பீடோர்

ஆள்கூறுகள்: 4°7′N 101°17′E / 4.117°N 101.283°E / 4.117; 101.283
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீடோர்
Bidor
拜多
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1800
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்30,018
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
இணையதளம்http://www.mdtapah.gov.my/
1936-ஆம் ஆண்டில் பீடோர் ஈயச் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட 8 - 9-ஆம் நூற்றாண்டு அவலோகிதர் வெண்கலச் சிலை. இந்தச் சிலை இப்போது கோலாலம்பூர் மலேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.
பேராக், செண்டிரியாங் காட்டுப் பகுதியில் இசைக்கருவிகளுடன் செனோய் பழங்குடியினர் குழு. 1906-ஆம் ஆண்டு எடுத்த படம்.

பீடோர் (Bidor) நகரம் மலேசியா, பேராக், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறுநகரம். ஈப்போ கோலாலம்பூர் மாநகரங்களுக்கு இடையில், மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியில் இந்த நகரம் அமைந்து உள்ளது.

வடக்கே தாப்பா நகரம். தெற்கே சுங்கை, சிலிம் ரீவர், தஞ்சோங் மாலிம் நகரங்கள். கிழக்கே சங்காட் ஜோங், தெலுக் இந்தான் நகரங்கள் உள்ளன. ஈப்போ மாநகரத்தில் இருந்து 58 கி.மீ.; சுங்கை நகரத்தில் இருந்து 11 கி.மீ.; தொலைவில் இந்த நகரம் அமைந்து உள்ளது.

பீடோர் பகுதியில் பல அரிய வரலாற்று கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் அடிப்படையில் கங்கா நகரம் பேரரசின் ஒரு பகுதியாக பீடோர் விளங்கி உள்ளது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இந்து - பௌத்த மதங்களின் தாக்கங்கள் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

1936-ஆம் ஆண்டில் பீடோர் ஆங்கிலோ ஓரியண்டல் ஈயச் சுரங்கத்தில் 8 - 9-ஆம் நூற்றாண்டின் அவலோகிதர் (Avalokitesvara) வெண்கலச் சிலை கண்டு எடுக்கப்பட்டது.[1] அதன் பின்னர் தான் கங்கா நகரப் பேரரசின் ஆளுமை பீடோர் வரையிலும் பரவி இருந்தது வெளி உலகிற்குத் தெரிய வந்தது.[2]


வரலாறு[தொகு]

செனோய் பூர்வீகக் குடிமக்கள்[தொகு]

பீடோர் மலைவளங்கள் சூழ்ந்த பகுதி. சுற்றிலும் பச்சைப் பசேலென நிறைய காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் செனோய் பூர்வீகக் குடிகள் வாழ்கின்றனர். இவர்களை ஓராங் அஸ்லி என்று அழைக்கிறார்கள். நாட்டின் அசல் மைந்தர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக மலாயா காடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

செனோய் பூர்வீகக் குடிமக்கள் காட்டில் கிடைக்கும் தாவரங்கள், மூலிகைகள், மருந்து வேர்கள் போன்றவற்றைக் கொண்டு வந்து பீடோர் நகரில் விற்கின்றனர். அவர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். பழகுவதற்கு இனிமையானவர்கள். கள்ளம் கபடமற்றவர்கள்.

நவீனத் தொழிநுட்ப வளர்ச்சியின் தாக்கங்கள் இவர்களையும் விட்டு வைக்கவில்லை. முன்பு காலத்தில் காடுகளில் ஈட்டியும் அம்புமாய்த் திரிந்தவர்கள் இப்போது ஆளாளுக்கு ஓர் அலைபேசியுடன் ஊர்க்கோலம் போகிறார்கள்.

தமிழர்கள் குடியேற்றம்[தொகு]

18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பீடோர் ஒரு சிறிய கிராமமாக இருந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. உள்ளூர் கிராமவாசிகள் படகுகளைப் பயன்படுத்திப் பீடோர் ஆற்றின் வழியாக உள்ள கிராமங்களுக்கும்; தெலுக் இந்தான் நகரத்திற்கும் தங்கள் பொருட்களை கொண்டு சென்று உள்ளனர். பண்டமாற்று வியாபாரம் னடந்து உள்ளது.

பிரித்தானிய முதலாளிகளின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கும், இரயில் பாதைகளில் வேலை செய்வதற்கும், தமிழர்கள் பீடோர் நகரத்திற்கு அழைத்து வர்ப் பட்டனர். அத்துடன் அப்போதைய பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தின் போர் வீரர்களாகவும் துணை போலீஸ்காரர்களாகவும் சேவைகள் செய்து உள்ளனர்.

1900-ஆம் ஆண்டுகளில் பீடோர் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. கோலா பீடோர் தோட்டம்; பீடோர் தகான் தோட்டம்; அமில்தோனியா தோட்டம் (Hamiltonia Estate); சரஸ்வதி தோட்டம் (Sarasuwatty Estate); புக்கிட் காத்தோ தோட்டம்; பீக்காம் தோட்டம்; நார்புரோ தோட்டம்; பனோப்டேன் தோட்டம் (Ladang Banopdane) என நிறையத் தோட்டங்கள் இருந்தன. அவற்றில் சில தோட்டங்கள் இன்றும் உள்ளன.[3] 1980-ஆம் ஆண்டுகளில் இந்த ரப்பர் தோட்டங்கள் செம்பனைத் தோட்டங்களாக மாற்றம் கண்டன.

தமிழர்கள் இடம் பெயர்வு[தொகு]

1990-ஆம் ஆண்டுகளில் நாட்டின் மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் பல ரப்பர் தோட்டங்கள் துண்டாடப்பட்டன. பீடோர் பகுதிகளில் இருந்த ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்த பல்லாயிரம் தமிழர்கள் தாப்பா, தெலுக் இந்தான், தஞ்சோங் மாலிம் போன்ற நகர்ப் புறங்களை நாடிச் சென்றனர். இதன் காரணமாக பல ரப்பர் தோட்டங்களில் இருந்த பல தமிழ்ப்பள்ளிகளும் மூடப்பட்டன.

1957-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் மலாயா நாட்டில் 1020 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தன. இப்போது மலேசியாவில் 524 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே உள்ளன. மாணவர்களின் பற்றாக்குறையினால் 2021-ஆம் ஆண்டில் மூன்று தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன.

பேராக் மாநிலத்தில் ஈயச் சுரங்கத் தொழில் வளர்ச்சி கண்டதைத் தொடர்ந்து, பீடோர் நகருக்குச் சீனர்கள் குடியேறி உள்ளனர். சீன ஹொக்கியான் மொழி பேசும் சீனர்கள் தெலுக் இந்தானில் இருந்து பீடோருக்கு வந்து இருக்கலாம். கிந்தா மாவட்டம், உலு சிலாங்கூர் பகுதிகளில் இருந்து சீன வம்சாவளியைச் சேர்ந்த ஹக்கா, கந்தோனீஸ் பிரிவினர் பீடோருக்கு வந்து இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.

கம்பார் போர்[தொகு]

இந்திய இராணுவத்தின் காலாட்படை பிரித்தானிய துருப்புக்களுடன் இணைந்து ஜப்பானிய இராணுவத்திற்கு எதிராகக் கடுமையான போரில் ஈடுபட்டன. இந்தப் படம் கம்பார் பகுதியில் எடுக்கப்பட்டது. (1941-1942)
டிசம்பர் 1941, மலாயாவில் சப்பானியர்கள் பயன்படுத்திய 97 டெகே டாங்கிகள்.

1941 ஆம் ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டு வரையிலான சப்பானியர்கள் ஆட்சியின் வரலாற்று ஏடுகளில் கம்பார் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இங்குதான் வரலாற்றுப் புகழ் பெற்ற கம்பார் போர் (Battle of Kampar) நடந்தது. இந்தப் போரில் பீடோர் நகரமும் முக்கிய இடம் வகிக்கிறது.[4] கம்பார் பகுதியில் இருந்து பின்வாங்கிய இந்திய பிரித்தானிய துருப்புகள் பீடோர் பகுதியில் இருந்து மீண்டும் எதிர்த்தாக்குதல் வழங்கின.

கம்பார் போர் 1941 டிசம்பர் 30-ஆம் தொடங்கி 1942 ஜனவரி 2-ஆம் தேதி வரை நடந்தது. இந்தப் போரில் ஏறக்குறைய 3000 இந்திய, பிரித்தானிய, கூர்கா கூட்டுப் படை வீரர்களும் 6000 சப்பானியப் படை வீரர்களும் ஈடுபட்டனர். தீபகற்ப மலேசியாவின் வடக்கே இருந்து இடியும் மின்னலுமாக இறங்கி வந்த சப்பானியர்களைத் தடுத்து நிறுத்தியது இந்தக் கம்பார் நிகழ்ச்சி தான்.[5]

பீடோர் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சி[தொகு]

1941 டிசம்பர் 29-ஆம் தேதி இந்திய பிரித்தானிய இராணுவப் படையின் 501-ஆம் காலாட்படை கம்பார் பகுதியில் இருந்து தப்பி பீடோர் பகுதியில் தஞ்சம் அடைந்தது. பீடோருக்கு அருகில் கோலா டிப்பாங் எனும் கிராமப் பகுதி. அங்கு சப்பானியப் படையினர் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தினார்கள்.

அடுத்து பீடோர்; பீக்காம் பகுதிகளில் தொடர் தாக்குதல்கள். இந்திய பிரித்தானிய இராணுவப் படையினருக்கும் சப்பானியப் படையினருக்கும் இடையே நடந்த அந்தப் போரில் இரு தரப்பிலும் பல நூறு போர் வீரர்கள் இறந்தனர். இந்த நிகழ்ச்சி பீடோர் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.[6][7]

செனாய் பிராக் கண்காணிப்புக் குழு[தொகு]

மலாயா சுதந்திரம் பெற்ற பிறகு பீடோர் பகுதியில் கம்யூனிஸ்டுகளின் அச்சுறுத்தல்கள் பரவலாக இருந்தன. அதன் காரணமாக பீடோர் ஒரு கறுப்புப் பகுதியாக அடையாளம் கூறப்பட்டது. கம்யூனிஸ்டுகளின் அச்சுறுத்தல்களை ஒடுக்குவதற்கு அரச மலேசிய போலீஸ் படையினர் (Royal Malaysian Police 3rd Battalion General Operations Forces) பீடோர் நகரில் ஒரு சிறப்புக் காவல் தளம் அமைத்தனர்.

அந்த அரச மலேசியப் போலீஸ் படையினருக்கு உதவியாகச் செனாய் பிராக் (Senoi Praaq) எனும் சிறப்பு ஒராங் அஸ்லி (பூர்வீகப் பழங்குடியினர்) கண்காணிப்புக் குழு ஒன்றும் உருவாக்கப் பட்டது.[8]

பிடோரில் கடைசியான 'கறுப்புப் பகுதி' கெப்பாய் நீர்வீழ்ச்சி (Gepai Falls) ஆகும். 1989-ஆம் ஆண்டில் மலேசிய அரசாங்கத்திற்கும் மலாயன் கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் கெப்பாய் நீர்வீழ்ச்சி பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

பொருளியல்[தொகு]

பீடோர் ஒரு முக்கியத் தொழில்துறை பகுதி. இந்த நகருக்கு ஒருவர் பயணிக்கும் போது, சாலையின் இருபுறமும் பசுமையான பசுமைகளைக் காணலாம். கொய்யா தோட்டங்கள்; எண்ணெய்ப் பனைத் தோட்டங்கள்; ரப்பர்த் தோட்டங்கள் வரிசை வரிசையாகப் புடை சூழ்ந்து இருப்பதையும் காணலாம்.

இந்த நகரம் அதன் உணவு வகைகளுக்கு மிகவும் பிரபலமாக விளங்குகிறது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு பீடோர் உணவகங்களுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

கயோலைனைட் (Kaolinite) எனும் ஒரு வகையான களிமண் பிடோரில் பரவலாகத் தோண்டி எடுக்கப் படுகிறது.[9]

பீடோர் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

பீடோர் பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Banopdane)[10]

பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (SJKT Tun Sambanthan)[11]

பீடோர் தகான் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Bidor Tahan)[12]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Avalokitesvara statue was made of bronze and has eight arms of which one is broken. It is dated sometime between the 7th and the 12th Centuries AD, when the culture of the region was Hindu-Buddhist. The statue weighs 63 kilograms.
 2. Bidor area used to be part of the Gangga Negara based on the 8-9th century bronze Buddhist Avalokitesvara statue found in 1935. The people in this area accepted Hindu-Buddhism around 900 years ago. That makes the area one of the oldest settlements in Malaysia.
 3. Muntok – Palembang – Belalau recollections during 1942-1945, Colin Douglas Campbell.
 4. Smith, Colin (2006). Singapore Burning. pp. 306–317. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-101036-6.
 5. Thompson, Peter (2005). The Battle for Singapore: The True Story of the Greatest Catastrophe of World War II. London: Portrait. p. 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7499-5085-4.
 6. Thompson pg. 187
 7. Owen, Frank (2001) [1960]. The Fall of Singapore. London: Penguin. p. 94.
 8. "Troop that relied on the sixth sense - Letters | The Star Online". www.thestar.com.my.
 9. Kaolin reserves in Malaysia is estimated to be around 112 million tons which are spread in Johor, Kelantan, Pahang, Perak, Sarawak and Selangor.
 10. பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
 11. பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி
 12. பீடோர் தகான் தமிழ்ப்பள்ளி


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீடோர்&oldid=3894006" இலிருந்து மீள்விக்கப்பட்டது