மணக்குடவர் (திருக்குறள் உரையாசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணக்குடவர் திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரை ஆசிரியர்களுள் ஒருவர். இவர் மணக்குடி என்ற ஊரில் பிறந்தவர் என்றும் மணக்குடியர் என்பது பின்னாளில் மணக்குடவர் என்று மருவிற்று என்றும் கருதப்படுகிறது.

திருக்குறள் பழைய உரைகளில் காலத்தால் முந்தியது மணக்குடவர் உரை. இதன் காலம் 10 ஆம் நூற்றாண்டு. [1] வடமொழிக் கருத்தைப் புகுத்தாது தமிழ் முறைப்படி உரை எழுதியவர் என்று இவர் புகழப்படுகிறார்.[2]

உரைப்பாங்கு [3][தொகு]

 • இவரது உரை திருக்குறளில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் விளங்குமாறு எழுதப்பட்டுள்ளது.
 • அதிகாரங்களின் கருத்துரையாக 'அருளுடைமை வேண்டும்', 'நடுவுநிலைமை வேண்டும்' என்பது போன்ற தொடர்களைத் தருகிறார்.
 • அதிகாரத் தொகுப்புரை தருகிறார். 'கயமை' என்னும் அதிகாரத்துக்குத் தரப்பட்டுள்ள தொகுப்புரை இது.
உறுப்பு ஒத்துப் குணம் ஒவ்வாமையின் கயவர் மக்கள் அல்லர் ஆயினார். வேண்டியன செய்வார். தாம் அறியார். இயல்பான ஒழுக்கம் இலர். நிறை இலர். அடக்கம் இலர். அழுக்காறு உடையர். இரப்பார்க்குக் கொடார். ஒறுப்பார்க்குப் கொடுப்பர். நிலை இலர். - இவற்றில் ஒவ்வொரு குறளின் கருத்தும் இரண்டே சொற்களால் கூறப்பட்டுள்ளன.
 • 'மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல்' என்னும் தொடரை இவர் தோழி கூற்று என்கிறார். [4] இதற்கு இவர் தரும் விளக்கம்
நும்மால் (தலைவனால்) காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ் வருத்தம் ஒக்கும். பெண்டிற்கு இப் பெண்மையாகிய மடல் ஏறாததே குறை என்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற் பொருட்டுத் தோழி கூறியது.
 • அதிகாரத்தில் உள்ள குறள்களின் கருத்தைச் தொகுத்துச் சுட்டுகிறார். 'ஒற்றாடல்' அதிகாரத்தில் இவர் தொகுத்துக் காட்டியவை.
இது ஒற்று வேண்டும் என்றது. இவை மூன்றும் ஒற்றிலக்கணம் கூறின. இவை இரண்டும் ஒற்று வேண்டுமிடம் கூறின. இவை இரண்டும் ஒற்றரை ஆளும் திறம் கூறின. இது பிறர் அறியாமல் சிறப்புச் செய்யவேண்டும் என்பது. இது ஒற்று இன்மையால் வரும் குற்றம் கூறியது.
 • இவர் கூறும் சில மருத்துவ வழக்காறுகள்
நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மில் அளவு ஒக்குமாயின் கொல்லும். [5]
பலாப்பழம் தின்று பின் சுக்குத் தின்றால் தன் உயிர்க்கு வரும் இடையூறுஇ இல்லை [6]
 • தெண்ணீர் அடுபுற்கை - மோரினும் காடியினுப் அடப்பெறாதும் தெளிந்த தீரினாலே அட்ட புற்கை [7]
 • மருந்து என்னும் அதிகாரத்தில் 'கற்றான்' என்பதற்கு ஆயுள் வேதம் கற்றான் என உரை எழுதியுள்ளார்.
 • இவர் காட்டியுள்ள புராணக் கதைகளில் சில
அருச்சுணன் தவம் மறந்து அல்லவை செய்தான்
வெகுளியால் நகுஷன் பெரும்பாம்பு ஆயினான்
நோற்றலால் மார்க்கண்டேயன் கூற்றத்தைத் [8] தப்பினான்.
ஐந்து அவித்தான் ஆற்றல் - இவ்வளவில் கண் மிக்க தவம் செய்வார் உளரானால் இந்திரன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்கும்.
 • உரையில் காணப்படும் சில அருஞ்சொற்கள்
அட்டாலம் = அட்டால மண்டபம்
நெத்தம் = கறவாடு பலகை

மேற்கோள்[தொகு]

 1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 95. 
 2. தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி
 3. அதிகாரத்தில் குறள் வைக்கப்பட்டுள்ள வரிசைமுறை பிற்காலப் பரிமேலழகர் வைப்புமுறையிலிருந்து மாறுபட்டது என்னும் செய்தியை உள்ளத்தில் கொண்டு இவரது உரையை அணுகவேண்டும்
 4. பரிமேலழகர் தலைவன் கூற்று என்கிறார்
 5. திருக்குறள் 943
 6. திருக்குறள் 944
 7. செறிவு இன்றித் தெண்ணீர் போன்ற கூழ் என்றும், பசை பெறாப் புற்கை அன்றி வெறும் தெண்ணீர் புற்கை என்றும் பிறர் உரை கண்டுள்ளனர்
 8. கூற்றத்தின் பிடியிலிருந்து