மின்னல் எப்.எம்
![]() | |
ஒலிபரப்புப் பகுதி | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
---|---|
வணிகப்பெயர் | மலேசிய ஒலி, ஒளிபரப்புச் சேவை |
அதிர்வெண் | கோலாலம்பூர் 92.3 குவாந்தான் 103.3 ஈப்போ, சித்தியவான் 98.9 மலாக்கா, கிழக்கு பகாங் 103.3 ஜொகூர், சிங்கப்பூர் 101.1 தென்பேராக், சிலாங்கூர் 96.3 தாய்லாந்து 96.7 தாப்பா 96.3 தைப்பிங், வடபேராக், கோலாகங்சார் 107.9 நெகிரி செம்பிலான் 90.5 |
முதல் ஒலிபரப்பு | 1938 |
வானொலி முறை | திரைப் பாடல்கள், உலகச் செய்திகள், அறிவிப்புகள், நாட்டு நடப்பு |
உரிமையாளர் | மலேசிய அரசாங்கம் |
இணையதளம் | மின்னல் எப்.எம். இணையத்தளம் |
மின்னல் எப். எம். (Minnal FM) என்பது மலேசிய அரசாங்கத்தின் தமிழ் ஒலிபரப்புச் சேவை ஆகும். அதன் பழைய பெயர் வானொலி 6 (Radio 6). உலகிலேயே 24 மணி நேர முதல் தமிழ் ஒலிபரப்புச் சேவையைத் தொடங்கிய பெருமையும் இதற்கு உண்டு.
மலேசிய இந்தியர்களுக்காக இந்தச் சேவை தொடங்கப் பட்டது. மின்னல் எப்.எம்[1] ஒலிபரப்பு கோலாலம்பூரில் உள்ள அங்காசாபுரி[2] தலைமையகத்தில் இருந்து 92.3 / 96.3 அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது.
ஈப்போவில் இருந்து 98.9 அலைவரிசையில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது. இப்போது திரு குமரன் என்பவர் அதன் தலைவராகப் பணிபுரிகின்றார். அதற்கு முன்னர், 2013 டிசம்பர் 31-ஆம் தேதி வரை பி.பார்த்தசாரதி தலைவராகச் சேவை செய்து வந்தார்.
1930 – 1940-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து, சஞ்சிக்கூலிகளாக அழைத்து வரப் பட்ட தமிழர்களின் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இப்போது ஐந்தாம் தலைமுறையினரின் தகவல் ஊடகமாக நீடித்து வருகின்றது.
பொருளடக்கம்
வரலாறு[தொகு]
1938-ஆம் ஆண்டு மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு முதன் முதலாகத் தொடங்கப் பட்டது. அந்த ஒலிபரப்புடன் மலாய், ஆங்கிலம், சீன மொழிகளும் இருந்தன. தமிழ்ப் பகுதிக்குத் தஞ்சை தாமஸ் என்பவர் பொறுப்பு வகித்தார். இவர் மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் முன்னோடி என்று இன்றும் அழைக்கப் படுகிறார்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பெயர் 'JMPK வானொலி' என்று பெயர் மாற்றம் அடைந்தது. அப்போது டி.எஸ்.சண்முகம் என்பவர் தலைவராக இருந்தார். கோலாலம்பூர் துன் பேராக் சாலையில் இருந்த ஓரியண்டல் கட்டிடத்தில் இருந்து அப்போதைய ஒலிபரப்பு நடைபெற்றது.
1948-இல் கம்னியூஸ்டுகளின் அச்சுறுத்தல் நாட்டை உலுக்கியது. அப்போது மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையில் ‘அவசரகாலம்’ எனும் ஒரு சிறப்புப் பகுதியும் சேர்க்கப் பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 1951-இல், புடு சாலையில் உள்ள தாங் லிங் மருத்துவமனையில் ஓர் அறையில் இருந்து ஒலிபரப்புகள் தற்காலிகமாக நடைபெற்றன.
இந்தியப் பகுதி தலைவர்கள்[தொகு]
மலேசிய வானொலியின் இந்தியப் பகுதி தலைவர்களின் பட்டியல்
- 1. தஞ்சை தாமஸ்
- 2. ராமச்சந்திரன் ஐயர்
- 3. இரா.பாலகிருஷ்ணன்
- 4. ஹனிப்
- 5. கமலா தேசிகன்
- 6. சுவாமிநாதன்
- 7. கணபதி
- 8. அப்பாதுரை
- 9. டாக்டர் வீ.பூபாலன்
- 10. பார்த்தசாரதி
- 11. இராஜசேகரன்
- 12. பார்த்தசாரதி
கலப்படம்[தொகு]
அதன் பின்னர் 1956-ஆம் ஆண்டு Federal House என்று அழைக்கப்படும் கூட்டரசு மாளிகையில் இருந்து சேவைகள் தொடர்ந்தன. மலேசிய வானொலியின் தமிழ்ப்பகுதி இந்தக் கூட்டரசு மாளிகையில் இருந்து செயல் படும் போது தான் பற்பல நவீனத்துவங்களைப் பெற்றது.
பல தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள் தோன்றுவதற்கு இந்தக் கூட்டரசு மாளிகை காரணமாக இருந்தது. மலேசிய வானொலிப் புகழ் கலப்படம் நிகழ்ச்சி 1957-ஆம் ஆண்டில் தோற்றம் கண்டது. இந்த நிகழ்ச்சி இன்று வரை மலேசியத் தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றுள்ளது.
அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப் படும் போது மலேசியாவில் பல இலட்சம் இந்தியர்களும் கேட்டு ரசித்தனர். அது ஒரு வரலாறு.
பாடல்கள், நவீன இசைகள், கேள்வி பதில் அங்கம், நகைச்சுவைகள், பேட்டிகள் என பல வகையான தொகுப்புகள் நிறைந்த ஜனரஞ்சகமான நிகழ்ச்சியாக விளங்கியது.
பத்து இலட்சம் இந்தியர்கள்[தொகு]
அந்த நிகழ்ச்சி இப்போது இல்லை. இருப்பினும் அந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஒலிபரப்பு செய்வதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்போது மலேசியாவில் 7.3 இலட்சம் இந்தியர்கள்தான் இருக்கிறார்கள். இதே மக்கள் தொகை 2012-ஆம் ஆண்டில் 6.9 இலட்சமாகக் குறையும் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஐந்தாம் தலைமுறை இந்தியர்களின் குடும்பங்களில் இரு குழந்தைகள் இருந்தால் போதும் எனும் புதிய அணுகுமுறை தோன்றி உள்ளது.
கல்வி கற்ற நவீன சமுதாயமாக மலேசிய இந்தியச் சமுதாயம் மாறி வருகிறது. ஆனால், மலேசிய இந்திய மக்கள் தொகை மட்டும் குறைந்து கொண்டே போகிறது.
மலேசிய தந்தைக்கு மரியாதை[தொகு]
மலாயா வானொலியின் முதல் கலப்பட நிகழ்ச்சி கோலாலம்பூர் மாநகர மண்டபத்தில் நடைபெற்றது. பின்னர் மலேசியத் தந்தையும் முதல் பிரதமருமான துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தேசிய அளவிலான ஒரு மாபெரும் கலப்பட நிகழ்ச்சி தாசேக் பிரதானா எனும் மாநகர் பூஞ்சோலை நீர்க்குள மையத்தில் நடந்தது.
அந்தக் காலகட்டத்தில் அது ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி. மலேசியாவின் 15,000 பல்லின மக்கள் கண்டு களித்தனர். அந்த நிகழ்ச்சி மலாயா வானொலியின் தமிழ்ப் பகுதிக்கு ஒரு பெரிய அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது.
1950களில் மலாயா வானொலியின் செய்திகள் சிங்கப்பூரில் இருந்து ஒலிபரப்பு செய்யப் பட்டன. கோலாலம்பூர், பினாங்கு நிலையங்களில் இருந்து வட்டாரச் செய்திகள், பாரம்பரிய இசைகள், வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகின.
தஞ்சை தாமஸ், ஏ.பீட்டர், எஸ்.சுவாமிநாதன், ஏ.ஆர்.ஐயர், ராம ஐயர், ஹனீப், சுந்தரராஜு கோவிந்தசாமி போன்றோர் மலேசியாவில் தமிழ் மொழி ஒலிபரப்புச் சேவைகளுக்கு அரிய அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளனர். அவர்களுடைய தன்னலமற்றச் சேவைகளை மலேசிய இந்தியர்கள் என்றென்றும் நினைத்துப் பார்க்கின்றனர்.
இரா.பாலகிருஷ்ணன்[தொகு]
1960 ஆம் ஆண்டுகளை மலாயா வானொலித் தமிழ்ப்பகுதிக்கு பொன்னான காலம் (Golden Era) என்று சொல்வார்கள். அந்தக் காலகட்டத்தில் மலாயா வானொலி இசைச் சோலையாக மாறியது. பல மாற்றங்கள் செய்யப் பட்டன. இரா.பாலகிருஷ்ணன் என்பவர் தலைவர் பதவிக்கு வந்தார். அவரை ’ரேடியோ பாலா’ என்று அன்பாக அழைப்பார்கள்.
பல புதுமையான மாற்றங்களைச் செய்தார். பல புதிய நுணுக்கமான அணுகு முறைகளைக் கொண்டு வந்தார். பல தமிழ் எழுத்தாளர்களை மலாயா வானொலியில் அறிமுகம் செய்தார்.
ஐ.நா பேசுகிறது[தொகு]
திரு.இரா.பாலகிருஷ்ணன் தமிழ்மொழி ஒலிபரப்பில் பிற மொழிச் சொற்களையும் சமஸ்கிருதச் சொற்களையும் படிப்படியாகக் குறைத்தார். 1960களில் தமிழ்த் திரைப் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படும்போது மூன்று தமிழ்ப் பாடல்களுக்கு ஓர் இந்திப் பாடலை ஒலிபரப்பு செய்ய வேண்டும் எனும் ஒரு மேலிடத்து ஆணைக்கு சாணக்கியமான தீர்வு கண்டவர் பாலக்கிருஷ்ணன். ’ஐ.நா. பேசுகிறது’ எனும் நிகழ்ச்சியை இவரே எழுதி இவரே தயாரித்து வழங்கினார். அத்துடன், மலாயா வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நேரத்தைக் கூட்டுவதற்கு இவர் பலமுறை முயற்சிகள் செய்தார்.
பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் செய்து வெற்றியும் பெற்றார். அப்போது தமிழ்மொழிக்குக் குறைந்த ஒலிபரப்பு நேரமே வழங்கப் பட்டு இருந்தது. எட்டு மணி நேர ஒலிபரப்பை 14 மணி நேர ஒலிபரப்பாக உயர்த்திக் காட்டினார். அவருடைய முயற்சியின் பலனாக இப்போது 24 மணி நேர ஒலிபரப்பாக ஒலித்து வருகின்றது. இரா.பாலகிருஷ்ணன் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி நுரையீரல் பாதிப்பினால் இயற்கை எய்தினார். அந்த இழப்பு மலேசிய இந்தியர்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இழப்பு ஆகும். அவர் ஆற்றிய தமிழ்ச் சேவை இன்று வரை மலேசியத் தமிழர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து வரலாற்றில் ஆழமான காலச் சுவடுகளைப் பதித்துள்ளது.
கமலா தேசிகன்[தொகு]
1961ல் மலாயா வானொலி என்பது ‘மலாயா வானொலியின் இந்தியப் பகுதி’ என்று மாறியது. பின்னர், 1970ல் ‘சிகப்பு அலைவரிசை’ என்று மாறியது. அதன் பின்னர் ‘வானொலி 6’ என்று மாற்றம் கண்டது. 1976-ஆம் ஆண்டு இரா.பாலகிருஷ்ணன் ’யுனெஸ்கோ’வின் ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றதும் ஹனிப் அவர்கள் தலைவர் ஆனார். அடுத்து திருமதி.கமலா தேசிகன் என்பவர் தலைவர் பதவியை ஏற்றார்.
கமலாவிற்குப் பின்னர் சுவாமிநாதன், அப்பாதுரை, கணபதி போன்றவர்கள் இந்தியப் பகுதியின் தலைவர்களாகப் பணியாற்றினர். அனைவரும் அருமையான, சிறப்பான சேவைகளை வழங்கினர். சில பல நிகழ்ச்சி மாற்றங்களையும் செய்தனர். கர்நாடக இசையை மலேசிய மக்களுக்கு பரவலாக ஒலிபரப்பு செய்தவர் சுவாமிநாதன்.
இவர்களில் கணபதி என்பவர் மலேசியச் செய்தி நிறுவனமான பெர்னாமாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அதன் பின்னர், 1994-ஆம் ஆண்டில் வீ.பூபாலன் என்பவர் தலைமைப் பதவியை ஏற்றார்.
டாக்டர் வீ.பூபாலன்[தொகு]
வீ.பூபாலன் பொறுப்பு ஏற்ற பிறகு மலேசிய வானொலியின் தமிழ்ப்பிரிவில் கவிதை தொடர்பான நிகழ்ச்சிகள் நிறைய சேர்த்துக் கொள்ளப் பட்டன. 1997ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் தேதி, மலேசிய வானொலியின் இந்தியப் பிரிவு 24 மணி நேர ஒலிபரப்புச் சேவையைத் தொடங்கியது. உலகிலேயே அப்படிப்பட்ட ஒரு சேவையை வழங்கிய முதல் வானொலி நிலையம் மலேசிய வானொலியாகும்.
அதன் பின்னர் மலேசிய வானொலி மலேசிய இந்தியர்களிடையே மிகவும் புகழ் பெற்றது. அதிகமான ரசிகர்கள் சேர்ந்தனர். வணிக ரீதியிலும் செல்வாக்குப் பெற்ற நிலையமாக விளங்கத் தொடங்கியது. கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளைப் பற்ரறி ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்தவர் டாக்டர் பூபாலன்.
ராஜசேகரன்[தொகு]
இவர் பதவி ஓய்வு பெற்றதும் ராஜசேகரன் என்பவர் தலைமைப் பதவியை ஏற்றார். ராஜசேகரன் மலேசிய வானொலியின் இந்தியப் பகுதியில் நிறைய சீர்திருத்தங்களைச் செய்தார். நிறைய புதுமைகளைக் கொண்டு வந்தார். விவசாயம் தொடர்பான அங்கங்களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கூடுதலான வாய்ப்புகளை வழங்கினார். மின்னல் எப்.எம். ஒலிபரப்பிற்கு புதிய அடையாளத்தைக் கொடுத்தார்.
பார்த்தசாரதி[தொகு]
அடுத்து வந்தவர் பி.பார்த்தசாரதி. மலேசிய வானொலியின் இந்தியப் பகுதிக்கு ஒரு பரிமாணத்தை வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. வானொலி 6க்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார். புதுப் புதுக தமிழ்க் கலைச்சொற்களை அறிமுகம் செய்தார். சாதாரண மக்களும் பேட்டிகள் வழியாக தங்கள் குறைகளைச் சொல்ல வாய்ப்புகளை வழங்கினார்.
ஒரு தலைவர் பதவியில் இருந்தாலும் பார்த்தசாரதி, ஒரு கடைநிலை ஊழியரைப் போல அங்காசாபுரியில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்தியர்களின் நிகழ்ச்சிகள் மலேசியாவில் எங்கே நடந்தாலும் இவர்தான் முதல் ஆளாகச் சென்று கலந்து கொள்கிறார். செய்திகளையும் சேகரித்து வருகிறார். பல இளம் அறிவிப்பாளர்களை வானொலிக்கு அடையாளம் காட்டிய பெருமையும் இவருக்கு உள்ளது. தமிழ் மணம் மணக்கும் ஓர் ஊடகமாக மலேசிய வானொலியின் இந்தியப் பகுதியை மாற்றி வருகிறார்.
வெளி இணைப்புகள்[தொகு]
- இரா.பாலகிருஷ்ணன்: வாழ்க்கை வரலாறு
- Minnal FM untuk hiburan dan informasi masyarakat India
- மலேசியா இன்று: மற்ற வானொலிகளோடு ஒப்பிடும்போது
- மக்கள் ஓசை: மின்னல் எப்.எம்.தலைவராக இராஜசேகரன் நியமனம்
- http://www.minnal.fm/
- http://maraz.us/minnal/index.htm