பினாங்கு பாலம்

ஆள்கூறுகள்: 5°21′14″N 100°21′09″E / 5.35389°N 100.35250°E / 5.35389; 100.35250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினாங்கு பாலம்
Penang Bridge
Jambatan Pulau Pinang
பினாங்கு பாலம்
போக்குவரத்து வாகனங்கள்
தாண்டுவது பினாங்கு நீரிணை; மலாக்கா நீரிணை‎
பராமரிப்பு பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம்
வடிவமைப்பாளர் மலேசிய அரசாங்கம்
ஹூண்டாய் பொறியியல் கட்டுமான நிறுவனம்
வடிவமைப்பு கேபிள் பாதை பாலம்
மொத்த நீளம் 13.5 கிமீ
அதிகூடிய அகல்வு 225 மீ
கட்டியவர் ஹூண்டாய் பொறியியல் கட்டுமான நிறுவனம்
யூ. இ. ஏம் குழு
கட்டுமானம் தொடங்கிய தேதி 1982
கட்டுமானம் முடிந்த தேதி 1985
திறப்பு நாள் ஆகஸ்ட் 3, 1985
அமைவு 5°21′14″N 100°21′09″E / 5.35389°N 100.35250°E / 5.35389; 100.35250
Map
பினாங்கு

பினாங்கு பாலம் (மலாய் மொழி: Jambatan Pulau Pinang; ஆங்கிலம்: Penang Bridge; சீனம்: 槟威大桥) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு நீண்ட பாலம் ஆகும். இந்தப் பாலம் தீபகற்ப மலேசியா நிலப் பகுதியில் இருக்கும் பிறை நகரத்தையும்; மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரையும் இணைக்கிறது.[1]

பினாங்கு பாலம், 1985 செப்டம்பர் 14-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகப் போக்குவரத்திற்கு திறக்கப் பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும். இந்தப் பாலம் மலேசியாவில் இரண்டாவது நீளமான பாலமாகவும்; மொத்த நீளத்தின் அடிப்படையில் தென்கிழக்கு ஆசியாவில் ஐந்தாவது நீளமான பாலமாகவும் உள்ளது.[2]

வரலாறு[தொகு]

1985-ஆம் ஆன்டுக்கு முன்னர், பட்டர்வொர்த் நகரத்திற்கும்; ஜோர்ஜ் டவுன் மாநகரத்திற்கும் இடையே நீர்வழிப் போக்குவரத்து அரசுக்கு சொந்தமான பினாங்கு படகுச் சேவையை (Penang Ferry Service) மட்டுமே சார்ந்து இருந்தது.

இந்தப் படகுச் சேவை 1894-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தச் சேவைக்கு ஆறு படகுகள் பயன்படுத்தப்பட்டன. அதுவே மலேசியாவின் பழமையான படகு சேவை ஆகும். பின் அந்தச் சேவைக்குப் பதிலாக பினாங்கு பாலம் அமைக்க மலேசிய மத்திய அரசு பரிந்துரை செய்தது.[3]

அகலப்படுத்தும் திட்டம்[தொகு]

தொடக்கத்தில் பாலம் கட்டப்பட்டபோது, பாலத்தின் நடுப்பாகம் மட்டும் ஆறு வழிகளைக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் மீதமுள்ள பாலம் நான்கு வழிகளைக் கொண்டிருந்தது.

முழு பாலத்தையும் ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டம் ஜனவரி 2008-இல் தொடங்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு இறுதியில் அத்திட்டம் நிறைவு அடைந்தது.

வரலாறு[தொகு]

 • 1970 களின் ஆரம்பத்தில் : நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கும் பாலம் அமைக்க யோசனை.
 • 1970 களின் பிற்பகுதியில் : மலேசிய 3ஆம் பிரதம மந்திரி துன் உசேன் ஓன் காலத்தில் பினாங்கு பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
 • 1981 ஜூலை 23 : பொதுப்பணித்துறை அமைச்சர் துன் ச. சாமிவேலு பினாங்கு பாலம், கேபிள் பாதை பாலமாகக் கட்டப்படும் என்று அறிவித்தார்.
 • 1982 : பினாங்கு பாலம் கட்டுமான பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
 • 3 ஆகஸ்ட் 1985 : மலேசிய 4வது பிரதம மந்திரி துன் டாக்டர் மகாதீர் பின் முகமது பினாங்கு பாலத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
 • 14 செப்டம்பர் 1985 : பினாங்கு பாலம் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.

விவரக் குறிப்புகள்[தொகு]

 • ஒட்டுமொத்த நீளம் : 13.5 கி.மீ
 • நீளம் தண்ணீர் மீது : 8.4 கி.மீ.
 • முதன்மை இடைவெளி : 225 மீ
 • தண்ணீர் மேலே உயரம்  : 33 மீ
 • வாகனப் பாதைகள் எண்ணிக்கை : 3 (ஒவ்வொரு திசையிலும்)
 • ஒட்டுமொத்தச் செலவு : ரிங்கிட் 4.5 பில்லியன்
 • பாலத்தில் உச்ச வேக வரம்பு : 80 கி.மீ. / மணிநேரம்

சுங்கச் சாவடிகள்[தொகு]

1985-ஆம் ஆண்டு தொடங்கி, பினாங்கு பாலம் ஒரு கட்டண பாலமாக உள்ளது. தீபகற்ப பெருநிலத்தில் இருந்து பினாங்குத் தீவை நோக்கிப் பயணிக்கும் போது ஒருவழிக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பினாங்குத் தீவில் இருந்து தீபகற்ப பெருநிலத்திற்குச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படுவது இல்லை.

1994 முதல், பினாங்கு பாலம் பினாங்கு பாலம் நிறுவனம் (Penang Bridge Sdn Bhd) என்ற தனியார் நிறுவனத்தால் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்போது இந்த நிறுவனம் பிளஸ் மலேசியா (PLUS Malaysia Berhad) என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. 1 ஜனவரி 2019 முதல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டது.[4]

மின்னியல் கட்டணம்[தொகு]

2015-ஆம் ஆண்டில் தீபகற்ப பெருநிலப் பகுதியில் உள்ள பிறை சுங்கச் சாவடியில் கட்டணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் 2015 செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி மின்னியல் கட்டண முறைமை அமலுக்கு வந்தது. கீழ்க்காணும் தொட்டு செல்; திறன் அட்டைகள் மூலமாகக் கட்டணம் வசூல் செய்யப் படுகிறது.

பினாங்கு பாலம் காட்சியகம்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாங்கு_பாலம்&oldid=3515689" இருந்து மீள்விக்கப்பட்டது