எழுத்தோலை
பாறைகளில் எழுதி வந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை பனையோலையில் எழுதுகின்ற முறை ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்றன. நூலாக எழுதப்பட்ட ஓலைகள் கட்டித் தொகுக்கப்பட்டன. இவற்றைப் பொத்தகம் என்றும், [1] பொத்தகக் கவளி என்றும் [2] [3] வழங்குவர். எழுத்தும் ஓலையும் இணைந்த எழுத்தோலையையும், ஓலைக் கணக்கரையும் அவர் காலை முதலாக மாலை ஈறாகக் கணக்கெழுதும் காட்சியை நாலடியார் [4] தெரிவிக்கிறது.
சுவடி படைக்கும் தொழில்
[தொகு]பனைமட்டையிலிருந்து எழுதத் ஓலை உருவாக்குவது தொழில் நுட்பம் மிக்க ஒரு கலை.
இளம்பதமுள்ள பனையோலையைப் பொறுக்கி எடுப்பர். அளவுக்குத் தக்கவாறு நறுக்குவர். குழந்தைக்கு நகம் வெட்டுவது போல் நளினமாக அதன் நரம்பைக் களைவர். நிழலில் உலர்த்துவர். பனியில் பதப்படுத்துவர். இளக்கமுறுமாறு இளஞ்சூட்டு வெந்நீரில் வெதுப்புவர். பளபளப்பான சங்கு அல்லது கல்லைக் கையில் வைத்துக்கொண்டு ஓலையை அழுத்தி அழுத்தித் தேய்த்து அழகுபடுத்துவர். பக்குவமாகப் பாடம் செய்வர். (பாடம் செய்வது என்பது ஓலைகளை அடுக்கிக் கட்டி முறுக்காமல் இருக்கச் செய்தல்.) மஞ்சள் நீரிலோ, அரிசிக் கஞ்சியிலோ ஊறவைப்பர். சுவடிக் கட்டில் இரண்டு இடத்தில் சுள்ளாணியால் துளை போடுவர். ஒரு முனையில் ஒரு துளையில் கயிறு கோத்து ஒலையைப் பிரித்துப் புரட்டுமாறு தளர்வாகக் கட்டிக்கொள்வர். ஒவ்வொரு ஓலைமீதும் மஞ்சளையும் வேப்பெண்ணெயையும் கலந்து பூசுவர். கோவை இலை, ஊமத்தை இலை அகியவற்றின் சாறுகளைப் பூசுவர். மாவிலை, அறுகம்புல் ஆகியவற்றை எரித்த கரியை மையாகத் தடவுவர். இதன் மேல்தான் எழுத்தாணி கொண்டு எழுதுவர். ஓலையின் மறுமுனைத் துளையிலும் கயிறு கோத்துப் பொத்தகமாகக் கட்டுவர். [5]
எழுத்தோலையின் அளவு
[தொகு]ஒவ்வொருவருக்கும் பாட்டெழுதும் போது குறிப்பிட்ட அளவு (விரற்கடை அளவு) எழுத்தோலையைப் பயன்படுத்த வேண்டுமென்பதைக் கூட பாட்டியல் நூல்கள் வரையறை செய்துள்ளன. இதன்படி நான்மறையாளர்க்கு 24 விரற்றானமும், அரசருக்கு 20 விரற்றானமும்,வணிகருக்கு 18 விரற்றானமும், வேளாளர்க்கு 12 விரற்றானமும் இருக்க வேண்டும் என்று கீழ்காணும் கல்லாடனார் வெண்பாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- “அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்
- இந்த விரல் வணிகர்க் கெண்ணிரண்டாம் - முந்துவிரல்
- வேளாளர்க் கீராறாய் வெள்ளோலை வேயனைய
- தோளாய் அறிந் தொகுத்து” [6]
- இந்தக் கருத்து பொய்கையார் கலாவியலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- “ஓலைய திலக்கணம் உரைக்குங் காலை
- நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
- பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
- வணிகர்க் கீரெண் விரலாகும்மே
- சாணென மொழிய சூத்திரக் களவே.” [7]
எழுத்தோலைகளின் வகைகள்
[தொகு]எழுத்தோலைகளில் அமைப்பு, செய்தி போன்றவைகளுக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட்டன.
அமைப்பு ஓலைகளின் வகைகள்
[தொகு]நீட்டோலை
[தொகு]திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை “நீட்டோலை” என அழைக்கப்பட்டன.
மூல ஓலை
[தொகு]ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக் கொள்ளும் முறை அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இந்த ஓலைகளை “மூல ஓலை” என அழைத்தனர்.
சுருள் ஓலை
[தொகு]ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணிந்து வந்த சுருள் வடிவமான காதோலை போல் சுருட்டி வைத்துப் பாதுகாக்கப்பட்டன இவை “சுருள் ஓலைகள்” எனப்பட்டன. இதை “சுருள்பெறு மடியை நீக்கி” என பெரியபுராணத்திலுள்ள பாடல் மூலம் அறிய முடிகிறது. [8]
குற்றமற்ற ஓலை
[தொகு]மூளியும் பிளப்பும் இல்லாத ஓலை “குற்றமற்ற ஓலை” எனப்பட்டது.[9]
செய்தி ஓலைகளின் வகைகள்
[தொகு]எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக் கொண்டும் அவை தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டன.
நாளோலை
[தொகு]தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை “நாளோலை” எனப்பட்டது.
திருமந்திர ஓலை
[தொகு]அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை “திருமந்திர ஓலை” எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார். அரசனது ஆணைதாங்கிய எனப் பொருள்படும் “கோனோலை”, “சோழகோன் ஓலை” போன்ற சொற்கள் செப்பேடுகளில் காணப்படுகின்றன.[10]
மணவினை ஓலை
[தொகு]திருமணச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை “மணவினை ஓலை” எனப்பட்டது. இதன் மூலம் திருமணச் செய்தி உற்றார் உறவினர்க்குத் தெரியப்படுத்தியது.[11]
சாவோலை
[தொகு]இறப்புச் செய்திகளைக் கொண்டு சென்ற ஓலை “சாவோலை” எனப்பட்டன.
பண்டைய எழுதுபொருட்கள்
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ பொத்தகம், படிகமாலை, குண்டிகை, பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங்கை விமலையை, அமலைதன்னை,
மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலைத் தவள மேனி
மைத் தகு கருங் கண் செவ் வாய் அணங்கினை, வணங்கல் செய்வாம். கம்பராமாயணம், காப்பு, மிகைப்பாடல் 12 - ↑
மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் (பெரியபுராணம் பாடல் 473) - ↑ ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்படும் வெற்றிலையை வெற்றிலைக் கவளி என்பது போல் பொத்தல் செய்து அடுக்கிக் கோக்கப்படும் எழுத்தோலைகள் பொத்தகக் கவளி எனப்பட்டன
- ↑ நாலடியார் 253-3 மற்றும் 397-1
- ↑ [[வைரமுத்து, தமிழாற்றுப்படை, ஐந்தாம் பதிப்பு - சூலை 2019, பக்கம் 184
- ↑ நவநீதப்பாட்டியல், பக் 83, உ.வே.சா. நூலகம், 1961
- ↑ நவநீதப்பாட்டியல், பக் 82, உ.வே.சா. நூலகம், 1961
- ↑ பெரியபுராணம், தடு.58
- ↑ நவநீதப்பாட்டியல்,92
- ↑ நடன காசிநாதன், கல்லெழுக்கலை பக்.136, மணிவாசகர் பதிப்பகம், 1989 முதற்பதிப்பு
- ↑ பெரியபுராணம், தடு. 10
உசாத்துணை
[தொகு]- முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்)