ஆஸ்திரேலியர்கள் உலக நாடுகளின் சிறைகளில் இருந்தனர்.

இருப்பினும், ஆஸ்திரேலியப் பிரதமரின் கோரிக்கையைப் பொருட்படுத்தாமல் மலேசிய அரசாங்கம் அந்த இரு ஆஸ்திரேலியர்களையும் தூக்கிலிட்டது.[8] அது ஒரு ‘காட்டு மிராண்டித்தனம்’ என்று பாப் ஹாவ்க் மலேசியாவைக் கண்டித்தார்.[9] அதற்குப் பதில் அளித்த மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, “போதைப் பொருள்களைக் கடத்துவது குற்றம் என்று போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் சொல்ல வேண்டும்” என்றார்.[10] அதன் பின்னர், ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு ஆஸ்திரேலிய மலேசிய உறவுகள் ஓர் இறுக்க நிலையில் இருந்தன.[11]

இந்து உரிமைகள் போராட்டக் குழு[தொகு]

2007 டிசம்பர் 11ஆம் தேதி, இந்து உரிமைகள் போராட்டக் குழு இண்ட்ராப் பேரணியில் கைது செய்யப்பட்ட பி. உதயகுமார், பி.வேதமூர்த்தி, வி.எஸ்.கணபதி ராவ், மனோகரன் மலையாளம், வசந்தக்குமார் போன்றோர் இங்குதான் தடுத்து வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள்மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளில் வலுவான சான்றுகள் இல்லாமையால் விடுதலை செய்யப்பட்டனர்.

இருப்பினும், அந்த விடுதலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மறுநாள் அதாவது 2007 டிசம்பர் 11-ஆம் தேதி, அவர்கள் மறுபடியும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பேராக், கமுந்திங் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டனர். 2009 மே மாதம், ஏறக்குறைய 17 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.[12]

1996-இல் 101 ஆண்டுகள் பயன்பாட்டிற்குப் பின்னர், புடு சிறைச்சாலையை மூடுவதாக அரசாங்கம் அறிவித்தது. புடு சிறைச்சாலையில் இருந்த கைதிகள் அனைவரும் சுங்கை பூலோ, காஜாங் சிறைச்சாலைகளுக்கு இடம் மாற்றப்பட்டனர். அதன் பின்னர் புடு சிறைச்சாலை ஓர் ஆண்டு காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. அக்காலகட்டத்தில் அது ஓர் அருங்காட்சியகமாகச் செயல்பட்டது.

நவீன வர்த்தக வளாகம்[தொகு]

வரலாற்றுச் சிறப்பு மிக்க, நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான இச்சிறைச்சாலையின் புகழ் மிக்க சுவரை நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காக இடிக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்தது. 2010 ஜூன் மாதம் 22ஆம் தேதி புடு சிறைச்சாலையின் சுவர்கள் தகர்க்கப்படுவது தொடங்கியது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு சின்னம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாடெங்கும் இருந்து அறைகூவல்கள் எழுந்தன.

புடு சாலைப் பகுதியில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சுவர்கள் உடைக்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல ஆயிரம் உயிர்களைக் காவு கொண்ட இடம் ஒரு வரலாற்றுச் சின்னமாக மாற முடியாது.[13] சிறை ஒருபோதும் வரலாற்று தலமாகாது என்பதும் , பெருமைப்படக்கூடிய இடமுமல்ல என்பதும் அரசின் முடிவு.

சாலை விரிவாக்கம் மற்றும் வழிமாற்றுச் சாலையைக் கட்டுவதற்கு வழிவிட, புடு சிறைச்சாலையின் நீளச் சுவர்கள் உடைக்கப்படவிருக்கின்றன.அந்த வழிமாற்றுச் சாலை, புடு சாலையைச் செராசுடன் இணைக்கும்.

அதோடு ஜாலான் ஹங் துவாவில் சாலைப் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் எனவும் இதன் 394 நீளச் சுவர் நேற்று இடிக்கப்பட்டு மிகப்பெரிய உணவு விடுதிகளும், அடுக்ககங்களும் கட்ட அரசு சார்ந்த கட்டட துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.[14]

அரசு அறிவிப்பின்படி 2010 ஜூன் மாதம் 22ஆம் தேதி புடு சிறைச்சாலையின் கிழக்குப் பகுதியில் உள்ள சுவர்கள் தகர்க்கப்பட்டன. 2011 இறுதி வாக்கில் சிறைச்சாலையின் முக்கியக் கட்டிடப் பகுதிகள் அனைத்தும் தகர்க்கப்பட்டுவிட்டன. அந்த இடத்தில் நவீன வர்த்தக வளாகம் உருவாக்கப்படும் என்று எனும் மலேசியப் புறநகர் மேம்பாட்டுக் கழகம்(Urban Development Authority (UDA))அறிவித்தது.

43 மாடிகளைக் கொண்ட ஒரு தங்கும் விடுதி, ஒரு வணிக வளாகம், 33 மாடிகளைக் கொண்ட ஓர் அலுவலகக் கட்டிடம், 44 மாடிகளைக் கொண்ட ஓர் அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப்படும் என்று அக்கழகம் அறிவித்தது.[15]

புடு சிறைச்சாலை சுவரோவியம்[தொகு]

புடு சிறைச்சாலையின் சுவர்களில் 1980களில் 384 மீட்டர் நீளத்திற்கு ஒரு நீண்ட சுவரோவியம் வரையப்பட்டது. அந்த ஓவியத்தைச் சிறைச்சாலையில் கைதியாக இருந்த கோங் யென் சோங் (Khong Yen Chong) என்பவரும் மேலும் மூன்று கைதிகளும்[16] இணைந்து வரைந்தனர். வரைவதற்கு பல மாதங்கள் பிடித்தன. ஏறக்குறைய 2000 லிட்டர் வண்ணக்கலவைகள் பயன்படுத்தப் பட்டன.

கோங் யென் சோங் சிறைச்சாலையிலிருந்து விடுதலை ஆன பிறகும், சிறைச்சாலைக்கு வந்து அந்த ஓவியத்தை வரைந்து முடித்துக் கொடுத்தார். அந்த ஓவியம்தான் உலகிலேயே மிக நீண்ட சுவரோவியம் ஆகும். ஓவியர் கோங் யென் சோங்கிற்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டது.[17]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Prisoner of War Camp - Pudu Jail, Kuala Lumpur | COFEPOW".
 2. "Prison break: Pudu's walls come down". The Straits Times (Singapore). 22 June 2010. 
 3. Choi, Clara (21 June 2010). "No heritage site for Pudu Jail, development will commence 21 June 2010". The Malaysian Insider இம் மூலத்தில் இருந்து 13 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140813071649/http://www.themalaysianinsider.com/malaysia/article/no-heritage-site-for-pudu-jail-development-will-commence. 
 4. Its design of an X (cruciform) was copied from the Kandy Prison in Bogambia, Africa. It originally had 240 cells on three floors, but more cells were added over the years.
 5. When the prison was first opened in 1895, it could only accommodate 600 prisoners but, since 1960, the number has increased gradually.[தொடர்பிழந்த இணைப்பு]
 6. "Selangor Administration". The Straits Times. 1 July 1927. p. 2. 
 7. Barlow and Chambers execution.
 8. Two Australian heroin traffickers, Brian Chambers and Kevin Barlow, were hanged shortly before dawn today after a flurry of last-minute appeals to the Malaysian authorities for mercy or a stay of execution failed.
 9. A softly, softly approach tried first.
 10. "Malaysia:The Hangman Strikes Again". Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
 11. Drug duo's hanging marked start of big chill with Malaysia.
 12. Hindraf leaders to be released from ISA.[தொடர்பிழந்த இணைப்பு]
 13. Iconic Pudu prison wall torn down.[தொடர்பிழந்த இணைப்பு]
 14. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறைச்சாலை சுவர்கள் ஞாயிறன்று உடைக்கப்படும்.[தொடர்பிழந்த இணைப்பு]
 15. THE land on which the 113- year-old Pudu Prison is located has been identified as one of the major sites for mega development in the Draft KL City Plan 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
 16. Although several people worked on this mural according to Helen Ang who wrote in the NST on April 21, 1994, only one person (Khong Yen Chong) got the recognition for it.
 17. The mural was recognised by the Guinness Book of Records as the world’s longest mural.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புடு_சிறைச்சாலை&oldid=3938911" இலிருந்து மீள்விக்கப்பட்டது