சரவாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சரவாக்
Sarawak
سراوق
砂拉越
கொடி
தலைநகரம்கூச்சிங்
வரலாறு
 •  புருணை சுல்தானகம் 19ம் நூற்றாண்டு 
 •  புரூக் வம்சம் 1841 
 •  ஜப்பானிய ஆதிக்கம் 1941-1945 
 •  பிரித்தானிய ஆதிக்கம் 1946 
 •  மலேசியாவுடன் இணைவு 1963 
மக்கள் தொகை
 •  2007 கணக்கெடுப்பு 2,500,000
மமேசு (2000)0.757
உயர்

சரவாக்கு (Sarawak) போர்நியோ தீவில் உள்ள இரு மலேசிய மாநிலங்களில் ஒன்றாகும். சபா இன்னொரு மாநிலம் ஆகும். பூமி கென்யாலாங் என அழைக்கப்படும் சரவாக், போர்னியோ தீவில் வட மேற்கே அமைந்துள்ளது. மலேசியாவின் மிகப் பெரும் மாநிலம் இதுவாகும். இரண்டாவது பெரிய மாநிலமான சபா தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது.

இதன் நிர்வாகத் தலைநகரம் கூச்சிங். 2006 கணக்கெடுப்பின் படி அதன் மக்கள் தொகை 579,900 ஆகும். சரவாக் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,357,500. இங்குள்ள பெரும்பான்மையானோர் முஸ்லிம் அல்லாதோர் ஆவர். இங்கு மலாய் மக்கள் அல்லாத 30 பழங்குடி இனக் குழுக்கள் வாழ்கின்றனர்.

வரலாறு[தொகு]

சர் ஜேம்ஸ் புரூக், சரவாக்கின் ராஜா
போர்னியோ தீவில் சரவாக்கின் அமைவு

16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்னியோ தீவின் கிழக்குக் கரையில் போர்த்துக்கீசியர் வந்திறங்கினர். ஆனாலும், அவர்களால் அங்கு குடியேற முயலவில்லை. 17ம் நூற்றாண்டில் சுல்தான் தெங்கா என்பவரால் ஆளப்பட்டாலும், இன்றைய சரவாக் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புருணை சுல்தானகத்தினால் ஆளப்பட்டு வந்தது.

1841 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் புரூக் இங்கு வந்தார். இவர் வந்த காலத்தில் அங்கு டயாக் பழங்குடியினர் சுல்தானுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கிளர்ச்சியை அடக்க சுல்தான் புரூக்கின் உதவியை நாடினார். புரூக் சூல்தானுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.

ஜேம்ஸ் புரூக்[தொகு]

அதன்படி சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. 1841, செப்டம்பர் 24 இல் சுல்தான், ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநராக ஆக்கினார். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்துக் கொண்டார். அதன் பின்னர் அங்கு வெள்ளை ராஜா வம்சத்தை ஏற்படுத்தினார்.

1842, ஆகஸ்ட் 18 ஆம் நாள், ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் ராஜாவாக புருணை சுல்தானினால் அறிவிக்கப்பட்டார். 1868 இல் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவருடைய மருமகன் சார்ல்ஸ் புரூக் 1917 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். அவர் இறந்த பின்னர் அவரது மகன் சார்ல்ஸ் வைனர் புரூக் ஆட்சி செய்தார்[1].

நூறு ஆண்டுகால ஆட்சி[தொகு]

புரூக் வம்சாவளியினர் சரவாக்கை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்தனர். இவர்கள் வெள்ளை ராஜாக்கள் எனப் புகழ் பெற்றிருந்தனர். எனினும் பிரித்தானியாவின் ஏனைய கூடியேற்ற நாடுகளைப் போல் அல்லாமல் சரவாக் ராஜாக்கள் பழங்குடிகளின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தனர்.

சீன வர்த்தகர்களின் வருகையை ஊக்குவித்தாலும், அவர்களை பழங்குடியினர் வாழும் இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை. டயாக் மக்களின் கலாச்சாரத்தில் சீனர்கள் கலப்பதை வெள்ளை இராசாக்கள் விரும்பவில்லை. புரூக் வம்சாவளியினர் சரவாக் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்தார்கள். இது போர்னியோவின் முதலாவது அருங்காட்சியகம் ஆகும்.

இரண்டாம் உலகப் போர்[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் சரவாக்கை முற்றுகையிட்டது. 1941 டிசம்பர் 16 இல் மிரி நகரையும், டிசம்பர் 24 இல் கூச்சிங் நகரையும் கைப்பற்றினர். போர்னியோ தீவு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

1945 இல் ஆஸ்திரேலியப் படைகள் ஜப்பானியரிடம் இருந்து போர்னியோவைக் கைப்பற்றினர். ஜூலை 1, 1946 இல் ராஜா சரவாக்கின் அதிகாரத்தை பிரித்தானியாவிடம் ஒப்படைத்தார். பதிலாக ராஜா குடும்பத்துக்கு மிகப் பெறுமதியான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

அந்தோனி புரூக்[தொகு]

ஆனாலும், ராஜாவின் மருமகன் அந்தோனி புரூக் சரவாக்கின் தீவிரவாதிகளுடன் இணைந்து ஆட்சிக்கு உரிமை கோரி வந்தார். உலகப் போரின் முடிவில் சரவாக்கில் இருந்து தப்பியோடினார். பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் சரவாக் மலேசியாவுடன் இணைக்கப்பட்ட போது இவர் நாட்டுக்குத் திரும்பிவர அனுமதிக்கப்பட்டார். மலாய் மக்கள் சரவாக்கைப் பிரித்தானியரிடம் ஒப்படைத்ததில் பலத்த எதிர்ப்பைக் காட்டினர். 1946 இல் சரவாக்கின் முதலாவது பிரித்தானிய ஆளுநர் சர் டுங்கன் ஜார்ஜ் ஸ்டீபர்ட் படுகொலை செய்யப்பட்டார்.

சரவாக் அதிகாரபூர்வமாக 1963, ஜூலை 22 இல் விடுதலை அடைந்து[2] அதே ஆண்டு செப்டம்பர் 16 இல் மலேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2005-11-18 அன்று பரணிடப்பட்டது.
  2. Bernama (2008-07-22). "Reflect On Past Leaders' Struggles, Says Taib". பார்த்த நாள் 2008-07-24.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sarawak
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவாக்&oldid=3272094" இருந்து மீள்விக்கப்பட்டது