மலேசிய அரசியலமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய அரசியலமைப்பு
Federal Constitution of Malaysia
2020 மறுபதிப்பு
2020 மறுபதிப்பு
இடம் கோலாலம்பூர்
வரைவாளர் ரீட் ஆணையம்; கோபோல்டு ஆணையம் பிரதிநிதிகள்
27 ஆகஸ்டு 1957
நோக்கம் 1957 மலாயா சுதந்திரம்; 1963 மலேசியா உருவாக்கம்

மலேசிய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of Malaysia; மலாய்: Perlembagaan Malaysia;) என்பது மலேசியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். 1957-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. மொத்தம் 183 சட்டப் பிரிவுக் கூறுகளைக் கொண்டுள்ளது.[1] மலேசிய அரசியலமைப்பு என்பது ஓர் உச்சக்கட்ட சட்ட ஆவணமாகும்.

 1. மலாயா ஒப்பந்தம் 1948
 2. சுதந்திர அரசியலமைப்பு 1957

ஆகிய இரண்டு ஆவணங்களும் ஏற்கனவே மலாயாவில் உருவாக்கப்பட்ட சட்ட ஆவணங்கங்களாகும்.

மேலே குறிப்பிடப்பட்ட முந்தைய சட்ட ஆவணங்களைச் சார்ந்த நிலையில் தான் புதிய மலேசிய அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது.

தொடக்கத்தில் மலாயா கூட்டமைப்பு (ஆங்கிலம்: Federation of Malaya; மலாய்: Persekutuan Tanah Melayu;) என்று அழைக்கப்பட்டது. சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயா மாநிலங்கள், கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இணைந்த போது, ’மலேசியா’ எனும் பெயர் உருவானது.[2]

பொது[தொகு]

மலேசிய அரசியலமைப்பு மலேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியலமைப்பு முடியாட்சியாக நிலை நிறுத்துகின்றது. அதே வேளையில் யாங் டி பெர்துவான் அகோங் எனும் மாமன்னர் அவர்களை மலேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் உறுதிபடுத்துகின்றது.[3]

அரசாங்கத்தின் மூன்று முக்கிய கிளைகளை நிறுவுவதற்கும்; முறையாகச் செயல்படுவதற்கும் மலேசிய அரசியலமைப்பு வழி வகுக்கின்றது. அந்த மூன்று கிளைகள்:

முதலாவது: டேவான் ராக்யாட் எனப்படும் மக்களவை; டேவான் நெகாரா எனப்படும் செனட்டர் அவை; ஆகிய இரு அவைகளைக் கொண்டுள்ள நாடாளுமன்றம்,

இரண்டாவது: பிரதமர் மற்றும் அவரின் அமைச்சரவை தலைமையிலான நிர்வாகப் பிரிவு.

மூன்றாவது: கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமையிலான நீதித்துறைப் பிரிவு.[4]

வரலாறு[தொகு]

அரசியலமைப்பு மாநாடு: 1956 ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கி 1956 பிப்ரவரி 6-ஆம் தேதி வரை இங்கிலாந்து, லண்டனில் ஓர் அரசியலமைப்பு மாநாடு நடைபெற்றது.

அதில் மலாயா கூட்டமைப்பின் முதல்வர் துங்கு அப்துல் ரகுமான்; மற்றும் மூன்று அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் மலாயாவின் அப்போதைய பிரித்தானிய உயர் ஆணையர் மற்றும் அவரின் ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.[5]

ரீட் ஆணையம்[தொகு]

மலாயாவை சுயமாகச் சுதந்திரமாக ஆளும் ஒரு கூட்டமைப்புக்கு ஓர் அரசியலமைப்பை வகுக்க வேண்டும்; அதற்கு ஓர் ஆணையத்தை நியமிக்க வேண்டும்; என அந்த அரசியலமைப்பு மாநாடு முன்மொழிந்தது.[6] அந்த முன்மொழிவை இரண்டாம் எலிசபெத் ராணியாரும்; மலாயா மலாய் ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.

அத்தகைய ஓர் உடன்படிக்கைக்கு இணங்க, காமன்வெல்த் நாடுகளின் அரசியலமைப்பு வல்லுநர்களைக் கொண்டு ஓர் ஆணையம் அமைக்கப் பட்டது. அதற்குப் பெயர் ரீட் ஆணையம். புதிய அரசியலமைப்பிற்குப் பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்காக வில்லியம் ரீட் (Lord William Reid) என்பவரின் தலைமையில் அந்த ஆணயம் அமைக்கப் பட்டது.

ரீட் ஆணையத்தின் அறிக்கை 11 பிப்ரவரி 1957-இல் தயாரித்து முடிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு பணிக்குழு; மலாயா ஆட்சியாளர்களின் சம்மேளனம்; மலாயா கூட்டமைப்பு அரசாங்கம்; ஆகிய மூன்று தரப்பினரால் ரீட் ஆணையத்தின் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் இவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மலாயாவின் அரசியலமைப்பு இயற்றப்பட்டது.[7]

அரசியலமைப்பு[தொகு]

அரசியலமைப்புச் சட்டம், 1957 ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஆனாலும் மலாயாவிற்கு முறையான சுதந்திரம் 1957 ஆகஸ்ட் 31-ஆம் தேதி தான் கிடைக்கப் பெற்றது.[8]

1963-ஆம் ஆண்டில் சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை மலாயா கூட்டமைப்பில் கூடுதல் உறுப்பு நாடுகளாக ஏற்றுக் கொள்வதற்கும்; மலேசியா ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்கும்; அந்த அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டது. அந்தத் திருத்தத்தின் வழி மலாயா கூட்டமைப்பின் பெயர் "மலேசியா" என்று மாற்றம் செய்யப் பட்டது.[9]

கட்டமைப்பு[தொகு]

மலேசிய அரசியலமைப்பு, அதன் 2010 நவம்பர் 1-ஆம் தேதி வடிவத்தில், 230 தொகுப்புகள்; 13 அட்டவணைகள்; 57 திருத்தங்கள்; 15 பகுதிகளைக் கட்டமைப்பாகக் கொண்டுள்ளது.

பாகங்கள்[தொகு]

 • பகுதி I - மாநிலங்கள், மதம் மற்றும் கூட்டமைப்பின் சட்டம்
  (Part IThe States, Religion and Law of the Federation)
 • பகுதி II - அடிப்படைச் சுதந்திரங்கள்
  (Part IIFundamental Liberties)
 • பகுதி III - மலேசியக் குடியுரிமை
  (Part IIIMalaysian nationality law; Citizenship)
 • பகுதி IV - கூட்டமைப்பு
  (Part IVThe Federation)
 • பகுதி V - மாநிலங்கள்
  (Part VThe States)
 • பகுதி VI - கூட்டமைப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள்
  (Part VIRelations Between the Federation and the States)
 • பகுதி VII - நிதி ஒதுக்கீடுகள்
  (Part VIIFinancial Provisions)
 • பகுதி VIII - மலேசியத் தேர்தல்கள்
  (Part VIIIElections in Malaysia)
 • பகுதி IX - நீதித்துறை
  (Part IXThe Judiciary)
 • பகுதி X - மலேசியாவில் பொதுச் சேவைகள்
  (Part XCivil Service in Malaysia|Public Services)
 • பகுதி XI - பொது; மற்றும் அவசரக்கால அதிகாரங்களுக்குப் பாதகமான செயல்கள்; மற்றும் குற்றங்களுக்கு எதிரான சிறப்பு அதிகாரங்கள்; திட்டமிட்ட வன்முறைகள்
  (Part XI(Special Powers Against Subversion, Organised Violence, and Acts and Crimes Prejudicial to the Public and Emergency Powers)
 • பகுதி XII - பொது
  (Part XII(General and Miscellaneous)
 • பகுதி XIIA - சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான கூடுதல் பாதுகாப்புகள் (Additional Protections for States of Sabah and Sarawak)
 • பகுதி XIII - தற்காலிக மற்றும் இடைநிலை ஏற்பாடுகள்
  (Part XIII(Temporary and Transitional Provisions)
 • பகுதி XIV - ஆட்சியாளர்களின் இறையாண்மைக்கான பாதுகாப்பு
  (Part XIV(Saving for Rulers' Sovereignty, etc.)
 • பகுதி XV - யாங் டி பெர்துவான் அகோங் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான செயல்முறைகள்
  (Part XV(Proceedings Against the Yang di-Pertuan Agong and the Rulers)

அட்டவணைகள்[தொகு]

அரசியலமைப்பின் அட்டவணைகளின் பட்டியல்:

 • முதல் அட்டவணை - First Schedule [Articles 18(1), 19(9)] – பதிவு அல்லது இயற்கை மயமாக்கலுக்கான விண்ணப்பங்களின் உறுதிமொழி
  (Oath of Applications for Registration or Naturalization)
 • இரண்டாம் அட்டவணை - Second Schedule [Article 39] – மலேசியத் தினத்திற்கு முன்; மலேசியத் தினத்தில்; அல்லது மலேசியத் தினத்திற்குப் பிறகு பிறந்த நபர்களின்; சட்டத்தின் செயல்பாட்டின் மூலம் குடியுரிமை மற்றும் குடியுரிமை தொடர்பான துணை விதிகள்
  (Citizenship by operation of law of persons born before, on or after Malaysia Day and supplementary provisions relating to citizenship)
 • மூன்றாவது அட்டவணை - Third Schedule [Articles 32 and 33] - யாங் டி பெர்துவான் அகோங் மற்றும் துணை யாங் டி பெர்துவான் அகோங் தேர்தல்
  (Election of Yang di-Pertuan Agong and Timbalan Yang di-Pertuan Agong)
 • நான்காவது அட்டவணை - Fourth Schedule [Article 37] - யாங் டி பெர்துவான் அகோங் மற்றும் துணை யாங் டி பெர்துவான் அகோங் பதவிப் பிரமாணங்கள்
  (Oaths of Office of Yang di-Pertuan Agong and Timbalan Yang di-Pertuan Agong)
 • ஐந்தாவது அட்டவணை - Fifth Schedule [Article 38(1)] – ஆட்சியாளர்களின் மாநாடு
  (The Conference of Rulers)
 • ஆறாவது அட்டவணை - Sixth Schedule [Articles 43(6), 43B(4), 57(1A)(a), 59(1), 124, 142(6)] – உறுதிமொழிகள் மற்றும் உறுதிமொழிகளின் படிவங்கள்
  (Forms of Oaths and Affirmations)
 • ஏழாவது அட்டவணை - Seventh Schedule [Article 45] - செனட்டர்களின் தேர்தல்
  (Election of Senators)
 • எட்டாவது அட்டவணை - Eighth Schedule [Article 71] - மாநில அரசியலமைப்புகளில் சேர்க்கப்பட வேண்டிய விதிகள்
  (Provisions to be inserted in State Constitutions)
 • ஒன்பதாவது அட்டவணை - Ninth Schedule [Articles 74, 77] – சட்டமன்றப் பட்டியல்கள்
  (Legislative Lists)
 • பத்தாவது அட்டவணை - Tenth Schedule [Articles 109, 112C, 161C(3)] – மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியங்கள் மற்றும் வருவாய் ஆதாரங்கள்
  (Grants and Sources of Revenue assigned to States)
 • பதினொன்றாவது அட்டவணை - Eleventh Schedule [Article 160(1)] – விளக்கம் மற்றும் பொது உட்பிரிவுகள் கட்டளைச் சட்டம் 1948 (மலாயன் யூனியன் ஆணை எண். 7, 1948), அரசியலமைப்பின் விளக்கத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது
  (Provisions of the Interpretation and General Clauses Ordinance 1948 (Malayan Union Ordinance No. 7 of 1948), Applied for Interpretation of the Constitution)
 • பன்னிரண்டாவது அட்டவணை - Twelfth Schedule - 1948-ஆம் ஆண்டு மலாயா ஒப்பந்தக் கூட்டமைப்பு விதிகள், மெர்டேகா நாளுக்குப் பிறகு சட்டம் இயற்றும் குழுவிற்குப் பயன்படுத்தப்பட்டது (நிறுத்தப்பட்டது)
  (Provisions of the Federation of Malaya Agreement, 1948 as Applied to the Legislative Council after Merdeka Day (Repealed)
 • பதின்மூன்றாவது அட்டவணை- Thirteenth Schedule [Articles 113, 116, 117] – தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான விதிகள்
  (Provisions relating to delimitation of Constituencies)

அடிப்படை சுதந்திரங்கள்[தொகு]

மலேசியாவில் அடிப்படை சுதந்திரங்கள், அரசியலமைப்பு பிரிவுகள் 5 முதல் 13 வரை, பின்வரும் தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டு உள்ளன:

ஒரு நபரின் சுதந்திரம்; அடிமைத்தனம்; மற்றும் கட்டாய உழைப்புத் தடை; பின்னோக்கிய குற்றவியல் சட்டங்கள் (retrospective criminal laws); மீண்டும் மீண்டும் விசாரணைகள்; சமத்துவம்; நாடு கடத்தப் படுவதைத் தடை செய்தல் (prohibition of banishment); நடமாட்டச் சுதந்திரம்; பேச்சு சுதந்திரம்; ஒன்றுகூடல் சுதந்திரம்; மதச் சுதந்திரம்; கல்வி தொடர்பான உரிமைகள்; மற்றும் சொத்து உரிமைகள்.

இந்தச் சுதந்திரங்கள் மற்றும் உரிமைகளில் சில வரம்புகள் அல்லது விதிவிலக்குகளுக்கு உட்பட்டவை. மற்றும் குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும் சில சுதந்திரங்களும் உள்ளன. (எடுத்துக்காட்டாக, பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம்).

பிரிவு 5 – வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை[தொகு]

(Article 5 – Right to Life and Liberty)
பிரிவு 5 - பல அடிப்படை மனித உரிமைகளை உள்ளடக்கியது:

 1. சட்டத்திற்கு உட்பட்டதைத் தவிர, மற்றபடி எந்த ஒரு நபரின் உயிரையும் அல்லது அவரின் தனிப்பட்ட உரிமையையும் பறிக்க முடியாது.
  (No person may be deprived of life or personal liberty except in accordance with law.)
 1. சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டு உள்ள ஒரு நபர் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப் படலாம் (ஆட்கொணர்வு மனு உரிமை).
  (A person who is unlawfully detained may be released by the High Court (right of habeas corpus)
 1. ஒருவர் கைது செய்யப் பட்டதற்கான காரணங்களைத் தெரிவிக்கவும்; அவர் விரும்பும் வழக்கறிஞரால் சட்டப் பூர்வமாகப் பிரதிநிதித்துவப் படுத்தப் படவும்; அவருக்கு உரிமை உண்டு.
  (A person has the right to be informed of the reasons of his arrest and to be legally represented by a lawyer of his choice.)
 1. மாஜிஸ்திரேட் அனுமதியின்றி ஒருவரை 24 மணி நேரத்திற்கு மேல் கைது செய்யக் கூடாது.
  (A person may not be arrested for more than 24 hours without a magistrate's permission.)

பிரிவு 6 – அடிமைத்தனம் இல்லை[தொகு]

(Article 6 – No Slavery)
எந்த ஒரு நபரையும் அடிமைத் தனத்தில் வைக்கக் கூடாது என்று பிரிவு 6 கூறுகிறது. அனைத்து வகையான கட்டாய உழைப்பும் தடைசெய்யப் படுகிறது.

ஆனால் தேசிய சேவை சட்டம் 1952 போன்ற கூட்டாட்சி சட்டம், தேசிய நோக்கங்களுக்காகக் கட்டாயச் சேவையை வழங்கலாம். நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் போது ஒருவர் செய்யும் வேலை கட்டாய உழைப்பு அல்ல.

பிரிவு 7 – பின்னோக்கிய குற்றவியல் சட்டங்கள்; தண்டனையில் அதிகரிப்பு; மீண்டும் குற்றவியல் விசாரணைகளை[தொகு]

(Article 7 – No Retrospective Criminal Laws or Increases in Punishment and no Repetition of Criminal Trials)
குற்றவியல் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளில், இந்தப் பிரிவு பின்வரும் பாதுகாப்புகளை வழங்குகிறது:

 • சட்டத்தால் தண்டிக்கப் பட முடியாத ஒரு செயலுக்காக அல்லது ஒரு தவறுக்காக எந்த நபரும் தண்டிக்கப்பட மாட்டார்.
 • எந்த ஒரு நபரும் ஒரு குற்றத்திற்காக, அது செய்யப்பட்ட நேரத்தில், சட்டத்தால் பரிந்துரைக்கப் பட்டதை விட பெரிய தண்டனையை அனுபவிக்கக் கூடாது.
 • ஒரு குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நபர், அல்லது தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர், நீதிமன்றத்தால் மறு விசாரணைக்கு உத்தரவிடப் பட்டால் தவிர, அதே குற்றத்திற்காக மீண்டும் விசாரிக்கப்பட மாட்டார்.
 • * (பின்னோக்கிய குற்றவியல் சட்டங்கள்: (Retrospective Criminal Laws)

பிரிவு 8 – சமத்துவம்[தொகு]

(Article 8 – Equality)
சட்டப் பிரிவு (1)-இன் பிரிவு 8: சட்டத்தின் முன் அனைத்து நபர்களும் சமம்; மற்றும் அவர்களின் சமமான பாதுகாப்பிற்கும் உரிமை வழங்குகிறது.

சட்டப் பிரிவு (2): “இந்த அரசியலமைப்பால் வெளிப்படையாக அங்கீகரிக்கப் பட்டவை தவிர, குடிமக்களுக்கு எதிராக மதம், இனம், வம்சாவளி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தச் சட்டத்திலும் அல்லது எந்த ஓர் அலுவலகம் அல்லது வேலை வாய்ப்பின் கீழ் பணி அமர்த்தப் படுவதிலும் பாகுபாடு இருக்கக் கூடாது.

சிறப்பு நிலைகள் பாதுகாப்பு[தொகு]

பொது அதிகாரம் அல்லது சொத்தைக் கையகப் படுத்துதல்; சொத்தை வைத்து இருப்பது; அல்லது அகற்றுவது; அல்லது எந்த ஒரு வணிகம், தொழில், அல்லது வேலை வாய்ப்பை நிறுவுதல்; அல்லது செயல் படுத்துதல்; இவை தொடர்பான எந்த ஒரு சட்டத்தின் நிர்வாகத்திலும் பாகுபாடு இருக்கக் கூடாது.

அரசியலமைப்பின் கீழ் வெளிப்படையாக அனுமதிக்கப்படும் விதிவிலக்குகளில், தீபகற்ப மலேசியாவின் மலாய்க்காரர்கள் மற்றும் சபா மற்றும் சரவாக் பழங்குடியினருக்கான சிறப்பு நிலையைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளும் அடங்கும். (மலேசிய அரசியலமைப்பு பிரிவு 153 - Article 153 of the Constitution of Malaysia).

பிரிவு 9 – நாடு கடத்தல் தடை; நடமாடும் உரிமை[தொகு]

(Article 9 – Prohibition of Banishment and Freedom of Movement)

இந்தப் பிரிவு மலேசிய குடிமக்களை நாட்டில் இருந்து வெளியேற்றப் படாமல் பாதுகாக்கப் படுவதை உறுதி செய்கிறது. கூட்டமைப்பு நிலப் பகுதிகளில் முழுச் சுதந்திரமாக நடமாட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்பதையும் வலியுறுத்துகின்றது.

ஆனாலும் தீபகற்ப மலேசியா குடிமக்கள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்குச் செல்வதற்கு நாடாளுமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

பிரிவு 10 – பேச்சு உரிமை, ஒன்றுகூடல் மற்றும் சங்கம்[தொகு]

(Article 10 – Freedom of Speech, Assembly and Association)

மேலும் காண்க: 13 மே இனக்கலவரம்; லாலாங் நடவடிக்கை

பிரிவு 10(1): ஒவ்வொரு மலேசிய குடிமகனுக்கும் பேச்சு சுதந்திரம்; அமைதியான முறையில் ஒன்று கூடும் உரிமை; மற்றும் சங்கங்களை அமைக்கும் உரிமை போன்றவற்றுக்கு இந்தச் சட்டப் பிரிவு அனுமதி வழங்குகிறது.

ஆனால் அத்தகைய சுதந்திரம் மற்றும் உரிமைகள் முழுமையானவை அல்ல. மலாயா கூட்டாட்சியின் பாதுகாப்பு; பிற நாடுகளுடனான நட்புறவு; பொது ஒழுங்கு; ஒழுக்கம்; நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளைப் பாதுகாப்பது; நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது தூண்டுதல் ஆகியவற்றுக்கு எதிராக கட்டுப்பாடுகளை விதிப்பது; போன்றவற்றுக்கு அரசியலமைப்பு பிரிவு 10-இன் துணைப் பிரிவுகள் (2), (3), (4), மூலமாக நாடாளுமன்றத்திற்கு அனுமதி வழங்கப் படுகிறது.

அரசியலமைப்பு பகுதி: III, பிரிவு: 152, 153, 181[தொகு]

அரசியலமைப்பின் 10-ஆவது பிரிவு: பகுதி II; மலேசியாவில் உள்ள நீதித்துறை சமூகத்தால் "மிக முக்கியமானதாக" கருதப் படுகிறது. இந்தப் பிரிவின் மூலமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் உயர் கொள்கைகளில் பெரும்பாலானவை இழக்கப் படுவதாகவும் சொல்லப் படுகிறது.[10]

அரசியலமைப்பின் பகுதி III, பிரிவு 152, 153, 181: இந்தப் பிரிவின் விதிகளால் உருவாக்கப்பட்ட அல்லது பாதுகாக்கப்பட்ட தகவ்ல், உரிமை, தகுதி, பதவி, சிறப்புரிமை, இறையாண்மை அல்லது தனிச்சிறப்பு போன்றவற்றைப் பற்றி கேள்வி கேட்பதைத் தடை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றலாம் என்று 10-ஆவது பிரிவின் துணைப்பிரிவு (4) கூறுகிறது.

(Article 10 (4) states that Parliament may pass law prohibiting the questioning of any matter, right, status, position, privilege, sovereignty or prerogative established or protected by the provisions of Part III, Article 152, 153 or 181 of the Constitution.)

ஒன்று கூடும் உரிமை பற்றிய சட்டங்கள்[தொகு]

பொது ஒழுங்கு (பாதுகாப்பு) சட்டம் 1958 - (Public Order (Preservation) Act 1958): பொது ஒழுங்கு கடுமையாகச் சீர்குலைக்கப்படும்; அல்லது கடுமையாக அச்சுறுத்தப்படும் எந்த ஒரு பகுதியையும், ஒரு மாதக் காலத்திற்கு "பாதுகாக்கப்பட்ட பகுதி" ("proclaimed area") என்று சம்பந்தப்பட்ட அமைச்சர் தற்காலிகமாக அறிவிக்கலாம்.

பிரகடனப் படுத்தப்பட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பராமரிக்க காவல் துறைக்கு சட்டத்தின் கீழ் விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

கடுமையான குற்றங்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனைகள்[தொகு]

சாலைகளை மூடுவதற்கும்; தடைகளை அமைப்பதற்கும்; ஊரடங்கு உத்தரவை விதிப்பதற்கும்; ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களைத் தடை செய்வதற்கும்; அல்லது ஒழுங்குபடுத்துவதற்கும் காவல் துறைக்கு அதிகாரங்கள் உள்ளன. .

இந்தச் சட்டத்தின் கீழ் பொதுவான குற்றங்களுக்கு ஆறு மாதங்களுக்கும் மேல் போகாத சிறைத் தண்டனையை விதிக்கலாம். ஆனால் கடுமையான குற்றங்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனைகள் கொடுக்கப் படலாம். அதில் சவுக்கடியும் அடங்கும். (எ.கா: தாக்குதல் ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்களைப் பயன்படுத்தி இருந்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை).[11]

பிரிவு 11 - மதச் சுதந்திரம்[தொகு]

(Article 11 – Freedom of religion)

பிரிவு 11: ஒவ்வொரு நபருக்கும் தன் சொந்த மதத்தைப் பின்பற்றுவதற்கும் வெளிப் படுத்துவதற்கும் உரிமை உள்ளது. ஒவ்வொரு நபருக்கும் தன் மதத்தைப் பிரசாரம் செய்யவும் உரிமை உண்டு.

ஆனாலும் மாநிலம் மற்றும் கூட்டாட்சி சட்டப் பகுதிகளைப் பொறுத்தவரை, அந்தச் சட்டங்கள் எந்த ஒரு மதக் கோட்பாட்டையும் கட்டுப் படுத்தலாம். அல்லது எந்த ஒரு மத நம்பிக்கையைப் பரப்புவதையும் கட்டுப் படுத்தலாம். இருப்பினும், முஸ்லிம் அல்லாதவர்கள் இடையே அவர்களின் சமயப் பணிகளை மேற்கொள்வதற்குச் சுதந்திரம் உள்ளது.

மேலும் காண்க[தொகு]

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்

மேற்கோள்கள் - குறிப்புகள்[தொகு]

 1. See Article 4(1) of the Constitution which states that "The Constitution is the supreme law of the Federation and any law which is passed after Merdeka Day (31 August 1957) which is inconsistent with the Constitution shall to the extent of the inconsistency be void."
 2. Article 1(1) of the Constitution originally read "The Federation shall be known by the name of Persekutuan Tanah Melayu (in English the Federation of Malaya)". This was amended in 1963 when Malaya, Sabah, Sarawak, and Singapore formed a new federation to "The Federation shall be known, in Malay and in English, by the name Malaysia."
 3. See Article 32(1) of the Constitution which provides that "There shall be a Supreme Head of the Federation, to be called the Yang di-Pertuan Agong..." and Article 40 which provides that in the exercise of his functions under the Constitution or federal law the Yang di-Pertuan Agong shall act in accordance with the advice of the Cabinet or an authorised minister except as otherwise provide in certain limited circumstances, such as the appointment of the Prime Minister and the withholding of consent to a request to dissolve Parliament.
 4. These are provided for in various parts of the Constitution: For the establishment of the legislative branch see Part IV Chapter 4 – Federal Legislature, for the executive branch see Part IV Chapter 3 – The Executive and for the judicial branch see Part IX.
 5. See paragraph 3 of the Report by the Federation of Malaya Constitutional Conference
 6. See paragraphs 74 and 75 of the report by the Federation of Malaya Constitutional Conference
 7. Wu Min Aun (2005).The Malaysian Legal System, 3rd Ed., pp. 47 and 48.: Pearson Malaysia Sdn Bhd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-74-3656-5.
 8. The constitutional machinery devised to bring the new constitution into force consisted of:
  • In the United Kingdom, the Federation of Malaya Independence Act 1957, together with the Orders in Council made under it.
  • The Federation of Malaya Agreement 1957, made on 5 August 1957 between the British Monarch and the Rulers of the Malay States.
  • In the Federation, the Federal Constitution Ordinance 1957, passed on 27 August 1957 by the Federal Legislative Council of the Federation of Malaya formed under the Federation of Malaya Agreement 1948.
  • In each of the Malay states, State Enactments, and in Malacca and Penang, resolutions of the State Legislatures, approving and giving force of law to the federal constitution.
 9. See for example Professor A. Harding who wrote that "...Malaysia came into being on 16 September 1963...not by a new Federal Constitution, but simply by the admission of new States to the existing but renamed Federation under Article 1 of the Constitution..." See Harding (2012).The Constitution of Malaysia – A Contextual Analysis, p. 146: Hart Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84113-971-5. See also JC Fong (2008), Constitutional Federalism in Malaysia, p. 2.
 10. Wu, Min Aun & Hickling, R. H. (2003). Hickling's Malaysian Public Law, p. 34. Petaling Jaya: Pearson Malaysia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-74-2518-0. However, the state of emergency has been revoked under Art. 150(3) of the Constitution by resolutions of the Dewan Rakyat and the Dewan Negara, in 2011. See the Hansard for the Dewan Rakyat meeting on 24 November 2011 and the Hansard for the Dewan Negara meeting on 20 December 2011.
 11. See the relevant sections of the Public Order (Preservation) Act 1958: Sec. 3 (Power of Minister to declare an area to be a “proclaimed area"), sec. 4 (Closure of roads), sec. 5 (Prohibition and dispersal of assemblies), sec. 6 (Barriers), sec. 7 (Curfew), sec. 27 (Punishment for general offences), and sec. 23 (Punishment for use of weapons and explosives). See also Means, Gordon P. (1991). Malaysian Politics: The Second Generation, pp. 142–143, Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-588988-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_அரசியலமைப்பு&oldid=3688666" இலிருந்து மீள்விக்கப்பட்டது