மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை (புபொகொ, New Economic Policy - NEP / மலாய் மொழி: Dasar Ekonomi Baru) என்பது மலேசியாவில் மண்ணின் மைந்தர்களின் பொருளாதாரநிலையை உயர்த்துவதற்காக கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான, சர்ச்சைக்குரிய பங்களிப்புத் திட்டமாகும். 1971 ஆம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திரி துன் அப்துல் ரசாக் இதை அறிமுகப்படுத்தினார். 1990 ஆம் ஆண்டு இது முடிவுக்கு வந்தபொழுது தேசிய மேம்பாட்டுக் கொள்கை எனும் புதிய திட்டம் இதனைத்தொடர்ந்தது. சீன சிறுபான்மையினருக்கும் மலேய் பெரும்பான்மையினருக்கும் இடையேயான பொருளாதார வித்தியாசத்தைக் குறைப்பதற்கான இத்திட்டம் மலேய் அல்லாத மலேசிய இந்தியர்கள், மலேசிய சீனர்கள் போன்ற சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிவிட்டதாக் பலர் குற்றம் சாட்டுகின்றனர். புபொகொ முடிவிற்கு வந்துவிட்டாலும் அதன் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட மலேயருக்கான பல சிறப்பு பங்களிப்புகள் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன.

புதிய பொருளாதாரக் கொள்கை[தொகு]

1969 ஆம் ஆண்டு மே 13-ம் நாள் தொடங்கிய சீனர்-மலேயர் இனக்கலவரத்தின் பின்னணியில், சீனர்களுக்கும் மலேயர்களுக்கும் இடையேயான பொருளாதார வித்தியாசத்தை மட்டுப்படுத்த இக்கொள்கை கொணரப்பட்டது. "எல்லா இனத்தினரிடமும் வருமையை ஒழிப்பதே" இதன் அதிகாரப்பூர்வ நோக்கம். பொருளாதாரத்தின் பங்கில் 30% மண்ணின் மைந்தர்களுக்கு (பூமிபுத்திரர்) கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்காக பொருளாதாரத்திலும், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மலேய் மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டன.

குற்றச்சாட்டுகள்[தொகு]

சுமார் 30 வருடங்களுக்குப்பின்னும் "பொருளாதாரத்தில் மலேயருக்கு 30%" எனும் நோக்கம் நிறைவேறவில்லை என பலர் குற்றம் சாட்டுகின்றனர். சிறுபான்மையினர் முக்கியமாக இந்திய சிறுபான்மையினர் தாங்கள் இத்திட்டத்தினால் புறக்கனிக்கப்படுவதாக கருதுகின்றார்கள். மலேயருக்கு சிறப்பிடம் தரும் அரசியல் சாசன பிரிவு 153 ஐ குறைகூறுவதோ, அதை நீக்கவேண்டுமென்று கோருவதோ சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள்[தொகு]

சிறுபான்மை மலேசிய இந்தியர்களின் (இவர்களில் அதிகமானோர் தமிழர்கள்) நிலை மிகவும் பின்தங்கிவிட்டதாகக் கருதி பல இந்திய அமைப்புகள் ஒன்றுகூடி இந்து உரிமை நடவடிக்கை அமைப்பை (HINDRAF) உருவாக்கி போராடி வருகின்றனர். நவம்பர் 2007இலும், பிப்ரவரி 2008 இலும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியதை அரசு சட்டவிரோதமாக அறிவித்தது. ஹிந்த்ரஃப் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தலைவர்கள் காலவரையின்றி சிறைபடுத்தப்பட்டுள்ளனர்