நரிக்குறவர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
வாக்ரி பூலி மொழி, தமிழ் | |
சமயங்கள் | |
ஆன்ம வாதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
இந்தோ ஆரிய மக்கள் |
நரிக்குறவர் (Narikuravar) என பொதுவழக்கில் அழைக்கப்படும் அக்கிபிக்கி என்ற மக்கள், தமிழ்நாட்டில் வந்தேரி நாடோடி சமூகத்தினர் ஆவர். இவர்கள் கர்நாடகத்தில் ஹக்கிபிக்கி என்றும் ஆந்திராவில் நக்கவாண்டோ என்றும் அழைக்கப்படுகின்றனர்.[1] இவர்கள் பாரம்பரிய உண்டிகோலால் குருவி அடிப்பது, நரி பிடிப்பது மற்றும் மலை சாரல் பகுதியில் வாழ்ந்தவர்கள். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக மணிகள் தயாரித்தல் மற்றும் விற்பது போன்ற மாற்றுத் தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர். இந்தோ ஆரிய மொழியான வாக்கிரி பூலி மொழி பேசும் நரிக்குறவர்கள் போன்று அழைக்கப்படும் ஹக்கி பிக்கி மக்களுக்கும், தொல்தமிழ்க் குடிகளான குறவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இவர்கள் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி போன்ற சிறு பொருட்களை விற்கும் தொழிலைச் செய்து வருகின்றனர். ஹக்கி பிக்கி சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள்.
ஹக்கி பிக்கி மக்களை பழங்குடி மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு இந்திய நடுவண் அரசின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஆனால் இன்னும் சேர்க்கப்படவில்லை.
சொற்பிறப்பியல்
இவர்களின் அசல் பெயர் வக்ரிவாலா அல்லது குருவிக்கரன் அல்லது நக்கலே அல்லது அக்கிபிக்கி என்பதாகும். ஆனால் தமிழ்நாட்டு முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரனின் ஆட்சிக் காலத்தில் நரிக்குறவர் என்று தவறாகப் பெயரிடப்பட்டது. குறவர்கள் என்பவர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறிஞ்சித் திணை[மலை]யைச் சேர்ந்த தமிழர்கள் ஆனால் இந்த நரிக்குறவர் குசராத்தை பைர்வீகமாக கொண்ட நாடோடிகள். இவர்கள் துப்பாக்கியால் வேட்டையாடுகிறார்கள். ஆனால் தமிழ் குறவர்கள் வில் மற்றும் அம்புகளை வைத்து வேட்டையாடுவது, தேன் சேகரிப்பது, மூங்கில் கூடைகளை முடைவது போன்றவையே தமிழ் குறவர்களின் அசல் தொழிலாகும். தமிழ் குறவர்களுக்கும் மராத்தி அக்கிபிக்கிகளுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
பேச்சு மொழி
இவர்களது பேச்சு மொழி இந்தி, மராத்தி, தெலுங்கு மொழிகளின் கலவையாக உள்ளது. இவர்களின் நாடோடி கலாச்சாரத்தின் காரணமாக வாக்ரி பூலி மொழி என்ற புதிய மொழி உருவானது. இம்மொழிக்கு எழுத்துமுறை இல்லை.
இலக்கியம்
கிட்டு சிரோமனி என்பவரால் திருக்குறள் வாக்ரி பூலி மொழி மொழியில் முதன்முறையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[2]
சமூகம்

இவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு அற்றவர்கள். எனினும், சுகாதாரத்தில் கவனம் உடையவர்கள். காண்பதற்கு சுத்தமில்லாமல் இருந்தாலும், இவர்கள் வாழையடிவாழையாக உட்கொள்ளும் நாட்டுமருந்துகள், இவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒரு முறை தங்களது பாரம்பரிய மருந்தினைத் தருவர். ஆண்கள் துப்பாக்கிச் சுடுவதிலும், கவண்வில்லிலும் (உண்டிவில்) திறமை மிக்கவர். பெண்கள் கலை வேலைப்பாடுகளில் கைத்தேர்ந்தோர் ஆவர்.
தோற்றத்தொன்மம்

இந்த சமூக பெண்கள் கழுத்தில் வண்ணமயமான பாவாடை மற்றும் மணிகளை அணிந்திருந்தனர். ஆண்கள் நீண்ட முடியை வைத்திருப்பார்கள். இந்த மக்கள் காட்டில் வாழ்ந்தனர். அவர்கள் விலங்குகளையும், பறவைகளையும் சாப்பிடுவார்கள். வழிபாட்டு முறையில் சிவனை முழு முதற் கடவுளாகக் கொண்டாலும் (தாதாஜி) சடங்குகளில் காளி, ஈஸ்வரி, மாரியம்மன், துர்க்கை என்று பெண் கடவுளர்களுக்கே முக்கிய இடமிருக்கிறது. சடங்குகளின் அர்ப்பணிப்பு தேவியரையே சேருகிறது. அதேபோல தேவியரே குறிசொல்லும் பூசாரியில் தோன்றி சனங்களுக்குத் தீர்வு வழங்குகிறாள். நரிக்குறவர்களிடம் இருக்கும் இன்னொரு முக்கியமான வழிபாட்டு முறை – எருமைப் பலியிடல்.
வாழ்வுமுறை
- ஹக்கி பிக்கி பாரம்பரிய வேட்டைக்காரர்கள்.
- இவர்கள் வாழ்வாதாரத்திற்காக பயணிக்கிறார்கள். இவர்கள் எல்லா மாநிலங்களிலும் உள்ள பெரிய கோயில்களுக்குச் சென்று தங்கள், ஊசி, பாசி, மணிகளைக் கொண்ட ஆபரணங்களை விற்று பருவம் முடிந்ததும் வீடு திரும்புவார்கள்.
- பச்சை குத்துவதும் இவர்களின் தொழில்களில் ஒன்றாக இருக்கிறது.
- ஹக்கி பிக்கி மக்கள் கூடாரங்களில் வசிப்பவர்கள். அரசின் முயற்சியால், இவர்களுக்கு இலவச வீடும், வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்படுகின்றன.
சிறப்பு
- முதியோர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். முதியோர்கள் வகுக்கும் கட்டுப்பாட்டை இவர்களில் படித்தோர் உட்பட அனைவரும் ஏற்கின்றனர்.
- திருமணத்தில் ஆண்களே, பெண்கள் குடும்பத்திற்கு பரிசப்பணம் தரவேண்டும்.
- வேற்று சமூகப் பெண்களைக் கிண்டல் கேலி செய்வதில்லை.[3]
மேற்கோள்கள்
- ↑ Correspondent, Vikatan. "வாக்ரிபோலி குருவிக்காரர்களின் மொழி" (in ta). https://www.vikatan.com/oddities/miscellaneous/18904--2.
- ↑ "Thirukkural now in Arabic". The Hindu (Chennai). 25 March 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/thirukkural-now-in-arabic/article4545807.ece.
- ↑ "புத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்". http://domesticatedonion.net/tamil/2005/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/.