போர்த்துக்கீசிய மலாக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்த்துக்கீசிய மலாக்கா
Portuguese Malacca
1511–1641
நவீன மலேசியாவில் மலாக்கா
நவீன மலேசியாவில் மலாக்கா
ஓவியர் காஸ்பர் கொரியாவின் லெண்டாஸ் டா இந்தியாவில் போர்த்துகீசியம் மலாக்கா, ca. 1550–1563.
ஓவியர் காஸ்பர் கொரியாவின் லெண்டாஸ் டா இந்தியாவில் போர்த்துகீசியம் மலாக்கா, ca. 1550–1563.
நிலைகாலனி
தலைநகரம்மலாக்கா
பேசப்படும் மொழிகள்போர்த்துகீசியம், மலாய்
போர்த்துகீசிய மன்னர் 
• 1511–1521
மானுவல் I
Manuel I
• 1640 – 1641
ஜான் IV
John IV
தளபதிகள்
Captains-major
 
• 1512–1514 (முதல் தளபதி)
ரூய் டி பிரிட்டோ பாடலிம்
Manuel de Sousa Coutinho
• 1638–1641 (கடைசி தளபதி)
மானுவல் டி சூசா குடின்கோ
Manuel de Sousa Coutinho
தளபதிகள்
Captains-general
 
• 1616–1635 (முதல் தளபதி)
அந்தோனியோ பிந்தோ டா பொன்சேகா
António Pinto da Fonseca
• 1637–1641 (கடைசி தளபதி)
லூயிஸ் மார்டின் டி சூசா
Luís Martins de Sousa
வரலாற்று சகாப்தம்Age of Imperialism
• மலாக்கா சுல்தானகத்தின் வீழ்ச்சி
15 ஆகஸ்டு 1511
• டச்சு படையெடுப்பு
14 சனவரி 1641
நாணயம்போர்த்துகீசிய ரியால்
முந்தையது
பின்னையது
மலாக்கா சுல்தானகம்
இடச்சு மலாக்கா

போர்த்துக்கீசிய மலாக்கா, (மலாய் மொழி: Melaka Portugis; போர்த்துகீசியம்: Malaca Portuguesa அல்லது Fortaleza de Malaca; ஆங்கிலம்: Portuguese Malacca; சீனம்: 葡属马六甲) என்பது 1511-ஆம் ஆண்டில் இருந்து 1641-ஆம் ஆண்டு வரையில், 130 ஆண்டுகள், தீபகற்ப மலேசியாவின் மலாக்கா நகரை போர்த்துகீசியர்கள் ஆட்சி செய்ததைக் குறிப்பிடுவதாகும்.

1511 ஆகஸ்டு 15-ஆம் தேதி, போர்த்துகீசியர்களின் தாக்குதலால் மலாக்கா சுல்தானகம் வீழ்ச்சி அடைந்தது. அதன் பின்னர், மலாக்கா சுல்தானகத்தின் கடைசி சுல்தான் மகமுட் ஷா (Mahmud Shah of Malacca), போர்த்துகீசியர்கள் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வந்தார்.

சுல்தான் மகமுட் ஷாவின் தாக்குதல்களைத் தவிர்க்க, போர்த்துகீசியத் தளபதி அபோன்சோ டி அல்புகெர்க், மலாக்காவில் ஒரு கோட்டையைக் கட்டினார். அந்தக் கோட்டையின் பெயர் ஆ பாமோசா (Fortaleza de Malaca). அதன் பின்னர் மலாக்கா நகரம், போர்த்துகல் பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

போர்த்துகீசியர்கள் மலாக்காவை 130 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். 1641-ஆம் ஆண்டு மலாக்கா நகரத்தை டச்சுக்காரர்கள் (Dutch East India Company) கைப்பற்றிக் கொண்டார்கள்.

வரலாறு[தொகு]

லோபெஸ் டி செக்குயிரா[தொகு]

1630-இல் ஆ பாமோசா கோட்டை

மலாக்காவின் செல்வச் செழிப்பைப் பற்றிய செய்தி போர்த்துகல் மன்னர் மானுவல் I என்பவரின் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில் லோபெஸ் டி செக்குயிரா (Diogo Lopes de Sequeira) எனும் தன்னுடைய கடல்படைத் தளபதியை மலாக்காவிற்கு அனுப்பினார். லோபெஸ் டி செக்குயிரா தான் மலாக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு அதிகாரப்பூர்வமாக வந்த முதல் ஐரோப்பியர்.

லோபெஸ் டி செக்குயிரா 1509-ஆம் ஆண்டில் மலாக்காவிற்கு வந்தார். மலாக்காவிலும் மடகஸ்கார் தீவிலும் போர்த்துகீசியர்கள் வணிகம் செய்யும் வாய்ப்புகளைத் தேடி அவர் அங்கு வந்தார். போர்த்துகீசியர்கள் வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் தான் முதலில் மலாக்கா வந்தனர்.[1]

சுல்தான் மகமுட் ஷா[தொகு]

அப்போது மலாக்காவின் அரசராக சுல்தான் மகமுட் ஷா இருந்தார். தொடக்கத்தில் சுல்தான் மகமுட் ஷாவின் நல்ல வரவேற்பையும் விருந்தோம்பலையும் லோபெஸ் டி செக்குயிரா பெற்றார். இருந்தாலும், விரைவில் சிக்கல்கள் ஏற்பட்டன.

போர்த்துகீசியர்கள் கோவாவைக் கைப்பற்றிய பிறகு, அங்கு மதம் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டன. இந்தக் கட்டத்தில் மலாக்கா சுல்தானின் அரசவையில் கோவா முஸ்லிம்கள் (Goa Muslims) செல்வாக்கு பெற்று இருந்தார்கள்.

போர்த்துகீசியர்களின் அச்சுறுத்தல்[தொகு]

மதங்களுக்கு இடையே போட்டி ஏற்படும் என்ற பொதுவான உணர்வு தூண்டப்பட்டது. போர்த்துகீசியர்களால் ஒரு பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் நம்ப வைக்கப்பட்டது. அதே சமயத்தில், லோபெஸ் டி செக்குயிராவின் அணுகு முறையும் சரியாக அமையவில்லை. அதனால் சுல்தான் முகமது ஷா கோபம் அடைந்தார்.[2]

லோபெஸ் டி செக்குயிராவின் ஆட்களில் பலரைச் சுல்தான் மகமுட் ஷா, கைது செய்து காவலில் வைத்தார். மற்ற சிலரைக் கொன்று விட்டார். பின்னர் நான்கு போர்த்துகீசியக் கப்பல்களைத் தாக்க முயன்றார். இருப்பினும் அவர்களில் பலர் தப்பினர்.

லோபெஸ் டி செக்குயிராவைக் கொலை செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. இதை லோபெஸ் டி செக்குயிரா ஒற்றர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டார். அதனால் இரவோடு இரவாக இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். அந்தச் சூழ்ச்சியில் லோபெஸ் டி செக்குயிராவின் உதவியாளர்கள் சிலர் கொல்லப் பட்டனர்.

அல்பான்சோ டி அல்புகர்க்கு[தொகு]

1511 ஏப்ரல் மாதம் அபோன்சோ டி அல்புகெர்க் (Afonso de Albuquerque) என்பவர் போர்த்துக்கலின் குடியேற்ற நாடான கோவாவில் இருந்து மலாக்காவிற்கு வந்தார். 18 கப்பல்களில் 1200 போர் வீரர்களையும் கொண்டு வந்தார்.[3]

பழி வாங்கும் திட்டத்துடன் தான் அபான்சோ டி அல்புகர்க், மலாக்காவின் மீது படை எடுத்தார்.[4]

போர்த்துக்கீசியர்கள் துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். சுல்தான் முகமது ஷாவிடம் அத்தகைய ஆயுதங்கள் எதுவும் இல்லை. மலாக்கா கடல்கரையில் ஒரு பெரிய போர் 40 நாட்கள் நடந்தது. 1511 ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி போர் முடிவுக்கு வந்தது.

போர்த்துகீசிய சயாம் நல்லுறவு[தொகு]

அந்தப் போரில் சுல்தான் முகமது ஷா தோல்வி அடைந்தார். பின்னர் அவர் சில அரச நேய விசுவாசிகளுடன் பகாங் காட்டிற்குள் தஞ்சம் அடைந்தார். பகாங் என்பது மலேசியாவில் ஒரு மாநிலம். மலேசியாவின் மிகப் பெரிய அடர்ந்த காடுகள் இந்த மாநிலத்தில் தான் உள்ளன.

அதன் பின்னர் காட்டிற்குள் இருந்தவாறு போர்த்துகீசியர்களின் மீது சுல்தான் முகமது ஷா அடிக்கடி மறைவுத் தாக்குதல்கள் நடத்தினார். அந்தத் தாக்குதல்கள் போர்த்துகீசியர்களுக்குப் பெரும் சிரமங்களைக் கொடுத்தன. இறுதியாக சுல்தான் முகமது ஷாவின் முயற்சிகள் தோல்வி அடைந்தன.

ஆ பாமோசா கோட்டை[தொகு]

இதற்கு இடையில் மலாக்காவில் போர்த்துகீசியர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார்கள். அந்தக் கோட்டையின் பெயர் ஆ பாமோசா.

அந்தக் கோட்டையின் சிதைவுற்றப் பாகங்களை இன்றும் மலாக்காவில் பார்க்க முடியும். அவற்றை வரலாற்று நினைவுச் சின்னங்களாகக் கருதி, மலாக்கா வாழ் மக்கள் இதுகாறும் போற்றிப் பாதுகாத்து வருகின்றார்கள்.

பிந்தான் தீவு[தொகு]

இதற்கிடையில், சுல்தான் முகமது ஷா, பகாங் காட்டில் இருந்து பிந்தான் தீவுக்குச் (Bintan Island) சென்று அங்கு ஒரு புதிய தலைநகரை நிறுவினார். ஜாவா தீவின் வடக்கே ரியாவு தீவுக் கூட்டங்கள் உள்ளன. அங்குதான் இந்தப் பிந்தான் தீவும் இருக்கிறது. அங்கு இருந்தவாறு சுல்தான் முகமது ஷா அடிக்கடி மலாக்கா போர்த்துகீசியர்கள் மீது சின்னச் சின்னத் தாக்குதல்களை நடத்தி வந்தார்.

அந்தத் தாக்குதல்கள் போர்த்துகீசிய ஆளுமையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் அந்தத் தாக்குதல்கள் அவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தன. அது மட்டும் அல்ல. மலாக்காவின் போர்த்துகீசிய அரசாங்கத்திற்கு அது ஒரு பெரிய சவாலாகவும் விளங்கி வந்தது.

ஜாவா டெமாக் சுல்தானகம்[தொகு]

ஜாவா டெமாக் சுல்தானகத்தின் (Sultan of Demak) அரசராக இருந்த பத்தி உனுஸ் (Pati Unus) என்பவரின் உதவியுடன் போர்த்துகீசியர்களை மீண்டும் எதிர்த்தார். 1521-ஆம் ஆண்டு ஒரு பயங்கரமான போர் மலாக்காவில் நடந்தது. அந்தப் போரில் பத்தி உனுஸ் கொல்லப்பட்டார்.

பிந்தான் தீவில் இருந்த சுல்தான் முகமது ஷாவை அடக்குவதற்கு போர்த்துகீசியர்கள் தீவிரமாகக் களம் இறங்கினர். பிந்தான் தீவில் சுல்தான் முகமது ஷா இருக்கும் வரையில் தங்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்தார்கள்.

பிந்தான் தீவு தீக்கிரை[தொகு]

இந்த அச்சுறுத்தல் ஆபத்துகளை அடியோடு களைந்து விட வேண்டும் என்று போர்த்துக்கீசியர்கள் நினைத்தனர். ஆக பிந்தான் தீவையே அழித்துவிட முடிவு செய்தார்கள். ஒரு பெரும் படையைத் திரட்டி பிந்தான் தீவிற்கு அனுப்பினர். இது 1526-இல் நடந்தது.

அந்தப் படைக்கு பெட்ரோ மாஸ்காரன்காஸ் (Pedro Mascarenhas) என்பவர் தலைமை தாங்கினார். பிந்தான் தீவையே அழித்து விட வேண்டும் என்று போர்த் தளபதிக்கு கட்டளை இடப்பட்டது. அதன் படியே அவரும் செய்து முடித்தார். 1526-ஆம் ஆண்டு பிந்தான் தீவைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

முசபர் ஷா[தொகு]

சுல்தான் முகமது ஷாவும் அவருடைய குடும்பத்தினரும் பிந்தான் தீவில் இருந்து சுமத்திரா, ரியாவ் (Riau) தீவுக் கூட்டத்தில் இருக்கும் கம்பார் எனும் இடத்திற்குத் தப்பிச் சென்றார். அங்கேயே அவர் தன்னுடைய கடைசி நாட்களையும் கழித்தார்.

1528-ஆம் ஆண்டு சுல்தான் முகமது ஷா காலமானார். அத்துடன் மலாக்கா சுல்தான்களின் வரலாற்றுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. அப்போது சுல்தான் முகமது ஷாவுக்கு, முசபர் ஷா (Muzaffar Shah); அலாவுதீன் ரியட் ஷா (Alauddin Riayat Shah II) என இரு மகன்கள் இருந்தார்கள்.

அலாவுதீன் ரியட் ஷா[தொகு]

முசாபர் ஷா, தீபகற்ப மலேசியாவின் வடக்கில் உள்ள மக்களால் அழைக்கப்பட்டார். அங்கு சென்ற அவர் பேராக் சுல்தானகத்தை (Sultanate of Perak) நிறுவினார். இன்னொரு மகன் அலாவுதீன் ரியட் ஷா, ஜொகூருக்குச் சென்று ஜொகூர் சுல்தானகத்தை (Johor Sultanate) நிறுவினார்.

அதன் பின்னர் போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து மலாக்காவை அகற்றுவதற்கு ஜொகூர் சுல்தானால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1550-ஆம் ஆண்டில், ஜொகூர் சுல்தானின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய ஜாவா, ஜெபரா அரசின் (Jepara Kingdom - Kalinyamat Sultanate) ஆட்சியாளரான ராணி கலின்யாமட் (Queen Kalinyamat), மலாக்காவைக் கைப்பற்ற 40 கப்பல்களில் 4,000 வீரர்களை அனுப்பினார்.

ராணி கலின்யாமட்[தொகு]

ராணி கலின்யாமட்டின் படைகள் வடக்கில் இருந்து தாக்கி மலாக்காவின் பெரும்பகுதியைக் கைப்பற்றின. ஆனாலும் போர்த்துகீசியர்கள் பதில் தாக்குதல் தொடுத்து மலாக்காவை மீட்டனர். அந்தத் தாக்குதலில் 2,000 ஜெபரா வீரர்கள் கொல்லப் பட்டனர்.

ஆச்சே சுல்தானகம்[தொகு]

இந்தக் கட்டத்தில் மலாக்காவில் ஒரு புயல். மலாக்கா கடற்கரையில் இரண்டு ஜெபரா கப்பல்கள் கரை தட்டின. அவை போர்த்துகீசியர்களுக்கு இரையாயின. ஜெபரா வீரர்களில் பாதிக்கும் குறைவானவர்களே மலாக்காவை விட்டு வெளியேற முடிந்தது.

1567-ஆம் ஆண்டில், ஆச்சே சுல்தானகத்தைச் சேர்ந்த இளவரசர் உசைன் அலி I ரியாத் ஷா மலாக்காவில் இருந்து போர்த்துகீசியர்களை வெளியேற்ற கடற்படைத் தாக்குதலைத் தொடுத்தார். ஆனால் தோல்வியில் முடிந்தது.

ஜாவானிய ஜெபரா சுல்தானகம்[தொகு]

1574-ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்களிடம் இருந்து மலாக்காவைக் கைப்பற்ற, ஆச்சே சுல்தானகம் (Aceh Sultanate); மற்றும் ஜாவானிய ஜெபரா சுல்தானகம் (Javanese Jepara); ஆகியவற்றின் கூட்டுத் தாக்குதல் மீண்டும் நடைபெற்றது. இதுவும் தோல்வியில் முடிந்தது.

மலாக்காவைக் கைப்பற்றிய போர்த்துகீசியர்கள் அடுத்தக் கட்டமாக சயாம் (தாய்லாந்து) நாட்டுடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப் பட்டனர். அதன் பொருட்டு தீவிரமான முயற்சிகளில் இறங்கினார்கள்.

மன்னர் ராமாதிபோடி[தொகு]

ஏனென்றால், சயாம் எந்த நேரத்திலும் மலாக்காவைத் தாக்கும் தயார் நிலையிலேயே இருந்து வந்தது. சீன மிங் அரசர்களின் பாதுகாப்பு மட்டும் மலாக்காவிற்கு இல்லாமல் இருந்திருக்குமானால், சயாம் நாடு நிச்சயமாக மலாக்காவின் மீது எப்போதோ படை எடுத்து இருக்கும். அந்தச் சமயத்தில் சயாம் நாட்டை மன்னர் ராமாதிபோடி ஆண்டு வந்தார்.

மன்னர் ராமாதிபோடியிடம் சமாதானம் பேசி நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள போர்த்துகீசியர்கள் விரும்பினார்கள். ஆகவே அவர்கள் 1511 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் டுவார்த்தே பெர்ணாண்டஸ் (Duarte Fernandez) எனும் தூதரைச் சியாம் நாட்டின் அயோத்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

மலாக்காவில் போர்த்துகீசியர்கள்[தொகு]

மன்னர் ராமாதிபோடியும் முகம் சுளிக்காமல் அந்தத் தூதரைச் சகல மரியாதையுடன் வரவேற்று உபசரித்து அனுப்பினார். இவை அனைத்தும் போர்த்துகீசியர்கள் மலாக்காவைக் கைப்பற்றிய நான்கே மாதங்களில் நடந்து முடிந்தவை.

மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைபற்றிய பின்னர் அதன் வாணிபச் சூழ்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மலாக்காவை நிர்வாகம் செய்வதிலும் அவர்களுக்கு பற்பல சிரமங்கள் ஏற்பட்டன. மலாக்கா ஒரு சுல்தானின் ஆட்சியின் கீழ் இருந்த போது பல தரப் பட்ட சமயத்தவர்கள் பாரபட்சம் இல்லாமல் மலாக்காவில் வியாபாரம் செய்ய வந்தனர்.[5]

ஆசிய வாணிக வலைப் பின்னல்[தொகு]

ஆனால், போர்த்துகீசியர்கள் வந்த பின்னர் மற்ற சமூகத்தினர் மலாக்காவிற்கு வர தயக்கம் காட்டினர். அவர்களின் பாதுகாப்பிற்கு முறையான உத்தரவாதம் இல்லாமல் போனதே அதற்கு முக்கியமான காரணம்.[6] ஆசிய வாணிகத்தைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வர வேண்டும் எனும் போர்த்துகீசியர்களின் தலையாய இலட்சியம் மலாக்காவில் நிறைவேறவில்லை.

அதற்குப் பதிலாக ஆசிய வாணிக வலைப் பின்னலையே அவர்கள் நலிவுறச் செய்து விட்டனர். மலாக்கா நீரிணையைப் பயன்படுத்துவது ஆபத்தானது என்று மேலை நாட்டு வணிகர்கள் ஒதுங்கிப் போகும் அளவிற்கு நிலைமை மோசமாகிப் போனது.[7]

அதனால் பெருவாரியான வணிகர்கள் மலாக்காவிற்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். மாறாக வேறு வாணிக மையங்களுக்குச் செல்லத் தொடங்கினர். அதனால் மலாக்காவின் வாணிகக் கேந்திரம் பாதிப்பு அடைந்தது.[7]

பிரான்சிஸ் சேவியர் வருகை[தொகு]

இந்தக் கால கட்டத்தில் தான் பிரான்சிஸ் சேவியர் எனும் புனிதப் பாதிரியார் மலாக்காவிற்கு வருகை தந்தார். இவர் உலகில் மிகவும் புகழ் பெற்ற கிறித்துவ சமயத் திருத்தொண்டர். 1545-ஆண்டில் இருந்து 1549-ஆம் ஆண்டு வரையி அவர் மலாக்காவில் தங்கிச் சமயத் தொண்டுகள் செய்தார். கிறிஸ்துவச் சமயப் போதனைகளைச் செய்தார்.

மலாக்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ”ஆ பாமோசா கோட்டை”யின் சிதைவுகள்

கிறிஸ்துவத் திருச்சபைகளைக் கட்டுவதற்கு பல அரிதான முயற்சிகளை மேற்கொண்டார். கிறிஸ்துவ சமயம் மலாக்கா மக்களைச் சென்று அடைவதற்குப் பல வகைகளில் திருப்பணிகள் செய்து உள்ளார். பிரான்சிஸ் சேவியர் அவர்களின் சிலை மலாக்கா குன்றில் இன்றும் இருக்கிறது.

டச்சுக்காரர்கள் படையெடுப்பு[தொகு]

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தச் சிலையின் ஒரு பக்கக் கரம் உடை பட்டுப் போனது. மலாக்கா வாழ் கிறிஸ்துவ மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். உடனே மலாக்கா அரசாங்கம் பொருள் உதவி செய்து அந்தச் சிலையைப் புனரமைப்பு செய்து கொடுத்தது.

1641-ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் மலாக்காவின் மீது படை எடுத்தனர். இந்தத் தாக்குதலில் டச்சுக்காரர்களுக்கு ஜொகூர் சுல்தான் பெரிதும் உதவினார்.130 ஆண்டுகள் போர்த்துகீசியர்களின் வசம் இருந்த மலாக்கா வீழ்ந்தது. டச்சுக்காரர்களின் பிடிக்குள் மலாக்கா மாறிச் சென்றது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ricklefs, M.C. (1991). A History of Modern Indonesia Since c.1300, 2nd Edition. London: MacMillan. பக். 23–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-57689-6. 
  2. Mohd Fawzi bin Mohd Basri; Mohd Fo'ad bin Sakdan; Azami bin Man (2002). Kurikulum Bersepadu Sekolah Menengah Sejarah Tingkatan 1. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:983-62-7410-3. 
  3. Ricklefs, M.C. (1991). A History of Modern Indonesia Since c.1300, 2nd Edition. London: MacMillan. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-57689-6. 
  4. Power Over Peoples: Technology, Environments, and Western Imperialism, 1400 to the present, Daniel R. Headrick, page 63, 2010
  5. Roderich Ptak (2004). "Reconsidering Melaka and Central Guangdong". in Peter Borschberg. Iberians in the Singapore-Melaka area and adjacent regions (16th to 18th century). 14 of South China and maritime Asia (illustrated ). Otto Harrassowitz Verlag. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-447-05107-8. https://books.google.com/books?id=ggyl2FSzXvgC&pg=PA12. பார்த்த நாள்: 14 December 2011. 
  6. From the Mediterranean to the China Sea: miscellaneous notes. Otto Harrassowitz Verlag. 1998. பக். 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-447-04098-X. https://books.google.com/books?id=aSEJqSQS7wkC&pg=PA179. பார்த்த நாள்: 14 December 2011. 
  7. 7.0 7.1 Ricklefs, M.C. (1991). A History of Modern Indonesia since c. 1300, 2nd Edition. London: Macmillan. பக். 23–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-57689-6. 
  8. Borschberg, P. (2010). The Singapore and Melaka Straits. Violence, Security and Diplomacy in the 17th century. Singapore: NUS Press. பக். 157–158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9971-69-464-7. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]