திருநெல்வேலி எழுச்சி 1908

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருநெல்வேலி எழுச்சி (Tinnevely riot of 1908) என்பது இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு நான்கு பேர் கொல்லப்பட்ட நிகழ்வைக் குறிப்ப்பதாகும். இந்நிகழ்வு 1908 ஆம் ஆண்டு மார்ச் 13 இல் நடந்தது.

வரலாறு[தொகு]

இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக நெல்லை மாவட்டத்திலிருந்து பூலித்தேவர், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பாரதியார், வ.உ.சி, வாஞ்சிநாதன் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் ஊட்டிய நாட்டுப்பற்று உணர்வால் மக்களிடையே கொந்தளிப்பு, எழுச்சி ஏற்பட்டது. 1905 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் சுதேசி இயக்க உணர்வு தீவிரமாக பரவியது. 1906 ஆம் ஆண்டு தூத்துக்குடி, கொழும்பு துறைமுகங்களுக்கு இடையே வாடகைக் கப்பல்களை இயக்கும் சுதேசிக்கப்பல் கம்பெனி துவக்கப்பட்டது. சுதேசி நிறுவனத்திற்கு நிதி திரட்ட வ.உ.சி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

1908ம் ஆண்டு வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் பங்கேற்ற சுதேசி இயக்க பிரசாரக்கூட்டங்கள் நெல்லை, தூத்துக்குடியில் நடந்தன. அன்னிய நாட்டுப்பொருட்களை புறக்கணிக்கும்படி தலைவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். சுதேசிய உணர்வு மக்களிடம் தீவிரமாக பரவியதால் அக்காலகட்டத்தில் நெல்லையில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். குதிரை வண்டிக்காரர்கள், சலவை, சவரத்தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு பணியாற்ற மறுத்தனர். சுதேசியத்துக்கு எதிராக பேசிய ஒரு வக்கீலுக்கு பாதி சவரம் செய்த நிலையில் சவரத்தொழிலாளி எழுந்து சென்ற பரபரப்பு சம்பவமும் நடந்தது. இதனால் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது வெறுப்பு இருந்தது.

திருநெல்வேலி எழுச்சி[தொகு]

விபின் சந்திரபால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908 ஆம்-ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியை சுயராஜ்ய நாளாக விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர். நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் தடையை மீறி விபின் சந்திரபால் விடுதலை விழா நடந்தது. தூத்துக்குடியில் விபின் சந்திரபால் விடுதலை விழாவை கொண்டாடிவிட்டு நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் 1908ம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக நெல்லை பகுதியில் கலவரம் மூண்டது.

1908ம் ஆண்டு மார்ச் 13ம்-தேதி காலை நெல்லை பாலம் என அழைக்கப்பட்ட வீரராகவபுரம் தொடருந்து நிலையம் அருகேயுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம், போக்குவரத்து தடைப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு இந்துக்கல்லூரிக்குள் நுழைந்தனர். மாணவர்களை அழைத்துக்கொண்டு தெருக்களில் ஓடினர். கல்லூரி மூடப்பட்டது. கல்லூரி முதல்வர் உட்பட இருவர் தாக்கப்பட்டனர்.

சி.எம்.எஸ்., கல்லூரிக்குள் புகுந்த கூட்டம், உதவிப்பேராசிரியரைத் தாக்கியது. கல்லூரி சேதப்படுத்தப்பட்டது. நெல்லை நகராட்சி அலுவலக கட்டடச்சுவர் இடிக்கப்பட்டது. அலுவலக ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அருகே இருந்த அஞ்சல் நிலையம் தீ வைக்கப்பட்டது. நகராட்சியின் மண்ணெண்ணெய்க் கிடங்கு சேதப்படுத்தப்பட்டது. முன்சீப் கோர்ட், காவல் நிலையம் தாக்கப்பட்டது.

கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கோயில் பூசாரி, முஸ்லிம் இளைஞர் உட்படநால்வர் இறந்தனர். அதே நாளில் தூத்துக்குடியிலும் கலவரம் ஏற்பட்டது. காவலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அடுத்த நாள் தச்சநல்லூரில் தெருவிளக்குகள், குப்பை, கழிப்பிட வண்டிகளை மக்கள் தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அடக்குமுறையையின் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் ஆங்கிலேய ஆட்சியாளர்கள்.

நெல்லையில் விடுதலை உணர்வுடன் மக்கள் நடத்திய எழுச்சிப்போராட்டத்தில் நால்வர் பலியான நிகழ்வு குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை சட்டசபையில் விவாதம் நடந்தது. நகராட்சிக் கட்டிடம் சேதப்படுத்தப்பட்டதால் அப்போதைய நெல்லை நகராட்சி மன்றம் எழுச்சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. கலவரத்தில் ஈடுபட்டதாக 53 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு 37 பேருக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. பொருட்சேதங்களுக்கு தண்டத்தீர்வை வசூலிக்கப்பட்டது.

நெல்லையில் அனைத்துத்தரப்பு மக்களும் இணைந்து நடத்திய ‘திருநெல்வேலி எழுச்சி’ போராட்டம் பிற்காலத்தில் நடந்த பல போராட்டங்களுக்கு உந்துதலாக இருந்ததாக விடுதலைப் போராட்ட வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

நினைவு நாள் நிகழ்வுகள்[தொகு]

‘திருநெல்வேலி எழுச்சி’ நூற்றாண்டு விழா நெல்லையில் 2008 ஆம் ஆண்டு பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டது. எழுச்சியை கண்டித்து முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் திருத்தப்பட்டு எழுச்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]