காலிங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் காலிங்கர் என்பவர் ஒருவர். திருக்குறள் உரைக்கொத்து நூலில் இவரது பெயர் ‘கவிப்பெருமாள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] இவரது பெயரைக் ‘காளிங்கர்’ எனவும் வழங்குவர். கண்ணன் காளிங்கன் தலைமேல் ஏறி ஆடினான் என்னும் கதையைக் கருத்தில் கொண்டு காளிங்கன் என வழங்கலாயினர்.

திருக்குறள் காலிங்கர் உரை ஓரளவு திருக்குறள் நூல் முழுமைக்கும் கிடைத்துள்ளது. கிடைக்காத சிற்சில இடங்களில் பரிதியார் உரையையே காலிங்கர் உரையாகப் பதிப்பித்துள்ளனர். இவை பரிதியார் உரையை இவர் அப்படியே எழுதியதாகலும் இருக்கலாம். இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு. திருக்குறளை ஓரு அதிகாரத்துக்குள் வரிசைப்படுத்தும் வைப்பு முறையில் இவர் பரிதியாரைப் பல இடங்களில் பின்பற்றியும், சில இடங்களில் வேறுபட்டும் நிற்கிறார்.

வரலாறு[தொகு]

காலிங்கராயர் குடியில்[2] தோன்றிய இவர் ஒரு உழவராகவும்[3] படைவீரராகவும் [4] சிறந்த மருத்துவராகவும் [5] வாழ்ந்தவர் என அறியமுடிகிறது.

தமிழ்நடை[தொகு]

இவரது தமிழ்நடை எவ்வாறு இருக்கும் என்பதை இந்த எடுத்துக்காட்டால் அறியலாம்.

நெஞ்சினால் ஒருவர் மாட்டு ஒருவர் அன்புடையராகலின் மற்றதற்கும் உண்டோ பயன்படாமல் அடைக்கப்படுவதோர் கருவி? அதனால், ஒருவர் மாட்டு உள்ளத்து விருப்புடையவரது மென்மைதானே பலர் அறியும் பூசலைத் தரும் என்றவாறு
பூசல் என்பது விசேஷம். புன்கண் என்பது கிருபை. கண்ணீர் என்பது பெருமை.[6]

உரைநலம்[தொகு]

 • மேற்கோள் பாடல் தருகிறார்.[7]
 • வேறுபாடம் காட்டுகிறார்.[8]

கருவிநூல்[தொகு]

 • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005
 • திருக்குறள் உரைக்கொத்து, தா. ம. வெள்ளைவாரணம் பதிப்பு, திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியீடு, 1983

அடிக்குறிப்பு[தொகு]

 1. திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்ட பதிப்பு,
 2. சைவப் புலவர் எல்லப்ப நாவலர் காலிங்கராயர் குடியைச் சேர்ந்தவர்.
 3. திருக்குறள் உழவு என்னும் குறட்பாக்களுக்கு இவர் எழுதியுள்ள உரையில் உழவுத்தொழில் செய்யும் பாங்கை விரிவாக எடுத்துரைக்கிறார். உழுகருவிக்குக் காடு புக்கு மரம் தடிதல், வன்பலம் மென்புலங்களில் படைக்கால் அமைத்தல் முதலானவற்றைக் குறிப்பிடுகிறார்.
 4. குறள் 774, 867 உரை
 5. குறள் 949 உரை
 6. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள் ஆர்வலர்
  புன்கணீர் பூசல் தரும். – என்னும் திருக்குறளுக்குக் காலிங்கர் தந்துள்ள உரை.
 7. குறள் 774 உரையில் புறப்பொருள் வெண்பாமாலை, தும்பைத்திணை 6 பாடலை முழுமையாக மேற்கோளாகத் தருகிறார்.
 8. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
  இல்லாளின் ஊடிவிடும் - என்பது குறள். 1939
  இதற்கு 'நிலமடந்தை புல்லாள் புலள விடும்' எனப் பாடம் கொண்டு உரை எழுதுகிறார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிங்கர்&oldid=2717713" இருந்து மீள்விக்கப்பட்டது