உள்ளடக்கத்துக்குச் செல்

அகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக வளர்ச்சிக்கு அன்பின் தொடர்பு இன்றியமையாதது.  அந்த அன்பானது இரண்டு உயிர்களின் தனித்தனி நிலையில் உண்டாவதில்லை; அவை ஆணும் பெண்ணும் என்ற இரண்டின் கூட்டுறவால் நிகழும் வாழ்வியல் முறையாகும்.  பழந்தமிழர் வாழ்வியலில் அகம் என்பது, ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதி ஆகும்.[1] பழந்தமிழ் இலக்கியங்கள் மக்களின் அகவாழ்க்கை பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இலக்கியங்களில் அகப்பொருளைக் கையாள்வது பற்றிய இலக்கணங்களை வகுப்பதுடன், அக்காலத்தின் அக வாழ்வின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றது.

சொற்பொருள்

[தொகு]

அகம் என்பது காரணப் பெயர் என்றும், இது போக நுகர்ச்சி ஆதலாலும், அதனால் விளையும் பயனைத் தானே அறிதலாலும் அகம் எனப்பட்டது என்றும் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் கூறுகிறார்.[2] ஓர் ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரோடு ஒருவர் கூடும்போது பிறக்கும் இன்பம் அவர்கள் அகத்தால் (உள்ளத்தால்) உணரப்படுவது. இதனாலேயே அஃது அகம் எனப்பட்டது என்பர். வாழ்வின் அகம் சார்ந்த பகுதி அகத்திணை எனப்பட்டது. இலக்கியங்கள் இது பற்றிப் பேசும்போது அதை அகப்பொருள் என்றனர்.

கருத்துரு

[தொகு]

தமிழ் இலக்கணம் சொற்களினால் உணரப்படும் பொருளை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது. அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. நிலம், காலம் என்பன தொடர்பானவை முதற்பொருளில் அடங்குகின்றன. இந்த இடத்திலும், காலத்திலும் காணப்படுவன கருப்பொருட்கள் எனப்படுகின்றன. தெய்வம், மக்கள், பறவை, விலங்குகள், ஊர், நீர், பூ, மரம், தொழில், உணவு, கருவிகள் முதலிய உயர்திணை, அஃறிணைப் பொருட்கள் இதனுள் அடங்கும். மக்களுக்கு உரிய பொருட்கள் அகம், புறம் என்பன. இவையிரண்டும் உரிப்பொருள் என்னும் பிரிவுள் அடங்குகின்றன. இதன்மூலம், மனித வாழ்வியலின் அம்சங்களை நிலம், காலம் என்பவற்றுடனும் அவற்றில் காணப்படும் பிற உலகப் பொருட்களுடனும் இயைபுபடுத்திக் காண்பதற்கான அடிப்படை உருவாக்கப்படுவதைக் காணலாம்.

வகைகள்

[தொகு]

மனிதருடைய அகவாழ்க்கையில் பல்வேறு நிலைகள் காணப்படுகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இந்நிலைகளை நிலப் பிரிவுகளுடனும் காலத்துடனும் இயற்கையுடனும் தொடர்புபடுத்திக் கையாளுகின்றன. இந்த இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு அகவாழ்வைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், கைக்கிளை, பெருந்திணை என எழுவகையாக உரிப்பொருளை வகுத்து விளக்குகிறது தமிழ் இலக்கணம்.  ஐந்திணையொழுக்கம் அடிப்படையில் களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என அக வாழ்வினை இரண்டாகப் பிரிப்பர்.  

களவு

[தொகு]

களவு ஒழுக்கம் என்பது தலைவனும் தலைவியும் பெற்றோர் அறியாமல் தாமே எதிர்ப்பாராமல் சந்தித்துக் கூடுவது.  இக்களவு பிறரின் பொருள்களை அவர்கள் அறியாமலேயே கவர்ந்து கொள்ளும் களவு (திருட்டு) போலத் தீயது அன்று.  அத்தலைமக்கள் பின்பு மணம் செய்துகொண்டு மனையறம் காக்கும் கடமை உள்ளதால் இவையும் அறமாகவே கருதப்படுகிறது.

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல் அடுத்து, களவியல் என்ற இயல் வருகிறது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது. இக்களவானது,

  • இயற்கைப் புணர்ச்சி

    தலைவனும் தலைவியும் ஊழ்வினை காரணமாகத் தாமே இயற்கையாகச் சந்திப்பது.

  • இடந்தலைப்பாடு

    இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவனும் தலைவியும் மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் மீண்டும் அவ்விடத்திற்குச் சென்று கூடுதல்.

  • பாங்கற்(தோழர்) கூட்டம்

    முன்பு குறிப்பிட்ட இடத்தில் தலைவி வந்து நின்ற நிலையைக் பாங்கனாலறிந்து (தலைவனின் தோழர்) சென்று கூடுதல்.

  • பாங்கியர்(தோழியிற்) கூட்டம்

இக்களவொழுக்கம் நீட்டித்து நடத்த விரும்பிய தலைவன், தலைவியின் தோழி இவள் என்பதை அறிந்து, அவள் தனித்திருக்கும் நிலையிலும் தலைவியோடு கூடி இருக்கும் நிலையிலும், தன் குறையிரந்து கூறி அத்தோழி வாயிலாகக் கூடுதல்.

என நான்கு வகையால் நடைபெறும்.

கற்பு

[தொகு]

கற்பு ஒழுக்கம் என்பது தலைவன் தனக்குரிய காதற் தலைவியின் சுற்றத்தார் கரணத்தோடு (சடங்குகளோடு) மணம் செய்து கொடுப்பதைக் கூறுவதாகும்.  அவ்வாறு இன்றி நடைபெறும் சூழ்நிலையும் கற்பு நிலையில் நடைபெறுவது உண்டு. இவ்வகை கற்பின் மணமானது,

  • மறைவெளிப்படுதல்

    களவொழுக்கம் பூண்டவர் தாமே மணம் செய்து கொள்ளும் முறை.  இம்மணத்திற்குப்பின் அவர்களின் மறையொழுக்கம் ஊராருக்குத் தெரியவரும்.

  • தமரிற்பெறுதல் (இரு வகைப்படும்)
  1. களவொழுக்கம் பூண்டவர் அம்பல், அலர் எழ, களவொழுக்கம் வெளிப்பட்டுத் தமர்கொடுக்க மணந்துகொள்ளும் முறை.
  2. அம்பல், அலருக்கு இடமில்லாமல் பெற்றோர் நடத்திவைக்கும் மணமுறை
  • உடன்படுதல்    

   பெற்றோர் இல்லாமல் தம்முள் ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் சடங்குடன் மணம் செய்து கொள்ளுதல் ஒருவகை மணமுறை ஆகும்.

என மூன்று வகையால் நடைபெறும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிள்ளை, கே. கே., 2009. பக்.132.
  2. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, 2006. பக். 3

உசாத்துணைகள்

[தொகு]
  • தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2006.
  • பிள்ளை, கே. கே., தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகம்&oldid=3229597" இலிருந்து மீள்விக்கப்பட்டது