ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை (Life imprisonment, life sentence, life-long incarceration அல்லது life incarceration) என்பது ஒரு தீவிரமான குற்றம் புரிந்த குற்றவாளி தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமையையும் சிறையில் இருக்குமாறுத் தரப்படும் குற்றவியல் தண்டனையாகும். கொலை, தேசத் துரோகம், போதைமருந்து கடத்துதல், பிறருக்கு ஊறு விளைவிக்குமாறு நிகழ்த்திய திருட்டு போன்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது.
இந்தத் தண்டனை அனைத்து நாடுகளிலும் கொடுக்கப்படுவது இல்லை. 1884ஆம் ஆண்டிலேயே போர்த்துக்கல் சிறை சீர்திருத்தங்களின்படி இந்தத் தண்டனையை விலக்கியது. இது தண்டனையாகக் கொடுக்கப்படும் பல நாடுகளிலும் சிறைநாட்களின் சில பகுதிகளை வெளியே வாழும்படி, தண்டனைக்காலத்தைக் குறைக்குமாறு வேண்டிக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான தண்டனை குறைத்தல் அல்லது "முன்னதான விடுதலை" குற்றவாளியின் சிறைக்கால நடத்தையை ஒட்டி சில நிபந்தனைகளுடன் அளிக்கப்படும்.
இவ்வாறு தண்டனையைக் குறைப்பதற்கான காலமும் வழிமுறைகளும் நாடுகளுக்கேற்ப மாறுபடும். சில நாடுகளில் குறைந்த ஆண்டுகளிலேயே இந்த விண்ணப்பிக்க இயலும்; வேறுசில நாடுகளில் பல ஆண்டுகள் கழித்தே விண்ணப்பிக்க இயலும். இருப்பினும் குறைத்தலைக் கேட்பதற்கான இந்த கால அளவு எப்போது குறைத்தல் ஆணை இடப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ரோம் பன்னாட்டு குற்றவியல் சட்டத்தின் 110ஆவது விதிகளின்படி போர் குற்றங்கள், இனவழிப்பு போன்ற தீவிரமான குற்றங்கள் புரிந்த ஒருவர் குறைந்தது மூன்றில் இருபங்கு காலம் அல்லது 25 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதன்பிறகு நீதிமன்றம் மறுஆய்வு செய்து தண்டனையைக் குறைக்கலாம்.
உலகளவில்
[தொகு]
நீலம் ஆயுள் தண்டனை நீக்கப்பட்ட நாடுகள்.
சிவப்பு ஆயுள் தண்டனை வழங்குபவை.
பச்சை ஆயுள் தண்டனை சில கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்படும் நாடுகள்.
வெண்கருமை நிகழ்நிலை அறியாது, சட்ட உடன்பாடாக கருதப்படுவை
இந்தியாவில் ஆயுள் தண்டனை
[தொகு]இந்திய சட்டவிதிகளின் படி ஆயுள் தண்டனை என்பது ஒரு மனிதனின் இயற்கையான வாழும் வயது வரை சிறையில் இருப்பது. ஆனால் சில சமயங்களில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே சிறையில் இருந்து வெளிவந்து விடலாம். 1973ல் துவங்கிய குற்றவியல் செயல்முறைச் சட்டத்தின் பிரிவு 433A, குறைந்தது 14 ஆண்டுகள் சிறை தவிர்த்துவிட முடியாதது எனக் குறிப்பிடுகிறது.[1] இந்தியாவில் சிறைவாசிகள் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிறைவாச விடுமுறை, மன்னிப்பு அல்லது தண்டனைக் கால குறைப்பு வழியாக விடுதலை பெற வாய்ப்பு உண்டு. இதற்கான வழிகாட்டுதல்களை தேசிய உனித உரிமைகள் ஆணையம் 1999ல் வெளியிட்டுள்ளது.[2] இந்தியாவில் ஆயுள் சிறை கைதிகளை முன்னரே விடுவிப்பது என்பது பல நேரங்களில் மாநில அரசுகளின் முடிவில் உள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 2022 அறிக்கையின்படி, வாழ்நாள் சிறைதண்டனை பெற்ற கைதிகள் எண்ணிக்கை 75,629 ஆக உள்ளது – இது சிறையிலிருக்கும் குற்றவாளிகளில் 56.7% ஆகும்.[3]
இலங்கையில் வாழ்நாள் சிறைத்தண்டனை
[தொகு]இலங்கையில் வாழ்நாள் தண்டனை என்பது சட்ட ரீதியாக 20 ஆண்டுகள் கடுமையான சிறை என வரையறுக்கப்பட்டுள்ளது.[4] வாழ்நாள் கைதிகள் 20 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு சனாதிபதி ஆணையின் கீழ் விடுவிக்கப்பட வாய்ப்பு உண்டு.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Life imprisonment in India". iPleaders. 2021. Retrieved 15 May 2025.
- ↑ "Procedure/Guidelines on Premature Release of Prisoners" (PDF). National Human Rights Commission, India. 24 November 1999. Retrieved 15 May 2025.
- ↑ Udit Singh (7 December 2023). "Prison Statistics India 2022: Above 75% Prisoners Are Under Trials…". LiveLaw. Retrieved 15 May 2025.
- ↑ L.B.L. De Alwis (May 2018). "The Need to Abolish the Death Penalty" (PDF). Sri Lanka Journal of Forensic Medicine, Science & Law. Retrieved 15 May 2025.
- ↑ "Presidential pardon for two LTTE prisoners serving life terms". Sunday Times (Sri Lanka). 14 January 2024. Retrieved 15 May 2025.
வெளியிணைப்புகள்
[தொகு]- International perspectives on life imprisonment பரணிடப்பட்டது 2008-10-06 at the வந்தவழி இயந்திரம்