திருவள்ளுவர்
திருவள்ளுவர் | |
---|---|
![]() திருவள்ளுவரின் தற்காலத்தையச் சித்தரிப்பு | |
பிறப்பு | உறுதியாகத் தெரியவில்லை; அனேகமாக பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்கு முன்[a] பிறப்பிடம் உறுதியாகத் தெரியவில்லை; அனேகமாக மயிலாப்பூர்[1][2] |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் |
|
குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருக்குறள் |
வாழ்க்கைத் துணை | வாசுகி |
பகுதி | தொண்டை நாடு (பண்டைய தமிழகம்) |
பள்ளி | இந்திய மெய்யியல் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | ஏலேலசிங்கன் |
மொழி | பழந்தமிழ் |
முக்கிய ஆர்வங்கள் | |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | அகிம்சை, அறம் |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[7]
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.
சங்க காலப் புலவரான ஔவையார், அதியமான் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க காலப் புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரைப் பற்றிய செய்தியைத் தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டு செய்தியைக் கூறுவதால், திருவள்ளுவர் பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனாலும் மாமூலனார் பாடல் இடம்பெற்றுள்ள திருவள்ளுவமாலை தொகுக்கப்பட்ட காலம் (பொ.ஊ. 11ஆம் நூற்றாண்டு) மிகவும் பிந்தையது என்பதால், சங்க கால மாமூலனாரும் திருவள்ளுவமாலையில் இடம் பெறும் மாமூலனாரும் ஒருவர் அல்லர் என்னும் கருத்து நிலவுகிறது. திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
வாழ்க்கை[தொகு]
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்கில ஆண்டுடன் முப்பத்தொன்றைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும்.[சான்று தேவை] காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது.[8]
மா. இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் பல்வேறு சான்றுகள் மூலம் மணிமேகலை எழுதப்பட்ட காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்கிறார். சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை தக்க சான்றுகளுடன் மறுத்தும் கூறியுள்ளார். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டது என்று பல்வேறு சான்றுகளை தமிழ் ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர்.
சிறப்புப் பெயர்கள்[தொகு]
திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவை:
- தேவர்
- நாயனார்
- தெய்வப்புலவர்
- செந்நாப்போதர்
- பெருநாவலர்
- பொய்யில் புலவர்
- பொய்யாமொழிப் புலவர்
- மாதானுபங்கி
- முதற்பாவலர்
புலவர்களின் பாராட்டுகள்[தொகு]
பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம்.
இவரை,
- "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
- வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என பாரதியாரும்,
- "வள்ளுவனைப் பெற்றதால்
- பெற்றதே புகழ் வையகமே"
என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
நூல்கள்[தொகு]
இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை:
இதற்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்[8]:
"அகமகிழுமம்பிகைப் பெண்ணருளினாலே
யவனிதனில் ஞானவெட்டியருள யானும்
நிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத
நிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே"
இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
இவை போக இன்னமும் சில அற்புதமான நூல்களின் ஆசிரியர் பெயர் வள்ளுவர் எனத் தெரிய வருகிறது.
அந்த நூல்களில் முக்கியமானவை:
இந்த சுந்தர சேகரம் ஒரு முக்கியமான சோதிட (ஜியோதிஷ) நூல் ஆகும். இதில், பாரதத்தின் பண்டைய சோதிட நூல்களும், அதன் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் இல்லாத பல அரிய சூத்திரங்களும் உள்ளன.
திருவள்ளுவரும், சமயமும்[தொகு]
திருவள்ளுவரும், சைனமும்[தொகு]
திருவள்ளுவர், திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள், சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால், திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.[9]
திருவள்ளுவரும், சைவமும்[தொகு]
திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்.[10] இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள்.[11] திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், 'திருவள்ளுவர் சித்தாந்த சைவர்' எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும்[12], ஆள்வினையுடைமை[13] எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.


திருவள்ளுவர் கோயில்[தொகு]
திருவள்ளுவர் மயிலாப்பூரில், பிறந்த இடத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் என்பது கட்டப்பட்டுள்ளது. இக்கோயில், புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.
சான்றுடன் திருவள்ளுவரின் காலம்: அரை நூற்றாண்டிற்கு முன், வரலாற்று ஆசிரியர்கள் கடைச்சங்க காலத்தை கணிப்பதில் மிகவும் சிரமம் அடைந்ததாகத் தெரிகிறது. சங்க காலங்களில், புலவர்கள், அரசர்களை நேரில் சென்று புகழ்ந்து பாடியே, பரிசுகள் பெற்று வாழ்ந்துள்ளனர். மௌரியர்கள், தமிழகத்தின் மீது போர் செய்தது பற்றி சங்க காலப் புலவர்கள் மாமூலனார், கள்ளில் ஆத்திரையனார் போன்றோர் பாடியுள்ளனர். மேலும், ஊன் பொதி பசுங்குடையார், இடையன் சேந்தன் கொற்றனார், பாவைக்கொட்டிலார் போன்றோர், அப்போரில் வெற்றி பெற்றவர்கள், தமிழ் அரசர்களே என்றும், ஆயினும், சோழன் இளஞ்சேட் செண்ணி மௌரியர்களை, பாளி நகரம் வரை விரட்டிச் சென்று வென்றதாக அவ்வரசனைப் புகழ்ந்து பாடுகின்றனர். அதாவது இப்போர்கள், அப்புலவர்களின் காலத்தில் நடந்தவை எனத் தெளிவாகத் தெரிகிறது. இவை, அசோகரின் கல்வெட்டு குறிப்பின் மூலமும் தெரிய வருகிறது. மேலும், மாமூலனார், மௌரியர்களுக்கு முன்பு மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பாடியுள்ளார். இதன் மூலம், மாமூலனார் காலம் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டு. மாமூலனாரால் பாடப்பட்டவர் திருவள்ளுவர். ஆக வள்ளுவர் பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்.
மாமூலனாரின் காலம் தெரியாத காலங்களிலேயே, வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, ஆரியர்கள் பொ.ஊ.மு. 600 வாக்கில், தமிழகத்தில் நுழைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. மாமூலனார் காலம் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டது. திருவள்ளுவ மாலையில் தொகுக்கப்பட்டிருக்கும் மாமூலனார் பாடல், திருவள்ளுவரின் சாதி பற்றிப் பாடுகிறது. இதற்கு மாற்றாக, 'தங்கம் நிகர் காலம்' என்று அறியப்படும் சங்க காலத்தில் சாதி ஏற்றத்தாழ்வு இருந்ததற்கு எந்தச் சான்றுகளும் இல்லை. ஆதலால், சாதி ஏற்றத்தாழ்வு ஏற்பட்ட காலத்திற்குப் பிறகு எழுந்த மாமூலனார் என்னும் பெயரைக் கொண்டு விளங்கிய இன்னொரு புலவரைக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று இலக்குவனார் முதலிய தமிழறிஞர்கள் கூறுகிறார்கள். "திருவள்ளுவமாலை ஒரு போலிநூல். ஒருவரே பலர் பெயரில் எழுதி உருவாக்கப்பட்ட நூல்" (மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு 15 ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 85) [14] என்னும் கருத்தும் இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கது.
ஆரியனான விஜயன் என்பவன், பாண்டியன் மகளைத் திருமணம் செய்த பிறகு பொ.ஊ.மு. 543ல் இலங்கையை அடைகிறான். இவை இலங்கை நூலான மகாவம்சம் மூலம் தெரியவருகிறது. ஆக, ஆரியர்கள் பொ.ஊ.மு. 700 வாக்கில் தமிழகம் வந்திருக்க வேண்டும். திருவள்ளுவர், திருக்குறளில் 12000க்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களையும், 50க்குக் குறைவான வடமொழிச் சொற்களையும் பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆயினும், மறைமலை அடிகள், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், பாரதிதாசன் போன்றோர் மேற்கண்ட வார்த்தைகளிலும் தமிழ் வேர் சொற்கள் இருப்பதாக நிரூபிக்கின்றனர். தேவநேயப் பாவாணர் 16 (வடமொழிச்) சொற்கள் இருப்பதாகவும், சி. இலக்குவனார் 10க்குக் குறைவாக இருப்பதாகக் கூறுவதும் கவனிக்கத்தக்கது. ஆனால், தேவநேயப் பாவாணரின் மாணவரும் தமிழறிஞருமாகிய இரா. இளங்குமரன் மற்றும் புலவர் குழந்தையும், திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூல் என்று சொல்கின்றனர். மேலும், ரிக் வேதத்தில் இந்திரனைப் பற்றிய குறிப்பும், ஆரியர்கள், தமிழகம் நுழைந்த பிறகு, இந்திரனைப் பற்றிய குறிப்பும் ஒப்பிடுகையில் திருவள்ளுவர், திருக்குறளை, ஆரியர்கள் தமிழகம் நுழைவதற்கு முன்பே எழுதி முடித்திருக்க வேண்டும். இவ்வாறு வள்ளுவரின் குறள்களில் உள்ள கருத்துகள் மற்றும் அர்த்தங்கள் மூலமாகவே பல மறைக்கப்பட்ட உண்மைகள் தெரிய வருகின்றன. இதன் மூலம், வள்ளுவர் காலம், குறைந்தது பொ.ஊ.மு. 8-7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாகவே இருக்க வேண்டும்.
வள்ளுவரின் உருவம்[தொகு]


பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கிவிட்டன. பலர் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டனர். 1950களின் பிற்பகுதியில், தற்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியைத் துவங்கியவர் கவிஞர் பாரதிதாசன் ஆவார். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இராமச்செல்வன் என்பவருடன் சேர்ந்துவந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை இராமச்செல்வன் ஏற்றுகொண்டார்.[15]
பின்னர் வேணுகோபால் சர்மா தான் வரைந்த படத்தை முடித்த பிறகு, நாகேசுவரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்தப் படத்தை வைத்தார். அப்போது காமராஜர், கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.
பிறகு இந்தப் படம், 1960இல் கா. ந. அண்ணாதுரையால், காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது. பின்பு 1964 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், வேணுகோபால் சர்மா வரைந்த, திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வரான அண்ணாதுரை இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.
பிறகு இதே படம், இந்திய அரசால் அஞ்சல் தலையாகவும் வெளியிடப்பட்டது. 1995 இல் தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை ஒட்டி இந்திய அரசால் இதே படத்தை அடிப்படையாக கொண்ட இந்திய இரண்டு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
நினைவுச் சின்னங்கள்[தொகு]

இந்தியாவின் தென் கோடியில் மு.கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர் சிற்பி கணபதி ஸ்தபதி என்பவர்.
சென்னையில் வள்ளுவர் நினைவாக வள்ளுவர் கோட்டம் என்ற நினைவிடம் ஒன்று தமிழ்நாடு அரசால் 1973-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு திருவாரூர் கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவுச் சின்னமும் உள்ளது.
1960இல் இந்திய அரசு திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
குறிப்புகள்[தொகு]
a. ^ வள்ளுவரின் காலம் பொ.ஊ.மு. நான்காம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டு என்று பாரம்பரியமாகவும் மொழியியல் பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு பகுப்பாய்வு முறைகளின் அடிப்படையிலும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவரது காலம் பொ.ஊ.மு. 31 என்று தமிழக அரசால் 1921-ல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் வள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.[16]
மேற்கோள்கள்[தொகு]

- ↑ Waghorne, 2004, ப. 120–125.
- ↑ Muthiah, 2014, ப. 232.
- ↑ P. R. Natarajan 2008, ப. 2.
- ↑ Zvelebil 1973, ப. 157–171.
- ↑ Zvelebil 1975, ப. 123–127.
- ↑ 6.0 6.1 Lal 1992, ப. 4333–4334, 4341–4342.
- ↑ "Dalithmurasu – Children – Education – Study – Sports". www.keetru.com. http://www.keetru.com/dalithmurasu/jul08/thiruvalluvar.php.
- ↑ 8.0 8.1 The Tamil Plutach: containing a summary account of the lives of the poets and poetesses of southern India and Ceylon from the earliest to the present times, with select specimens of their compositions, Page 102, Simon Casie Chitty – January 1, 1859. Ripley & Strong, printers – Publisher
- ↑ "Thiruvalluvar scholar". https://www.thehindu.com/news/national/tamil-nadu/thiruvalluvars-religion-a-subject-of-scholarly-debate/article29892739.ece.
- ↑ சைவ நற்சிந்தனைகள் - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
- ↑ பெரியார். "keetru.com". www.keetru.com. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10996&Itemid=139.
- ↑ அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். பொருள்: பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
- ↑ மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். பொருள்: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
- ↑ திருவள்ளுவமாலை ஒரு போலிநூல். ஒருவரே பலர் பெயரில் எழுதி உருவாக்கப்பட்ட நூல் (மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு 15 ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 85)
- ↑ "திருவள்ளுவரின் உருவம் உருவானது எப்படி? இதுவரை எத்தனை உருவங்களில் அவர் வரையப்பட்டுள்ளார்?". https://www.bbc.com/tamil/india-50312020. பிபிசி தமிழ் (நவம்பர் 06, 2019)
- ↑ Arumugam, 2014, ப. 5, 15.
மேற்கோள்கள்[தொகு]
- A. Arumugam (2014). வள்ளுவம் [Valluvam]. Philosophy Textbooks Series. Chennai: Periyar E.V.Ramasamy-Nagammai Education and Research Trust.
- Joanne Punzo Waghorne (2004). Diaspora of the Gods: Modern Hindu Temples in an Urban Middle-Class World. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-515663-8. https://books.google.com/books?id=dHo8DwAAQBAJ.
- Lal, Mohan (1992). Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-1221-3. https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&pg=PA4341.
- S. Muthiah (2014). Madras Rediscovered. Chennai: EastWest. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-84030-28-5.
- P. R. Natarajan (2008) (in ta). Thirukkural: Aratthuppaal (First ). Chennai: Uma Padhippagam.
- Zvelebil, Kamil (1973). The Smile of Murugan: On Tamil Literature of South India. BRILL. பக். 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-03591-5. https://books.google.com/books?id=degUAAAAIAAJ&pg=PA155.
- Zvelebil, Kamil (1974). Tamil Literature. Otto Harrassowitz Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-447-01582-0. https://books.google.com/books?id=OQ33i496MsIC.
- Zvelebil, Kamil (1975). Tamil Literature. Handbook of Oriental Studies. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-04190-7. https://books.google.com/books?id=Kx4uqyts2t4C&pg=PA124.
- Zvelebil, Kamil (1991). Tamil Traditions on Subrahmaṇya-Murugan. Institute of Asian Studies. https://books.google.com/books?id=nnIcAAAAIAAJ.
வெளி இணைப்புகள்[தொகு]
- திருக்குறள் விக்கிபுத்தகம்.
- Tamilnation.orgல் திருவள்ளுவர் பற்றிய அறிமுகக் கட்டுரை (ஆங்கில மொழியில்)