குளுகோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குளுகோர்
Gelugor
牛汝莪
புக்கிட் குளுகோர் புறநகர்ப்பகுதி
புக்கிட் குளுகோர் புறநகர்ப்பகுதி
நாடு
Flag of Malaysia
மலேசியா
மாநிலம்
Flag of Penang
பினாங்கு
உருவாக்கம்1812[1]
பரப்பளவு
 • மொத்தம்185 km2 (71 sq mi)
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்12,25,501
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)

குளுகோர் (Gelugor) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2] இதன் அருகாமையில் ஜோர்ஜ் டவுன் மாநகரமும்,[3] வடக்கே குளுகோர் கிராமமும், ஜெலுத்தோங் புறநகர்ப் பகுதியும் உள்ளன. குளுகோர் என்பது குளுகோர் குன்று எனும் (ஆங்கில மொழி: Gelugor Hill) சொல்லில் இருந்து உருவானதாகும்.

குளுகோர் புறநகர்ப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்கள், வீடமைப்புப் பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு புக்கிட் குளுகோர் என்று இப்போது அழைக்கப்படுகிறது. புக்கிட் குளுகோர் என்பது ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகும். ஜெலுத்தோங் புலி என்று அழைக்கப்படும் கர்பால் சிங், 2004 ஆம் ஆண்டில் இருந்து, இந்தப் புக்கிட் குளுகோர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.[4]

பின்னணி[தொகு]

குளுகோர் என்று பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சொல் Gu-Lu-Goq (சீனம்: 牛汝莪) எனும் சீனச் சொலில் இருந்து தருவிக்கப்பட்ட ஒரு சொல் ஆகும். குளுகோர் என்பது சீனர்கள் சமைக்கப் பயன்படுத்திய ஒரு வகையான புளி.[5] இந்தப் புளி, குளுகோர் குன்றில் முன்பு அதிகம் காணப்பட்டன. அதில் இருந்து அந்தப் பகுதிக்கு குளுகோர் என்று பெயர் வைக்கப்பட்டது.

குளுகோர் புறநகர்ப் பகுதியில் பல வீடமைப்புப் பகுதிகளும், வணிகத் தளங்களும் உள்ளன. ஐலண்ட் கேட்ஸ் (Island Glades), ஐலண்ட் பார்க் (Island Park), மிண்டென் அடுக்குமாடி வீடுகள் (Minden Heights), தாமான் துன் சார்டோன் (Taman Tun Sardon), தாமான் பிரவுன் (Taman Brown), புக்கிட் காம்பிர் (Bukit Gambir), புக்கிட் குளுகோர் (Bukit Gelugor), சுங்கை குளுகோர் (Sungai Gelugor) போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மலேசியாவிலேயே மிகப் பழமையான மலாய்ப் பள்ளிக்கூடம் இங்குதான் உள்ளது. அதன் பெயர் சுங்கை குளுகோர் மலாய்த் தொடக்கப்பள்ளி.[6]

ஜப்பானியர்கள் ஆட்சி[தொகு]

பினாங்குத் தீவின் மிகப் பழமையான வீடமைப்பு பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் குளுகோரில், முன்பு மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்கள் கட்டிய ஆடம்பர மாளிகைகளையும் கட்டடங்களையும் இன்றும் காண முடியும். அந்தக் கட்டடங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மலாயாவை ஜப்பானியர்கள் ஆட்சி செய்த போது, இந்தக் குளுகோர் குன்றின் உச்சியிலும், குளுகோர் பொது இடங்களிலும் குற்றவாளிகளும் அரசியல் கைதிகளும் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.[7] அதனால், அங்கு இறந்தவர்களின் ஆவிகள் உலாவி வருவதாக அங்கு வாழ் மக்கள் இன்றும் நம்பி வருகின்றனர்.[8]

கம்போங் புவா பாலா[தொகு]

சுங்கவரி கிராமம் (Kampung Kastam), புவா பாலா கிராமம் (Kampung Buah Pala) போன்ற கிராமங்களும் இந்தக் குளுகோர் புறநகர்ப் பகுதியில்தான் உள்ளன. 1812 ஆம் ஆண்டு, டேவிட் பிரவுன் எனும் பிரித்தானியர் முதன்முதலாகக் குளுகோரில் குடியேறினார்.[9] கம்போங் புவா பாலா அமைந்து இருக்கும் இடம் 200 ஆண்டுகளுக்கு முன், பிரித்தானிய காலனி ஆட்சியில் டேவிட் பிரவுன் நிலச்சுவான்தாரருக்குச் சொந்தமாக இருந்தது.

அதைத் தவிர, புக்கிட் குளுகோர் பகுதியில் டேவிட் பிரவுனுக்கு ஏராளமான நிலங்கள் சொந்தமாக இருந்தன. அந்த நிலங்களில் அவர் தேங்காய், ஜாதிக்காய் முதலியன பயிரிட்டிருந்தார். இந்தத் தோட்டங்களில் ஏராளமான தமிழர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்தப் பகுதி முழுவதும் பிரவுன் எஸ்டேட் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இன்றும் அவர் பெயரில் ஓர் வீடமைப்பு பகுதியும் சில சாலைகளும் அந்தப் பகுதியில் இருக்கின்றன.

தமிழ்க் குடும்பங்கள் பாதிப்பு[தொகு]

கம்போங் புவா பாலாவிற்கு ஹாய் செப்பரல் எனும் மற்றொரு பெயரும் உண்டு. காலப் போக்கில் இந்தக் கிராமம் தமிழர்களின் மிகப் பழமையான பாரம்பரிய கிராமமானது. பினாங்கு மாநிலத்திலேயே தமிழர்களின் பாரம்பரியத்தைக் கடந்த 200 ஆண்டுகளாகப் பறைச்சாற்றி வந்த பழம்பெரும் கிராமமாகக் கருதப்பட்டது.[10]

வீடமைப்புத் திட்டங்களுக்காகக் கம்போங் புவா பாலா கிராமம் தேவைப்பட்டது. அதனால், 24 தமிழ்க் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அங்கு வாழ்ந்த தமிழர்களை வெளியேற்ற பல்வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல பிரச்னைகளுக்குப் பிறகு, 2013 ஜனவரி மாதம், புவா பாலா கிராம மக்களுக்கு, நூஸ்மெட்ரோ மேம்பாட்டு நிறுவனம், பட்டர்வர்த், தெலுக் ஆயார் தாவாரில் இரட்டை மாடி வீடுகளைக் கட்டி கொடுத்தது.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்[தொகு]

பினாங்கு மாநிலத்திலும், மலேசியாவிலும் பிரசித்தி பெற்ற மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் குளுகோர் பகுதியில்தான் அமைந்து உள்ளது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளுகோர்&oldid=3241065" இருந்து மீள்விக்கப்பட்டது