தஞ்சோங் மாலிம்

ஆள்கூறுகள்: 3°41′N 101°31′E / 3.683°N 101.517°E / 3.683; 101.517
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சோங் மாலிம்
Tanjung Malim
பேராக்
தஞ்சோங் மாலிம் வரவேற்புச் சின்னம்
பழைய நகரம்
பழைய நகரம் வடக்குப் பகுதி
தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம்
சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகம்
Map
தஞ்சோங் மாலிம் is located in மலேசியா
தஞ்சோங் மாலிம்
      தஞ்சோங் மாலிம்
ஆள்கூறுகள்: 3°41′N 101°31′E / 3.683°N 101.517°E / 3.683; 101.517
நாடுமலேசியா
மாநிலம்பேராக்
மாவட்டம்முவாலிம் மாவட்டம்
தோற்றம்1990
அரசு
 • வகைநகராண்மைக் கழகம்
 • யாங் டி பெர்துவாமுகமட் பின் மூசா
பரப்பளவு
 • மொத்தம்949.86 km2 (366.75 sq mi)
ஏற்றம்21.95 m (72 ft)
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்60,791
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு31900
மலேசியத் தொலைபேசி எண்கள்05
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்A
இணையதளம்தஞ்சோங் மாலிம் நகராண்மைக் கழகம்
புரட்டோன் சிட்டி துணை நகரம்
சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகம்

தஞ்சோங் மாலிம் (ஆங்கிலம்: Tanjung Malim; சீனம்: 丹绒马林); என்பது மலேசியா, பேராக் முவாலிம் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இந்த நகரம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 70 கி.மீ. வடக்கே உள்ளது. அத்துடன் இந்த தஞ்சோங் மாலிம் நகரம், பேராக் மாநிலத்தையும் சிலாங்கூர் மாநிலத்தையும் இணைக்கும் ஒரு பட்டணம் ஆகும். தஞ்சோங் மாலிம் நகரத்தை பெர்ணம் ஆறு இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது.

இந்த நகரம் தஞ்சோங் மாலிம் மாவட்டக் கழகத்தின் கீழ் செயல் பட்டு வருகின்றது. இந்த நகரத்தைச் சுற்றிலும் புரோட்டோன் சிட்டி (Proton City), பேராங், பேராங் 2020, சுங்கை, சிலிம் ரிவர் எனும் துணை நகரங்கள் இருக்கின்றன.

பொது[தொகு]

தஞ்சோங் மாலிம் நகரம் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு பகுதியைப் பழைய நகர் என்றும் இன்னொரு பகுதியைப் புதிய நகர் என்றும் அழைக்கின்றார்கள். வரலாற்றுப் புகழ் வாய்ந்த இந்த நகரை நவீன மயமான இரயில் சேவைகள், கூடுதலானச் சிறப்புகளை வழங்கி மேலும் சிறப்புச் செய்து வருகின்றன.

வரலாறு[தொகு]

தொடக்கக் காலங்களில் இந்தோனேசியாவின் பூகிஸ் மக்கள் இங்கு வந்து குடியேறினர். 1700-ஆம் ஆண்டில் பெர்ணம் ஆற்றுக் கரையோரத்தில் ஒரு பூகிஸ் குடியிருப்பு உருவாக்கம் பெற்றது. 1766-ஆம் ஆண்டில் பேராக் சுல்தான் முகம்மது ஷா, பூகிஸ் இளவரசர் லுமு என்பவரைச் சுல்தான் சலாவுடின் ஷா என்று முடி சூட்டி அவரைச் சிலாங்கூர் சுல்தானாக அரியணையில் அமர்த்தினார்.

அதன் பின்னர், சுங்கை பெர்ணம் நகரப் பகுதி, சிலாங்கூர் மாநில எல்லையாக அமைந்தது. மற்றொரு பகுதியான தஞ்சோங் மாலிம், பேராக் மாநில எல்லையாக அமைந்தது. 1875-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் நகரில் ஓர் இனக் கலவரம் ஏற்பட்டது.

கீ இன்-ஆய் சான்[தொகு]

அப்போது அங்கு வாழ்ந்த மலாய் சமூகத்தினர் அங்கிருந்து உலு பெர்ணம் சிற்றூருக்கு குடி பெயர்ந்தனர். அங்கே அவர்கள் அமைதியான வாழக்கையைத் தொடங்கினர். அந்தக் கட்டத்தில் ஈப்போவில் கீ இன் - ஆய் சான் ரகசியக் கும்பல்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டது.

அதன் விளைவாகச் சீனச் சமூகத்தவர் ஈப்போவில் இருந்து உலு பெர்ணத்தில் குடியேறினர். 1900-ஆம் ஆண்டு தொடக்கம். அங்கு வாழ்ந்த சீன ஹோக்கியான் சமூகத்தவர் இரு வரிசைக் கடைவீடுகளை உலு பெர்ணத்தில் கட்டினர். அந்தக் கடைவீடுகள் உலு பெர்ணத்தின் நுழைவாயிலாகவும் அமைந்தது.

உலு பெர்ணம்[தொகு]

இந்தப் பழைய கடைவீடுகளை தற்காலத்திலும் தஞ்சோங் மாலிமில் இருந்து உலு பெர்ணத்திற்குச் செல்லும் பிரதான சாலையில் காண முடியும். 2000-களில் ஒரு சில கடைவீடுகள் ஒரு சின்ன தீவிபத்தில் எரிந்து போயின.

அவற்றுக்குப் பதிலாக மீண்டும் பலகையால் ஆன கடைகள் கட்டப் படுவதற்கு தஞ்சோங் மாலிம் நகராண்மைக் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், சீன சமூகத்தவரின் ஒருமித்த கோரிக்கையினால் பலகை வீடுகள் கட்டப் படுவதற்கு அனுமதி வழங்கப் பட்டது மலேசிய அரசியலில் ஒரு திருப்பம்.

மோகா சமூகத்தவர்[தொகு]

பழைய நகர் என்று அழைக்கப்படும் வட பகுதி, தற்போதைய நவீன மேம்பாடுகளுக்காக முழுக் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. காலனித்துவ ஆட்சியின் போது இந்த நகரின் முக்கிய வருவாய்த் துறையாக விவசாயம் இருந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியச் சமூகத்தினரை ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யக் கொண்டு வந்தனர்.

இந்தக் காலகட்டத்தில் மோகா எனும் சமூகத்தினரும் தஞ்சோங் மாலிம் புறநகரில் சிறுதொழில் வியாபாரங்களில் ஈடுபட்டனர். இவர்கள் இந்தியாவின் குஜாராத் மாநிலத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். பின்னாளில் இந்த மோகா சமூகத்தவர் பொருளாதார ரீதியில் பெரிய முன்னேற்றம் அடைந்தனர். இப்போது மோகா பேருந்து நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.

கல்வி நகரம்[தொகு]

அண்மைய காலங்களில் தஞ்சோங் மாலிம் மிகத் துரிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. புதிய தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம், நவீன பேருந்து நிலையம், சீரமைக்கப் பட்ட சாலைகள், புதிய பள்ளிக்கூடக் கட்டிடங்கள், புதிய மருத்துவமனை ஆகியவை உருவாக்கப்பட்டு வளர்ச்சியடைந்து உள்ளது.

1922 ஆம் ஆண்டில் மலேசியாவின் முதல் கல்வி பயிற்சி நிலையம் இங்குதான் கட்டப்பட்டது. அதன் பெயர் சுல்தான் இட்ரிஸ் பயிற்சிக் கல்லூரி. அக்கல்லூரி 1997 ஆம் ஆண்டு சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் என தகுதி உயர்வு பெற்றது. இந்தக் கல்லூரி மலேசியாவில் பல கல்விமான்களுக்குப் பல அரிய சாசனங்களை வழங்கி உள்ளது.

அண்மையில் ஒரு பல்துறைப் பயிற்சிக் கழகமும் இந்தத் தஞ்சோங் மாலிமில் தோற்றுவிக்கப் பட்டது. பல தனியார்க் கல்வி நிலையங்களும் உயர்க்கல்வி வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அதனால் இந்த நகரம் இப்போது ‘கல்வி நகரம்’ எனும் சிறப்பு பெயருடன் இப்போது அழைக்கப் படுகின்றது.

ஜப்பானிய ஆக்கிரமிப்பு[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது, தஞ்சோங் மாலிம் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தும் உள்ளது. ஜப்பானியர்கள் கைது செய்த இராணுவ வீரர்கள், காவல் துறை அதிகாரிகள், பொது மக்கள், ஜப்பானிய எதிர்ப்பாளர்கள் போன்றோர் இங்குள்ள சுல்தான் இட்ரிஸ் பயிற்சிக் கல்லூரியில் தான் அடைக்கப்பட்டனர். சித்ரவதையும் செய்யப்பட்டனர்.

பின்னர், அவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தூக்கிலிடப்பட்டனர். பல்கலைக்கழகமாக மாற்றம் கண்டுள்ள இந்தக் கல்லூரியில் இப்போதும் கூட ஆவிகள் உலவி வருவதாக வதந்திகள் நிலவி வருகின்றன. அதை யாரும் நம்பக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டும் வருகின்றது. ஆவிகள் இல்லை என்று முற்போக்கான தமிழர்கள் பலர் போராடி வருகின்றார்கள்.

உலகப் போர் முடிவடைந்ததும் தஞ்சோங் மாலிமில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தலை தூக்கியது.

கொரில்லா போராளிகள்[தொகு]

ஜப்பானியர்களை எதிர்க்கும் போராளிப் படையினருக்கு ஏற்கனவே பிரித்தானியர்கள் ஆயுதங்களை வழங்கி இருந்தனர். அந்தக் காலக் கட்டத்தில் ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் பல கொரில்லா போராளிக் குழுக்கள் காளான்களைப் போல உருவாகின. அவற்றுள் ஒன்றுதான் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம்.

இந்தக் கொரில்லா போராளிக் குழு மலாயா முழுவதும் பரவியிருந்தது. பேராக் மாநிலத்தில் மட்டும் தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், சுங்கை சிப்புட், சிம்மோர், தஞ்சோங் ரம்புத்தான், தம்பூன், கம்பார் நகரம் போன்ற இடங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. பிரித்தானியர்கள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்திய இந்த மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் பின்னாளில் மலாயா பொதுவுடைமை கட்சி என்று கொள்கை மாற்றம் அடைந்தது.

கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம்[தொகு]

மலாயாக் கம்னியூஸ்டுக் கட்சி ஒட்டு மொத்த மலாயாவையும் ஒரு கம்னியூச நாடாக மாற்ற திட்டங்களை வகுத்து வைத்து இருந்தது. மலாயாவைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வர பல நாச வேலைகளிலும் ஈடுபட்டது. அந்தக் கட்சிக்கு சின் பெங் என்பவர் தலைமை வகித்தார். இவர் இப்போது தாய்லாந்து நாட்டில் அரசியல் அடைக்கலம் அடைந்துள்ளார்.

தஞ்சோங் மாலிம் நகரின் சுற்று வட்டாரங்களில் பற்பல அசம்பாவிதங்கள் நடைபெற்று உள்ளன. கம்யூனிஸ்டுகள் சில பிரித்தானிய துரைகளைச் சுட்டுக் கொன்றுள்ளனர். தஞ்சோங் மாலிம் நகரின் அருகாமைப் பட்டணமான சிலிம் ரிவரில் கம்யூனிஸ்டுகளுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையே ஒரு போரே நடந்து உள்ளது. அப்போது மலாயாவில் அவசரகாலம் பிரகடனம் செய்யப் பட்டது.

சர் ஹென்றி கர்னி[தொகு]

சர் ஜெரால்ட் டெம்ப்ளர் எனும் பிரித்தானிய இராணுவ அதிகாரி கம்யூனிஸ்டுகளைத் ஒழிப்பதில் தீவிரம் காட்டியவர்களில் முக்கியமான ஒருவர். சர் ஹென்றி கர்னி இவர் மலாயா கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தத்தையும் தீவிரவாதத்தையும் முறியடித்தவர்.

சர் ஜெரால்ட் டெம்ப்ளர் மலாயாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். மலாயா கம்யூனிஸ்டுகளை அழித்தே தீருவேன் என்று உறுதிபூண்டு போராடினார். ஆனால் கம்யூனிஸ்டுகளால் 1951 ஆம் ஆண்டு பிரேசர் மலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். கோலாலம்பூர் செராஸ் சாலையில் சர் ஹென்றி கர்னியின் கல்லறை இருக்கிறது. அதில் கீழ் காணும் வாசகங்கள் உள்ளன.

இவருடைய நினைவாக பினாங்கில் ‘கர்னி டிரைவ்’ எனும் மக்கள் சதுக்கத்தை உருவாக்கி உள்ளனர். மலாக்காவில் ஹென்றி கர்னி சீர்திருத்தப் பள்ளியும் இயங்கி வருகின்றது.

கறுப்பு நகரம்[தொகு]

‘தெ வார் ஆப் ரன்னிங் டோக்ஸ்’[1][2] எனும் நூலில் இந்தப் போரைப் பற்றி விரிவாக எழுதப்பட்டடு இருக்கிறது. கம்யூனிஸ்டுகளின் தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் தஞ்சோங் மாலிம் மக்கள் நூற்றுக்கணக்கில் வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர்.

சீனர்கள் களும்பாங் சிற்றூருக்குச் சென்றனர். தமிழர்கள் கெர்லிங் கிராமத்தில் அடைக்கலம் அடைந்தனர். கம்யூனிஸ்டுகளைத் ஒழிப்பதில் பிரித்தானியர்கள் தீவிரம் காட்டினர். அதனால் இந்த நகருக்கு முன்னாளில் ’கறுப்பு நகரம்’ எனும் அடைமொழிப் பெயரும் உண்டு. சர் கோர்டனர் எனும் பிரித்தானிய ஆட்சியாளர் இங்கு தான் கொலை செய்யப்பட்டார்.

புதுக் கிராமங்கள்[தொகு]

பத்து ஆண்டு காலத்திற்கு பிரித்தானியர்களும் உள்நாட்டுத் தலைவர்களும் கம்யூனிஸ்டுகளைத் ஒழிப்பதில் தீவிரம் காட்டினர். தஞ்சோங் மாலிம் மக்கள் புதுக் கிராமங்களில் குடியேற்றம் செய்யப்பட்டனர். அவசர காலம் அமல் செய்யப் பட்டது. பொது மக்களின் நடமாட்டங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

பல நெருக்கடிகளுக்குப் பின்னர், கறுப்பு நகரம் எனும் அடைமொழியில் அழைக்கப்பட்டு வந்த தஞ்சோங் மாலிம் ஒரு வெள்ளை நகரமாக மாற்றம் கண்டது. 1957 ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் அடைந்த பிறகு, அடுத்து வந்த இருபது ஆண்டுகளில் தஞ்சோங் மாலிம் ஓர் அமைதி நகரமாகக் காட்சி தந்தது. ஆனால் அதிகமான வளர்ச்சி எதுவும் இல்லை. ஈப்போவில் இருந்து கோலாலம்பூருக்குப் பயணம் செய்பவர்கள் மற்றும் கோலாலம்பூரில் இருந்து வடக்கே பினாங்கு செல்பவர்கள் மட்டும் இந்த நகரில் ஓய்வு எடுத்துக் கொள்ள வருவார்கள். அந்தக் காலகட்டத்தில் தஞ்சோங் மாலிம் சுற்றுப் பயணிகளை நம்பியே வாழ்ந்தது என்று கூட சொல்லப்பட்டது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலை[தொகு]

1970ல் ஒரு பெரிய வெள்ளம் வந்து இந்த நகரைப் பாதிக்கச் செய்தது. தஞ்சோங் மாலிம் நகரமே மூன்றடி ஆழ வெள்ளத்தில் மூழ்கியது. அதன் பின்னர், பெர்ணம் ஆறு ஆழப் படுத்தப்பட்டது. ஆற்றின் இரு மருங்கிலும் கல் அணைகள் பதிக்கப்பட்டன. வெள்ளப் பிரச்சனை சற்றே தவிர்க்கப்பட்டது.

1992-இல் தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை திறக்கப்பட்டதும் தஞ்சோங் மாலிம் ஒரு தூங்கும் நகரமாக மாறிப்போனது. பினாங்கு, ஈப்போ செல்லும் பயணிகள் தஞ்சோங் மாலிம் நகருக்கு வருவதைத் தவிர்த்தனர். அதனால் இந்த நகரின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அபரிதமான வளர்ச்சி[தொகு]

ஆனால், இப்போது நிலைமை மாறி தஞ்சோங் மாலிம் அபரிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. புரட்டோன் சிட்டி, பெர்ணம் ஜெயா மேம்பாட்டுத் திட்டங்கள், நவீனக் கல்விக் கூடங்கள், நேர்த்தியான உணவு மையங்கள், சட்டத்தை மீறிப் போகாத கேளிக்கை மையங்கள் போன்றவை, இந்த நகருக்கு மீண்டும் ஒரு புதுப் பொலிவைத் தந்துள்ளன.

பல கேளிக்கை மையங்கள் 24 மணி நேர சேவைகளை வழங்கி வருகின்றன. ஆங்காங்கே தனியார் உடல் நலச் சேவை மையங்களும் உருவாகி உள்ளன. அண்மைய காலங்களில் தமிழர்களின் ஆயுர்வேத மையங்களும், அவர்களின் பாரம்பரிய மருத்துவங்களும் சேவைகளை வழங்கி வருகின்றன.

ஒப்பந்த அடிப்படை[தொகு]

வங்காள தேசவர்கள், இந்தோனேசியர்கள், நேப்பாளியர்கள் தஞ்சோங் மாலிம் தோட்டப் புறங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். ரப்பர் தோட்டங்களில் எஸ்கோட் தோட்டம், கத்தாயோங் தோட்டம், உலு பெர்ணம் தோட்டம், களும்பாங் தோட்டம் போன்றவற்றைக் குறிப்பிடத்தக்கவை. எஸ்கோட் தோட்டத்திற்கு அருகில் தான் பில் ஆறும் பெர்ணம் ஆறும் ஒன்று கலக்கின்றன. வார இறுதி நாட்களில் பொது மக்கள் இங்கு வந்து குளித்து, ஆடிப் பாடி மகிழ்ந்து செல்கின்றனர்.

தஞ்சோங் மாலிம் சுற்று வட்டாரத் தோட்டங்களில் உள்ள ஒவ்வொரு தோட்டத்திலும் ஒவ்வொரு பள்ளிக்கூடம் இருக்கின்றது. இந்தத் தமிழ்ப்பள்ளிகளில் படித்த பலர் இப்போது அரசாங்க உயர் பதவிகளில் இருக்கின்றனர். மலேசியக் கல்வி அமைச்சிலும் காவல் துறையிலும் பல உயரிய பதவிகளில் பல தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் உள்ளனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்நகரைச் சுற்றிலும் பல தொழிற்சாலைகளைத் திறந்துள்ளனர். பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன. இங்கு குடிசைத் தொழிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. விரைவில் இந்த நகரம் மாநகரத் தகுதியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழர்களின் நிலை[தொகு]

இந்த நகரில் அதிகமான தமிழர்கள் உள்ளனர். சிறு தொழில்கள், சிறு வியாபாரங்கள், உணவகங்கள், மளிகைக் கடைகள், துணிமணிக் கடைகள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர். முன்பு நகராண்மைக் கழகப் பணிகள், பொதுப்பணித் துறையின் வேலைகள், அரசு சார்ந்த தொலைபேசி பணிகளில் தமிழர்கள் கணிசமான அளவிற்கு இருந்தனர்.

தற்போது அந்தப் பணிகளில் தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து போய் விட்டது. சொற்பமான எண்ணிக்கையில் தான் தமிழர்கள் அரசு வேலைகளில் அமர்த்தப் படுகின்றனர் அல்லது நியமிக்கப் படுகின்றனர். அரசாங்க வேலைகளில் தமிழர்கள் தவிர்க்கப் படுகின்றனர் எனும் பொதுவான கருத்து மலேசியா முழுமையும் பரவலாக இருந்து வருகிறது.

ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி[தொகு]

மலேசியாவில் உயர்க் கல்வி பெறுவதில் ஆண்களின் பங்கு மிகவும் குறைந்து வருகிறது. தமிழர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் கல்வி கேள்விகளில் பிற இனத்தவரை விட சிறந்து விளங்குகின்றார்கள். பல்லின சமுதாயத்தில் தமிழர்கள் மட்டும் உயர்க் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் சில கசப்பு உணர்வுகள் மேலோங்கி வருகின்றன. இவ்வகை உணர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

ஒரு தமிழரின் குடும்பத்தில் ஒரு பட்டதாரி எனும் நிலை மாறி இரண்டு மூன்று பட்டதாரிகள் உருவாகும் நிலை தற்போது உள்ளது. மலேசியாவில தமிழர்களின் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் அதிகமான மருத்துவர்கள் தமிழர்கள் தான் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.[3] சுல்தான் இத்ரீஸ் பல்கலைக்கழகத்தில் மட்டும் இப்போது 122 தமிழ்ப் பெண்கள் முதுகலை உயர்க் கல்விப் பட்டம் படித்து வருகின்றார்கள். அவர்களில் 34 தமிழ்ப் பெண்கள் முனைவர் (பிஎச்.டி) பட்ட ஆய்வு செய்து வருகின்றார்கள்.[4]

தமிழர்கள் நகர்ப் புறங்களுக்கு மாற்றம்[தொகு]

சில பத்தாண்டுகளுக்கு முன்னர், தஞ்சோங் மாலிம் நகரைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள், செம்பனைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் இருந்தன. அண்மைய காலங்களில் அந்தத் தோட்டப் பகுதிகளில் மிகுதியான நில மேம்பாட்டுத் திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள், தொழில்துறை திட்டங்கள் உருவாக்கம் பெற்றன. அதனால், தோட்டப் புறங்களில் வாழ்ந்த தமிழர்கள் நகர்ப் புறங்களுக்கு மாறிச் சென்று விட்டனர்.[5]

இந்தத் தோட்டங்களில் ஒரு சில வயதான தமிழர்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர். ஓரளவுக்கு கல்வி தகுதியுடைய இளைஞர்கள் தஞ்சோங் மாலிம் நகரில் பணி புரிகின்றனர். பட்டம் பெற்ற இளைஞர்கள் கோலாலம்பூர், ஜொகூர் பாரு, பெட்டாலிங் ஜெயா, சிங்கப்பூர் போன்ற பெரிய நகரங்களுக்குப் புலம் பெயர்ந்து விட்டனர் [6]

கலப்பு திருமணங்கள்[தொகு]

அவ்வாறு படிப்பு, தொழில் வகையில் வெளியூருக்குப் போகின்ற தமிழ் இளைஞர்கள் அங்குள்ள சீனப் பெண்களைத் கலப்பு திருமணம் செய்து கொள்கின்றனர். கணவனும் மனைவியும் சேர்ந்து சொந்தமாக வீடுகளை வாங்கி நகர வாழ்க்கையுடன் கலந்து விடுகின்றனர். மலேசியத் தமிழர்கள் சீனப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது மலேசியா, சிங்கப்பூரில் மிகவும் சாதாரணமான நடப்பு விவகாரம். பத்து தமிழர்களில் ஒருவர் ஒரு சீனப் பெண்ணைத் திருமணம் செய்திருப்பார். இத்தகு கலப்பு குடும்பங்கள் பற்றிய அரசாங்கத்தின் அணுகுமுறை எப்படி உள்ளது என்பதைக் கீழ் காணும் வாசகங்களில் வழி தெரிந்து கொள்ள முடியும்:

தமிழ்ப் பள்ளிக்கூடங்கள்[தொகு]

தஞ்சோங் மாலிம் நகருக்கு அருகாமையில் உள்ள தமிழ்ப் பள்ளிக்கூடங்கள்

  • டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளி
  • கத்தோயாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • பேராங் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • எஸ்கோட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • செங்காட் ஆசா தோட்டத் தமிழ்ப்பள்ளி

அருகாமைப் பட்டணங்கள்[தொகு]

தஞ்சோங் மாலிம் நகருக்கு அருகாமையில் சில பட்டணங்கள் உள்ளன. புறநகர்ப் பகுதிகளிலும் பல சிற்றூர்கள் உள்ளன. இருப்பினும் முக்கியமான நகரங்கள், சிறுநகரங்களின் பட்டியல் கீழே தரப் படுகின்றது.

  • தஞ்சோங் மாலிம்
  • பேராங்
  • பேராங் உலு
  • பேராங் 2020
  • பேராங் ஜெயா
  • கம்போங் கிளாவார்
  • புரட்டோன் சிட்டி
  • சிலிம்
  • சிலிம் ரிவர்
  • சுங்கை
  • துரோலாக்

மக்கள் தொகை[தொகு]

பேராக் மாநிலத்தில் பத்தாங் பாடாங் என்பது ஒரு மாவட்டம். இந்தப் பத்தாங் பாடாங் மாவட்டத்தில் தஞ்சோங் மாலிம் நகரம் என்பது மூன்றாவது பெரிய நகரம். முதல் இடத்தில் தாப்பா நகரம். இரண்டாம் இடத்தில் பீடோர் நகரம். ஆகக் கடைசியாக, மலேசிய இனம் சார்ந்த கணக்கெடுப்பு, அதாவது (ethnicity) 2004 ஆம் ஆண்டில் இடம் பெற்றது.

அதற்குப் பின்னர், 2010ல் ஒரு புது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. அந்தக் கணக்கெடுப்பு விவரங்களை இதுவரையில் மலேசிய அரசாங்கம் வெளியிடவில்லை. ஆகவே, அதன் தொடர்பான புள்ளி விவரங்கள் நமக்கும் இதுவரை கிடைக்கவில்லை. இப்போதைக்கு 2007 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களை மட்டுமே தருகிறோம்.

  • மக்கள் தொகை = 60,791 (2007)
  • புறநகர் மக்கள் தொகை = 16,399 (2008)
  • தகுதி = மலேசியாவில் 69 வது இடம்

கீழே உள்ள பட்டியல் 2004 ஆம் ஆண்டின் இனம் சார்ந்த பட்டியல்.

தஞ்சோங் மாலிம்
மக்கள் தொகை இனவாரியாக
2004 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு
இனங்கள் மக்கள் தொகை விழுக்காடு
சீனர்கள் 25,125 41.33%
மலாய்க்காரர்கள் 24,850 40.88%
இந்தியர்கள் 9,583 15.76%
இதர இனத்தவர் 1233 2.0%

சுற்றுலா தளங்கள்[தொகு]

  • ஸ்ராத்தா நீர்வீழ்ச்சி
  • சுங்கை பில் நீர்வீழ்ச்சி
  • சிலிம் ஆறு - படகு விளையாட்டு
  • தீபாங் நீர்வீழ்ச்சி
  • லோன் நீர்வீழ்ச்சி
  • லூபோக் காவா நீர்வீழ்ச்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. The Malayan Emergency – 18 June 1948 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
  2. How Malaya Defeated the Communist Guerrillas 1948–1960
  3. Reference:// Universiti Pendidikan Sultan Idris பரணிடப்பட்டது 2011-10-04 at the வந்தவழி இயந்திரம்
  4. Malaysian Medical Association
  5. Amalgamation of all the small plantation unions
  6. Third Outline Perspective Plan (OPP3)
  7. Half Indian and Half Chinese

மேற்கோள்கள்[தொகு]

  1. "The British signed treaties of protection with Malay rulers from 1874 to 1930". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
  2. The Malayan Emergency was declared on 18 June 1948 after three estate managers were murdered in Perak, northern Malaya, by guerrillas of the Malayan Communist Party (MCP), an outgrowth of the anti-Japanese guerrilla movement which had emerged during the Second World War.
  3. Malaysian Medical Association
  4. "Universiti Pendidikan Sultan Idris (UPSI) ditubuhkan pada 1 Mei 1997". Archived from the original on 2011-10-04. பார்க்கப்பட்ட நாள் 2011-09-23.
  5. The majority of emigrants were the inevitable product of British colonialism and an integral part of a migratory policy supporting the expansion of imperialistic rule.
  6. Poverty by Ethnicity
  7. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சோங்_மாலிம்&oldid=3871883" இலிருந்து மீள்விக்கப்பட்டது