பினாங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

(இந்தக் கட்டுரை பினாங்கு மாநிலம் பற்றியது. பினாங்கு தீவைப் பார்க்க பினாங்கு தீவு என்பதைப் பார்க்கவும். பினாங்கின் தலைநகரம் அல்லது பினாங்கின் பெருநகரத்தைப் பார்க்க சார்ச்சு டவுன் என்பதைப் பார்க்கவும். பினாங்கின் செபராங் பிறை பகுதியைப் பார்க்க செபராங் பிறை என்பதைப் பார்க்கவும்.)

பினாங்கு மாநிலம்
நெகிரி புலாவ் பினாங்
State of Penang
மாநிலம்
Negeri Pulau Pinang
பினாங்கு மாநிலம் நெகிரி புலாவ் பினாங் State of Penang-இன் கொடி
கொடி
பினாங்கு மாநிலம் நெகிரி புலாவ் பினாங் State of Penang-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Bersatu dan Setia ("ஐக்கியமும் விசுவாசமும்")
பண்: Untuk Negeri Kita ("எமது மாநிலத்துக்காக")
      Penang in       மலேசியா
      Penang in       மலேசியா
தலைநகரம்சார்ச்சு டவுன்
அரசு
 • ஆளுநர்அகமது புசி அப்துல் ரசாக்
 • முதலமைச்சர்சாவ் கொன் யாவ் (பாக்காத்தான் அரப்பான்)
 • துணை முதலமைச்சர்இராமசாமி பழனிச்சாமி (பாக்காத்தான் அரப்பான்)
 • துணை முதலமைச்சர்முகமது இரசிடு அசுனுன் (பாக்காத்தான் அரப்பான்)
பரப்பளவு
 • மொத்தம்1,048 km2 (405 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்15,20,143
 • அடர்த்தி1,500/km2 (4,000/sq mi)
மனித வளர்ச்சிக் குறியீடு
 • HDI (2010)0.810 (மிகக் கூடுதல்)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறியீடுகள்10xxx–14xxx
தொலைபேசி அழைப்பு முன் எண்+604
வாகனப் பதிவுவாகனங்கள் பதிவுப் பட்டை முன்குறி P(Penang)
பிரித்தானியரிடம் கெடா சரண்11 ஆகத்து 1786
சப்பானிய ஆக்கிரமிப்பு19 திசம்பர் 1941
மலாயாக் கூட்டமைப்பில் சேரல்31 சனவரி 1948
சுதந்திர மலாயாவின் ஒரு பகுதி31 ஆகத்து 1957
இணையதளம்www.penang.gov.my

பினாங்கு மாநிலம் (State Of Penang), (மலாய்: Negeri Pulau Pinang, நெகிரி புலாவ் பினாங்) என்பது மலேசியாவின் ஒரு மாநிலம் ஆகும். புவியியல் ரீதியாக பினாங்கு மாநிலம் பினாங்கு தீவு மற்றும் செபராங் பிறை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பினாங்கு தீவு மலாக்கா நீரிணையில் உள்ள 305 சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் சார்ச்சு டவுன் இங்குதான் உள்ளது.[1] இந்நகரத்தில் ஏறக்குறைய 700,000 மக்கள் வசிக்கின்றனர். தலைநகர்ச் சார்ந்த புறநகர்ப் பகுதிகளில் 2.5 மில்லியன் பேர் வசிக்கின்றனர். சார்ச்சு டவுன், மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அடுத்த மிகப்பெரிய நகரமாக உள்ளது.

செபராங் பிறை அல்லது அக்கரை 753 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட தீபகற்ப மலேசியா பகுதி. இதன் எல்லையாக வடக்கு கிழக்கு தெற்கு கெடா மாநிலம், பேராக் மாநிலம் தெற்கில் மட்டும் உள்ளது. கிட்டத் தட்ட 700,000 பேர் வாழ்கிறார்கள்.

பினாங்கு மாநிலம் மலேசியாவில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் முதலாவது இடத்தில் இருக்கிறது.

வரலாறு[தொகு]

பினாங்கு மாநில வரைபடம்
சார்ச்சு டவுன் மாநகரின் ஒரு பகுதி
கொம்டார் கோபுரம்
பினாங்கு பாலம்

பினாங்கு ஆரம்பத்தில் கெடா மாநிலத்துடன் இணைந்து இருந்தது. 1786, ஆகத்து 11-இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் கேப்டன் பிரான்சிசு லைட் என்பவர் பினாங்கில் காலடி வைத்த போது, அதற்கு ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் சார்ச்சு நினைவாக "வேல்சு இளவரசர் தீவு" எனப் பெயரிட்டார். பினாங்கின் நிறுவனர் பிரான்சிசு லைட் என இன்றும் நினைவுகூறப் படுகிறார்.

பின்னர் பிரான்சிசு லைட், கெடா சுல்தானின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவருக்கு பினாங்குத் தீவு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பிரான்சிசு லைட், பிரித்தானிய இந்தியா அரசுக்கு பினாங்கைக் கொடுத்தார். இதன் மூலம் சியாம் மற்றும் பர்மிய இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து கெடாவைக் காப்பதாக சுல்தானுக்கு பிரான்சிசு லைட் வாக்குறுதி அளித்தார்.

செபாராங் பிறை பினாங்குத் தீவுடன் இணைக்கப்பட்டது[தொகு]

தொடக்க காலத்தில் பினாங்குத் தீவில் குடியேறியவர்கள் மலேரியா நோய் காரணமாக இறந்தார்கள், இதனால் பினாங்கு "வெள்ளை மனிதனின் கல்லறை" என அழைக்கப் படுகிறது[2].சியாமியர்கள் கெடாவைத் தாக்கியபோது ஆங்கிலேயக் கம்பெனி கெடாவுக்கு உதவி வழங்க முன் வரவில்லை. அதனால். கெடா சுல்தான் பினாங்குத் தீவை 1790-ஆம் ஆண்டில் கைப்பற்ற முனைந்தார். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

பின்னர், கெடா சுல்தான் ஆண்டு ஒன்றுக்கு 6,000 எசுப்பானிய டாலர்கள் வரிப் பணம் கட்டச் சொல்லி பினாங்குத் தீவை ஆங்கிலேயக் கம்பனியிடம் கொடுத்தார். 1800-ஆம் ஆண்டில் மலாயாத் தீபகற்பத்தின் பெரும் பரப்பளைவைக் கொண்ட செபாராங் பிறை பினாங்குத் தீவுடன் இணைக்கப்பட்டது. அதற்கான வரிப்பணம் 10,000 டாலர்களாக அதிகரித்தது.

நீரிணைக் குடியேற்றங்கள்[தொகு]

இன்று வரையில் இத்தொகை (10,000 ரிங்கிட்டுகள்) பினாங்கு அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் கெடா மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. 1826-ஆம் ஆண்டில், பினாங்கு மாநிலம் மலாக்கா, சிங்கப்பூருடன் சேர்த்து, இந்தியாவின் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆட்சியின் நீரிணைக் குடியேற்றங்கள் என்ற அமைப்பின் கீழ் கொண்டு வரப் பட்டது.

பின்னர் 1867 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1946 ஆம் ஆண்டில் இந்த நிலப் பகுதிகள் மலாயா ஒன்றியத்தில் இணைக்கப் பட்டன. பின்னர் 1948-இல் மலாயாக் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டது. மலாயாக் கூட்டமைப்பு 1957-இல் விடுதலை பெற்று, 1963 ஆம் ஆண்டில் மலேசியா ஆனது.

புவியியல்[தொகு]

புவியியல் ரீதியாக பினாங்கு மாநிலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

பினாங்கு தீவு[தொகு]

பினாங்கு தீவு மலாக்கா நீரிணையில் உள்ள 305 சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் சார்ச்சு டவுன் இங்குதான் உள்ளது. மொத்த மக்கள்தொகை 740,200.

செபராங் பிறை[தொகு]

செபராங் பிறை அல்லது அக்கரை 753 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட பகுதி. இதன் எல்லையாக வடக்கு கிழக்கு தெற்கு கெடா மாநிலம், பேராக் மாநிலம் தெற்கில் மட்டும் உள்ளது. கிட்டத் தட்ட 700,000 பேர் வாழ்கிறார்கள். இங்குதான் பட்டர்வொர்த், நிபோங் திபால், பத்து காவான், பிறை, பெர்மாத்தாங் பாவ், நகரங்கள் உள்ளன.

மாவட்டங்கள்[தொகு]

வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்[தொகு]

மாநிலத்தின் தலைநகர் சார்ச்சு டவுன் இந்த வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் உள்ளது.

தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்[தொகு]

இது தெற்கு மற்றும் மேற்கு பினாங்கு தீவுகளை உள்ளடக்கியது, பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்குதான் உள்ளது.

வட செபராங் பிறை மாவட்டம்[தொகு]

பட்டர்வொர்த் நகரம் இங்குதான் உள்ளது.

மத்திய செபராங் பிறை மாவட்டம்[தொகு]

பிறை, பெர்மாத்தாங் பாவ், நகரங்கள் உள்ளன.

தென் செபராங் பிறை மாவட்டம்[தொகு]

நிபோங் திபால், பத்து காவான் நகரங்கள் உள்ளன.

2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை[தொகு]

  • சீனர்கள் : 670,400
  • மலாய்காரர்கள் : 636,146
  • தமிழர்கள் : 153,472
  • மற்றவர்கள் : 5,365
  • மற்றநாட்டவர்கள் : 89,860

ஆட்சி முறை[தொகு]

முதலமைச்சர்கள் பட்டியல்[தொகு]

பொறுப்பு வகித்தவர்கள் பதவிக்காலம் அரசியல் இணைப்பு
வோங் பவ் நீ 1957–1969 மலேசிய சீனர் சங்கம் - மலேசிய கூட்டணி கட்சி
துன் டாக்டர் லிம் சொங் யூ 1969–1990 மலேசிய மக்கள் இயக்கக் கட்சி - பாரிசான் நேசனல்
டான் சிரீ டாக்டர் கோ சு கூன் 1990–2008 மலேசிய மக்கள் இயக்கக் கட்சி - பாரிசான் நேசனல்
லிம் குவான் எங் 2008–2018 சனநாயக செயல் கட்சி - பாக்காத்தான் ராக்யாட்
சாவ் கொன் யாவ் 2018–இன்று வரை சனநாயக செயல் கட்சி - பாக்காத்தான் அரப்பான்

முதலமைச்சர்[தொகு]

சாவ் கொன் யாவ் (ஆங்கிலம்:Chow Kon Yeow, பிறப்பு : நவம்பர் 14, 1957) பினாங்கு மாநில முதலமைச்சரும் மலேசிய அரசியல்வாதியும் ஆவார்.இவர் பினாங்குத் தமிழர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆன முதலமைச்சர்.

துணை முதலமைச்சர்[தொகு]

பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பினாங்கு மாநில முதல்வரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் பொறுப்பேற்ற புதிய முதல்வர் லிம் குவான் எங் பினாங்குத் துணை முதல்வராகப் பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமியை நியமித்தார். மலேசிய அரசியல் வரலாற்றில் தமிழர் ஒருவர் மலேசிய மாநிலத் துணை முதல்வர் பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.

வானளாவிகள்[தொகு]

கொம்டார் கோபுரம்[தொகு]

கொம்டார் கோபுரம் அல்லது காம்ப்ளக்ஸ் துன் ரசாக் (Komtar Tower) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் உயரமான கோபுரம் ஆகும். ஜோர்ஜ் டவுன் மாநகர முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோபுரம் மலேசியாவின் ஆறாவது மிக உயரமான கட்டடம் ஆகும். கொம்டார் கோபுரம் சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக உள்ளது.

போக்குவரத்து[தொகு]

பினாங்கு பாலம்.
கொம்டார் கோபுரம்.
லிட்டில் இந்தியா பகுதி

எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள்[தொகு]

கடந்த காலத்தில், இங்கு எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இருந்தன.பின்னர் அவை 1970 ல் நிறுத்தப்பட்டன.

துன் டாக்டர் லிம் சொங் யூ நெடுஞ்சாலை[தொகு]

இந்தச் சாலை ஜார்ஜ் டவுன் நகரத்தையும் பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையதையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை மூலம், விமான நிலையதை 30 நிமிடங்களிள் அடையலாம்.

கோலாலம்பூர்; கோத்தா கினாபாலு;; ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களுக்கு அடுத்ததாக நாட்டின் சுறுசுறுப்பான விமான நிலையங்களில் பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்; மூன்றாவதாக உள்ளது. மேலும் பன்னாட்டுப் பயணிகள் மற்றும் சரக்கு சேவையில் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் உள்ளது. [3]

பினாங்கு பாலம்[தொகு]

பினாங்கு பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் பினாங்கு தீவை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 14, 1985 அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.

பினாங்கு இரண்டாவது பாலம்[தொகு]

பினாங்கு இரண்டாவது பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் பினாங்கு தீவை இணைக்கிறது.இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.

பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்[தொகு]

பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PENஐசிஏஓ: WMKP), முன்பு பயான் லெபாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று அழைக்கப்பட்டது. பினாங்கின் தலைநகரான ஜோர்ஜ் டவுனிலிருந்து 14கிமீ (8.7மை) தொலைவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் 1935ல் திறக்கப்பட்டது. நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.

ராபிட் பெனாங்[தொகு]

ராபிட் பெனாங் இது நகர பேருந்து நிறுவனம் ஆகும். ஜோர்ஜ் டவுன் கப்பல் துறை மற்றும் கொம்டார் கோபுரம் இதன் முக்கிய பேருந்து மையமாகும். இது ஜோர்ஜ் டவுன் மாநகரை பினாங்கு தீவுடன் இணைக்கிறது. ராபிட் பெனாங் இலவச பஸ் சேவை உள்ளது. இந்த பஸ் சேவை ஜோர்ஜ் டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்துக்குள் மட்டுமே.

எக்ஸ்பிரஸ் பேருந்துகள்[தொகு]

சுங்கை நிபோங் பேருந்து நிலையம், இங்கு 24 மணி நேரம் செயல்படும் பல எக்ஸ்பிரஸ் பஸ் நிறுவனங்கள் உள்ளன, இது பினாங்கு தீவை மலேசியாவின் முக்கிய நகரங்களுடன் பொதுவாக கோலாலம்பூர், அலோர் ஸ்டார், ஈப்போ, குவாந்தான், ஜொகூர் பாரு, மற்றும் சிங்கப்பூர்ருடன் இணைக்கிறது.

பினாங்கு படகு சேவை[தொகு]

1920 ஆம் ஆண்டு தொடங்க பட்ட பினாங்கு படகு சேவை தலைநகர் ஜோர்ஜ் டவுன் நகரை பட்டர்வொர்த்துடன் இணைக்கிறது. இதில் பயணிகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணம் செய்யளாம்.

தமிழர் குடியேற்றம்[தொகு]

சோழர் காலம் முதலாக (கி.பி 846- 1279) மலேசிய மண்ணில் தமிழரின் கால்பதிந்த வரலாற்றுத் தடங்கள் காணப்படுகின்றன. இருந்த போதிலும், 1786-இல் பினாங்குத் தீவு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் தான் தமிழர்களின் பாரம்பரியக் குடியேற்றங்கள் நடைபெற்றன. 1802-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் போர்க் கைதிகளாகப் பிடிப்பட்ட தமிழர்கள் பினாங்கு தீவை வளப்படுத்தும் நோக்கத்துடன் ஆங்கிலேயர்களால் அங்கு நாடு கடத்தப் பட்டனர்.

இவ்வாறு கர்னல் வெல்சின் "இராணுவ நினைவுகள்" என்ற நூலினை ஆதாரம் காட்டி மலேசிய எழுத்தாளர் பீர்முகம்மது குறிப்பிடுகின்றார். மருதுபாண்டியரின் மகனான துரைசாமி 73 கைதிகளுடன் பினாங்கு தீவுக்கு நாடுகடத்தப்பட்ட விபரங்கள் அதில் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார்[4].

1921-ஆம் ஆண்டில் நடந்த ஒரு கணக்கெடுப்பின்படி அங்கு குடியேறிய தென்னிந்தியர்களில் 387,509 பேர் தமிழர்கள், 39,986 பேர் தெலுங்கர்கள், 17,790 பேர் மலையாளிகள் ஆவர்.

பினாங்கு தைப்பூசம்[தொகு]

ஜோர்ஜ் டவுன், பினாங்கு அருகில் உள்ள தண்ணீர் மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும்.

தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இந்தத் தைப்பூசத் திருநாள் மூன்று நாட்கள் நடைபெறும். தைப்பூசத் திருநாள் பினாங்கிள் பொது விடுமுறை நாள் ஆகும்.

படத் தொகுப்பு[தொகு]

இருப்பிடம்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாங்கு&oldid=3589392" இருந்து மீள்விக்கப்பட்டது