பவளம்
பவளம் | |
---|---|
Pillar coral, Dendrogyra cylindricus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | அந்தோசோவா Ehrenberg, 1831
|
Extant Subclasses and Orders | |
Alcyonaria |
பவளம் அல்லது பவழம் (coral) என்பது ஒருவகைக் கடல் வாழ் உயிரினமாகும். இவை நிடேரியா (Cnidaria)தொகுதியைச் சேர்ந்த, அந்தோசோவா (Anthozoa) வகுப்பைச் சேர்ந்தவையாகும். குழியுடலிகளைச் சேர்ந்த இவைச் சல்லி வேர்கள் போன்ற ஏராளமான கால்களைக் கொண்டவை. நெருக்கமாக அடுக்கப்பட்ட குடியிருப்புகள் போன்ற தோற்றத்தைக் காட்டும் சேர்ந்திருப்பு/சமூக அமைப்பைக் கொண்டிருக்கும். . கடல் நீரில் உள்ள பல்வகை உப்புகளைப் பெருமளவில் பிரித்தெடுத்துத் தங்கள் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை. பவளப் பூச்சிகள் பெரும்பாலும் வெப்ப நீர்க்கடல்களில் காணப்படுகின்றன. இதனால் வெப்பமண்டல கடல்களில் பவளப் பாறைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இவை கடல் நீரிலுள்ள சுண்ணாம்புச் சத்தை உறிஞ்சி இவை கால்சியம் கார்பனேற்றைச் சுரப்பதன் மூலம், கடினமான அடிப்படை ஒன்றைத் தோற்றுவிக்கும். இவை பல கிளைகளைக் கொண்ட மரங்களை ஒத்திருக்கும். இவற்றைப் பவளக்கொடிகள் என்று கூறுவர். இந்தப் பவளக்கொடித் திட்டுகள் சேர்ந்து இறுகிப் பாறையாகி தீவுகள் ஆகும். இவற்றைப் பவளத்தீவு என்பர்.
வாழ்வுமுறை
[தொகு]பவளப் பூச்சிகள் கடலில் 24°செ. வெப்ப நிலையில் உள்ள 40-50 மீ. ஆழப் பகுதிகளில் மட்டுமே செழித்து வளர்கின்றன. இவற்றால் 18°செ.குறைந்த வெப்ப நிலையில் வாழ முடியாது. இவற்றின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி பரவக்கூடிய தெளிவான கடல் நீர் அவசியம். கடல் நீரில் உப்பின் அளவு லிட்டருக்கு 35 கிராமுக்கு மேல் இருக்கக்கூடாது.பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் வெப்பப் பகுதிகளில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இப்பாறைகள் பவளப்பூச்சிகள், சில வகை ஆல்காக்கள் ஆகியவற்றின் சுண்ணச் சேர்மங்களான (Calcium compounds) எலும்புக்கூடுகளாலும், எச்சங்களாலுமே உருவாக்கப்படுகின்றன.
பவளப் பூச்சிகள் கடலடியில் தனித்தனியாக இல்லாமல் தொகுப்புயிர்களாகவே வளர்கின்றன. இவற்றின் சந்ததிகள் தனியே பிரிந்து செல்லாமல் மரக் குருத்துகளைப் போன்று ஒன்றிணைந்தே தொடர்ந்து வாழ்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றிற்குக் கிட்டுகின்ற இரையானது, தொகுப்புயிர்கள் எல்லாவற்றிற்குமே பயன்படுகிறது.
பவளப்பூச்சிகளால் தண்ணீரில்லாமல் வெகுநேரம் உயிர் வாழ முடியாது. எனவேதான் பவழப் பாறைகளின் உயர எல்லை கடல் மட்டத்துடன் நின்று விடுகிறது.
பவளத் தொகுப்புயிர்களில் ஒருவகையான செம்பவளத் தொகுப்புயிர், கிளைகள் பல கொண்ட இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமுள்ள சுண்ணச் சட்டகத்தைக் கொண்டதாகும். இந்தச் சட்டகமானது தொகுப்புயிருக்கு ஆதாரமாக அமைவதுடன் தம்மை உண்ணவரும் எதிரி விலங்குகளிடமிருந்து காத்துக் கொள்ளவும் உதவுகிறது.
உருவம்
[தொகு]இவற்றின் தொகுப்புயிர்களில் பல ஒரே மாதிரியான Polyp என அழைக்கப்படும் பாலினமற்ற இனப்பெருக்க தோற்றவமைப்புக்கள் காணப்படும். ஒவ்வொரு polyp உம் சில செ.மீ நீளமானவையாகவும், சில மி.மீ. விட்டத்தைக் கொண்டவையாகவும் இருக்கும். இந்த தலைப்பகுதியின் நடுவில் அமைந்திருக்கும் சிறு வாய்போன்ற அமைப்பைச் சுற்றி ஒரு கூட்டம் உணர்கொம்புகள் (tentacles) அமைந்திருக்கும். இந்த உயிரினங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் அடிப்பகுதியில் இவற்றினால் சுரக்கப்பட்ட இறுக்கமான பொருளாலான புறவன்கூடு அமைந்திருக்கும். பல சந்ததிகளூடாக தொடர்ந்து ஒரே இடத்தில் சுரக்கப்படும் இந்த புறவன்கூடு காரணமாக, கடல் பாறைகள் போன்ற அமைப்புக்களை உருவாக்குவது, இந்த இனங்களின் சிறப்பியல்பாகும்.
இனப்பெருக்கம்
[தொகு]பொதுவாக இவை பாலினமற்ற இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சிலசமயங்களில் புணரிகளை உருவாக்கி, கடல்நீரில் வெளியேற்றுவதன் மூலம் பாலின இனப்பெருக்கத்தையும் செய்கின்றன.
உணவு
[தொகு]அனேகமான பவள உயிரினங்கள், தமது உடலினுள் இருக்கும் இழையங்களில் உயிர்வாழும், ஒளிச்சேர்க்கை செய்யும் ஒருகல அல்காவின் மூலம் இவை தமக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், ஆற்றலையும் பெற்றுக் கொள்கின்றன. பவளப்பூச்சிகள் உணவை தாமே தயாரித்துக் கொள்வது இல்லை. பவளங்களுடன் வாழும் ஆல்காக்கள் எனப்படும் உயிரிகள் உற்பத்திசெய்யும் உணவுச் சத்தை உண்டு பவளங்கள் செழிக்கின்றன. பவளங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் கழிவுகள் ஆல்காக்களுக்கு உணவாக பயன்படுகிறது. பவளங்கள் வெளிப்படுத்தும் கழிவுகளில் இருந்து ஆல்காக்களுக்கு தேவையான நைட்ரஜன் சத்து கிடைக்கிறது. ஆனால் சிறிய மீன்கள், மிதவைவாழிகள் போன்றவற்றை தமது நச்சுத் தன்மை கொண்ட உயிரணுக்களால் கொட்டுவதன் மூலமும் இவை தமது உணவைப் பெற்றுக்கொள்ளும். ஆல்கா மூலம் உணவைப் பெறுபவையாயின், அவை சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் வளரும். எனவே இவை 60 மீற்றருக்கும் குறைவான ஆழமுள்ள இடங்களிலேயே காணப்படும். ஆல்காவுடன் சேர்ந்து வாழாதவையாயின் மிக ஆழமான கடலிலும் வாழும்.அவ்வப்போது தனது உணர் கொம்புகளால் ஏதேனும் உயிரியைப் பிடித்து இரையாக்கிக் கொள்கின்றன.
பயன்கள்
[தொகு]- பவளம் சேகரிப்பவர்கள் படகில் சென்று கடலின் அடித்தளத்தில் வலையை விழச் செய்வார்கள் வலையை இழுக்கும் போது கிடைக்கும் பவளத் தொகுப்புயிர்களின் உடைந்த துண்டுகளைச் சுத்தப்படுத்தி வெட்டி இழைத்து மழமழப்பாக்கி விற்பனை செய்கின்றனர்.
- பவளப்பூச்சிகளால் அணிகலன்களுக்குப் பயன்படும் சிவப்புப் பவழங்கள் கிடைக்கின்றன.
- பவளத்தால் செய்யப்படும் பவழபஸ்பம் என்ற மருந்து இதய நோய்களுக்குச் சிறந்தது.
- பவளத்தீவுகளிலிருந்து கிடைக்கும் கால்சியம் கார்பனேட் மூலம் பற்பசை, வெள்ளை வண்ணப் பூச்சுகள், சலவைத்தூள், ரப்பர், எழுதும் மை, காகிதம், பீங்கான் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் ஆகியவை செய்யப்படுகின்றன.
- கிருமி, பூச்சிக்கொல்லிகள் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகின்றன.
அழிவை நோக்கியுள்ள பவளப் பாறைகள்
[தொகு]சுற்றுப் புறச் சூழல்களால் ஏற்படும் மாற்றங்களால் பவழப் பாறைகள் அழிவை எதிர்நோக்கியுள்ளன. புவி வெப்பமயமாவதன் விளைவுகளால் ஏற்படும் கடல்நீரின் வெப்பநிலை உயர்வு,கடல் நீரில் அமிலத்தன்மை அதிகரித்தல்,மனிதர்களால் கடல்நீர் மாசுபடுதல், மீன்பிடித்தல் காரணமாக ஏற்படும் உயிரினச் சமச்சீர் தன்மையில் ஏற்படும் மாறுபாடு, வண்டல் படிவு, ஆகியவற்றால் பவழப்பாறைகளில் உள்ள தொகுப்புயிரிகள் அழிந்து வருகின்றன.
படத்தொகுப்பு
[தொகு]-
A short tentacle plate coral in [[Papua New Guinea
-
Fungia sp. skeleton
-
Brain coral, Diploria labyrinthiformis
-
Polyps of Eusmilia fastigiata
-
Staghorn coral, Acropora
-
Orange cup coral, Balanophyllia elegans
-
Brain coral spawning
-
Brain coral releasing eggs
-
பவழத்தின் வளர்கொம்புகள்
-
மரவடிவிலான பவழப்பாறை
-
கொம்புப்பவழம் (விசிறிப்பவழம்)
-
இறந்த பவழத்தின் வயதைக் கணக்கிடப் பிரித்தப்பவழம்
இறந்தப்பவழத்தின் கற்பாறைத் தோற்றங்கள்
[தொகு]-
Rugose Koralle ஏசர்வுலேரியா அனானசு சிலுரியாவிலிருந்து
-
பட்டிப்பவழங்கள் சிலுரியாவிலிருந்து - எலியோலைட்சு (Heliolites)
-
பட்டிப்பவழங்கள் சிலுரியாவிலிருந்து - பாவோசைட்சு (Favosites)
-
பட்டிப்பவழங்கள் சிலுரியாவிலிருந்து - ஆலிசைட்சு (Halysites)
-
எக்சாகொனரியா குவாடிரிசெம்மா (Hexagonaria quadrigema)
உசாத்துணை
[தொகு]ஆணைவாரி ஆனந்தன். 'பல்துறை அறிவியல்' மணியம் பதிப்பகம் வெளியீடு. 1989.
மேற்கொள்கள்
[தொகு]- ↑ Daly, M., Fautin, D.G., and Cappola, V.A. (March 2003). "Systematics of the Hexacorallia (Cnidaria: Anthozoa)". Zoological Journal of the Linnean Society 139: 419–437. doi:10.1046/j.1096-3642.2003.00084.x. http://www.ingentaconnect.com/content/bsc/zoj/2003/00000139/00000003/art00003. பார்த்த நாள்: 2011-10-13.
- ↑ McFadden, C.S., France, S.C., Sanchez, J.A., and Alderslade, P. (December 2006). "A molecular phylogenetic analysis of the Octocorallia (Cnidaria: Anthozoa) based on mitochondrial protein-coding sequences.". Molecular Phylogenentics and Evolution 41 (3): 413–527. பப்மெட்:12967605.