பிரான்சிஸ் லைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சிசு லைட்
Francis Light
பினாங்கு சார்ச்சு டவுனில் உள்ள கான்வாலிசு கோட்டையில் உள்ள பிரான்சிசு லைட்டின் சிலை
பிறப்பு1740
டாலிங்கு, சபோல்க், இங்கிலாந்து
இறப்பு21.10.1794
பினாங்கு, பிரித்தானிய மலாயா
பணிகாலனித்துவ அதிகாரி
அறியப்படுவதுபினாங்கை நவீன மயமாக்கல்
உறவினர்கள்மகன்: வில்லியம் லைட்
பிரான்சிசு லைட் வாழ்ந்த வீடு

பிரான்சிசு லைட் அல்லது கேப்டன் பிரான்சிசு லைட் (பிறப்பு: c.1740 - இறப்பு: 21 அக்டோபர் 1794); (ஆங்கிலம்: Captain Francis Light; மலாய்: Kapten Francis Light; சீனம்: 法蘭西斯·萊特); என்பவர் ஒரு பிரித்தானிய ஆய்வாளர். 1786-ஆம் ஆண்டில் பினாங்கு மற்றும் அதன் தலைநகரான சார்ச்சு டவுன் நகரத்தின் நிறுவனர் ஆவார். அதே வேளையில் பினாங்கில் முதல் பிரித்தானியக் குடியேற்றத்தை நிறுவியவர் என்றும் அறியப் படுகிறார்.

1759 முதல் 1763 வரை பிரித்தானிய அரச கடற்படையின் மாலுமியாகப் பணிபுரிந்தார். 1765-ஆம் ஆண்டு தொடங்கி, அவர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில் ஒரு வணிகராகப் பணியாற்றினார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

பினாங்கில் பிரான்சிசு லைட் நினைவுச் சின்னம்

இங்கிலாந்தின் சபோல்க் (Suffolk), டாலிங்கு (Dallinghoo) எனும் இடத்தில் 1740 திசம்பர் 15-ஆம் தேதி பிறந்தவர். தாயாரின் பெயர் மேரி லைட் (Mary Light). சின்ன வயதிலேயே வில்லியம் நாகுஸ் எனும் குடும்பத்தாருக்கு தத்து கொடுக்கப் பட்டார். பின்னர் ஊட்பிரிட்சு இலக்கணப் பள்ளியில் (Woodbridge Grammar School) பயின்றார்.[1]

1754 பெப்ரவரி மாதம், எச்.எம்.எசு. மார்சு (HMS Mars) எனும் பிரித்தானிய அரசக் கடற்படைக் கப்பலில் ஒரு பணியாளராக தன் சேவையைத் தொடங்கினார்.[1] அப்போது அவருக்கு வயது 17. அதன் பின்னர் 1759-ஆம் ஆண்டில் (வயது 19) எச்.எம்.எசு. கேப்டன் (HMS Captain) எனும் கப்பலில் பயிற்சி பெற்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு புதிதாகச் சேவைக்கு வந்த எச்.எம்.எசு. டிராகன் (HMS Dragon) எனும் கப்பலுக்கு மாற்றப் பட்டார்.[2] 1763-இல் பிரித்தானியக் கடல் படையில் தன் சேவையை முடித்துக் கொண்டார்.[3] அதற்கு முன்னர் கொஞ்ச காலம் எச்.எம்.எசு. ஆரோகண்டு (HMS Arrogant) எனும் கப்பலிலும் சேவை செய்தார்.

இங்கிலாந்து பிரான்சு நெருக்கடிகள்[தொகு]

ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் இடையே நெப்போலியன் போர் (Napoleonic War). அதுவே தென்கிழக்கு ஆசியாவில் பிரான்சு நாட்டுடன் போட்டியிட ஒரு புதிய வணிகத் தளத்தைக் கண்டுபிடிக்க ஆங்கிலேயர்களைக் கட்டாயப் படுத்தியது.

பினாங்கு ஒரு புதிய பிரித்தானியத் துறைமுகமாக அமைவதற்கு பொருத்தமானது என்று கண்டறிந்த ஆங்கிலேயர்கள், பினாங்கில் ஒரு தளத்தை நிறுவுவதற்கு திட்டம் வகுத்தார்கள். கெடாவின் சுல்தான் முகரம் சாவிடம் (Sultan Mukarram Shah) ஒப்புதலைப் பெற பிரான்சிசு லைட்டை கெடாவிற்கு அனுப்பினார்கள்.

கெடாவிற்கு தற்காப்பு உதவிகள்[தொகு]

கெடா சுல்தானிடம் இருந்து பினாங்கைப் பெற்றுக் கொள்வதில் பிரான்சிசு லைட் வெற்றி பெற்றார். அதற்குப் பதிலாக, கெடா இராணுவத்திற்கு தற்காப்பு உதவியின் அடிப்படையில் ஆங்கிலேயர்கள் உதவுவார்கள் என்றும் உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி உதவி செய்யவில்லை.

பினாங்கு தீவு, தொடக்கத்தில் கெடா மாநிலத்துடன் இணைந்து இருந்தது. 1786, ஆகத்து 11-இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பில் பிரான்சிசு லைட் பினாங்கில் காலடி வைத்த போது, அதற்கு ஐக்கிய இராச்சியத்தின், நான்காம் சார்ச்சு நினைவாக "வேல்சு இளவரசர் தீவு" எனப் பெயரிட்டார்.

பிரான்சிசு லைட் வாக்குறுதி[தொகு]

அதன் பின்னர் பிரான்சிசு லைட், பிரித்தானிய இந்தியா அரசுக்கு பினாங்கைக் கொடுத்தார். இதன் மூலம் சியாம் மற்றும் பர்மிய இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து கெடாவைக் காப்பாற்றுவதாகக் கெடா சுல்தானுக்கு பிரான்சிசு லைட் வாக்குறுதி அளித்து இருந்தார்.

தொடக்கக் காலத்தில் பினாங்குத் தீவில் குடியேறியவர்கள் மலேரியா நோய் காரணமாக இறந்தார்கள், இதனால் பினாங்கு "வெள்ளை மனிதனின் கல்லறை" என அழைக்கப் படுகிறது[3].

சயாமியத் தாக்குதல்[தொகு]

இதற்கு இடையில் சியாமியர்கள் கெடாவைத் தாக்கினார்கள். அப்போது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தினர் கெடாவுக்கு உதவி வழங்க முன் வரவில்லை. அதனால், கெடா சுல்தான் பினாங்குத் தீவை 1790-ஆம் ஆண்டில் கைப்பற்ற முனைந்தார். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

பின்னர், ஓர் ஆண்டுக்கு 6,000 எசுப்பானிய டாலர்கள் வரிப் பணம் கட்டச் சொல்லி, கெடா சுல்தான் பினாங்குத் தீவை ஆங்கிலேயர்களிடமே கொடுத்தார்.

செபராங் பிறை[தொகு]

1800 ஆம் ஆண்டில் மலாயாத் தீபகற்பத்தின் பெரும் பரப்பளைவைக் கொண்ட செபராங் பிறை பினாங்குத் தீவுடன் இணைக்கப்பட்டது. அதற்கான வரிப்பணம் 10,000 டாலர்களாக அதிகரித்தது.

இன்று வரையில் அந்த ரிங்கிட் தொகை 10,000, பினாங்கு அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் கெடா மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.

1826-ஆம் ஆண்டில், பினாங்கு மாநிலம் மலாக்கா, சிங்கப்பூருடன் சேர்க்கப் பட்டது. இந்தியாவின் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆட்சியின் நீரிணைக் குடியேற்றங்கள் என்ற அமைப்பின் கீழ் கொண்டு வரப் பட்டது.

மலாயா ஒன்றியம்[தொகு]

பின்னர் 1867-ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1946-ஆம் ஆண்டில் இந்த நிலப் பகுதிகள் மலாயா ஒன்றியத்தில் இணைக்கப் பட்டன.

பின்னர் 1948-ஆம் ஆண்டில் மலாயாக் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டது. மலாயாக் கூட்டமைப்பு 1957-ஆம் ஆண்டில் விடுதலை பெற்று, 1963-ஆம் ஆண்டில் மலேசியா ஆனது.

பிரான்சிசு லைட் இறுதிக்காலம்[தொகு]

பிரான்சிசு லைட் கல்லறை

1794 அக்டோபர் மாதம்; பிரான்சிசு லைட் இறக்கும் வரையில் பினாங்குத் தீவின் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். 1789-இல் பினாங்குத் தீவின் மக்கள் தொகை ஏறக்குறைய 10,000. ஆறே ஆண்டுகளில் 1795-இல் அதன் மக்கள் தொகை 20,000-ஆக உயர்ந்தது.

அவரின் செயல்களின் மூலமாக அவர் ஒரு நேர்மையான; மரியாதைக்குரிய மனிதர் என்பது தெரிய வருகிறது. அவர் உள்ளூர் மொழிகளைப் பேசினார். மற்றும் ஓரளவிற்கு உள்ளூர் உடைகளை அணிந்து கொண்டார். பினாங்கு வாழ் மக்களின் அன்பைப் பெற்றார்.[25]

மலேரியா நோயினால் இறப்பு[தொகு]

மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டு 1794-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி பிரான்சிசு லைட் காலமானார். அவரின் உடல் சார்ச்சு டவுனில் உள்ள நார்தம் சாலையில் (Northam Road) உள்ள பழைய புராட்டசுடண்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. நார்தம் சாலை இப்போது சுல்தான் அகமது சா சாலை என்று அழைக்கப் படுகிறது.

லைட் சாலை (Light Street) என்று அவருடைய பெயரிலேயே, பினாங்கில் ஒரு சாலைக்கும் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. லைட் சாலை கன்வெண்ட் (Convent Light Street) எனும் பெயரில் ஒரு பெண்கள் கான்வெண்ட் பள்ளியும் உள்ளது. பினாங்கின் பழமையான பெண்கள் பள்ளி. 1852-இல் நிறுவப்பட்டது.

மார்டினா உரோசல்சு[தொகு]

பினாங்கு சார்ச்சு டவுன் நகரில் பிரான்சிசு லைட் சிலை - 2

பிரான்சிசு லைட்டின் மனைவியின் பெயர் மார்டினா உரோசல்சு (Martina Rozells). இவருடைய தோற்றம் மற்றும் நிலை விவாதத்திற்கு உட்பட்டது. இவரை ஒரு சாரார் போர்த்துகீசியர் என்று சொல்கிறார்கள். இன்னொரு சாரார் பிரெஞ்சுக்காரர் என்று சொல்கிறார்கள்.[4]

மற்றொரு சாரார் சயாமிய பெண்மணி என்கிறார்கள். அடுத்து மேலும் ஒரு தரப்பினர் மலாய்ப் பெண்மணி என்கிறார்கள். இவரின் தோற்றம் பற்றி பலவிதமான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இவர் ஒரு சயாமிய இளவரசியாராக இருக்கலாம் என்றும் கருத்து சொல்லப் படுகிறது.[5][6]

பிரான்சிசு லைட்டிற்கு மூன்று மகள்கள்; இரண்டு மகன்கள். சார்ச்சு டவுனுக்கு மேற்கே நான்கு 4 மைல் (6.4 கிமீ) தொலைவில் உள்ள சபோல்க் தோட்டத்தில் கட்டப்பட்ட வீட்டில் பிரான்சிசு லைட்டும் அவரின் குடும்பத்தினரும் வசித்து வந்தனர். அவர்களின் வீடு, ஒரு மிளகு தோட்டத்திற்குள் கட்டப்பட்ட "எளிய மாளிகை" என்றும் சொல்லப் படுகிறது.

மேலும் படிக்க[தொகு]

  • Sandhu, Kernial Singh (1969), Indians in Malaya : some aspects of their immigration and settlement (1786-1957), Cambridge University Press, ISBN 978-0-521-07274-8

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Light, Francis (The Light Letters)". AIM25. Part of The Malay Documents now held by School of Oriental and African Studies. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.{{cite web}}: CS1 maint: others (link)
  2. Clodd, Harold Parker) (1948), Malaya's first British pioneer: the life of Francis Light, Luzac, p. 1, ISBN 978-0-375-42750-3
  3. Eliot, Joshua; Bickersteth, Jane. Malaysia Handbook: The Travel Guide. Footprint Travel Guides. 
  4. Firaci, Biagio (10 June 2014). "Sir Thomas Stamford Raffles and the British Colonization of Singapore among Penang, Melaka and Bencoonen". Archived from the original on 28 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 28 October 2019.
  5. "The light of his life Francis Light's contributions are fondly remembered but not those of his wife". Star Online. 6 April 2013.
  6. De Souza, Poppy (4 April 2016). "I was a Siamese Princess: Reconstructing colonial (her)stories". Poppy de Souza.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்_லைட்&oldid=3596961" இலிருந்து மீள்விக்கப்பட்டது