கறுப்புக் கங்காணிகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கறுப்புக் கங்காணிகள் என்பவர்கள், 19-ஆம் 20-ஆம் நூற்றாண்டுகளில், மலாயாவைப் பிரித்தானியர்கள் ஆட்சி செய்த போது, கூலி வேலைகளுக்கு தென்னிந்தியாவில் இருந்து ஆட்களைச் சாதுர்யமாக அழைத்துக் கொண்டு வந்தவர்கள். இவர்களைத்தான் கறுப்புக் கங்காணிகள் என்று அழைப்பார்கள். ஆங்கிலேய முதலாளிகள் தங்கள் வேலைகளை எளிமையாக்குவதற்காக இந்தக் கங்காணிகளைத் தங்களின் கைப்பாவைகளாகப் பயன்படுத்தினர்.
மலாயாவில் இருந்த ஆங்கிலேயத் துரைமார்கள் பணம் கொடுத்து கங்காணிகளைத் தென்னிந்தியாவிற்கு அனுப்பி ஆட்களைக் கொண்டு வருமாறு பணித்தனர். காசும் பணமும் மலாயாவில் கொட்டிக் கிடக்கிறது; சீக்கிரத்தில் பணக்காரர்களாக ஆகிவிடலாம் எனும் கங்காணிகளின் ஆசை வார்த்தைகளை நம்பிய தென்னிந்திய மக்கள், மலாயாவுக்கு ஆயிரக் கணக்கில் அழைத்து வரப்பட்டனர்.
பின்னணி
[தொகு]தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று அனைத்து தென்னிந்திய மக்களும் சஞ்சிக்கூலிகளாய் மலாயாவுக்கு கொண்டு வரப்பட்டனர். அப்படி கொண்டு வரப்பட்ட மக்களை, இந்தக் கங்காணிகள் ரப்பர், தேயிலை, காபி, கரும்புத் தோட்டங்களில் மிக மோசமாக அடிமைப்படுத்தினர். முதலாளிமார்களின் கைப்பிள்ளைகளாக இருந்து சேவகம் செய்த அவர்களின் வலிமைமிக்க விசுவாசிகளாகவும் இருந்தனர்.
கறுப்புக் கங்காணிகள் தங்களின் சொந்த இன மக்களையே காசு பணத்திற்காக அடிமைப் படுத்தி, உடலாலும் மனத்தாலும் வேதனைப்படுத்தி கொடுமைகள் செய்தனர். தங்களின் சுயநலத்தைப் பெரிதாக நினைத்துப் பயணித்த கங்காணிகளின் ஆசை வார்த்தைகளுக்கு தென்னிந்திய மக்கள் பலிக்கடா ஆனார்கள். ஆசை வார்த்தைகள்தான் கங்காணிகளின் பலமான ஆயுதமாகவும் விளங்கியது.
இவர்கள் ஏற்கனவே ஆங்கிலேயர்களுக்கு உரிமையான தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள்தான். முரட்டுத்தனமும், வாக்குச் சாதுரியமும், பொருளாசையும் ஒன்றாகப் பெற்ற இவர்கள். வெள்ளைக்கார ஆங்கிலேயர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் விளங்கியவர்கள். அதனால் அவர்கள் கங்காணிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.