உள்ளடக்கத்துக்குச் செல்

கோலா சபெத்தாங்

ஆள்கூறுகள்: 4°50′11.8″N 100°37′43.5″E / 4.836611°N 100.628750°E / 4.836611; 100.628750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலா சபெத்தாங்
(போர்ட் வெல்ட்)
Kuala Sepetang / Port Weld
பேராக்
கோலா சபெத்தாங் மீன்பிடி கிராமம்
கோலா சபெத்தாங் மீன்பிடி கிராமம்
Map
கோலா சபெத்தாங் is located in மலேசியா
கோலா சபெத்தாங்
      கோலா சபெத்தாங்
ஆள்கூறுகள்: 4°50′11.8″N 100°37′43.5″E / 4.836611°N 100.628750°E / 4.836611; 100.628750
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்லாருட், மாத்தாங், செலாமா
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
34640
தொலைபேசி எண்+60-5-875000
போக்குவரத்துப் பதிவெண்கள்P

கோலா சபெத்தாங் அல்லது போர்ட் வெல்ட் (ஆங்கிலம்: Kuala Sepetang; மலாய்: Kuala Sepetang; சீனம்: 瓜拉十八丁; ஜாவி: كوالا سيڤيتڠ‎) என்பது மலேசியா, பேராக் மாநிலம், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் (Larut, Matang, Selama District) அமைந்துள்ள ஒரு மீனவக் கிராமம் ஆகும். இந்தக் கிராமப்பகுதி ஒரு வரலாற்று வளாகமாகவும் அறியப்படுகிறது. இங்குதான் 1885-ஆம் ஆண்டில், மலாயாவின் முதல் தொடருந்து வழித்தடம் அமைக்கப்பட்டது.[1]

முன்பு இந்தக் கிராம நகர்ப்பகுதி போர்ட் வெல்ட் (ஆங்கிலம்: Port Weld; மலாய்: Pelabuhan Weld; சீனம்: 舊名砵威; ஜாவி: فورة ير) என்று அழைக்கப்பட்டது. ஒரு மீனவ கிராமமாகும்; இது தைப்பிங் நகரின் மேற்கே சதுப்பு நிலப் பகுதியில் அமைந்துள்ளது.

கோலா சபெத்தாங் தொடக்கக் காலத்தில் ஒரு செழிப்பான மீனவக் கிராமமாக இருந்தது. மீனவர்கள் ரெபா ஆற்றின் (Sungei Reba) மறுகரையில் வசித்தனர். இந்தக் கிராமம் சங்கா ஆற்றின் (Sungei Sangga) முகத்துவாரத்தினால் சூழப்பட்டுள்ளது. இருபுறமும் சதுப்பு நிலங்கள் உள்ளன.

தைப்பிங் - போர்ட் வெல்ட் தொடருந்து வழித்தடம்

[தொகு]

மலாயாவின் முதல் தொடருந்து வழித்தடம் என்பது தைப்பிங் - போர்ட் வெல்ட் தொடருந்து வழித்தடம் ஆகும்; 1885-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது. 1880-ஆம் ஆண்டு சர் பெரடரிக் வெல்ட் (Sir Frederick Weld) என்பவர் நீரிணைக் குடியேற்றப் பகுதிகளின் ஆளுநராக மலாயாவுக்கு வந்தார். இவரின் பெயரில் தான் போர்ட் வெல்ட் நகருக்கும் பெயர் வைக்கப் பட்டது. அப்போதைய போர்ட் வெல்ட் துறைமுகம் இப்போது கோலா சபெத்தாங் (Kuala Sepetang) என்று அழைக்கப் படுகிறது.[2]

1881-ஆம் ஆண்டில் தைப்பிங் - போர்ட் வெல்ட் பகுதியில் ஈய வருமானம் அதிகமாக இருந்தது. அதனால் அதிகமாக வருமானத்தை ஈட்டலாம் என்று மலாயா ஆட்சி செய்த பிரித்தானியர்கள் கருதினார்கள். அப்போது பேராக் மாநிலத்தின் ஆங்கிலேய ஆளுநராக சர் இயூ லோ (Sir Hugh Low) இருந்தார். தைப்பிங்கிற்கும் போர்ட் வெல்ட்டிற்கும் தொடருந்து பாதை அமைக்கப் படுவதற்கு இவர் தான் முழுமூச்சாக செயல் பட்டார். [3][4][5]

13 கி.மீ. வழித்தடம்

[தொகு]

தைப்பிங் - போர்ட் வெல்ட் இரயில் தொடருந்து போடுவதற்காகத் தமிழ்நாட்டில் இருந்து நூற்றுக் கணக்கான தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். அந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவில் தொடருந்து பாதை நிர்மாணிப்புகள் தீவிரமாக இருந்தன. 1845-ஆம் ஆண்டில் மெட்ராஸ் இரயில்வே நிறுவனம் (Madras Railway Company) உருவானது. 1856-ஆம் ஆண்டிலேயே சென்னை இராயபுரத்தில் இருந்து வலஜாபேட்டை வரைக்கும் இரயில் ஓடிய காலக் கட்டம். அந்தச் சமயத்தில் தான் மலாயாவில் முதல் தொடருந்து பாதை போடப் பட்டது.

1885-ஆம் ஆண்டு ஜுன் 1-ஆம் தேதி மலாயாவின் முதல் தொடருந்து பாதை திறக்கப்பட்டது. அதன் நீளம் 13 கிலோமீட்டர். கட்டுவதற்கு £ 7000 பவுண்டு பிடித்தது. கரடு முரடான காட்டுப் பாதைகளை வெட்டி இரயில் பாதையை அமைக்க மூன்று ஆண்டுகள் பிடித்தன. 1942-ஆம் ஆண்டில் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின் போது அந்தத் தொடருந்து பாதை சேதம் அடைந்தது.[6]

தைப்பிங் - போர்ட் வெல்ட் தொடருந்து பாதையில் இருந்த இரயில் தண்டவாளங்களை ஜப்பானியர்கள் பெயர்த்து எடுத்து; சயாம் மரண இரயில்பாதை கட்டுவதற்கு அனுப்பி வைத்தார்கள். இன்றைய நிலையில் அடையாளம் சொல்ல நான்கு மொழிகளிலும் எழுதப் பட்ட அறிவிப்புத் தூண் மட்டுமே உள்ளது. இப்போது அந்த போர்ட் வெல்ட் தொடருந்து நிலையம் ஒரு சீனரின் காபி கடையாக உள்ளது. அந்தக் கடையின் உரிமையாளர் தொடருந்து நிலையத்தின் அறிவிப்புத் தூணைப் பராமரித்து வருகிறார். [7]

மாத்தாங் சதுப்புநிலக் காடுகளின் காப்பகம்

[தொகு]
மாத்தாங் சதுப்புநிலக் காடுகள்

கோலா சபெத்தாங் மலாக்கா நீரிணைக்கு அருகாமையில் இருப்பதால் கடல் உணவுக்காக நன்கு அறியப்பட்ட இடமாகும், மேலும் இங்குள்ள ஒரு கடையின் மேல் தளத்தில் ஆற்றை ஒட்டிய வகையில் வகையில் ஓர் உணவகம் உள்ளது. கோலா சபெத்தாங் அதன் சதுப்புநில பூங்காவிற்கும் நன்கு அறியப்பட்டதாகும்.

இந்த இடம் மாத்தாங் சதுப்புநிலக் காடுகளின் காப்பகமாகவும் விளங்குகிறது (Matang Mangrove Forest Reserve); பொதுமக்களுக்கு ஒவ்வொரு நாளும் திறக்கப்பட்டுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சதுப்பு நிலத்தின் மீது ஒரு நடைபாதை கட்டப்பட்டு உள்ளது; அதே போல் ஆற்றங்கரையில்; சுற்றுலாப் பயணிகள் இரவு தங்குவதற்கு வாடகை அறைகளும் கட்டப்பட்டு உள்ளன.

நிலையான முறையில் வளர்க்கப்படும் சதுப்புநிலங்கள் மற்றும் பாரம்பரிய கரியுலைகளைப் பயன்படுத்தி கரி உற்பத்தி செய்யப்படுகிறது. மீன்பிடி கிராமங்கள், கரி சூளைகள் மற்றும் சதுப்புநிலங்கள் தவிர, இரவில் மின்மினிப் பூச்சிகள் மற்றும் கழுகுகளைப் பார்க்க சதுப்புநில ஆற்றின் வழியாக படகுப் பயணங்களும் உள்ளன.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Investigation of the landscape change in old Malaysian Railway: Special references to Port Weld-Taiping Railway". பார்க்கப்பட்ட நாள் 13 January 2024.
  2. "Taiping Railway Station (GPS: 4.85207, 100.73123) is the oldest railway station in the country. The station was originally built in 1882, for the railway line between Taiping and Port Weld, in present-day Kuala Sepetang. The station was rebuilt the first time in early 1900s". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 July 2023.
  3. Encyclopædia Britannica.
  4. Malaysia, Singapore & Brunei By Simon Richmond, Damian Harper, Tom Parkinson, Richard Watkins Published by Lonely Planet, 2007; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-74059-708-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74059-708-1
  5. Miss Catherine Napier was married in St. Andrew's Church, Singapore, on 12 August 1848, to Mr. Hugh Low: An Anecdotal History of Old Times in Singapore: From the Foundation of the ... by Charles Burton Buckley – Singapore – 1965 – Page 485
  6. Wayte, M. E. (1959). "Port Weld". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. pp. 154–167. பார்க்கப்பட்ட நாள் 13 January 2024.
  7. "How Malaysia's first railway was built (1885)". Malaysia 1786 - 1957 (in ஆங்கிலம்). 19 June 2023. பார்க்கப்பட்ட நாள் 13 January 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_சபெத்தாங்&oldid=3995404" இலிருந்து மீள்விக்கப்பட்டது