கோப்பேங்

ஆள்கூறுகள்: 4°27′N 101°09′E / 4.450°N 101.150°E / 4.450; 101.150
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோப்பேங்
Gopeng
亚罗邦士
கோப்பேங் நகரத்தின் ஒரு பகுதி
கோப்பேங் நகரத்தின் ஒரு பகுதி
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1840
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mdkampar.gov.my/

கோப்பேங் (Gopeng) மலேசியா, பேராக் மாநிலத்தில், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 24 கி.மீ.; கம்பார் நகரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. கோப்பேங் நகரத்திற்கு மிக அருகில் சிம்பாங் பூலாய் எனும் மற்றும் ஒரு சிறுநகரம் உள்ளது.

பேராக் மாநிலத்தில் முதன்முதலில் ஈயம் தோண்டி எடுக்கப்பட்ட நகரங்களில் கோப்பேங் நகரமும் ஒன்றாகும். 1890-ஆம் ஆண்டு வரை கிந்தா பள்ளத்தாக்கில் கோப்பெங் ஒரு முன்னணி ஈயச் சுரங்க நகரமாக விளங்கியது. ஈப்போ முதல் இடத்தைப் பிடித்ததும் கோப்பேங் நகரின் புகழ் மங்கியது. இந்த நகரத்தில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். இன்றும்கூட சீன மக்களின் ஆதிக்கத்தைக் காணலாம்.[1]

கோப்பேங் என்று சொல்லும் போது யூ தோங் சென் (Eu Tong Sen) எனும் சீன வணிகரின் சேவைகளை மறக்க இயலாது. கோப்பேங் நகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி உள்ளார். ஒரு காலக் கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கில் 11 ஈயச் சுரங்கங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தார். இவரிடம் 12,000 தொழிலாளர்கள் வேலை செய்தனர். கோப்பேங் வளாகத்தில் மட்டும் இவருக்குச் சொந்தமாக மூன்று ஈயச் சுரங்கங்கள்.[2]

1850-ஆம் ஆண்டுகளிலேயே மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது. ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. இப்போது இந்தக் கோப்பேங் நகரம் ஆள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.

பொது[தொகு]

1910-ஆம் ஆண்டுகளில் கோப்பேங்

1900-ஆம் ஆன்டுகளில் கோப்பேங் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. தமிழர்களும் கணிசமான அளவில் இருந்தனர். அதே சமயத்தில் பிரித்தானியர்களுக்குச் சொந்தமான ஈயச் சுரங்கங்களிலும் தமிழர்கள் வேலை செய்தனர். பிரித்தானியர்கள் அந்தச் சுரங்கங்களை மூடியதும் தமிழர்கள் சொந்தமாகக் காய்கறிகளைப் பயிரிட்டனர். ஆடு மாடுகளை வளர்த்தனர். கோப்பேங்கில் லாவான் கூடா எனும் ஒரு தமிழர்ப் பகுதி உள்ளது. இங்கு கணிசமான அளவிற்கு தமிழர்கள் உள்ளனர். ஓரளவிற்கு வசதியாகவும் வாழ்கின்றனர்.

கோப்பேங் புலி[தொகு]

இந்தக் கோப்பேங் நகரம் 1970-ஆம் ஆண்டுகளில் கோப்பேங் புலி என்று புகழப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பட்டு அவர்களின் வாழ்விடம் ஆகும்.[3] அமரர் பி. பட்டு நாடறிந்த மூத்த அரசியல்வாதி. பன்மொழித் திறன் பெற்றவர். தமிழ், சீன, ஆங்கில மொழிகளில் சிறப்பாகப் பேசக் கூடியவர். சனநாயகச் செயல் கட்சியில் முக்கியத் தலைவராக வலம் வந்தவர். பேராக், மெங்லெம்பு தொகுதியின் மக்களவை உறுப்பினராகச் சேவை செய்தவர். மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்.

கோப்பேங் மகா முத்து மாரியம்மன் ஆலயம்[தொகு]

கோப்பேங் கோபிசான் பாரு முத்து மாரியம்மன் ஆலயம்

கோப்பேங், கோபிசான் பாருவில் அமைந்து உள்ள ஓர் இந்து ஆலயம். கோப்பேங் வட்டாரத்தில் பிரபலமான ஆலயம். 1962-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. முன்பு காளியம்மன் கோவில் என்று அழைக்கப்பட்டது.

கோப்பேங் பெர்காட் எனும் தனியார் வீடமைப்பு நிறுவனம் வழங்கிய ஒரு நிலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டது. 1964-ஆம் ஆண்டில் மாரியம்மன் தேவியைப் பிரதான தெய்வமாக வைத்து வழிபடுவதற்கு இந்த ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டது.

கோப்பேங் பாரம்பரிய இல்லம்[தொகு]

கோப்பேங் பாரம்பரிய இல்லம்

கோப்பேங் நகரில் சாலான் சுங்கை ஈத்தேக் (Jalan Sungai itek) எனும் சாலை உள்ளது. நெரிசல் மிக்கச் சாலை. இந்தச் சாலையில் 13 பாரம்பரியக் கடைகள் உள்ளன. அவற்றில் ஒரு கடை பாபா நொன்யா (Baba Ngonya) பாரம்பரிய மாளிகையாக இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பிரித்தானியர் காலத்தில் சீனர்கள் வாழ்ந்த பழைய வாழ்வியல் அமைப்பை இந்த மாளிகை சித்தரிக்கின்றது. அந்தக் காலத்துச் சீனர்களின் கொப்பித்தாம் காபி பரிமாறும் அறை; ஒரு முடிதிருத்தும் அறை; இரவு கேளிக்கை அறை. இப்படி நிறைய அறைகள் உள்ளன. பொதுமக்களின் நன்கொடைய மூலமாக இன்றும் பராமரித்து வருகிறார்கள்.[4]

கோப்பேங் அரும் காட்சியகம்[தொகு]

இந்த நகரின் சாலான் இயூ கோங் சாலையில் கோப்பேங் அரும் காட்சியகம் (Muzium Gopeng) எனும் பெயரில் ஓர் அரும் காட்சியகம் உள்ளது. 2009-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கலைப் பொருட்கள், பழைய தளவாடங்கள், சீன எழுத்து ஓவியங்கள், காலனித்துவக் காலத்திற்கு முந்தைய புகைப்படங்கள் ஆகியவற்றின் ஒரு பரந்த தொகுப்பை இங்கு காணலாம்.[5]

ககாரு தேயிலை பள்ளத்தாக்கு[தொகு]

கோப்பேங் ககாரு தேயிலை பள்ளத்தாக்கு

கோப்பேங்கிற்கு அருகில் ஒரு தேயிலை பள்ளத்தாக்கு உள்ளது. அதன் பெயர் ககாரு தேயிலை பள்ளத்தாக்கு (Gaharu Tea Valley). 300 ஏக்கர் பரப்பளவு. கோப்பேங் நரில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் உட்பகுதியில் உள்ளது. தேயிலைப் பள்ளத்தாக்கு என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தாலும் இந்தப் பள்ளத்தாக்கு 200,000 சந்தனாகரு (aquilaria agallocha) மரங்களைக் கொண்ட தோட்டமாகும்.

அகரு மரங்கள் அருமையான வாசனை கொண்டவை. அதே வேளையில் மருத்துவக் குணங்கள் கொண்டவை. உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் பண்புகளும் உள்ளன.

பன்னெடும் காலமாக மத்திய கிழக்கு; சீன கலாசாரங்களில் புகழ் பெற்றவை. அகர் அல்லது அகரு மரம் என்பது மரங்களின் கடவுள்; வாசனை திரவியங்களின் அரசன் என்றும்; பசுமை தங்கம் என்றும்; கடந்த 3000-ஆம் ஆண்டுகளாக உலக மக்களால் போற்றப் படுகிறது. அகில் சந்தனம் என்றும் அழைக்கப் படுகிறது. அகர் மரம் சந்தன மரத்தைவிட பல மடங்கு விலை மதிப்பு வாய்ந்தது. இப்போது இது ஒரு வேளாண் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.[6]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பேங்&oldid=3590089" இலிருந்து மீள்விக்கப்பட்டது