ஆயர் ஈத்தாம், பினாங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயர் ஈத்தாம்
Ayer Itam
பினாங்கு
ஆயர் ஈத்தாம் புறநகரம்
ஆயர் ஈத்தாம் புறநகரம்
ஆயர் ஈத்தாம், பினாங்கு is located in மலேசியா
ஆயர் ஈத்தாம், பினாங்கு
      ஆயர் ஈத்தாம்
ஆள்கூறுகள்: 5°24′22″N 100°17′47″E / 5.40611°N 100.29639°E / 5.40611; 100.29639
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம் வடகிழக்கு பினாங்கு தீவு
தோற்றம்1794
அரசு
 • நகராட்சிபினாங்கு தீவு மாநகராட்சி
 • மேயர்இவ் துங் சியாங்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு11500
மலேசியத் தொலைபேசி எண்+604 82
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்P
இணையதளம்www.mbpp.gov.my
ஆங்கிலோ - இந்தியன் சபோல்க் வீடு

ஆயர் ஈத்தாம், பினாங்கு (ஆங்கிலம்: Air Itam; (மலாய்: Air Itam; சீனம்: 亚依淡; ஜாவி: اءير ايتم‎) என்பது மலேசியா, பினாங்கு, வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில்; பினாங்குத் தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். பினாங்குத் தீவில் மிகவும் பிரசித்தி பெற்ற இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஜார்ஜ் டவுன் நகர மையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. (3.7 மைல்) வடமேற்கில் ஆயர் ஈத்தாம் நகர்ப்பகுதி உள்ளது. இந்தப் புறநகர்ப் பகுதி பினாங்கு உணவு வகைகளுக்கு நன்கு அறியப்பட்ட இடங்களில் ஒன்றாகும்.

மேலும், பினாங்கு மலை மற்றும் கெக் லோக் சி சீனர் கோயில் (Kek Lok Si Temple) போன்ற சில முக்கியச் சுற்றுலா இடங்களை உள்ளடக்கிய இடமாகும்.[1]

பொது[தொகு]

1786-ஆம் ஆண்டில் கேப்டன் பிரான்சிஸ் லைட் (Captain Francis Light) என்பவரால் பினாங்கு தீவு நிறுவப்பட்டது. அதன் பின்னர், 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்த ஆயர் ஈத்தாம் பகுதி உருவாக்கப்பட்டது.

பினாங்கு மலையையும் ஆயர் ஈத்தாம் பகுதியையும் விவசாயப் பகுதிகளாக மாற்றி அமைக்க அப்போதைய பிரித்தானிய அதிகாரிகள் விரும்பினார்கள். அந்த வகையில் நறுமண வாசனைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக, வேளாண்மைப் பண்ணைகளை ஆயர் ஈத்தாம் பகுதியில் நிறுவினார்கள்.

இன்றும், ஆயர் ஈத்தாம் மலைப் பகுதிகளில் பழங்கள்; காய்கறிகள் போன்ற வேளாண்மைப் பொருட்கள் உற்பத்திச் செய்யப் படுகின்றன. அங்கு விளையும் பச்சைப் பயிர்ப் பொருட்கள் ஜார்ஜ் டவுன் நகரில் உள்ள காய்கறிச் சந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் கொண்டு செல்லப் படுகின்றன.[2]

சொற்பிறப்பியல்[தொகு]

ஆயர் ஈத்தாம் ஆறு கறுப்பு நீர் கொண்ட ஆறாகும். அதனால் இந்த ஆற்றுக்கு (மலாய்: Sungai Air Itam) ஆயர் ஈத்தாம் ஆறு பெயர். அதில் இருந்து இந்த இடமும் ஆயர் ஈத்தாம் என்று பெயர் பெற்றது. 'ஆயர் ஈத்தாம்' எனும் சொற்றொடருக்கு மலாய் மொழியில் கறுப்பு நீர் என்று பொருள்.

வரலாறு[தொகு]

சூக் சிங் படுகொலைகளில் பாதிக்கப்பட்ட 800 பேருக்கு ஒரு நினைவகம்.
சீனப் பேரரசரின் அரண்மனையைப் பிரதிபலிக்கும் கட்டிடம்
ஆல் சீசன்ஸ் பிளேஸ் எனும் பினாங்கு மாநிலத்தின் முதல் பேரங்காடி

1786-ஆம் ஆண்டில் பினாங்கு தீவு நிறுவப்பட்ட கட்டத்தில், கேப்டன் பிரான்சிஸ் லைட் தலைமையிலான பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகள், விவசாய நோக்கங்களுக்காகத் தீவின் உட்புறத்தை ஆராய்ந்து சுத்தம் செய்யத் தொடங்கினார்கள்.

ஆயர் ஈத்தாம் மலைப் பகுதிகளில் மிளகு மற்றும் ஜாதிக்காய் பண்ணைகள் நிறுவப்பட்டன. அதே நேரத்தில் பினாங்கு மலையில் செம்புற்று பழ மரங்கள் நடவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.[2]

ஆயர் ஈத்தாம் மலைப் பகுதிகளில் பழத் தோட்டங்கள்[தொகு]

பிரான்சிஸ் லைட்டின் குடியிருப்புகளில் ஒன்றான ஆங்கிலோ - இந்தியன் சபோல்க் வீடும் (Suffolk House); ஆயர் ஈத்தாம் ஆறு வழிந்து செல்லும் பாதையில், ஒரு மிளகு தோட்டத்திற்குள் கட்டப்பட்டது.

19-ஆம் நூற்றாண்டு முழுவதும் ஆயர் ஈத்தாம் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் பழத் தோட்டங்கள் மற்றும் காய்கறிப் பண்ணைகள் உருவாகின. மக்கள் பெருமளவில் குடியேறினர். ஆயர் ஈத்தாம் எனும் விவசாய கிராமம் நன்கு வளர்ச்சி பெறத் தொடங்கியது.

1890-ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய புத்த கோயில்களில் ஒன்றான கெக் லோக் சி கோயிலின் கட்டுமானம் தொடங்கியது. அதன் முக்கியக் கோபுரத்தில்; சீன, சயாமிய மற்றும் பர்மிய பாணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. 1905-ஆம் ஆண்டு அந்த ஆலயம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.

பினாங்கு விலங்கியல் பூங்கா[தொகு]

ஒரு காலத்தில் மலேசியாவின் முதல் உயிரியல் பூங்காவான பினாங்கு விலங்கியல் பூங்காவின் (Penang Zoological Gardens) தாயகமாக ஆயர் ஈத்தாம் இருந்தது. 1920-களில் பா காங் (Fa Kong) எனும் பௌத்தத் துறவியால் அந்தப் பூங்கா திறக்கப்பட்டது. இருப்பினும் அதிகப் பராமரிப்புச் செலவுகள் காரணமாக இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாகவே மூடப்பட்டது.

1935-ஆம் ஆண்டு ஆயர் ஈத்தாம் பகுதியில் ஒரு பெரிய தீ விபத்து (The Great Air Itam Fire of 1935). 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாயின. அந்த நேரத்தில், ஆயர் ஈத்தாமில் இருந்த குடியிருப்புகள் பெரும்பாலும் மரத்தால் ஆனவை. அந்தத் தீவிபத்தின் காரணமாக, பின்னர் காலத்தில் ஆயர் ஈத்தாமில் செங்கல் கட்டிடங்கள் கட்டப்பட்டன.

1867-ஆம் ஆண்டு பினாங்கு கலவரம்[தொகு]

1800-ஆம் ஆண்டுகளில், பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுனில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெறுவது உண்டு. அவற்றில் இருந்து தப்பி ஓடிய அகதிகள் ஆயர் ஈத்தாம் மலைப் பகுதிகளில் மறைந்து வாழ்ந்தனர்.

எடுத்துக்காட்டாக, 1867-ஆம் ஆண்டில் நடந்த பினாங்கு கலவரம் (Penang Riots of 1867). அதில் ஜார்ஜ் டவுன் நகரில் வசித்த பலர் ஆயர் ஈத்தாமில் குடியேறினர். இருப்பினும் இரண்டாம் உலகப் போர், இன்னும் அதிக எண்ணிக்கையிலான அகதிகளை ஆயர் ஈத்தாமிற்குக் கொண்டு வந்து சேர்த்தது.

சூக் சிங் இனச் சுத்திகரிப்பு[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது, ஏகாதிபத்திய ஜப்பானிய இராணுவம் (Imperial Japanese Army) சூக் சிங் (Sook Ching purges) எனும் சுத்திகரிப்பைச் செயல்படுத்தியது. இந்த இனச் சுத்திகரிப்பு சிங்கப்பூரில் தொடங்கியது. அப்போது, சீன குடிமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். அப்படி படுகொலை நடந்த இடங்களில் ஆயர் ஈத்தாமும் ஒன்றாகும்.[3][4][5]

1950-ஆம் ஆண்டுகளில் இருந்து ஆயர் ஈத்தாம் புறநகர்ப் பகுதியின் தீவிர நகரமயமாக்கலினால் இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து உள்ளது.

அதே சமயத்தில் பினாங்குத் தீவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகவும் மாறியது. 1980-களில் ஆயர் ஈத்தாம் புறநகர்ப் பகுதியின் தென்கிழக்கில் பார்லிம் (Farlim) என்ற ஒரு புதிய நகரமும் உருவாக்கப்பட்டது.

நிலவியல்[தொகு]

பினாங்கு மலையின் சிகரத்திற்குப் பினாங்கு மலை இரயில் வழியாகச் செல்லலாம்.

பத்து லாஞ்சாங் மலை (Batu Lanchang Hill); பெனாரா மலை (Bukit Penara); மற்றும் பினாங்கு மலை (Penang Hill); ஆகிய மூன்று மலைப் பகுதிகளுக்கு இடையில் உள்ள பள்ளத்தாக்கில் ஆயர் ஈத்தாம் அமைந்துள்ளது.

ஆயர் ஈத்தாம் சாலை மற்றும் பத்து லாஞ்சாங் சாலை ஆகிய இரண்டு முக்கிய சாலைகளால், இந்த ஆயர் ஈத்தாம் புறநகர்ப்பகுதி, ஜார்ஜ் டவுன் பெருநகரத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.

வீட்டுமனைப் பகுதிகள்[தொகு]

 • பார்லிம் (Farlim)
 • தியான் டீக் வீடுமனை (Thean Teik Estate)
 • ரைபிள் ரேஞ்ச் (Rifle Range)
 • கம்போங் பாரு (Kampung Bahru)
 • கம்போங் மெலாயு (Kampung Melayu)
 • மலை இரயில்வே சாலை (Hill Railway Road)
 • ஆய் கீட் வீட்டுமனை (Hye Keat Estate)

பினாங்கு மலை இழுவை ஊர்தி[தொகு]

மலேசியாவின் ஒரே இழுவை ஊர்தி (Funicular Rail System) இரயில் அமைப்பான பினாங்கு மலை இரயில் அமைப்பிற்கும் (Penang Hill Railway) பிரபலமானது. 1920-களில் வடிவமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

இழுவை ஊர்தி என்பது வாகனங்கள் செல்ல இயலாத மலைப் பகுதிகளில்; பயன்படுத்தப்படும் ஊர்தியாகும். மலையின் மேல் தளத்தில் இருந்து கம்பிவடம் மூலம் மின் விசையால் இயக்கப் படுகிறது.

சுவிசர்லாந்து நாட்டு இரயில் பெட்டிகள்[தொகு]

பினாங்கின் மிக உயரமான மலையில் ஏறும் இந்த இழுவை ஊர்தி, முதலில் சுவிசர்லாந்து நாட்டு இரயில் பெட்டிகளுடன் பொருத்தப்பட்டு இருந்தது. 1977; 2010-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மேம்பாடுகள் செய்யப்பட்டன.

தற்போது பயன்பாட்டில் உள்ள புதிய சுவிட்சர்லாந்தில் இரயில் பெட்டிகள் 7,500 கிலோ கொள்ளளவு கொண்டவை. மலை அடிவாரத்தில் இருந்து பினாங்கு மலையின் உச்சியை ஐந்து நிமிடங்களுக்குள் அடையும் திறன் கொண்டவை.[6]

ஆயர் ஈத்தாம் காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Pasar Air Itam Laksa". Time Out Penang. http://www.timeout.com/penang/restaurants-and-cafes/pasar-air-itam-laksa. 
 2. 2.0 2.1 "PressReader.com – Connecting People Through News". www.pressreader.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
 3. "Operation Sook Ching is carried out - Singapore History". eresources.nlb.gov.sg. National Library Board. பார்க்கப்பட்ட நாள் 18 February 2022.
 4. Lee, Geok Boi (2005). The Syonan Years: Singapore Under Japanese Rule, 1942-1945. Singapore: National Archives of Singapore. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9810542909. https://www.nlb.gov.sg/biblio/12661517. பார்த்த நாள்: 18 February 2022. 
 5. Chew, Cassandra (29 June 2014). "The Rickshaw puller who saved Lee Kuan Yew | The Straits Times". www.straitstimes.com (in ஆங்கிலம்). The Straits Times. பார்க்கப்பட்ட நாள் 18 February 2022.
 6. "Penang funicular railway's six-day run to raise funds – Nation The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.

வெளி இணைப்புகள்[தொகு]

 • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Air Itam
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயர்_ஈத்தாம்,_பினாங்கு&oldid=3924557" இலிருந்து மீள்விக்கப்பட்டது