மலேசிய அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய அமைச்சரவை (Cabinet of Malaysia; மலாய்: Jemaah Menteri Malaysia) என்பது மலேசிய அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவு ஆகும். பிரதமரின் தலைமையில், மலேசிய நாடாளுமன்றத்தில் கூட்டாக பொறுப்புகள் வகிக்கும் ஓர் அமைச்சர்கள் குழு தான் மலேசிய அமைச்சரவை என அழைக்கப் படுகிறது.

மலேசியக் கூட்டாட்சி அரசியலமைப்பின் 43-ஆவது பிரிவின்படி, அமைச்சரவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள். மலேசிய நாடாளுமன்றத்தின் டேவான் ராக்யாட் (மக்களவை); டேவான் நெகாரா (மேலவை); எனும் இரு அவைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே மலேசிய அமைச்சரவையில் ஓர் அமைச்சராக முடியும்.

அமைச்சர் நியமனம்[தொகு]

மலேசியப் பேரரசர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்கள், பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்களை நியமிக்கின்றார்.[1] பிரதமரின் ஆலோசனையின் பேரில் எந்த ஓர் அமைச்சரின் நியமனத்தையும் பேரரசர் எந்தக் கட்டத்திலும் ரத்து செய்யலாம்.

இருப்பினும், பிரதமரைத் தவிர மற்ற அமைச்சர்கள் பேரரசரின் விருப்பத்தின் பேரில் பதவியில் இருக்கலாம். அதே வேளையில் எந்த ஓர் அமைச்சரும் அவருடைய பதவி காலத்தில் அவரின் அமைச்சர் பதவியைத் துறப்பு செய்யலாம்.

நடைமுறையில், அமைச்சர்களின் நியமனம் அல்லது அமைச்சர்களின் பதவி நீக்கம் குறித்து பிரதமரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பேரரசர் உள்ளார்.

அமைச்சரவை நியமனம்[தொகு]

அமைச்சரவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில், ஏதாவது ஓர் அவையின் உறுப்பினராக இருக்க வேண்டும். பெரும்பாலான அமைச்சர்கள் கீழ் சபையான டேவான் ராக்யாட்டில் இருந்து நியமிக்கப் படுகிறார்கள்.

இருப்பினும் ஒரு சிலர் மேல் சபையான டேவான் நெகாராவில் இருந்தும் நியமிக்கப் படுகிறார்கள். ஆனாலும் பிரதமர் என்பவர் மட்டும், டேவான் ராக்யாட்டின் உறுப்பினராக இருக்க வேண்டும்.

ஒவ்வோர் அமைச்சிற்கும் துணை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்றச் செயலாளர்கள் நியமிக்கப் படலாம். எனினும் அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற இயலாது.

புதன்கிழமைகளில் அமைச்சரவைக் கூட்டம்[தொகு]

அமைச்சரவை வாரந்தோறும், ஒவ்வொரு புதன்கிழமையும் கூடுகிறது.[2] 2008-ஆம் ஆண்டு நாடாளுமன்றச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது.

அதே ஆண்டில் நாடாளுமன்றக் கூட்டத்தின் பகுதி நேர ஒளிபரப்பும் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் கேள்விகளுக்குப் பதிலளிக்க அனுமதிக்கப்பட்டது.

அமைச்சரவை அமைப்பு[தொகு]

அமைச்சரவையின் அமைப்பு மற்றும் அமைச்சுகளின் எண்ணிக்கை ஆகியவை அந்த நேரத்தில் பிரதமர் பதவியை வகிக்கும் பிரதமரின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். இருப்பினும், நிதியமைச்சர் பதவி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதனால் நிதி அமைச்சர் பதவி மட்டும் நிதி அமைச்சர் (ஒருங்கிணைத்தல் சட்டம் 1957 (சட்டம் 375) (Incorporation) Act 1957 (Act 375) மூலம் நியமிக்கப்படுகிறது.[3] துணைப் பிரதமர் பதவி என்பது பிரதமர் விருப்பப்படி வழங்கப்படும் பதவியாகும். அந்த வகையில் ஒரு துணைப் பிரதமர் இல்லாத ஓர் அமைச்சரவையை ஒரு பிரதமர் அமைக்க முடியும்.[4]

1960-ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம்[தொகு]

ஒவ்வோர் அமைச்சிற்கும் துணை அமைச்சர்கள் உள்ளனர். இருப்பினும் இவர்கள் அமைச்சரவையின் உறுப்பினர்களாகக் கருதப்படுவது இல்லை. துணை அமைச்சர் பதவி 1960-ஆம் ஆண்டில் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

ஒவ்வோர் அமைச்சிற்கும் நாடாளுமன்றச் செயலாளர் பதவி உள்ளது. ஆனால் 2008 மலேசிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு யாரும் நியமிக்கப்படவில்லை. நாடாளுமன்றச் செயலாளர்கள் பதவி 1963-ஆம் ஆண்டில் ஒரு திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

அரசியல் செயலாளர்கள்[தொகு]

துணை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்றச் செயலாளர்கள்; நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் மூலமாக நியமிக்கப் படுகிறார்கள். தவிர ஒவ்வோர் அமைச்சிற்கும் அரசியல் செயலாளர்களும் நியமிக்கப் படுகிறார்கள். இந்த அரசியல் செயலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் எனும் அவசியமில்லை.

பதவியேற்பதற்கு முன், அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்கள்; துணை அமைச்சர்கள்; நாடாளுமன்றச் செயலாளர்கள்; அரசியல் செயலாளர்கள்; அமைச்சரவையின் நடவடிக்கைகள் குறித்து தொடர்பாக ஓர் இரகசியக் காப்பு பிரமாணம் செய்து கொள்கின்றனர்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hj. Mohd Jali, Nazaruddin, Redzuan, Ma'arof, Abu Samah, Asnarulkhadi & Hj. Mohd Rashid, Ismail (2003). Malaysian Studies: Nationhood and Citizenship, p. 73. Pearson Malaysia. ISBN 983-2473-91-8.
  2. Funston, John (2001). "Malaysia: Developmental State Challenged". In John Funston (Ed.), Government and Politics in Southeast Asia, pp. 173–175. Singapore: Institute of Southeast Asian Studies.
  3. Wu, Min Aun & Hickling, R. H. (2003). Hickling's Malaysian Public Law, pp. 84–85. Petaling Jaya: Pearson Malaysia. ISBN 983-74-2518-0.
  4. Wu & Hickling, p. 86.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_அமைச்சரவை&oldid=3676540" இலிருந்து மீள்விக்கப்பட்டது