உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியப் பெருங்கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பெருங்கடல்

இந்தியப் பெருங்கடல் அல்லது இந்து மகா சமுத்திரம் (Indian Ocean) உலகின் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் இந்தியா உட்பட ஆசியா; மேற்கில் ஆப்பிரிக்கா; கிழக்கில் ஆஸ்திரேலியா; தெற்கில் தெற்குப் பெருங்கடல் (அல்லது, அன்டார்க்டிக்கா)[1] ஆகியன இதன் எல்லைகள். மகா சமுத்திரத்தின் முத்து என இலங்கைத் தீவு அழைக்கப்படுகின்றது.

இக்கடல் அகுல்யாசு முனையிலிருந்து தெற்காக ஓடும் 20° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்தும், 147° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் பெசிபிக் பெருங்கடலிலிருந்தும் பிரிக்கப்படுகின்றது. இதன் வடகோடி தோராயமாக பாரசீக வளைகுடாவிலுள்ள 30° வடக்கு அட்ச ரேகையாகும். அப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கு முனைகளில் இந்தியப் பெருங்கடலின் அகலம் ஏறக்குறைய 10000 கி.மீ ஆகும். செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு 73 556 000 ச.கி.மீ. ஆகும். சிறிய தீவுகள் கண்டங்களின் எல்லைகளை வரையறுக்கின்றன. மடகாஸ்கர், கொமொறோஸ், சிசிலீஸ், மாலத்தீவு, மோரீஷியஸ், ஆகிய தீவு நாடுகளை இக்கடல் உள்ளடக்குகிறது. இந்தோனேசியா இதன் ஒரு எல்லைப்பகுதியாக விளங்குகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா இடையே கடவுப் பாதையாக இதை பயன்படுத்துவதில் சச்சரவுகள் இருந்து வந்திருக்கிறது.

ஆனால் 1800 களின் துவக்க காலம் வரை எந்த நாடுகளும் இக்கடல் பகுதியில் வெற்றிகரமாக அதிகாரம் செலுத்தவில்லை. அதன் பின் இக்கடலை ஒட்டிய பெரும்பான்மை நிலப்பரப்புகளை ஆங்கிலேயர்கள் கட்டுப்படுத்தினர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அதிகாரம் செலுத்தி வந்தன.

சுற்றுச்சூழல்

[தொகு]

ஆப்பிரிக்கா, இந்தியா, அன்டார்டிக தட்டுகள் இந்திய பெருங்கடலில் ஒன்று சேர்கின்றன. இவைகளின் சந்திப்பு மும்பையின் அருகிலுள்ள செங்குத்தான கண்டத் திட்டிலிருந்து, தண்டுப்பொருத்து தெற்காக ஓடும் தலைகீழ் 'Y' வடிவக் கடல்-நடு மலைமுகட்டின் பிரிவுகளால் அடையாளம் காட்டப்படுகிறது. இவற்றால் உருவாகும் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு படுக்கைகள் மேலும் சிறிய படுக்கைகளாக ஆழ்-கடல் இடைவரைமேடுகளால் பிரிக்கப்படுகின்றன. இக்கடலின் கண்டவிறுதிப்பாறைகள் குறைவான அகலமுடையனவாக இருக்கின்றன. இதன் சராசரி அகலம் 200 கி.மீ ஆகும். ஒரு விதிவிலக்காக ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் இதன் அகலம் 1000 கி.மீ - ஐ தாண்டுகிறது.

இக்கடலின் சராசரி ஆழம் 3890 மீ (12,760 அடி). இந்து மகா சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதி 50° தெற்கு அட்ச ரேகைக்கு வடக்காக உள்ள ஜாவா அகழியாகும். இதன் ஆழம் 7450 மீ, அதாவது 24,442 அடியாக கணக்கிடப்படுகிறது. இப்படுக்கையின் 86% பீலாஜிக் படிமங்களால் மூடப்பட்டிருக்கின்றன. ஏனைய 14% சதம் பகுதிகள் மட்படிமங்களால் மூடப்பட்டிருக்கின்றன. தவிர தென் பகுதிகள் பனிப்படலங்களால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன.

தட்ப வெப்ப நிலை

[தொகு]

நில நடுக்கோட்டின் வடபகுதியின் தட்பவெப்ப நிலை பருவக்காற்று முறையால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை வடகிழக்கு காற்று கடுமையாக வீசும். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தெற்கு மற்றும் மேற்கு காற்றின் ஆதிக்கம் நீடிக்கும். அரபிக்கடலில் ஏற்படும் வன்மையான பருவக் காற்று இந்தியத் துணைக்கண்டத்துக்கு மழையை வரவழைக்கிறது. தென்னக அத்தகோளத்தில் காற்று மென்மையாக வீசினாலும் வேனில் காலங்களில் மொரீஷியஸ் பகுதியில் கடுமையான காற்று வீசுகிறது.

நீர்வள இயல்

[தொகு]
இந்தியப் பெருங்கடலின் ஆழ அளவியல் வரை படம்

இந்திய பெருங்கடலில் கலக்கும் நதிகளில் சாம்பெசி, சட்-அல்-அரபு, சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி ஆறு, ஆகியன முக்கியமானவை. நீர் ஓட்டங்கள் பெரும்பாலும் பருவக்காற்றினாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. இரண்டு பெரிய வட்ட- நீரோட்டங்கள், ஒன்று வடவத்தகோளத்தில் கடியாரப் பாதையாகவும் (வலமிருந்து இடம்) மற்றொன்று நில நடுக்கோட்டின் தெற்கில் எதிர்-கடியாரப் பாதையாகவும் (இடமிருந்து வலம்), ஓடும் இவை இரண்டும் இக்கடலின் முக்கிய கடலோட்ட வரைவுகளாகும்.

குளிர் கால பருவாக்காற்றின் போது, வடக்கு நீரோட்டங்களின் நிலை எதிர்பதமாக இருக்கும். ஆழ்கடல் ஓட்டங்கள் பெரும்பாலும் அட்லாண்டிக் பெருங்கடல், செங்கடல், அன்டார்டிக் நீரோட்டம், ஆகிய நீர் உட்புகல்களாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. 20° தெற்கு அட்ச ரேகைக்கு வடக்கில் குறைந்தபட்ச மேல்பரப்பு வெப்பநிலை 22° செல்ஷியஸாக (72 °F), இருக்கும் அதேவேளையில், கிழக்கில் 28° செல்ஷியஸை (82 °F) தாண்டுகிறது. 40° தெற்கு அட்ச ரேகைக்கு தெற்கில் வெப்பநிலை சட்டென்று இறங்குகிறது. மேற்பரப்பு நீரின் உப்புத்தன்மை 1000 - க்கு 32 முதல் 37 பகுதிகள். இது அரபிக்கடல் மற்றும் தெற்கு அப்பிரிக்காவுக்கும் தென்மேற்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட ஒரு மண்டலத்தில் காணப்படும் மிகப் பெரிய அளவாகும். பனித் தொகுதிகள் மற்றும் பனிப் பாறைகள் 65° தெற்கு அட்ச ரேகைக்கு தெற்கில் ஆண்டு முழுவதும் காணப்படுகிறது. பொதுவாக இவைகளின் புழக்கத்தின் வடக்கு எல்லை 45° தெற்கு அட்ச ரேகையாகும்.

பொருளாதாரம்

[தொகு]

மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, கிழக்காசியா ஆகிய பகுதிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் முக்கிய கடல்ப்பாதையை இந்தியப் பெருங்கடல் தந்திருக்கிறது. எரிஎண்ணை வர்த்தகத்தில், குறிப்பாக இந்தோனேசியா, பாரசீக வளைகுடா பகுதிகளின் எண்ணைக் கிணறுகளிலிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு பங்கிடப்படும் எண்ணைப்பொருட்கள் இப்பாதை மூலம் கொண்டு செல்லப்படுவதால் , இக்கடற்பாதைகளுக்கு பெட்ரோலிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு உண்டு. பெரும்பகுதி ஹைட்ரொ-கார்பன்கள் சவுதி அரேபியா, ஈரான், இந்தியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்; இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கரைப்பகுதிகளிலிருந்தே பூமியிலிருந்து எடுக்கப்படுகின்றன. மேலும் உலகின் 40% எரிஎண்ணேய் இக்கடலின் கரைப்பகுதிகளிலிருந்து எடுக்கப்படுவதாக கணக்கிடப்படுகிறது. தாது வளம் மிக்க கடற்கரை மணல்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அதிகமாக காணப்படும் படிமங்கள் ஆகியன இக்கடலை ஒட்டிய நாடுகளான இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளால் முழுமூச்சில் கைவசப்படுத்தப்படுகின்றன.

இக்கடலின் வெப்பத்தன்மை காரணமாக பைட்டொபிளாங்டன் உற்பத்தி; சில வடபகுதிகளின் ஓரம் மற்றும் சில இதர பகுதிகள் நீங்கலாக பெருமளவில் குறைகின்றன. அதனால் இக்கடலில் உயிர்வாழ்க்கை பெருமளவில் குறைகின்றன. இக்கடலிலிருந்து கிடைக்கும் மீன் வகைகள் இதை ஒட்டிய நாட்டுகளின் பயன்பாட்டுக்கும் ஏற்றுமதிக்கும் பெருமளவில் பயன்படுகின்றன. மேலும் ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் மீன்பிடிக் கப்பல்களும் (குறிப்பாக சில வகை மீன்களுக்காக) இக்கடல் பகுதியை முற்றுகை இடுகின்றன.

வரலாறு

[தொகு]

உலகின் மிகப் பழமையான நாகரீகங்களான சுமேரியா, எகிப்து, சிந்து வெளி ஆகிய டைக்ரிஸ்-யூப்ரடெஸ், நைல், சிந்து நதிகளின் சமவெளிகளில் உருவான நாகரீகங்களும் தென்கிழக்கு அசியாவில் உருவான நாகரீகமும் இந்தியப் பெருங்கடலின் சுற்று வட்டார பகுதிகளிலேயே வளர்ச்சியடைந்தன. புன்ட் பகுதிக்கு (தற்போதைய சொமாலியாவாக கருதப்படுகிறது) செல்லும் பொருட்டு இக்கடலில் அனுப்பப்பட்ட எகிப்தியர்களின் முதல் தலைமுறையினரின் (ஏறக்குறைய பொ.ஊ.மு. 3000) மாலுமிகள் அனுப்பப்பட்டார்கள். பின்னர், திரும்பச்சென்ற கப்பல்கள் நிறைய தங்கமும், நறுமணப்பொருட்களும் கொண்டு சென்றார்கள். அறியப்பட்டவைகளுள் மிகப்பழமையான கடல் வணிகம், மெசப்பொட்டாமியாவுக்கும் சிந்து வெளிக்குமிடையே இந்தக் கடல் வழியாகத்தான் நடந்தது. பொனீசியர்கள் ஏறக்குறைய பொ.ஊ.மு. 3000 அளவில் இப்பகுதியில் கால்வைத்திருக்கலாம். ஆனால் குடியேற்றங்கள் இல்லை.

இந்திய பெருங்கடல் மிக அமைதியாகவும், அதனால் வர்த்தகத்துக்கு ஏற்ற இடமாக அட்லாண்டிக் மற்றும் பெசிபிக் கடல்களுக்கு முன்பே திகழ்ந்தன. சக்திவாய்ந்த பருவக்காற்றுகள், அப்பருவத்தின் முதல் கட்டத்தில் கப்பல்களை எளிதில் மேற்கு நோக்கி செலுத்தவும், பின் சில மாதங்கள் கழித்து அடுத்தகட்டத்தில் மீண்டும் கிழக்குக்கு திரும்பவும் உறுதுணையாக இருந்தன. இதுவே இந்தொனேசிய மக்கள் இந்திய பெருங்கடலைக் கடந்து மடகாஸ்கர் பகுதிகளில் குடியேற ஏதுவாக அமைந்தது.

பொ.ஊ.மு. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் (Cyzicus) சிசீக்கஸ் இன் (Eudoxus) யுடோக்சஸே இந்தியக் கடலைக் கடந்த முதல் கிரேக்கராவார். ஏறக்குறைய இதே காலகட்டத்தில் கிப்பாலஸ் அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு நேரடிப் பாதையை கண்டுபிடித்தார் என கருதப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் ரோமர், எகிப்தியர் மற்றும் தென் இந்தியாவின் தமிழ் அரசாட்சிகளான சேர சோழ பாண்டியர்களுக்கிடையில் ஆழ்ந்த வர்த்தக உறவுகள் வளர்ந்தது. இந்தொனேசிய மக்களைப்போன்று மேற்கத்திய மாலுமிகளும் இந்த பருவக்காற்றை பயன் படுத்தி இந்து மகா சமுத்திரத்தை கடந்தனர். மேலும் "தி பெரிப்லஸ் ஆப் தி எரித்ரயென் சீ " என்ற புத்தகம் பொ.ஊ. 70 கால கட்டத்திலிருந்த இக்கடல் பாதையையும், துறைமுகங்களையும், வர்த்தகப் பொருட்களையும், இவை சார்ந்த செய்திகளையும் விவரிக்கிறது.

வாஸ்கோ ட காமா 1497-ல் குட் கோப் முனையைச் சுற்றி இந்தியாவுக்கு கப்பலில் வந்தார். இதைச் செய்யும் முதல் ஐரோப்பியர் இவராவார். அதன் பின் ஐரோப்பிய கப்பல்கள் பெரும் ஆயுதங்களுடன் வேகமாக வர்த்தகத்தை பெருக்க வந்தது. பின்னர் டச்சு கிழக்கிந்தியா கம்பெனி (1602-1798) இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கிழக்கத்திய நாடுகளுடனான வர்த்தகத்தின் பெரும்பான்மை சக்தியாக திகழந்தது. அதன் பின் பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் இப்பகுதிகளில் தங்கள் கம்பெனிகளை நிறுவினர். பின்னர் ஏறக்குறைய 1815 - ல் ஆங்கிலேயர்கள் கைவசமாகியது.

1869 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பின்னர் ஐரோப்பியர்களுக்கு கிழக்கு மீதான ஆவல் அதிகரித்தது. ஆனால் யாரும் வர்த்தகத்தில் பெருமளவு வெற்றிகொள்ள முடியவில்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் இப்பகுதியிலிருந்து பின்வாங்கிய பின்னரும் அத்தகைய ஒரு ஆதிக்கத்தை இந்துக் கடலின் பால் இந்தியா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, ஆகிய நாடுகளால் செலுத்த முடியவில்லை. இருந்தபோது யு.எஸ்.எஸ்.ஆரும், ஐக்கிய அமேரிக்காவும் இக்கடல் பகுதிகளில் கப்பற் படை தளங்களை அமைக்க பல முயற்சிகள் எடுத்தன. ஆனால் இந்தியக் கடலை ஒட்டிய வளரும் நாடுகள் இந்தியக் கடற் பகுதியை 'அமைதிப் பகுதியாக' ஆக்க முயன்றன. இதன் மூலம் இக்கடலை அனைவரும் சாதாரணமாக வர்த்தகத்துக்கு பயன்படுத்த முயர்ச்சித்தன. இருந்தாலும் இக்கடலின் மையப்பகுதியில் டீகோ கார்சியா என்னும் இடத்தில் ஆங்கிலேயர்களும், ஐக்கிய அமேரிக்காவும் தற்போதும் கப்பற்படை தளம் அமைத்துள்ளது.

மேலும் டிசம்பர் 26, 2004 அன்று சுமத்திரா தீவுக்கு அருகாமையில் கடலுக்குள் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக எழுந்த சுனாமிப் பேரலை இந்து மகா சமுத்திரத்தை ஒட்டிய அனைத்து நாடுகளையும் தாக்கியதுடன் 226,000 பேரின் உயிரையும் பத்து லட்சம் பேரின் வீடுகளையும் நாசம் செய்தது.

தகவல்கள்

[தொகு]

சர்வதேச நீர் பரப்பாராய்ச்சி அமைப்பு இந்தியப்பெருங்கடலின் தென் பகுதியப் பிரித்து அன்டார்டிக் கடலை உருவாக்கியது. இப்புதிய கடல் அன்டார்டிகாவின் கடற்கரையிலிருந்து துவங்குகிறது. இது அன்டார்டிகா ஒப்பந்தத்தோடு இணைந்ததாகும். இதன் பிறகும் இந்தியப் பெருங்கடல் உலகின் ஐந்து கடல்களில் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாக விளங்குகிறது.

மேலும் அந்தமான் கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா, ஆஸ்திரேலியப் பெரும் விரிகுடா, ஏதென் வளைகுடா, ஓமன் வளைகுடா, லட்சத்தீவு கடல், மொசாம்பிக் கடல், பாரசீக வளைகுடா, செங்கடல், மலாக்கா நீரிணைவு, மற்றும் பல துணை நீர் நிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்து மகா சமுத்திரம் 66,526 கி.மீ கரைப்பகுதியை உடையதாகும்.

முக்கியத் துறைமுகங்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Indian Ocean' — Merriam-Webster Dictionary Online". பார்க்கப்பட்ட நாள் 2012-07-07. ocean E of Africa, S of Asia, W of Australia, & N of Antarctica area ab 28,350,500 square miles (73,427,795 square kilometers)


பெருங்கடல்கள்
அத்திலாந்திக்குப் பெருங்கடல்ஆர்க்டிக் பெருங்கடல்இந்தியப் பெருங்கடல்தென்முனைப் பெருங்கடல்அமைதிப் பெருங்கடல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியப்_பெருங்கடல்&oldid=3949593" இலிருந்து மீள்விக்கப்பட்டது