தஞ்சோங் ரம்புத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tanjung Rambutan
தஞ்சோங் ரம்புத்தான்
நகரம்
நாடுமலேசியா
மாநிலம்பேராக்
நிறுவப்பட்டது1892
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்26,550
நேர வலயம்மநே (ஒசநே+8)

தஞ்சோங் ரம்புத்தான் (Tanjung Rambutan) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தின் கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். ’தஞ்சோங்’ என்றால் நிலக்கூம்பு. ’ரம்புத்தான்’ என்றால் முடி முளைத்தான் பழம்.

முன்பு காலத்தில் இங்கு நிறைய முடி முளைத்தான் பழ மரங்கள் இருந்ததால் அப்பெயர் வந்ததாகச் சொல்லப் படுகிறது. மலேசியாவின் மிகப் பழமை வாய்ந்த மனநோய் மருத்துவமனை இங்கு தான் உள்ளது.[1] அதன் பெயர் உலு கிந்தா பகாகியா மருத்துவமனை. (Hospital Bahagia Ulu Kinta [2]) இந்த நகரம் ஈப்போ மாநகரில் இருந்து 16 கி.மீ தொலைவில் வட கிழக்கே இருக்கிறது.

அண்மைய காலங்களில் இந்த நகரம் மிகத் துரிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு மனநோய் மருத்துவமனை இருப்பதால் இந்த நகரத்தையும் மனநோயுடன் தொடர்பு படுத்திப் பேசுவது வழக்கமாக உள்ளது. பொதுவாகவே, மலேசியாவில் யாராவது சாதாரண மனித இயல்பு நிலைகளில் இருந்து மீறி வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டால், அவரைத் ’தஞ்சோங் ரம்புத்தான்’ என்று அழைப்பார்கள்.

அது ஒரு மனிதரின் மனிதத் தன்மைகளையும் அவருடைய சுய கௌரவத்தையும் இழிவு படுத்துவது போல் ஆகும். அந்த வழக்கம் இன்றைய நாட்களில் குறைந்து வருகிறது.

முக்கிய இடங்கள்[தொகு]

தஞ்சோங் ரம்புத்தான் நகருக்கு அருகில் ஓர் அழகான நீர்வீழ்ச்சி உண்டு. இந்த நீர்வீழ்ச்சியைப் பலர் தஞ்சோங் ரம்புத்தான் நீர்வீழ்ச்சி என்று அழைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அதன் பெயர் உலு கிந்தா நீர்வீழ்ச்சி ஆகும். ஈப்போ சுற்று வட்டார மக்கள் வார இறுதி நாட்களில் அங்கு குளிக்கச் செல்வது உண்டு.

இந்த நகரம் கொர்பு மலை அடிவாரத்தில் இருப்பதால் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். அடிக்கடி மழை பெய்யும். மிதமான குளிர்க் காற்று எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும்.

இங்கு ஒரு குதிரை வளர்ப்பு பண்ணையும் இருக்கிறது. அதன் பெயர் தேசிய குதிரைப் பண்ணை (National Stud Farm).[3]இந்தப் பண்ணை 1969 ஆம் ஆண்டு 40 ஹெக்டர் நிலப் பரப்பளவில் உருவாக்கப் பட்டது. இதில் இப்போது 970 குதிரைகள் வளர்க்கப் படுகின்றன.

ஈயச் சுரங்கங்கள்[தொகு]

தஞ்சோங் ரம்புத்தான் நகரின் வரலாறு 1892-இல் தொடங்குகிறது. இந்த நகரின் சுற்று வட்டாரங்களில் பல ஈயச் சுரங்கங்கள் இருந்தன. அவற்றில் வேலை செய்ய சீனர்கள் படையெடுத்தனர். 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் தஞ்சோங் ரம்புத்தான் நகரின் மக்கள் தொகை ஏறக்குறைய 2000 ஆக இருந்தது.

அந்தக் கால கட்டத்தில் சீனர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இப்போது இந்த நகரின் மக்கள் தொகையியல் அமைப்பு முறை முற்றிலும் மாறிப் போய் விட்டது. இந்தியர்களையும் மலாய்க்காரர்களையும் மிகுதியாகக் காண முடிகின்றது.

பொருளாதார வளர்ச்சியில் தேக்கம்[தொகு]

வியாபாரத்திலும் சிறு சிறு வர்த்தகங்களிலும் இவர்கள் தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். விவசாயம், பன்றி வளர்ப்புத் துறைகளில் சீனர்கள் தடம் பதித்துள்ளனர். இருப்பினும் இந்த நகரின் பொருளாதாரம் சீனர்களின் கைகளில் தான் இருக்கிறது.

ஒரு கட்டத்தில் தஞ்சோங் ரம்புத்தான் நகரம் மற்ற அருகாமை நகரங்களான பெர்ச்சாம், தம்பூன், சிம்மோர் நகரங்களை விட செல்வச் செழிப்புடன் மிகச் சிறப்புடன் மிடுக்குப் போட்டது. ஆனால், காலம் மாறி விட்டது. இப்போது அந்த நகரங்கள் தஞ்சோங் ரம்புத்தான் நகரத்தை பின தள்ளிவிட்டு பொருளாதார வளர்ச்சியில் அவை முன்னிலை வகிக்கின்றன.

சமயப் புரிந்துணர்வு[தொகு]

தஞ்சோங் ரம்புத்தான் நகரத்தில் நுழைந்ததும் பல்லின சமுதாயம் சமய வேறுபாடின்றி சமத்துவமாக வாழ்வதைக் காணலாம். இங்கு பள்ளிவாசல், சீக்கிய குருத்துவாரா ஆலயம், சீனர் கோயில், இந்து ஆலயம் போன்ற சமய வழிபாட்டுத் தளங்கள் அடுத்தடுத்து இருப்பதைக் காண முடியும். இது இந்நகரின் சமயப் புரிந்துணர்வைப் பிரதிபலிக்கின்றது.

இந்த நகரில் ஒரு பிரபலமான உணவகம் உள்ளது. அதன் பெயர் ’பினாங்கு மாட் பேராக் நாசி கண்டார்’ (Mat Perak Nasi Kandar Penang). இந்த உணவகத்தில் பிரியாணி சாதம், மீன் தலைக் கறி, கோழி வாசனைக் கறி போன்றவை பல்லின வாடிக்கையாளர்களை இன்னும் கவர்ந்து இழுக்கிறது.

மகிழ்ச்சி தரும் மருத்துவமனை[தொகு]

மலேசியாவின் மிகப் பெரிய மனநோய் மருத்துவமனை இந்தத் தஞ்சோங் ரம்புத்தான் நகரத்தில் தான் இருக்கிறது. இந்த மருத்துவமனை 544 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து வியாபித்துள்ளது. இதற்கு உலு கிந்தா மகிழ்ச்சி தரும் மருத்துவமனை எனும் பெயர் இருந்தாலும் இதனைத் தஞ்சோங் ரம்புத்தான் மருத்துவமனை என்றே அழைக்கின்றார்கள்.

உலு கிந்தா மகிழ்ச்சி தரும் மருத்துவமனை 1910 ஆம் ஆண்டு டாக்டர் W.F. சாமுவேல் என்பவரின் அரிய முயற்சியினால் உருவாக்கப் பட்டது.[4] அந்த மருத்துவமனையின் முதல் மருத்துவத் தலைவராக டாக்டர் W.F. சாமுவேல் தான் சேவை செய்தார்.

பெயர் மாற்றம்[தொகு]

ஏற்கனவே அந்த மருத்துவமனை, மத்திய மனநோய் மருத்துவமனை என்று அழைக்கப் பட்டு வந்தது. மனநோய் என்பது மக்களிடையே ஒரு தவறான கருத்தை ஏற்படுத்தி வந்தது. அங்கு போய் வந்தவர்களைப் பொது மக்கள் தீண்டத் தகாதப் பொருட்களாகக் கருதினர். சமூகம் அவர்களை ஒதுக்கித் தள்ளி வைத்தது. அதனால் 1970 ஆம் ஆண்டு அதன் பெயர் மகிழ்ச்சி தரும் மருத்துவமனை என மாற்றம் செய்யப் பட்டது.[5]

1941-இல் உலு கிந்தா மகிழ்ச்சி தரும் மருத்துவமனையில் 5,000 நோயாளிகள், 2,600 படுக்கைகள் இருந்ததாகப் புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன.[6] மலேசியாவில் நான்கு மனநோயாளிகள் மருத்துவமனைகள் உள்ளன.

அவற்றுள் இந்த மருத்துவமனைதான் ஆகப் பெரியது ஆகும். இதில் ஆண்களுக்கு 53 படுக்கைக் கூடங்களும் பெண்களுக்கு 25 படுக்கைக் கூடங்களும் உள்ளன. ஏறக்குறைய 2,200 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.[7] இந்த 2011 ஆம் ஆண்டில் உலு கிந்தா மகிழ்ச்சி தரும் மருத்துவமனை 100 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hospital Bahagia Ulu Kinta is a hospital for the mentally unsound. It is located on a 544 acre land in Tanjung Rambutan.
  2. Wikipedia Bahasa Melayu விக்கிப்பீடியா மலேசிய மொழி
  3. The National Stud Farm is like a countryside scene from Austria during summer.
  4. Hospital Bahagia Ulu Kinta, Tanjung Rambutan, Perak
  5. "Tanjung Rambutan was first identified as a suitable location for a federal lunatic asylum by Dr W.F. Samuels in 1910". Archived from the original on 2009-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  6. Hospital Bahagia Ulu Kinta is the biggest of the four pyschiatric institutions in Malaysia. It has 54 male wards and 25 female wards
  7. Terdapat 78 buah wad di hospital ini yang terdiri daripada 53 buah wad lelaki, 25 buah wad perempuan.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சோங்_ரம்புத்தான்&oldid=3556982" இலிருந்து மீள்விக்கப்பட்டது