தைப்பிங்

ஆள்கூறுகள்: 4°51′N 100°44′E / 4.850°N 100.733°E / 4.850; 100.733
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைப்பிங்
Taiping
பேராக்
அலுவல் சின்னம் தைப்பிங்
சின்னம்
அடைபெயர்(கள்): மழை நகரம், பாரம்பரிய கலாசார நகரம்
Map
தைப்பிங் is located in மலேசியா
தைப்பிங்
      தைப்பிங்
ஆள்கூறுகள்: 4°51′N 100°44′E / 4.850°N 100.733°E / 4.850; 100.733
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்
உருவாக்கம்1874
அரசு
 • வகைநகராண்மைக் கழ்கம்
பரப்பளவு
 • மொத்தம்186.46 km2 (71.99 sq mi)
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்245,182 [1]
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு34xxx
மலேசிய தொலைபேசி எண்05
இணையதளம்www.mptaiping.gov.my
லாருட், மாத்தாங் மற்றும் செலாமா காலனித்துவ கால மாவட்ட அலுவலகம்.

தைப்பிங் (ஆங்கிலம்: Taiping; மலாய்: Taiping; சீனம்: 太平) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். மலேசியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாக அறியப்படும் இந்த நகரில் அழகிய பூங்காக்கள், அழகான குளங்கள் சூழ்ந்துள்ளன. ஓய்வு எடுப்பதற்கு மலேசியாவிலேயே மிகச் சிறந்த இடம் என்று மலேசிய மக்கள் கருதுகின்றனர். வருடம் முழுமையும் மழை பெய்வதால் எப்போதும் இங்கு குளிர்ச்சியாகவே இருக்கும்.

ஈப்போ மாநகருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகருக்கும் நடுமையத்தில் தைப்பிங் இருப்பதால் பொதுப் போக்குவரத்துப் பிரச்னைகளும் குறைவு. ஈப்போ மாநகரத்தில் இருந்து வடக்கே 72 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

பொது[தொகு]

2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தைப்பிங் நகரத்தின் மக்கள் தொகை 217,658.[2] இவர்களில் சீனர்கள் 57%, மலாய்க்காரர்கள் 28%, இந்தியர்கள் 11%. தைப்பிங் நகரம் 1876 லிருந்து 1937 வரை பேராக் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கி வந்துள்ளது.

1938-இல் ஈப்போ நகரம் மாநிலத் தலைநகரமாக மாறியதும் தைப்பிங் இரண்டாம் நிலையை அடைந்தது. மலேசியர்கள் பலர் பணி ஓய்வு பெற்றதும் தைப்பிங் நகருக்குப் புலம் பெயர்கின்றனர். அங்கே வீடுகளை வாங்கித் தங்களின் ஓய்வு காலத்தைக் கழிக்க விரும்புகின்றனர். உணவுப் பொருட்களின் விலை இங்கு சற்றுக் குறைவாக இருப்பதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.[3]

வரலாறு[தொகு]

19ஆம் நூற்றாண்டில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் தைப்பிங்கைச் சுற்றி இருந்த பகுதிகள் மிகத் துரிதமாக வளர்ச்சி காணத் தொடங்கின. ஈயச் சுரங்கங்களில் வேலை செய்ய ஆயிரக் கணக்கானோர் தைப்பிங்கிற்கு வர வழைக்கப் பட்டனர்.

குறிப்பாகச் சீனர்கள் அதிகமாகச் சீனாவில் இருந்து வந்தனர். 1870 ஆம் ஆண்டுகளில் சீனக் குடியேற்றவாசிகளுக்குள் பலத்த போட்டி மனப்பான்மை உருவாகியது. அவர்களுக்குள் கும்பல், கோஷ்டித் தகராறுகள் அதிகமாயின.

ஈய லம்பங்களில் தங்களின் பாதுகாப்புகளுக்காக இரகசியக் கும்பல்களைத் தோற்றுவித்துக் கொண்டனர். அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர். இந்த இரகசியக் கும்பல்களின் மோதல்கள் ஓர் உச்சக் கட்டத்தை அடைந்தன.

அதனால், ஆங்கிலேயர்கள் அந்த மோதல்களில் தலையிட்டுச் சமரசம் செய்ய வேண்டிய ஒரு நிலைமையும் ஏற்பட்டது. அது ஒரு வகையில் ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக அமைந்தன.

டத்தோ லோங் ஜாபார்[தொகு]

தைப்பிங் நகரம்

அதன் விளைவாக தைப்பிங்கை ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அப்போது தைப்பிங் நகரம் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டங்களுக்குத் தலைப் பட்டணமாக இருந்தது.

தைப்பிங்கிற்கு ’கிலியான் பாவு’ (Klian Pauh) எனும் மற்றொரு பெயரும் உண்டு. கிலியான் என்றால் ஈயச் சுரங்கம். பாவு என்றால் மாம்பழம். ஆங்கிலேயர்கள் தைப்பிங்கைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்னர் டத்தோ லோங் ஜாபார் என்பவர் அதன் மாவட்ட ஆளுநராக இருந்தார். பேராக் சுல்தான் அவருக்கு அதிகாரம் வழங்கி இருந்தார். டத்தோ லோங் ஜாபாருக்குப் பின் அவருடைய மகன் நிகா இப்ராஹிம் என்பவரும் தைப்பிங் மாவட்ட ஆளுநராக இருந்தார்.

லாருட் பெயர் வந்த கதை[தொகு]

தைப்பிங் செயின்ட் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி; 1915-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட காலனித்துவ கால ஆண்கள் பள்ளி.

டத்தோ லோங் ஜாபார், தைப்பிங் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். 1848 ஆம் ஆண்டு லாருட்டில் ஈயம் கண்டுபிடிப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார். லாருட்டில் ஈயம் கண்டுபிடிக்கப் பட்டதைப் பற்றி ஒரு வரலாற்றுக் கதையும் உண்டு. டத்தோ லோங் ஜாபாரிடம் லாருட் எனும் பெயரில் ஒரு யானை இருந்தது. அவர் பயணம் செய்யும் போது அந்த யானையையும் உடன் அழைத்துச் செல்வார்.

ஒரு நாள் அந்த யானை காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் மூன்று நாட்கள் கழித்து அதுவே அவரைத் தேடி வந்தது. அதன் உடல் முழுமையும் சேறும் சகதியுமாக இருந்தது. அத்துடன் அதன் கால்களில் ஈயச் சுவடுகளும் காணப்பட்டன. ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் அந்த இடத்தைத் தேடிச் சென்றார்கள். பின்னர் அந்த இடத்திற்கு யானையின் பெயரான லாருட் என்று வைக்கப் பட்டது.

மலேசியாவில் அதிகமாக ஈயம் தோண்டி எடுக்கப் பட்ட இடங்களில் லாருட் மிக முக்கியமான இடமாக இருக்கின்றது. லாருட் எனும் இடத்திற்கு மலேசிய வரலாற்றில் தனி இடம் உண்டு. 1850ல் லாருட் மாவட்டம் டத்தோ லோங் ஜாபாருக்கு அன்பளிப்பு செய்யப் பட்டது.

அரியணைப் போட்டி[தொகு]

தைப்பிங் நகரின் வான்வழி காட்சி

அப்போது பேராக் சுல்தானாக இருந்த ராஜா மூடா நிகா அலியின் தலைமையில் பேராக் தெமாங்கோங், பாங்லிமா புக்கிட் காந்தாங், பாங்லிமா கிந்தா, ஷா பண்டார், ஸ்ரீ அடிக்கா ராஜா ஆகியோர் ஒன்று இணைந்து அந்த அன்பளிப்பைச் செய்தனர். 1857ல் பேராக் சுல்தான் இறந்ததும் பேராக் அரியணைக்குப் பலத்த போட்டிகள் ஏற்பட்டன.

உட்பூசல்கள் தலைவிரித்தாடின. அரச குடும்பத்தினர் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர். அப்போது தைப்பிங்கில் இருந்த இரு இரகசிய கும்பல்களில் ஆளுக்கு ஒரு தரப்பில் சேர்ந்து கொண்டனர். இரு தரப்பினரும் பழி வாங்கும் படலத்தில் இறங்கினர்.

1857ல் டத்தோ லோங் ஜாபார் இறந்ததும் அவருடைய மகன் நிகா இப்ராஹிம் என்பவர் லாருட் மாவட்டத்தின் ஆளுநராகப் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும் மேலும் பல சீனர்களை லாருட்டிற்கு அழைத்து வந்தார். இந்தக் கட்டத்தில் இரு பெரும் சீனக் குழுக்கள் உருவாகின. ஒரு குழு ‘ஐந்து சங்கங்கள்’ என்று பெயர் வைத்துக் கொண்டது.

சீனர்களின் குழுக்கள்[தொகு]

தைப்பிங் நகரின் இரவு காட்சி
தைப்பிங் நகராண்மைக் கழகம்

மற்றொன்று ‘நான்கு சங்கங்கள்’ என்று பெயர் வைத்துக் கொண்டது. ‘ஐந்து சங்கங்கள்’ குழு கிலியான் பாவுவில் உள்ள ஈயச் சுரங்கங்களில் வேலை செய்தது.

‘நான்கு சங்கங்கள்’ குழு கிலியான் பாருவில் உள்ள ஈயச் சுரங்கங்களில் வேலை செய்தது.

‘ஐந்து சங்கங்கள்’ குழு சீன இனத்தில் ஹக்கா பிரிவைச் சேர்ந்தது. அதை ஓ குவான் (Go-Kuan) என்று அழைத்தனர். ‘நான்கு சங்கங்கள்’ குழு கண்டனீசு பிரிவைச் சேர்ந்தது. இதை சி குவான் (Si-Kuan) என்று அழைத்தனர். கண்டனீசு பிரிவைச் சேர்ந்த ஓ குவான் குழுவிற்கு கீ கின் (Ghee Hin) கும்பல் என்றும்; ஹக்கா பிரிவைச் சேர்ந்த குழுவிற்கு ஆய் சான் கும்பல் என்று அழைக்கப் பட்டது. இந்த இரு கும்பல்களும் இரகசியக் கும்பல்கள். இவை இரண்டுக்கும் இடையே அதிகாரப் போர் நடந்து வந்தது.

இந்தக் கால கட்டத்தில் அதாவது 1860-களில் சீனாவில் தைப்பிங் கிளர்ச்சி நடைபெற்றது. சீனாவில் உள்ள தைப்பிங் வேறு. மலேசியாவில் இருக்கும் தைப்பிங் வேறு. சீனத் தைப்பிங் கிளர்ச்சியில் இருந்து நிறைய ஹாக்கா சீனர்கள் ஆயிரக் கணக்கில் தப்பித்து மலேசிய ஈயச் சுரங்கங்களுக்கு ஓடி வந்தனர். அதனால் ஈயச் சுரங்கத் தொழில் லாருட் வட்டாரத்தில் மிகவும் துரிதமாக வளர்ச்சி கண்டது.

ஜேம்சு பர்ச் கொலை[தொகு]

தைப்பிங் ஏரிப் பூங்காவைச்ச சுற்றியுள்ள சாலையோரத்தில் மழைக்காட்டு மரங்கள்

1875-இல் ஈப்போவில் ஓர் அதிர்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது. டத்தோ மகாராஜா லேலா என்பவரால் பாசீர் சாலாக் எனும் இடத்தில், அப்போதைய பேராக் மாநில ஆங்கிலேய ஆளுநர் ஜேம்சு பர்ச் கொலை செய்யப் பட்டார். அதனால் பேராக்கில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. மாநிலத் தலைநகரம் ஈப்போவில் இருந்து தைப்பிங்கிற்கு உடனடியாக மாற்றம் செய்யப் பட்டது.

இருப்பினும், தைப்பிங் நகரத்தின் ஈயச் சுரங்கத் தொழில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்தது. நாட்டின் முதல் இரயில் சேவை தொடங்கியது. தைப்பிங் நகரத்திற்கும் போர்ட்வெல்ட் என்று அழைக்கப் படும் கோலா செபாத்தாங் எனும் இடத்திற்கும் 1885 சூன் மாதம் முதல் தேதி மலேசியாவின் முதல் இரயில் பாதை போடப் பட்டது. 1900 ஆம் ஆண்டிற்குள் முதல் ஆங்கில நாளிதழ் தைப்பிங்கில் பிரசுரம் ஆனது. முதல் ஆங்கிலப் பள்ளிக்கூடம் கட்டப் பட்டது. பேராக் அரும் பொருள் காட்சியகம் அமைக்கப்பட்டது.

ஈய இருப்பு என்பது நிலையானது அல்ல. ஒரு கட்டத்தில் அந்த இருப்பு ஒரு முடிவிற்கு வரும். அதே போலத் தான் தைப்பிங்கிலும் நடந்தது. காலப் போக்கில் அங்கு கைவசம் இருந்த ஈய இருப்பு தீர்ந்து போனது. அதற்குப் பதிலாக இப்போது ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் வந்து விட்டன. பழைய வளப்பத்துடன் தைப்பிங் பீடு நடை போட்டு வருகின்றது.

தைப்பிங் சாதனைகள்[தொகு]

தைப்பிங் தொடருந்து நிலையம்

தைப்பிங் நகரின் ஈய வளம், மாநிலத் தலைநகரம் என்கிற தகுதி உயர்வு போன்றவை அந்த நகரத்திற்குப் பல சாதனைப் பதிவுகளை வழங்கியுள்ளன. 1844 ஆம் ஆண்டில் இருந்து அந்தச் சாதனைகளின் பட்டியல் நீண்டு வருகின்றது. மலேசிய நாட்டின் 40 முதல் சாதனைகள் தைப்பிங்கில் படைக்கப் பட்டு உள்ளன. இவற்றை தைப்பிங் நகராண்மைக் கழகம் வழங்கியுள்ளது.

  • தீபகற்ப மலேசியாவின் முதல் ஈயச் சுரங்கம் (1844)
  • நாட்டின் முதல் உல்லாசத் தளம் - மெக்ஸ்வல் மலை (1844)
  • முதல் நீச்சல் குளம் - கோரனேஷன் நீச்சல் குளம் (1870)
  • முதல் பள்ளிவாசல் - துங்கு மந்திரி பள்ளிவாசல் (1870)
  • முதல் ஓய்வகம் (1870)
  • முதல் பீரங்கிப் படை (1870) * முதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் (1874)
  • முதல் பெங்குளு கிராமத் தலைவர் அலுவலகம் (1875)
  • முதல் ஆங்கிலேய ஆளுநர் மாளிகை (1877)
  • முதல் துறைமுகம்- போர்ட் வெல்ட் (1877)
  • முதல் ஆங்கிலப் பள்ளி - கமுந்திங் மத்தியப் பள்ளி (1878)
  • போலீஸ் படை (1879)
  • அரசாங்க அலுவலகங்கள் (1879)
  • அஞ்சல் தொலைத் தொடர்பு அலுவலகம் (1880)
  • பூக்குளம் - தைப்பிங் பூக்குளம் (1880)
  • தைப்பிங் பொது மருத்துவமனை (1880)
  • சங்கம் - நியூ கிளப் (1880)
  • மன்றம் - பேராக் மன்றம் (1881)
  • முதல் இரயில்வே நிலையம் (1881)
  • பேராக் அரும் பொருள் காட்சியகம் (1883)
  • தைப்பிங் சந்தை (1884)
  • தைப்பிங் சிறை(1885)
  • இரயில் பாதை - தைப்பிங்கில் இருந்து போர்ட் வெல்ட் வரை(1885)
  • பேராக் குதிரைப் பந்தயக் கழகம் (1886)
  • தைப்பிங் ஆல் செயிண்ட் மாதாகோயில் (1886)
  • பெண்கள் பள்ளி - திரேச்சர் மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி (1889)
  • தைப்பிங் மணிக்கூண்டு (1890)
  • நகர ஓய்வு மைதானம் (1890)
  • மலாய் நாளிதழ் - ஸ்ரீ பேராக் (June 1893)
  • ஆங்கில நாளிதழ் - பேராக் பாய்னியர் (July 4, 1894)
  • தமிழ் நாளிதழ் - பேராக் வர்த்தமணி (1894)
  • இராணுவப் படை - மலாய் மாநிலப் படை (1896)
  • ஆசிரியர் கல்லூரி - மலாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
  • இலங்கையர் சங்கம் (1899)
  • பஞ்சாபியர் சங்கம் - மலாயா கல்சா திவான் சங்கம் (1903)
  • இந்தியர் சங்கம் (1906)
  • பொழுதுபோக்கு மைதானம் - கோரனேஷன் மைதானம் (1920s)
  • விமானத் திடல் - தெக்கா விமானத் திடல் (1930)
  • கோல்ப் திடல் - தைப்பிங் கோல்ப் திடல்
  • நூலகம் - மெர்டேக்கா நூலகம்
  • தீயணைப்புப் படை

தைப்பிங் புறநகரங்கள்[தொகு]

தைப்பிங் ஒரு பெரிய நகரமாக இருந்தாலும், அதைச் சுற்றி பல புதிய பழைய குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. பல புறநகர்ப் பகுதிகளும் உள்ளன. அவற்றின் விவரங்கள்:

  • கமுந்திங்
  • அவுலோங்
  • பொக்கோ ஆசாம்
  • ஆயர் கூனிங்
  • சங்காட் ஜெரிங்
  • சிம்பாங்
  • ஜெலுத்தோங் கிராமம்
  • சே கிராமம்
  • பாவு கிராமம்
  • தேவ் கிராமம்
  • சங்காட் ஈபோல்
  • புக்கிட் கந்தாங்
  • உலு துப்பாய் கிராமம்
  • துப்பாய் தொழில்துறைப் பகுதி
  • பச்சை வீடு பகுதி
  • அசாம் கும்பாங்
  • புக்கிட் ஜானா
  • கம்போங் போயான்
  • லாருட் ஈயம்
  • கிலியான் பாவு
  • தைப்பிங் ஹைட்ஸ்
  • ஆயர் பூத்தே
  • கம்போங் பினாங்
  • மாத்தாங்
  • கோலா செபாத்தாங்
  • கம்போங் செண்டுக் தெங்கா

உடல் நல மையங்கள்[தொகு]

தைப்பிங் நகரின் முக்கியமான உடல் நல மையங்கள்

  • தைப்பிங் மருத்துவமனை
  • செலாமா மருத்துவமனை
  • தைப்பிங் பொது மருத்துவகம்
  • தைப்பிங் மெடிக்கல் செண்டர்
  • அப்போலோ மெடிக்கல் செண்டர்
  • கொலாம்பியா ஆசியா மருத்துவமனை
  • பொக்கோக் அசாம் மருத்துவகம்
  • கமுந்திங் மருத்துவகம்
  • சங்காட் ஜெரிங் மருத்துவகம்
  • போர்ட் வெல்ட் மருத்துவகம்
  • லாருட் மெடிக்கல் செண்டர்

சுற்றுலா[தொகு]

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

  • தைப்பிங் பூந்தோட்டக் குளம் - Taiping Lake Gardens
  • மெஸ்வல் குன்று
  • பேராக் அரும் பொருள் காட்சியகம்
  • தைப்பிங் வனவிலங்கம் & இரவு காணுலா - Night Safari
  • தைப்பிங் போர் வீரர்கள் கல்லறை
  • ஆங்கிலேய ஆளுநர் மாளிகை (1877)
  • காப்பித்தான் சுங் கீ நகர மாளிகை
  • புக்கிட் ஜானா கோலப் திடல்
  • புக்கிட் மேரா சுற்றுலா மையம்
  • பர்மியர் குளம்
  • சீனப் புலிகள் இல்லம்
  • ஆஸ்டின் நீச்சல் குளம்
  • தாமான் சூரியா ஆற்றுப் படுகை
  • துப்பாய் புத்த சமயக் கல்லறை
  • சீகியர் குர்ட்வாரா
  • துப்பாய் சீனக் கல்லறை
  • தைப்பிங் நூலகம்
  • தைப்பிங் விமானத் திடல்
  • சுல்தான் யூசோப் விளையாட்டு அரங்கம்
  • துரோங் சுடுநீர் கிணறுகள்
  • கோலா செபாத்தாங் வனவிலங்கு காட்டுப் பகுதி
  • நிகா இப்ராஹிம் கோட்டை
  • நிங் பூ பி நீறூற்று
  • பிரிட்டிஷ் போர் வீரர்கள் கல்லறை--ksmuthukrishnan 19:33, 28 மே 2011 (UTC)

ஆவணங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைப்பிங்&oldid=3866700" இலிருந்து மீள்விக்கப்பட்டது