உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சதந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமசுகிருதத்தில் உள்ள மிகப் பழமையான பஞ்சதந்திர நூலின் முதல் பக்கம்[1]

பஞ்சதந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கதைகள் செய்யுள்களின் தொகுப்பாகும். இது விஷ்ணு சர்மா என்பவரால் கி.மு 200-ல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பஞ்ச தந்திரக் கதைகள் பொழுது போக்குக் கதைகள்போலத் தோன்றினும் அரசியற் சூழ்ச்சி பற்றிய மூலக் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும் கதைகளாகவே இருக்கின்றன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அரசியற் சூழ்ச்சியின் ஏதாவது ஒரு விளக்கத்தை அளிப்பதாகவே இருக்கிறது. இதில் அரசநீதியின் மையக்கருத்துக்கள் விலங்குக் கதைகளின் மூலம் சொல்லியுள்ளன. இதில் ஐந்து முதன்மையான கருத்துக்கள் சொல்லியுள்ளன. அவையாவன:

  • நட்புப் பிரிவினை (மித்ர பேதம்) - நட்பைப் பிரிக்கை (Mitra-bheda)
  • நட்புப் பேறு - (மித்ர லாபம்) - நட்பைப் பெறுகை (Mitra-samprāpti)
  • நட்பு வேறுபாடு (சுஹ்ருத பேதம்) - பகை நட்டல், அடுத்துக் கெடுக்கை (Kākolūkīyam)
  • இழப்பு (விக்ரஹம்) - பெற்றதை இழக்கை (Labdhapraṇāśam)
  • ஆராயாது செய்கை/அடாவடியான செயல் (Aparīkṣitakārakaṃ)

பஞ்சதந்திரக் கதைகளுக்கான வரலாற்றுக் கதை

[தொகு]

தென்னிந்தியாவில் மகிலாரோப்பொயம் என்று ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் அமரசக்தி எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கு பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி எனும் மூன்று மகன்கள் இருந்தனர். இவர்கள் மூவருமே முட்டாள்கள், குறும்புக்காரர்கள், தொல்லை தருபவர்கள். இவர்களுக்குக் கல்வி பயில்வதில் சிறிது கூட ஆர்வமோ, ஆசையோ கிடையாது.

மன்னன் அமரசக்தி தனது மகன்களின் இந்த தீயகுணங்களைக் கண்டு மனம் வெதும்பினான். தன் மகன்கள் கல்வி கற்கவில்லையே எனக் கவலையில் ஆழ்ந்தான். இந்தக் கவலையை ஒரு நாள் அரசவையில் வெளியிட்டு மனம் வருந்தினான். அரசனின் வருத்தத்தை அறிந்து சபையினர் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

இந்நிலையில் விஷ்ணு சர்மா என்கிற ஒரு பண்டிதர், “அரச குமாரர்களை என்னிடம் விட்டு விடுங்கள். ஆறே மாதங்களுக்குள் நான் அவர்களுக்கு அரசியல் குறித்த இரகசியங்களை எல்லாம் கற்பித்து விடுகிறேன்” என்றார்.

மன்னன் அமரசக்தியும் இதற்கு ஒப்புக் கொண்டான். மூன்று அரச குமாரர்களும் விஷ்ணு சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விஷ்ணு சர்மா அந்த மூன்று அரச குமாரர்களையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு எளிமையாகப் புரிந்து கொள்ளும்படியான, அவர்களது மனத்தைக் கவரும் கதைகளைக் கூறினார். அந்தக் கதைகள் அனைத்தும் சுவையாக இருந்தன. அவற்றை அரச குமாரர்கள் மகிழ்ச்சியுடன் கேட்டனர். இந்தக் கதைகள் மூலமாக விஷ்ணு சர்மா அவர்களுக்கு அரசியல் பற்றிய உத்திகளையும், இரகசியங்களையும் சொல்லிக் கொடுத்தார். ஆறு மாதங்களுக்குள்ளாக முன்று அரச குமாரர்களும் அரசியலில் தேர்ச்சி பெற்றவர்களாக அரண்மனைக்குத் திரும்பிச் சென்றனர்.

விஷ்ணு சர்மா அரச குமாரர்களுக்குச் சொன்ன கதைகள் “பஞ்ச தந்திரக் கதைகள்” என அழைக்கப்படுகின்றன.

பஞ்சதந்திரக் கதைத் தொகுப்புகள்

[தொகு]

பஞ்சதந்திரக் கதைத் தொகுப்பில் முதல் பாகத்தில் 34 கதைகள், இரண்டாம் பாகத்தில் 10 கதைகள், மூன்றாம் பாகத்தில் 18 கதைகள், நான்காம் பாகத்தில் 13 கதைகள், ஐந்தாம் பாகத்தில் 12 கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பாகத்திலும் வரும் முதல் கதைதான் அந்தப் பாகத்தின் முக்கியக் கதையாகும். அந்தக் கதைக்குத் துணைக்கதைகள் உள்ளன. முதல் கதையும், அதற்குத் தொடர்ச்சியாக வரும் துணைக்கதைகளும், கடைசியில் முதல் கதையின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கூறுவதாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

பஞ்சதந்திரக் கதைப் பாத்திரங்கள்

[தொகு]

பஞ்சதந்திரக் கதையின் பாத்திரங்கள் பெரும்பான்மையாக மிருகங்கள் அல்லது பறவைகளாகவே இருக்கின்றன. இருப்பினும் இப்பாத்திரங்கள் கதைக்குச் சுவையூட்டுவதாகவே இருக்கின்றன. முதலாவதாக வரும் மித்திரபேதம் என்னும் நட்புப் பிரித்தலில் இடம்பெறும் 'சிங்கம் எருதின் ஒலி கேட்டு மயங்கியது' கதையின் பாத்திரங்கள்:- 1.மகிழாருப்பியம் என்ற பட்டண வணிகன் வர்த்தமானன் 2.சஞ்சீவகன்,நந்தகன் எனும் எருதுகள். 3.பிங்களன் எனும் சிங்கம் 4.பிங்களனின் மந்திரிகுமாரர்களாகிய கரடகன், தமனன் எனூம் நரிகள் 5.(குரங்கு ஆப்பைப் பிடுங்கின கதையின்)மகததேச ஸுதத்தன் 6.ஆப்பை பிடுங்கிய குரங்கு 7.சந்நியாசி தேவசர்மா,திருடன் ஆஷாடபூதி,பாம்பு, மீன்,நண்டு, கொக்கு (நம்பி மோசம் போன கதை) 8.(முயல் சிங்கத்தைக் கொன்ற கதை)மதோன்மத்தன் எனும் சிங்கம்,முயல் 9.(சீலைப்பேன் மூட்டைப்பூச்சியால் மாண்ட கதை)மந்தவிசர்ப்பணி எனும் சீலைப்பேன்,டிண்டிபன் எனும் மூட்டைப்பூச்சி,அரசன் 10.(காகம் முதலானவை ஒட்டகத்தை வஞ்சனையால் கொன்ற கதை) மதோற்கடன் எனும் சிங்கம், மந்திரி காக்கை,மந்தானகன் எனும் ஒட்டகம் <ref>பஞ்சதந்திரம்-வித்வான் தாண்டவராய முதலியார்-ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி-மதராஸ்-1913<\ref>


வெளி இணைப்புகள்

[தொகு]
  1. Hertel, Johannes (1915), The Panchatantra : a collection of ancient Hindu tales in its oldest recension, the Kashmirian, entitled Tantrakhyayika பரணிடப்பட்டது 30 ஆகத்து 2024 at the வந்தவழி இயந்திரம், Harvard University Press, p. 1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சதந்திரம்&oldid=4225968" இலிருந்து மீள்விக்கப்பட்டது