லூமுட்
ஆள்கூறுகள்: 4°13′N 100°37′E / 4.217°N 100.617°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | கி.பி.1800 |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 31,880 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
லூமுட் (மலாய்:Lumut; ஆங்கிலம்:Lumut; சீனம்:红土) என்பது மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம். மலேசியாவின் அரசக் கடல் படை தளம் இங்குதான் அமைந்து உள்ளது.[1] மலேசியாவில் நன்கு அறியப்பட்ட சுற்றுலாத் தளமான பங்கோர் தீவிற்கு, இங்கு இருந்துதான் படகின் மூலமாகச் செல்ல வேண்டும்.
முன்பு காலத்தில் லூமுட் நகரம் ஒரு சிறு மீன்பிடி கிராமமாக இருந்தது. தற்சமயம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நகரம் கடல் முத்துச் சிப்பிகளுக்கும்; பவளக் கைவினைப் பொருட்களுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது.
ஈப்போ மாநகரில் இருந்து 77 கி.மீ. (48 மைல்); சித்தியவான் நகரில் இருந்து 12 கி.மீ. (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[2]
வரலாறு
[தொகு]மலாய் மொழியில் லூமுட் என்றால் பாசி அல்லது கடற்பாசி என்று பொருள். லூமுட் நகரின் தொடக்கக் காலங்களில், கடற்கரை பாசிகள் நிறைந்து இருந்ததாகக் கூறப் படுகிறது. எனவே உள்ளூர் மக்கள் அந்த இடத்தை லூமுட் என்று அழைத்தனர்.
மலாக்கா நீரிணையைப் பயன்படுத்தும் படகுகள், லூமுட்டில் அணைவதற்கு ஒரு படகுத் துறை உள்ளது. லூமுட் முகத்துவாரம் முன்பு சிவப்பு நிறக் கடற்பாசி மண்ணால் மூடப்பட்டு இருந்தது.
1874-ஆம் ஆண்டு பங்கோர் உடன்படிக்கை
[தொகு]முன்பு காலத்தில் ஹாக் செவ் (Hock Chew) எனும் ஒரு பெரிய சீனச் சமூகம் இங்கிருந்து சித்தியவான் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கிருந்து யானைகள் மூலமாக ஈய மூட்டைகள் லூமுட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டன.
1874-ஆம் ஆண்டில் பங்கோர் உடன்படிக்கை 1874 கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையின்படி லூமுட் நகரம், நீரிணைக் குடியேற்றங்களில் (Straits Settlements) ஒரு பகுதியானது. 1935-ஆம் ஆண்டில், லூமுட் டிண்டிங்ஸ் நிலப்பகுதிகள் பேராக் மாநிலத்திடம் ஒப்படைக்கப் பட்டன.
லூமுட் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
[தொகு]பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
92,972 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
72,672 | 76.54% | ▼ - 5.42% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
71,162 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
520 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
990 | ||
பெரும்பான்மை (Majority) |
363 | 0.51% | ▼ - 0.24 |
வெற்றி பெற்ற கட்சி: | பெரிக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [3] |
லூமுட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
[தொகு]சின்னம் | வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
கிடைத்த வாக்குகள் |
% | ∆% |
---|---|---|---|---|---|---|
நோர்டின் அகமது இசுமாயில் (Nordin Ahmad Ismail) |
பெரிக்காத்தான் | 71,162 | 25,212 | 35.43% | + 35.43% | |
சாம்ரி அப்துல் காதர் (Zambry Abdul Kadir) |
பாரிசான் | - | 24,849 | 34.92% | - 5.26 % ▼ | |
முகமது அத்தா ரம்லி (Mohd Hatta Ramli) |
பாக்காத்தான் | - | 20,358 | 28.61% | - 12.32% ▼ | |
மசுலான் அப்துல் கனி (Mazlan Abdul Ghani) |
தாயக இயக்கம் | - | 385 | 0.54% | + 0.54% | |
முகமது இசுனின் இசுமாயில் (Mohd Isnin Ismail) |
வாரிசான் | - | 358 | 0.50% | + 0.50% |
கடற்படைக் கப்பல் கட்டும் தளம்
[தொகு]மலேசியாவின் மிகப்பெரிய கடற்படைக் கப்பல் கட்டும் தளம் (Boustead Heavy Industries) இங்குதான் உள்ளது. 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது. வணிகக் கப்பல் கட்டுமானமும் நடைபெறுகிறது. தவிர கப்பல் தொடர்பான நிபுணத்துவச் சேவைகளும் வழங்கப் படுகின்றன.[4]
1993-ஆம் ஆண்டு தொடங்கி அமெரிக்காவின் ஆறு கடற்படை போர்க் கப்பல்கள் லூமுட்டின் கப்பல் துறையில் 1.6 மில்லியன் ரிங்கிட் செலவில் பழுது பார்க்கப்பட்டன. அந்தக் கப்பல்கள்:
- யூ.எஸ்.என்.எஸ். சியோக்ஸ் (USNS Sioux)
- யூ.எஸ்.எஸ். தஸ்கலோசா (USS Tuscaloosa)
- யூ.எஸ்.எஸ். போர்ட் மெக்ஹென்றி (USS Fort McHenry)
- யூ.எஸ்.எஸ். செனெக்டேடி (USS Schenectady)
- யூ.எஸ்.எஸ். ரஷ்மோர் (USS Rushmore)
- யூ.எஸ்.எஸ். ரீட் (USS Reid)
-
லூமுட் கப்பல்படைத் தளத்தில் மலேசியப் போர்க் கப்பல் ஹங்துவா; துணைக் கப்பல் மகாவங்சா
-
கடற்படைக் கப்பல் கட்டும் தளம்
-
லூமுட் வான்வழி புகைப்படம்; கிழக்கில் பங்கோர் தீவு
புண்டுட் தமிழ்ப்பள்ளி
[தொகு]புண்டுட் தமிழ்ப்பள்ளி அல்லது முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி மலேசியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு தமிழ்ப்பள்ளியாகும். ஸ்ரீ மஞ்சோங் வியூகப் பள்ளி வளாகத்தில் அமைந்து உள்ளது (Wawasan Manjung Lumut School Complex). சித்தியவான் நகரில் இருந்து லூமுட் நகருக்குச் செல்லும் வழியில் இந்தப் பள்ளி உள்ளது.
2002-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளி மலேசிய அரசாங்கத்தின் தூர நோக்கு வியூகப் பள்ளியாகத் தகுதி உயர்ந்தது. இந்தப் பள்ளியில் 341 மாணவர்கள் (170 ஆண்கள்; 171 பெண்கள்) பயில்கிறார்கள். 24 ஆசிரியர்கள்; நான்கு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். (2017-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்).[5]
புண்டுட் தமிழ்ப்பள்ளியின் வரலாறு
[தொகு]இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1948-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளி கட்டப்பட்டது. புண்டுட் தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு முயற்சியின் விளைவாக, அந்தத் தோட்டத்தில் அப்போது இருந்த மருத்துவமனைக் கட்டிடம், 25 மாணவர்களைக் கொண்டு ஒரு தமிழ்ப் பள்ளியாக மாற்றம் கண்டது. திரு.சுப்பையா என்பவர் முதல் தலைமையாசிரியராகப் பொறுப்பு வகித்தார்.[6]
1979-ஆம் ஆண்டில் லூமுட்டில் இருந்த அவர் லேடி பெர்புச்சுவல் பள்ளி (SRJK (T) Our Lady Of Perpertual Succour) மூடப்பட்டது. அங்கு இருந்த மாணவர்கள் அனைவரும் இந்தப் புண்டுட் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றப் பட்டனர். 1980-ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 180-ஆக உயர்ந்தது.
1984-ஆம் ஆண்டில், சித்தியவான் நகருக்கு அருகில் இருந்த சல்போக் ரப்பர் தோட்டம் மூடப்பட்டது. அங்கு பயின்ற மாணவர்கள் புண்டுட் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றப் பட்டனர். 2002-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளி தூர நோக்கு வியூகப் பள்ளியாக மாற்றம் கண்டது. 2009-ஆம் ஆண்டில் பள்ளி வளாகத்திலேயே தமிழ்ப் பாலர்ப் பள்ளியும் அமைக்கப் பட்டது.
அனைத்துலக அறிவியல் போட்டியில் சாதனை
[தொகு]அனைத்துலக அளவில் புண்டுட் தமிழ்ப்பள்ளி பற்பல சாதனைகளைச் செய்து வருகிறது. 2019-ஆம் ஆண்டு, இந்தோனேசியா சுராபாயா, மாலாங் மாநிலத்தில் மா சூங் பல்கலைக்கழகத்தில் நடந்த 2-ஆவது அனைத்துலக அறிவியல் புத்தாக்கக் கண்டுபிடிப்பு போட்டியில் புண்டுட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தனர்.[7]
சிறந்த கண்காட்சிக் கூடத்திற்கான அனைத்துலக விருது மலேசியாவுக்கு கிடைத்தது. புண்டுட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை திருமதி. தே. தெய்வமலர் நாகேந்திரன் அந்த விருதைத் தட்டிச் சென்றார். மஞ்ஜோங் வரலாற்றில் அனைத்துலகப் புத்தாக்க போட்டிகளில் ஒரு தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றது அதுவே முதல் முறையாகும்.
புண்டுட் தமிழ்ப்பள்ளியின் பள்ளிப் பாடல்
[தொகு]அழகு மிக்கப் பொன்மண்ணில்
எழிலாய் அமைந்த இப்பள்ளி
தமிழை வளர்க்கும் ஒரு பள்ளி
தரணி போற்றும் எம் பள்ளி
இயற்கை வளங்கள் இணைந்தாட
இயல் இசை நாடகம் உடன்உயர
ஆன்றோர் சான்றோர் கவிபாட
ஆக்கம் கண்ட பழம் பள்ளி
மூவினம் போற்றும் நம் பள்ளி
முத்தமிழ் வளர்க்கும் எம் பள்ளி
முன்னேற்றப் பாதையில் நம் பள்ளி
முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி
புண்டுட் தமிழ்ப்பள்ளியின் படங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Royal Malaysian Navy. In 1970 the government began building a base for its navy at Lumut, on the coast of Perak facing the Strait of Malacca.
- ↑ Lumut lies about 48 miles (77 km) southwest of the tin-mining town of Ipoh.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
- ↑ Royal Malaysia Navy Dockyard became fully operational in 1984.
- ↑ SENARAI NAMA GURU & KAKITANGAN
- ↑ Bangunan lama sekolah ini didirikan pada 1948 selepas Perang Dunia Kedua. Hasil usahasama pekerja-pekerja Ladang Pundut sebuah bangunan Group Hospital telah diubahsuai menjadi sekolah tamil.
- ↑ இந்தோனேசியாவில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 தங்கம் 1 வெள்ளி வென்றனர்.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Lumut தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பேராக் மாநில இணையத்தளம்