மலேசிய சிறைத் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய சிறைத் துறை
Malaysian Prison Department
Jabatan Penjara Malaysia
மலேசிய சிறைத் துறை சின்னம்
குறிக்கோள்நட்பு, நேர்மை, அர்ப்பணிப்பு
Friendly, Sincere Dedicated
Mesra, Ikhlas Berbakti
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்19 மார்ச் 1790
அதிகார வரம்பு அமைப்பு
ஆட்சிக் குழு மலேசிய அரசாங்கம்
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்காஜாங்
சிலாங்கூர்,
 மலேசியா
அமைச்சர்
துறை நிருவாகிகள்
 • நோர்டின் முகமட்
  (Dato' Nordin Muhamad),
  தலைமை ஆணையர்
 • அப்துல் அசீசு அப்துல் ரசாக்
  (Dato' Abdul Aziz bin Abdul Razak),
  துணைத் தலைமை ஆணையர்
அமைச்சு மலேசிய உள்துறை அமைச்சு
பிரிவுகள்
விரைவு நடவடிக்கை துருப்புக்கள்
(Rapid Action Troops)
இணையத்தளம்
www.prison.gov.my

மலேசிய சிறைத் துறை (மலாய்: Jabatan Penjara Malaysia; ஆங்கிலம்: Malaysian Prison Department); என்பது மலேசிய உள்துறை அமைச்சின் (Ministry of Home Affairs Malaysia) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.[1]

நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளத் தடுத்து வைக்கும் சிறைகளுக்கு இந்தத் துறை பொறுப்பு வகிக்கிறது; அத்துடன் இந்தத் துறை, தடுப்பு மற்றும் மீட்சி நிறுவனங்களாகவும் (Detention and Recovery Institutions) செயல்படுகின்றன.[2]

இந்தத் துறையின் தலைமையகம் சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கு, காஜாங், மலேசிய சிறை வளாகத்தில் (மலாய்: Kompleks Penjara Kajang; ஆங்கிலம்: Malaysia Prison Complex) உள்ளது.

வரலாறு[தொகு]

மலாயாவில் பிரித்தானியர் ஆட்சி காலத்தில், சிறைத் தண்டனை வழங்கிய துறைகள், அப்போதைய மலாயா மாநில அரசாங்கங்களின் (Individual States' Governments) தனிப்பட்ட விதிமுறைகளுடன் (Respective Regulations) இயங்கி வந்தன. இருப்பினும் மலாக்கா நீரிணை (Straits Settlements) மாநிலங்களுக்கு, சிங்கப்பூர் சார்ந்த ஒரு கண்காணிப்பாளர் (Superintendent), மேற்பார்வையாளராகச் செயல்பட்டு வந்தார். மலாயாவில் இருந்த அனைத்துச் சிறைச்சாலைகளும் அவரின் அதிகார வரம்பிற்குள் இருந்தன.

மலாக்கா நீரிணையில் இருந்த மாநிலங்கள் தான் முதன்முதலில் தங்களின் சொந்த சிறைகளைக் கட்டின. பிரித்தானியர்கள் ஒரு பொறுப்பான சிறைத் துறையை அமைத்த பிறகுதான்; மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) (FMS) தங்கள் மாநிலங்களில் சிறைகளைக் கட்டின.

தைப்பிங் சிறைச்சாலை[தொகு]

தைப்பிங் சிறைச்சாலை (Taiping Prison) 1879-இல் கட்டப்பட்டது. குற்றச் செயல்களைத் தடுக்கலாம் என்ற நம்பிக்கையில்; கைதிகளுக்கு வேதனையைத் தருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு சிறைச்சாலைகள் கட்டப்பட்டன.

1881-ஆம் ஆண்டில், மலாய் சிறை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக சீக்கியர் காவலர்கள் (Sikh Warders) கொண்டு வரப்பட்டனர். சிறைகளில் வர்த்தகக் கல்வியை அறிமுகப் படுத்துவதற்காக ஆங்காங்கில் இருந்து தொழிற்கல்வி பயிற்றுனர்கள் வரவழைக்கப்பட்டனர்.

ஐரோப்பிய காவலர்கள்[தொகு]

தொழிற்கல்வியில் பாறை உடைத்தல் மற்றும் தச்சு வேலையும் அடங்கும். 1882-இல் கைதிகளை, குற்றங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1889-இல் சில சிறைச்சாலைகளில் ஐரோப்பிய காவலர்கள் (European Warders) நியமிக்கப்பட்டனர்.

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் உருவானதும், பேராக், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களைச் சேர்ந்த நீண்ட கால கைதிகளுக்கு; தைப்பிங் சிறைச்சாலை ஒரு தடுப்பு மையமாக மாறியது. 1924-இல் பாறை உடைக்கும் பணி தவிர்க்கப்பட்டது. அதற்குப் பதிலாக தேங்காய் மட்டைகளைப் பிரித்து எடுக்கும் பணி அறிமுகம் செய்யப்பட்டது.

மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு[தொகு]

மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பின் போது (Japanese Occupation) (1941-1945), மலாயாவில் இருந்த சிறைச்சாலைகள்; போர்க் கைதிகளத் தடுத்து வைக்கும் தடுப்பு முகாம்களாக (Prisoner-of-War Camps) பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்ததும் சிறைக் கைதிகளைப் பற்றிய அனைத்துப் பதிவுகளும் சப்பானிய இராணுவத்தால் (Imperial Japanese Army) அழிக்கப்பட்டு விட்டன.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, மலாயாவில் இருந்த அனைத்து சிறைகளையும் நிர்வகிக்க ஒரு புதிய சிறை அலுவலகம் நிறுவப்பட்டது. போருக்குப் பிந்தைய காலத்தில் மலாயாவில் அமைதி திரும்பியது; நவீன நிர்வாக முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மலாயா அவசரகாலம்[தொகு]

1948-ஆம் ஆண்டு மலாயா அவசரகாலத்தில் (Malayan Emergency) சிறைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் சிறைச்சாலைகளில் நெரிசல்கள் ஏற்பட்டன. இது சிறைச்சாலை அமைப்பின் (Prison System) மேம்பாட்டைச் சீர்குலைத்தது. இருப்பினும் 1949-ஆம் ஆண்டு இறுதியில் சிறை மேம்பாட்டுத் திட்டங்கள் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பின.

சிறைச்சாலைகள் சட்டம் 1952 (Prisons Ordinance 1952); மற்றும் சிறைச்சாலைகள் ஒழுங்குமுறைகள் சட்டம் 1953 (Prisons Regulations 1953) ஆகியவை பழைய சிறைச்சாலைகள் சட்டத்திற்குப் பதிலாக அறிமுகப் படுத்தப்பட்டன. 1953-ஆம் ஆண்டில், குற்றவியல் நீதி மசோதா (Criminal Justice Bill) நிறைவேற்றப்பட்டது. இது சாட்டையடி (cat-o'-nine-tails) பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தது; அத்துடன் 'தண்டனை அடிமை' (Penal Servitude) என்ற சொல்லை 'சிறை' (Prison) என்று மாற்றியது.

முதல் சிறை ஆணையர்[தொகு]

1957-ஆம் ஆண்டு மலேசியாவிற்கு பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மலேசியாவில் உள்ள அனைத்து சிறைகளின் நிர்வாகத்தையும் பொறுப்பேற்க முதல் சிறை ஆணையர் (Prisons Commissioner) நியமிக்கப்பட்டார்.

1963-இல், மலேசியா உருவானதும், சபா மற்றும் சரவாக் சிறைச்சாலைகள் மலேசிய சிறைத் துறையின் (Prisons Department) அதிகார வரம்பிற்குள் வந்தன.[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Home." Prison Department of Malaysia. Retrieved on 7 August 2014. "Malaysia Prison Complex, Kajang Selangor." Map.
 2. "IBU PEJABAT PENJARA MALAYSIA." Prison Department of Malaysia. Retrieved on 7 August 2014. "Bukit Wira, Beg Berkunci No. 212, 43000 Kajang, SELANGOR DARUL EHSAN"
 3. "Prisons History" இம் மூலத்தில் இருந்து 12 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090412064920/http://www.prison.gov.my/bi/index.php?option=com_content&view=article&id=415&Itemid=62. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Malaysian Prison Department
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_சிறைத்_துறை&oldid=3721965" இலிருந்து மீள்விக்கப்பட்டது