துரோனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரோனோ
Tronoh
宝座
நாடு மலேசியா
உருவாக்கம்துரோனோ: 1890
நேர வலயம்ஒசநே+8 (MST)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை

துரோனோ (Tronoh, சீனம்: 宝座), மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இதற்கு அருகாமையில் ஈப்போ மாநகரம் உள்ளது. பத்து காஜா, மெங்லெம்பூ போன்ற சிறு நகரங்கள் உள்ளன. பூசிங், லகாட், புக்கிட் மேரா, பாப்பான் போன்ற குறு நகரங்களும் உள்ளன. துரோனோ, ஈப்போ மாநகரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது. துரோனோ சட்டமன்றத் தொகுதிக்கு வி. சிவகுமார் என்பவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.

மலேசியாவில் பிரசித்தி பெற்ற மலேசியப் பெட்ரோனாஸ் பல்கலைக்கழகம், 1000 ஏக்கர் நிலப்பரப்பில் 1997ஆம் ஆண்டு இங்கு உருவாக்கம் பெற்றது.[1] இந்தப் பல்கலைக்கழகமும்கூட அந்த நன்னீர் ஏரிகளுக்கு மையத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

1890ஆம் ஆண்டுகளில், துரோனோ மைன்ஸ் எனும் ஈயச் சுரங்கம் மலேசியாவிலேயே புகழ்பெற்று விளங்கியது.[2] இந்தச் சுரங்கத்தின் தொடக்க கால உரிமையாளர்களில் பூ சூ சுன் (Foo Choo Choon) என்பவர் குறிப்பிடத்தக்கவர்.[3] இவர் அருகாமையில் இருந்த லகாட் குறுநகரத்தில் வாழ்ந்தவர். 1500 வேலைக்காரர்களைக் கொண்டு துரோனோ ஈயச் சுரங்கத்தை உருவாக்கினார்.

சீனாவில் இருந்து வந்த சீனர்கள், சுரங்கத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டனர். 1970களில் துரோனோவில் மட்டும் அல்ல, கிந்தா பள்ளத்தாக்கு முழுமையுமாக ஈய உற்பத்தி ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது ஈய வயல்களின் அடையாளச் சின்னங்களாக நன்னீர் ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் சில ஏரிகளில் திலாப்பியா, தொங்சான், மயிரை மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

துரோனோ மைன்ஸ்[தொகு]

துரோனோ நகரத்தின் வளர்ச்சிக்கு துரோனோ மைன்ஸ் எனும் துரோனோ ஈயச் சுரங்கமே முக்கிய காரணம் ஆகும். அக்காலத்தில் துரோனோ ஈயச் சுரங்கம், சுங் தை பின் (Chung Thye Phin) என்பவருக்குச் சொந்தமாக இருந்தது. ஒரு சிறு கிராமமாகத் தோன்றிய துரோனோ, ஈயத் தொழில் வளர்ச்சியினால் பெரும் நகரமாக மாறியது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துரோனோ நகரம், மற்ற பேராக் மாநில நகரங்களைப் போல பிரசித்தி பெற்று விளங்கியது. ஆயிரக்கணக்கான சீனர்கள் சீனாவில் இருந்து இங்கு வந்து குடியேறினர்.

துரோனோ நகரத்தின் வளர்ச்சிக்கு துரோனோ மைன்ஸ் எனும் துரோனோ ஈயச் சுரங்கமே முக்கிய காரணம் ஆகும். அக்காலத்தில் துரோனோ ஈயச் சுரங்கம், ஜின் சியோங் யூங், (பத்து காஜா), வோங் கோக் ([பாப்பான்]]), சிய் காம் போ (பாப்பான்), கோ கீ (துரோனோ) ஆகியோர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது.[4] 1895இல் பூ சூ சுன் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது. இவர் 1500 சீனத் தொழிலாளர்களைக் கொண்டு துரோனோ ஈயச் சுரங்கத்தை பெரிய அளவிற்கு கொண்டு வந்தார்.

புதிய நெடுஞ்சாலை[தொகு]

1898ஆம் ஆண்டு ஜான் அடீஸ் எனும் ஆங்கிலேயர் ஈயச் சுரங்கப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். 1911ஆம் ஆண்டில் 3,860 டன்கள் ஈயம் தோண்டி எடுக்கப்பட்டது. வேகமான நீர்க் குழாய்களைக் கொண்டு ஈயம் எடுக்கப்படும் பழைய முறையை, நவீனப் படுத்திய பெருமை இவரையே சாரும்.

1900களில் ஈப்போவுக்குச் செல்லும் பிரதான சாலை, துரோனோ நகரின் வழியாகத்தான் சென்றது. இப்பகுதியில் ஈயத் தொழில் வீழ்ச்சியுற்றதும் துரோனோ நகரமும் தன் செல்வாக்கை இழந்தது. நகரத்திற்கு அப்பால், 1990களில் புதிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. அதனால், இன்றைய காலத்தில் துரோனோ நகரம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

ஐஸ் கச்சாங் சீனப்படம்[தொகு]

2010 ஆம் ஆண்டில் ஐஸ் கச்சாங் பப்பி ல்வ் (சீனம்: 初恋红豆冰) எனும் உள்நாட்டுச் சீனப்படம் இங்குதான் தயாரிக்கப்பட்டது. ஆ நியூ என்பவரின் ஆழமான காதலை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டது. பல விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தில், மலேசியாவின் பிரபலமான இளம் சீன நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். மலேசியத் தியேட்டர்களில் மட்டும் 37 இலட்சம் மலேசிய ரிங்கிட் வருமானத்தைப் பெற்றுத் தந்தது.

மலேசியத் தன்மையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதால், மலேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் (பினாஸ்) இந்தப் படத்திற்கு ஏழரை இலட்சம் ரிங்கிட் வரிச் சலுகை அளித்தது.[5]

மலேசியப் பெட்ரோனாஸ் பல்கலைக்கழகம்[தொகு]

துரோனோ நகருக்கு அருகாமையில் இரு பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

  1. மலேசியப் பெட்ரோனாஸ் பல்கலைக்கழகம்
  2. மாரா தொழிநுட்பப் பல்கலைக்கழகம்

ஆகிய இரு பல்கலைக்கழகங்கள். எதிர்காலத்தில் இந்த நகரம், மறுபடியும் புத்துணர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துரோனோ தமிழ்ப்பள்ளி[தொகு]

துரோனோ நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் துரோனோ தமிழ்ப்பள்ளி. 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பள்ளியில் 71 மாணவர்கள் பயில்கின்றனர். 12 ஆசிரியர்களும் 6 பணியாளர்களும் சேவை செய்கின்றனர். இப்பள்ளிக்கு திருமதி. ஆர்.கே. சரோஜினி என்பவர் தலைமை ஆசிரியராக இருக்கின்றார். இப்பள்ளி துரோனோ நகரில் ஜாலான் போத்தாவில் இருக்கிறது.[6]

1947-ஆம் ஆண்டில் துரோனோ மாவட்டக் காவல் துறைத் தலைவராக செல்வநாயகம் என்பவர் இருந்தார். துரோனோ பகுதியில் வாழ்ந்த இந்தியர்களின் பிள்ளைகள் கல்வி வசதி எதுவும் இல்லாமல் சுற்றித் திரிவதைக் கண்டார். எனவே, துரோனோ தொழிலதிபர் முத்தழகு செட்டியார் துணையுடன், துரோனோ சுப்பிரமணியர் ஆலயத்தின் பின்புறத்தில் ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடத்தைக் கட்டினார்கள்.

ஊரடங்குச் சட்டம்[தொகு]

1952-ஆம் ஆண்டு, துரோனோவில் ஊரடங்குச் சட்டம் அமலுக்கு வந்தது. சுப்பிரமணிர் ஆலய நிலத்தில் இருந்த பள்ளி, ‘துரோனோ மைன்ஸ்’ பகுதியில் மறுபடியும் கட்டப்பட்டது. அப்போது நாற்பது மாணவர் பயின்று வந்தனர்.

1953ஆம் ஆண்டு, இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை அறுபதாக உயர்ந்தது. 2013இல் மாணவர்களின் எண்ணிக்கை 71 ஆகும்.[7] 1990-ஆம் ஆண்டு நான்கு அறைகள் கொண்ட ஒரு பள்ளிக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு, ஒரு புதிய இடத்திற்கு மாற்றலாகியது.

இப்பொழுது இப்பள்ளியில் ஏழு வகுப்பறைகளுடன் ஓர் ஆசிரியர் அறை, ஓர் அருந்தகம், ஒரு வாழ்வியல் அறை, ஓர் அறிவியல் அறை ஆகியவை உள்ளன. மாணவர்களின் கல்வி தேர்ச்சி நிலையில் கிந்தா வட்டாரத்திலேயே முதல் இடம் வகிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Universiti Teknologi PETRONAS was established on January 10, 1997 when the Malaysian government to set up a university". Archived from the original on ஜனவரி 15, 2013. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 23, 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. Tronoh Mines was the most famous open-cast mine of its time. The initial owners of the land rights were the Chinese: Jin Siong Yoong.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Foo Choo Choon or Woo Chu Chun was born on 31 August 1860 in China to Foo Yu Chio.
  4. The initial owners of the land rights were the Chinese: Jin Siong Yoong (Batu Gajah), Wong Kok (Papan), Chi Kam Poh (Papan) and Kok Kee (Tronoh).[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "'Ice Kacang Puppy Love' director to receive RM740,000 tax rebate". Archived from the original on 2011-04-25. பார்க்கப்பட்ட நாள் 2013-01-23.
  6. Info SJKT Tronoh.
  7. துரோனோ தமிழ்ப்பள்ளி, துரோனோ மாவட்டக் காவல் துறை தலைவர் திரு.செல்வநாயகம் அவர்கள்[தொடர்பிழந்த இணைப்பு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=துரோனோ&oldid=3558844" இலிருந்து மீள்விக்கப்பட்டது