திருவள்ளுவர் சிலை

ஆள்கூறுகள்: 8°04′40″N 77°33′14″E / 8.0777°N 77.5539°E / 8.0777; 77.5539
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அய்யன் திருவள்ளுவர் சிலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவள்ளுவர் சிலை
கன்னியாகுமரியிலுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை
ஆள்கூறுகள்8°04′40″N 77°33′14″E / 8.0777°N 77.5539°E / 8.0777; 77.5539
இடம்கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா
வடிவமைப்பாளர்கணபதி (சிற்பி)
வகைசிலை
கட்டுமானப் பொருள்பாறை மற்றும் பைஞ்சுதை
உயரம்40.5 மீட்டர்கள் (133 அடி)
துவங்கிய நாள்செப்டம்பர் 6, 1990
முடிவுற்ற நாள்1999
திறக்கப்பட்ட நாள்சனவரி 1, 2000
இரவுநேரத்தில் ஒளியூட்டப்பட்ட திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல் திறக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

விவேகானந்தர் நினைவு மண்டபம் நிறுவிய ஏக்நாத் ரானடே அதனருகே உள்ள பாறையில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கலாம் எனப் பரிந்துரைத்து முழுத் திட்டம், வரைபடம் மற்றும் மதிப்பீட்டை அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியிடம் கொடுத்தார்.[1][2] 1975ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கத் திட்டமும் அறிவிக்கப்பட்டது. 1979ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி, பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் எம்.ஜி.ஆர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். 1990-91ல் நிதிநிலையில் சிலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1990 செப்டம்பர் 6 ஆம் நாள் சிலை அமைக்கும் பணியை மு. கருணாநிதி தொடங்கிவைத்தார். மாமல்லபுர அரசு கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் கணபதி தலைமையில் சிலை செதுக்கும் பணி தொடங்கியது. ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்டுமானப்பணி கிடப்பில் போடப்பட்டது. 1997 இல் மீண்டும் புத்துயிர் பெற்று பணி விரைவு படுத்தப்பட்டது. சிலை அமைக்க கற்களை எடுத்து செல்ல கொச்சியிலிருந்து ‘பாண்டூன்’ என்ற படகு ஒன்று வாங்கப்பட்டது. மொத்தம் 3,681 கற்கள் பயன்படுத்தி ஆதாரப் பீடம் அமைக்கப்பட்டது. முகம் 10 அடி உயரம், 40 அடி உயரத்தில் கழுத்து இடுப்பு பகுதிகள், 40 அடி உயரத்தில் இடுப்பு முதல் கால்பாதம் வரையும், கொண்டை பகுதி 5 அடியிலும் அமைக்கப்பட்டு திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தை எட்டியது. மொத்தம் 6.14 கோடி செலவில் பணியாளர்கள், சிற்பிகள், உதவியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் என 150க்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றிற்கு 16 மணி நேரம் உழைப்பில் உருவானது.[3]

சிலையின் இடுப்பு வளைவு சற்று சவாலாக இருந்தாலும் நவீன அறிவியல் துணையோடு வாஸ்துசாஸ்திரப்படி இதனை மர மாதிரி உருவாக்கி அதன் எடை மையத்தை அளந்து அதன் பின்னர் கட்டப்பட்டது. கன்னியாகுமாரி, அம்பாசமுத்திரம் மற்றும் சோழிங்கநல்லூர் என மூன்று சிலைக்கூடங்களில் பணிகள் நடைபெற்றன. அம்பாசமுத்திரத்திலிருந்து 5000 டன் எடை கொண்ட கற்களும், சோழிங்கநல்லூரிலிருந்து 2000 டன் தரமான கருங்கற்களும் வந்தன. 13 அடி நீளமும் 15 டன் எடையும் கொண்ட பெரிய கற்கள் மட்டும் 3,681 ஆகும் மற்றவை மூன்றிலிருந்து எட்டு டன் எடை கொண்டவை. காது, மூக்கு, கண், வாய், நெற்றி பகுதிகளுக்கான கற்கள் கையால் செதுக்கப்பட்ட ஒரே கற்களாகும். பனைமரமும், சவுக்கு மரமும், இரும்புக் கம்பிகளும், சாரங்கட்டப் பயன்பட்டது. மொத்தம் 18,000 சவுக்கு மரங்கள் இரண்டு சரக்குந்து கொள்ளளவு கொண்ட கயிற்றால் முழு சாரமும் கட்டப்பட்டது. இறுதியாக 2000 ஜனவரி 1ம் தேதி அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார்.

சிலை அமைப்பு[தொகு]

 • திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.
 • சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 • பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
 • மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

சிலை குறிப்புகள்[தொகு]

 1. மொத்த சிலையின் உயரம் - 133 அடி
 2. சிலையின் உயரம் - 95 அடி
 3. பீடத்தின் உயரம் - 38 அடி
 4. சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
 5. சிலையின் மொத்த எடை - 7,000 டன்
 6. சிலையின் எடை - 2,500 டன்
 7. பீடத்தின் எடை - 1,500 டன்
 8. பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்

சிலை அளவுகள்[தொகு]

 1. முக உயரம் - 10 அடி
 2. கொண்டை - 3 அடி
 3. முகத்தின் நீளம் - 3 அடி
 4. தோள்பட்டை அகலம் -30 அடி
 5. கைத்தலம் - 10 அடி
 6. உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
 7. இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
 8. கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி

பராமரிப்பு[தொகு]

2004 டிசம்பர் 24 சுனாமியின் போதும் நிலநடுக்கத்தின் போதும் பாதிப்பின்றி இச்சிலை எதிர்கொண்டுள்ளது. உப்புக் காற்றிலிருந்து சிலையைப் பாதுகாக்க எப்போசைட் என்ற ரசாயனக் கலவை நான்காண்டுகளுக்கு ஒருமுறை பூச வேண்டும் என்று ஸ்தபதி கணபதி பரிந்துரைத்தார். மேலும் சிலை முழுவதும் படிந்துள்ள உப்பை உறிஞ்ச காகிதக்கூழ் பூசப்பட்டது உப்பு நீக்கப்படும். அதன் படி இச்சிலை பராமரிக்கப்படுகிறது.[4] இவ்வகையில் நான்காவது புதுப்பிக்கும் பணி 2017 அக்டோபர் 15 ஆம் நாள் நிறைவுபெற்றது.[4]

புகைப்படத்தொகுப்பு[தொகு]

சிலையின் பல்வேறு தோற்றங்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளுவர்_சிலை&oldid=3748983" இருந்து மீள்விக்கப்பட்டது