ஒராங் உலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒராங் உலு
Orang Ulu
ஒராங் உலு ஆண்கள் இருவர் சப்பே இசைக் கருவியை இசைக்கிறார்கள்
மொத்த மக்கள்தொகை
250,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
போர்னியோ:
மொழி(கள்)
ஒராங் உலு மொழி, இந்தோனேசிய மொழி, சரவாக் மலாய் மொழி
சமயங்கள்
கிறிஸ்தவம், ஆங்கிலிக்கம், ஆன்மீகம், இசுலாம்

ஒராங் உலு (மலாய்: Orang Ulu; ஆங்கிலம்: Orang Ulu) என்பது தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில்; வடகிழக்கு சரவாக் பகுதியில் வாழும் பலதரப்பட்ட பழங்குடி மக்களை குறிப்பிடும் ஒரு பொதுவான அழைப்புச் சொல் ஆகும். இந்தப் பழங்குடி இனத்தில் 27 துணைக் குழுக்கள் உள்ளன. ஒராங் உலு என்றால் உட்பகுதியில் வாழும் மக்கள் என்று பொருள்படும்.[1]

மலாய் மொழியில் ஒராங் (Orang) என்றால் மனிதர்; உலு (Ulu) என்றால் உட்புறம் அல்லது உட்பகுதி என்று பொருள். இவர்களின் மக்கள்தொகை 25,000-க்குள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

பொது[தொகு]

ஒராங் உலு என்பது மலேசியாவில் ஒரு சட்டப்பூர்வமான சொல் அல்ல என்று அறியப் படுகிறது. ஏனெனில் மலேசிய அரசியலமைப்பில் (Malaysian Constitution) இந்த ஒராங் உலு இனத்தவர் பட்டியலிடப் படவில்லை. இருப்பினும் துணைக் குழுக்களில் உள்ள இதர சில இனக்குழுக்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.

1969-ஆம் ஆண்டில் மலேசியா சரவாக் மாநிலத்தில் உருவாக்கப்பட்ட ஒராங் உலு தேசிய சங்கம் (Orang Ulu National Association - OUNA) எனும் அமைப்பின் மூலமாக ஒராங் உலு எனும் வார்த்தை பிரபலம் அடைந்து உள்ளது.

பழங்குடி இனக்குழுக்கள்[தொகு]

ஒராங் உலு பழங்குடி இனத்தில் பலதரப் பட்ட 27 துணைக் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு துணைக் குழுவிலும் 500 பேரில் இருந்து சில ஆயிரம் பேர் வரை உள்ளனர். இந்தப் பழங்குடியின மக்கள் சுவரோவியங்கள் மற்றும் மர வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட நீளவீடுகளில் வாழ்கின்றனர்.

இவர்கள் நுட்பமான மணி வேலைப்பாடுகள்; பச்சை குத்தல்கள்; பிரம்புகள் செய்தல்; நெசவு தொழில் மற்றும் பிற பழங்குடி கைவினைப் பொருட்களுக்காகவும் நன்கு அறியப் பட்டவர்கள்.[2]

சப்பே வீணை இசைக் கருவி[தொகு]

ஒராங் உலு பழங்குடியினரை அவர்களின் தனித்துவமான இசையால் அடையாளம் காணலாம். படகு வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட சப்பே (Sapeh) வீணை இசைக் கருவியின் ஒலிகள் தனித்துவமானவை. அத்துடன் இவர்களின் பாரம்பரிய நடனத்தை ’கஞ்செட்’ (Kanjet) என்று அழைக்கிறார்கள்.[3][4]

ஒராங் உலு பழங்குடியினரில் பெரும்பான்மையானவர்கள் கிறிசுதவர்கள். ஆனாலும் அவர்களின் பழைய பாரம்பரிய ஆன்மீக மதங்கள் (Traditional Religions) இன்னும் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jeffrey Jalong (2001). Kalong: Seni Motif Tradisi Orang Ulu. Kementerian Kebudayaan Kesenian dan Pelancongan Malaysia. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:967-903-035-0. 
  2. Patricia Hului (2016-05-25). "Dying Tradition of Orang Ulu Rattan Weaving". The Borneo Post. Archived from the original on 2016-08-08. பார்க்கப்பட்ட நாள் 2016-08-03.
  3. Jeffrey Jalong (2007). Sape: Seni Muzik Terbilang Orang Ulu Sarawak. 
  4. Jeffrey Jalong (2012). Kanjet: Seni Tarian Tradisional Orang Ulu Sarawak. Jabatan Kebudayaan dan Kesenian Negara. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-967-5552-22-9. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒராங்_உலு&oldid=3684722" இலிருந்து மீள்விக்கப்பட்டது