எழுத்தோலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓலைச் சுவடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பாறைகளில் எழுதி வந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை பனையோலையில் எழுதுகின்ற முறை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்றன. எழுத்தும் ஓலையும் இணைந்த எழுத்தோலையையும், ஓலைக் கணக்கரையும் அவர் காலை முதலாக மாலை ஈறாகக் கணக்கெழுதும் காட்சியை நாலடியார் (253-3 மற்றும் 397-1)தெரிவிக்கிறது.

எழுத்தோலையின் அளவு[தொகு]

தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி

ஒவ்வொருவருக்கும் பாட்டெழுதும் போது குறிப்பிட்ட அளவு (விரற்கடை அளவு) எழுத்தோலையைப் பயன்படுத்த வேண்டுமென்பதைக் கூட பாட்டியல் நூல்கள் வரையறை செய்துள்ளன. இதன்படி நான்மறையாளர்க்கு 24 விரற்றானமும், அரசருக்கு 20 விரற்றானமும்,வணிகருக்கு 18 விரற்றானமும், வேளாளர்க்கு 12 விரற்றானமும் இருக்க வேண்டும் என்று கீழ்காணும் கல்லாடனார் வெண்பாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்
இந்த விரல் வணிகர்க் கெண்ணிரண்டாம் - முந்துவிரல்
வேளாளர்க் கீராறாய் வெள்ளோலை வேயனைய
தோளாய் அறிந் தொகுத்து” [1]
  • இந்தக் கருத்து பொய்கையார் கலாவியலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஓலைய திலக்கணம் உரைக்குங் காலை
நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
வணிகர்க் கீரெண் விரலாகும்மே
சாணென மொழிய சூத்திரக் களவே.” [2]

எழுத்தோலைகளின் வகைகள்[தொகு]

எழுத்தோலைகளில் அமைப்பு, செய்தி போன்றவைகளுக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட்டன.

அமைப்பு ஓலைகளின் வகைகள்[தொகு]

நீட்டோலை[தொகு]

திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை “நீட்டோலை” என அழைக்கப்பட்டன.

மூல ஓலை[தொகு]

ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக் கொள்ளும் முறை அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இந்த ஓலைகளை “மூல ஓலை” என அழைத்தனர்.

சுருள் ஓலை[தொகு]

ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணிந்து வந்த சுருள் வடிவமான காதோலை போல் சுருட்டி வைத்துப் பாதுகாக்கப்பட்டன இவை “சுருள் ஓலைகள்” எனப்பட்டன. இதை “சுருள்பெறு மடியை நீக்கி” என பெரியபுராணத்திலுள்ள பாடல் மூலம் அறிய முடிகிறது. [3]

குற்றமற்ற ஓலை[தொகு]

மூளியும் பிளப்பும் இல்லாத ஓலை “குற்றமற்ற ஓலை” எனப்பட்டது.[4]

செய்தி ஓலைகளின் வகைகள்[தொகு]

எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக் கொண்டும் அவை தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டன.

நாளோலை[தொகு]

தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை “நாளோலை” எனப்பட்டது.

திருமந்திர ஓலை[தொகு]

அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை “திருமந்திர ஓலை” எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார். அரசனது ஆணைதாங்கிய எனப் பொருள்படும் “கோனோலை”, “சோழகோன் ஓலை” போன்ற சொற்கள் செப்பேடுகளில் காணப்படுகின்றன.[5] i love tamil now.

மணவினை ஓலை[தொகு]

திருமணச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை “மணவினை ஓலை” எனப்பட்டது. இதன் மூலம் திருமணச் செய்தி உற்றார் உறவினர்க்குத் தெரியப்படுத்தியது.[6]

சாவோலை[தொகு]

இறப்புச் செய்திகளைக் கொண்டு சென்ற ஓலை “சாவோலை” எனப்பட்டன.

பண்டைய எழுதுபொருட்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. நவநீதப்பாட்டியல், பக் 83, உ.வே.சா. நூலகம், 1961
  2. நவநீதப்பாட்டியல், பக் 82, உ.வே.சா. நூலகம், 1961
  3. பெரியபுராணம், தடு.58
  4. நவநீதப்பாட்டியல்,92
  5. நடன காசிநாதன், கல்லெழுக்கலை பக்.136, மணிவாசகர் பதிப்பகம், 1989 முதற்பதிப்பு
  6. பெரியபுராணம், தடு. 10

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்தோலை&oldid=2744635" இருந்து மீள்விக்கப்பட்டது