திருப்பாச்சேத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பாச்சேத்தி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்,யில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஊர் ஆகும். [1]

இது திருப்புவனம் வட்டத்தில் அமைந்துள்ள உள்வட்டம் ஆகும்.

மதுரை- இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இவ்வூர், மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

திருப்பாச்சேத்தி அஞ்சலகத்தின் அஞ்சல் சுட்டு எண் 630610 ஆகும். இதன் தொலைபேசி குறியீடு எண் 04574. இதன் அருகமைந்த கிராமங்கள்; வெள்ளிக்குறிச்சி, வேம்பத்தூர், மாரநாடு, இடைக்காட்டூர் ஆகும். அருகமைந்த நகரங்கள் மதுரை, மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி ஆகும்.

திருப்பாச்சேத்தி, மதுரைக்கு கிழக்கில் இருந்து 30 கிமீ தொலைவிலும், மானாமதுரைக்கு மேற்கில் 18 கிலோமீட்டர் தொலைவிலும்,சிவகங்கைக்கு தெற்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள்தொகை[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, திருப்பாச்சேத்தி கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 12800ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 0.07% உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1690 ஆகவுள்ளனர். இக்கிராமத்தில் மொத்தம் 3380 வீடுகள் உள்ளது. பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 1,045 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 82.63% ஆக உள்ளது.[2]

போக்குவரத்து[தொகு]

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பாச்சேத்திக்கு நேரடி நகரப் பேருந்துகள் உள்ளன. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் நின்று செல்கின்றன. மதுரையிலிருந்து, இராமேஸ்வரம் செல்லும் பயணிகள் தொடருந்துகள், திருப்பாச்சேத்தி தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது. [3]

மருத்துவமனைகள்[தொகு]

திருப்பாச்சேத்தியில் ஒரு அரசு முதன்மை சுகாதார மையமும், அரசு கால்நடை மருத்துவமனை ஒன்றும், ஆறு தனியார் மருத்துவமனைகளும் உள்ளன.

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

 • திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோயில் [4]
 • அழகியநாயகி அம்மன் கோயில்
 • அருள்மிகு சப்பாணி கருப்பசாமி ஆலையம்
 • மாரியம்மன் கோயில்
 • செல்வ விநாயகர் கோயில்
 • பெருமாள் கோவில்
 • இராமலிங்க வள்ளலார் திருச்சபை
 • உடையநாச்சி அம்மன் கோவில்
 • அருள்மிகு மாரநாடு கருப்பசாமி ஆலயம்
 • அருள்மிகு கருப்பணசாமி ஆலயம்
 • அருள்மிகு அய்யணார் ஆலயம்
 • அருள்மிகு ராக்கச்சி அம்மன் கோவில்
 • அருள்மிகு வடகரையான் கோவில்
 • அருள்மிகு காளையார் சுவாமி கோவில்

திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவில்[தொகு]

இக்கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னர் கால கோவிலாகும். இசைக்கு அதிபதியான நடராஜர், இங்கு ஒலி வடிவாக இசைக்கல் நடராஜராக இருக்கிறார். சிவபெருமானுக்கு உகந்தது வில்வம் ஆனால் இங்கு மட்டுமே ஒவ்வொரு திங்களன்றும் சிவபெருமானுக்கு, துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது. (துளசியை சிவபெருமான் உருவாக்கிய இடம் என்பதால்) உச்சிகால பூசையின் பொழுது, இரண்டு மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இரண்டு மரகத லிங்கங்களை ஒரே நேரத்தில் பார்ப்பது அபூர்வம்.இத்தகு சிறப்புகள் மிக்கது இத்திருத்தலம்.

நிதி நிறுவனங்கள்[தொகு]

 • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, திருப்பாச்சேத்திக் கிளை
 • சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
 • ஏர்டெல் பேமண்ட் வங்கி மையம்
 • இண்டிகேஷ் ஏடிம்

தொழில்[தொகு]

இங்கு உழவே முதன்மைத் தொழில் ஆகும். வேளாண் பொருட்களான நெல், கரும்பு, வாழை, தென்னை, பருப்பு மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகளை உழவர்களிடம் மக்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இதற்காக வாரச்சந்தை புதன்கிழமை கூடுகிறது.

திருப்பாச்சேத்தி அரிவாள்[தொகு]

பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் தயாரிக்கப்படும் அரிவாள்கள் பிரபலமானது. இவ்வூரில் விடுதலை போராட்ட வீரர் துப்பாக்கி கவுண்டரால் அரிவாள் அடிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. சமீபத்தில் இந்த திருப்பாச்சி அரிவாள் அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. விவசாயப் பணிகளுக்காக இந்த வகையான அரிவாள்கள் தயாரிக்கப்படுகின்றன. திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் திருப்பாச்சி அருவா எனப் பொதுவாக குறிப்பிடப்படுகிறது.திருப்பாச்சேத்தியின் அரிவாள் (நீளம், 1 முதல், 1.5 அடி வரை), வீச்சரிவாள் (2 அடிக்கு மேல்) பெயர் பெற்றதற்கு காரணங்கள் பல உண்டு. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தயாராகும் அரிவாளுக்கும், இங்கு தயாராகும் அரிவாளுக்கும் வித்தியாசம் என்னவென்றால், அரிவாளின் முனை (மூக்கு) வளைவும், பள பளவென தீட்டுவதால் பதமும் (கூர்மையும்) வேறு அரிவாளில் கிடையாது.இந்த அரிவாளில் வெட்ட, வெட்ட பதம் ஏறும் பக்குவம் இருப்பதால், திருப்பாச்சேத்தி தேடி வந்து வாங்கிச் செல்வர். அரிவாளின் எடையும் குறைவாக இருப்பதும் சிறப்பு. பிடித்து லாவகமாக வீசவும், கையாளவும் கையடைக்கமாக அரிவாளின் கைப்பிடி இருப்பதும் தனிச்சிறப்பு. இதனால், எவ்வளவு விலை இருந்தாலும், பேரம் பேசாமல் வாங்கிச் செல்கின்றனர். மன்னர்கள் காலத்தில், இங்கு போரிடுவதற்கு தகுந்த தடுப்பு கேடயம், வாள், கத்தி, வேல் கம்பு, சுருள் கத்தி, சூரி கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறை இருந்துள்ளது. போர்க் கருவிகள் தயாரிப்பு பட்டறையாகவும், ஆயுதக்கிடங்காகவும் இவ்வூர் இருந்ததாக வரலாறு கூறுகிறது.

சினிமாவில்: வீரத்தின் வெளிப்பாடாக வாள், வீச்சரிவாள் கையாளுவதை கருதுகின்றனர். இதனாலேயே சினிமாவிலும் திருப்பாச்சேத்தி அரிவாள், அக்காலத்தில், "தாய்க்குப்பின் தாரம்" படத்தில் எம்.ஜி.ஆர்., முதல், இன்றைய விஜய் படம் வரை, திருப்பாச்சேத்தி அரிவாள் இடம் பெற்றுள்ளது. திருப்பாச்சேத்தி முழு பெயரானது, மருவி, சினிமாவில், "திருப்பாச்சி' என்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பாச்சேத்தி&oldid=3599278" இலிருந்து மீள்விக்கப்பட்டது