சிம்மோர்

ஆள்கூறுகள்: 4°43′N 101°07′E / 4.717°N 101.117°E / 4.717; 101.117
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்மோர்
Chemor
பேராக்
Map
சிம்மோர் is located in மலேசியா
சிம்மோர்
      சிம்மோர்
ஆள்கூறுகள்: 4°43′N 101°07′E / 4.717°N 101.117°E / 4.717; 101.117
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்கிந்தா மாவட்டம்
தோற்றம்1900
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு30100
மலேசிய தொலைபேசி எண்05
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்ஈப்போ மாநகராட்சி

சிம்மோர் (ஆங்கிலம்: Chemor; மலாய்: Chemor; சீனம்: 打扪) என்பது மலேசியா பேராக் மாநிலத்தில் கிந்தா மாவட்டத்தில் உள்ள நகரம்; ஈப்போவில் இருந்து வடக்கில் 16 கி.மீ.; சுங்கை சிப்புட் நகரில் இருந்து 12 கி.மீ. தெற்கில் உள்ளது.

சிம்மோர் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல் ஆகும். "ஆற்றின் சேறு" என்பது அதன் பொருள். சீனர்களுக்கு இதன் பொருள் "நவரத்தினக் கல்" என்பதாகும்.[1]

இந்த நகரம் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் மிகவும் புகழ் பெற்றது. 1900 ஆம் ஆண்டுகளில் சீனாவில் இருந்து ஹாக்கா இனத்தவர் சிம்மோர் பகுதிகளில் குடியேறினர். அவர்கள் சிம்மோரில் மரவள்ளிக் கிழங்குத் தோட்டங்களை உருவாக்கினார்கள். 1980 களில் உலகிலேயே அதிகமான மரவள்ளிக் கிழங்குகளை உற்பத்தி செய்த பெருமை இந்த நகரத்தைச் சாரும்.[2]

வரலாறு[தொகு]

சிம்மோர் நகரம் 1850 ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப் பட்ட ஒரு கிராமப் பட்டணம் ஆகும். தொடக்க காலங்களில் இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்து சிலர் இங்கு வந்து குடியேறினர். இந்தோனேசியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் துன் ஆடாம் மாலிக்கின் சந்ததியினர் சிலர் இன்னும் சிம்மோர் பகுதியில் உள்ள கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

சீனாவில் இருந்து ஹக்கா (Hakka) இனத்தவர் 1880களில் குடியேறினர். அவர்கள் மரவள்ளிக் கிழங்குத் தோட்டங்களை உருவாக்கினார்கள். 1980 களில் உலகிலேயே அதிகமான மரவள்ளிக் கிழங்குகளை உற்பத்தி செய்த பெருமையும் இந்த சிம்மோர் நகருக்கு உண்டு. இந்த மரவள்ளிக் கிழங்குகள் தைவான், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன.

பல்லின மக்கள்[தொகு]

சிம்மோர் நகரின் சுற்று வட்டாரங்களில் மலாய் மக்கள், சீனர்கள், இந்தியர்கள் என பல இன மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வாழ்கின்றனர். சிம்மோர் நகரில் சீனர்களை அதிகமாகக் காண முடியும்.

மலாய்க்காரர்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். விவசாயத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். சீனர்கள் பெரும்பாலும் சிம்மோர் நகர வணிகத்துறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நகரைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. நில மேம்பாடுகளின் காரணமாக அந்தத் தோட்டங்கள் மாற்றம் கண்டன. அங்கு வாழ்ந்த தமிழர்கள் சிம்மோர் சுற்று வட்டாரங்களில் குடியேறினர். தமிழர்களில் சிலர் சிறு வணிகத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயத் தொழில்[தொகு]

இப்பகுதியில் ஈயம் தோண்டி எடுக்கப் பட்ட வரலாறும் உண்டு. பேராக் மாநிலத்தில் உள்ள ஈப்போ, கம்பார் நகரம், கோப்பேங், லகாட், பாப்பான் போன்ற இடங்களில் ஈயம் பெரும் அளவில் எடுக்கப் பட்டது. ஆனால், சிம்மோரில் குறைவாகத் தான் எடுக்கப் பட்டது. சிம்மோர் நகரைச் சுற்றிலும் பல ஈயக் குளங்கள் உள்ளன. இக்குளங்களில் மீன்கள் வளர்க்கப் படுகின்றன.

சிம்மோரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சீனர்கள் காய்கறித் தோட்டங்களை உருவாக்கி சுயதொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், சிம்மோரில் காய்கறிப் பொருட்கள் சற்று மலிவான விலையில் கிடைக்கும். தானா ஈத்தாம் குடியிருப்புப் பகுதியில் விவசாயத் தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது.

இந்தியர்கள்[தொகு]

1900 களில் இந்தியர்கள் பெரும்பாலும் தோட்டப்புறங்களில் வேலை செய்ய அழைத்து வரப் பட்டனர். சிம்மோர் நகரின் அருகாமையில் கிளேபாங் தோட்டம், சத்தியசாலா தோட்டம், சிம்மோர் தோட்டம், உலு குவாங் தோட்டம் போன்ற தோட்டங்கள் உள்ளன.

இந்தத் தோட்டங்கள் இப்போது இல்லை. நில மேம்பாட்டுத் திட்டங்களினால் சுவடுகள் இல்லாமல் போய் விட்டன. இங்கு வாழ்ந்த தமிழர்கள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இளைஞர்கள் தொலை தூர நகரங்களுக்குச் சென்று விட்டனர்.

இந்தத் தோட்டங்களில் இருந்த தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன அல்லது கூட்டுப் பள்ளிகளாக மாற்றம் கண்டுள்ளன. சத்தியசாலா தோட்டத்தில் இருந்த தமிழ்ப்பள்ளி இப்போது தாமான் மாஸ் எனும் இடத்தில் புதிய பள்ளிக்கூடமாக உருவெடுத்துள்ளது.

தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

பேராக்; கிந்தா மாவட்டம் (Kinta District) சிம்மோர் பகுதியில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 627 மாணவர்கள் பயில்கிறார்கள். 63 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD2173 சிம்மோர் தோட்டம் SJK(T) Ladang Chemor சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 31200 சிம்மோர் 101 13
ABD2175 கிளேபாங் SJK(T) Klebang கிளேபாங்_தமிழ்ப்பள்ளி (சிம்மோர்) 31200 சிம்மோர் 483 37
ABD2176 செப்போர் SJK(T) Ladang Strathisla சத்தியசாலா தமிழ்ப்பள்ளி (சிம்மோர்) 31200 சிம்மோர் 43 13

சாமி உணவகம்[தொகு]

மலேசியாவிலேயே பிரபலமான ஓர் இந்திய உணவகம் சிம்மோர் நகரில் உள்ளது. அதன் பெயர் சாமி உணவகம். இந்த உணவகத்தைத் தேடி மலேசியப் பிரபலங்கள் வருவார்கள். நல்ல உணவு வகைகளை மலிவான விலையில் வழங்கி வந்த பெருமை இந்த உணவகத்திற்கு உண்டு.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jasbindar, Freddie Aziz. "Chemor is a small town located north of the city of Ipoh, Perak. The nearby cities are Tanjung Rambutan, Sungai Siput, Salak, Kuala Kangsar and Tasek, Ipoh". www.orangperak.com. பார்க்கப்பட்ட நாள் 13 August 2022.
  2. "Around the 70s, there were many tin mines in Chemor. At the same time, Chemor was famous for its cassava crops". பார்க்கப்பட்ட நாள் 13 August 2022.
  3. "Restoran Samy - Chemor Archives: Samy's Restaurant has been around for 50 years. Mention banana leaf curry in Ipoh and most aficionados who appreciate the hot fiery tastes of this South Indian meal will unanimously opt for Samy's". Ipoh Echo (Archives). Archived from the original on 2 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 13 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்மோர்&oldid=3760153" இலிருந்து மீள்விக்கப்பட்டது