உள்ளடக்கத்துக்குச் செல்

குறவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறவர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கேரளா
மொழி(கள்)
தமிழ், மலையாளம்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர்

குறவர் (Kuravar) என்பவர் பண்டைகால தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர். குறவர்களை வேடர் எனவும் வேடுவர் எனவும் மறுபெயர் கொண்டு அழைப்பர். இவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் நரிக்குறவர் சமுதாயத்தினர் ஆவர்.

இவர்கள் நானிலங்களில் குறிஞ்சி நிலம் எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இக்குறிஞ்சி கோடையின் கொடுமையால் பாலை எனும் வடிவம் கொள்ளும்.[1] அவ்வேனிற் காலத்தில் வாழும் வகையற்றுப் போகும் குறவர்கள் பாலை நிலத்து மறவர்கள் ஆகிவிடுவர். வளமார் காலத்தில் வேட்டையாடி வாழும் குறவர்கள் வறுமை காலத்தில் ஆறலைத்தும் ஆனிரை கவர்ந்தும் வாழ தலைப்பட்டனர்.[2] இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த வள்ளியைக் கடவுளான முருகன் மணந்து கொண்டதாக தமிழ்ச்சங்கப் பாடல்கள் கூறுகின்றன.

பிற பெயர்கள்

இவர்களுக்கு மலைக் குறவன், குறவன், தலையாரி, காவல்கார குறவர், உப்புக் குறவர், தப்பைக் குறவர், கந்தர்வக்கோட்டை குறவர், ஈஞ்சிக் குறவர், களிஞ்சி தப்பைக் குறவர், காள குறவர், மோண்டா குறவர், கொரவர், கருவேப்பில்லை குறவர், தோகைமலை குறவர், மேல்நாடு குறவர், கீழ்நாடு குறவர், காதுகுத்தி குறவர், பச்சகுத்தி குறவர், வேடர் மற்றும் வேடுவர் எனப் பிறபெயர்களும் உள்ளன.[3]

பழக்க வழக்கங்கள்

"தமிழரின் முதற்திணையான குறிஞ்சி மக்களுள் ஒருவர்களான குறவர்களின் பழக்கவழக்கங்கள் மிகப்பரவலாக இன்றும் அறியமுடிகின்றது. சங்க இலக்கியங்களிலும் குறவர்கள் பற்றிய செய்தி மிகுதியாக காணப்பெறுகின்றன. குறவர்கள் தேனையும் கிழங்கையும் விற்றுப் பண்டமாற்றாக, மீன் நெய்யினையும் நறவையும் பெறுவர். உடும்பிறைச்சியோடு, கடமான் தசை, முள்ளம் பன்றியின் ஊன், மூங்கில் குழாயில் ஊற்றி வைத்த தேனிறல், நெய்யால் செய்த கள், புளிப்புச் சுவையுடைய உலையாக ஏற்றி ஆக்கிய மூங்கிலரிசிச் சோறு, பலாவிதையின் மாவு ஆகியவற்றை நல்கி மலைவாழ்நர் விருந்தோம்புவர் என மலைபடுகடாம் கூறும். இதே நிலையினை மீனாட்சியம்மை குறத்திலும் காணமுடிகின்றது. செழித்த கொடியிலிருந்து வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்து குறவர்கள் உணவாக உட்கொள்கின்றனர். மலையின்கண் உள்ள குறிஞ்சி மலரை முல்லைக் கொடியில் வைத்துத் தொடுத்தும், பசுந்தழையையும் மரவுரியையும் ஆடையாக உடுத்திக் கொள்கின்றனர். விருந்தினருக்கு தேனும், தினையும் வழங்கி விருந்தோம்புகின்றனர் என்று இச்சமூகத்தினரின் பழக்க வழக்கங்களை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.[சான்று தேவை]

தொழில்

குறவர்கள் மலையில் வாழ்ந்ததினால் மலைத்தேன் எடுப்பது, தினை மாவு சேகரிப்பது, வேட்டையாடுவது, மூங்கில் மரங்களை வெட்டி, அதை நன்கு சீவி தப்பை குச்சிகளாகப் பிரித்து மூங்கில் கூடையாகப் பின்னுவது, கோழிகள் அடைக்கும் பஞ்சாரம் எனப்படும் கூடுகளைப் பின்னுவது, மூங்கில் முறம் செய்வது, போன்ற தொழில்கள் செய்தார்கள்.இந்த சமுதாய பெண்களுக்கு கைரேகை பார்த்துப் பலன் சொல்லும் ஆற்றலும் இருந்தது.

வாழ்க்கை முறை

வேட்டையாடிய மான் இறைச்சி, தேன், தினை மாவு, மூங்கில் கூடை, மருத்துவ குணம் கொண்ட வேர்கள், பச்சிலைகள், போன்ற பொருட்களை மலையில் இருந்து எடுத்து வந்து மலையை சுற்றி உள்ள நகரங்களில் விற்பனை செய்வார்கள். அதற்கு பதிலாக நகரத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற உணவு பொருட்களை வாங்கி செல்வார்கள். மலையில் இருந்து வரும் பொழுது ஆண்களும், பெண்களும் சேர்ந்து வருவார்கள். நகரத்திற்குள் வந்தவுடன் ஒரு பகுதியில் கூடாரம் அமைத்து, சிறு, சிறு குழுக்களாக வியாபாரத்திற்கு செல்வார்கள். பெண்கள் கைரேகை பார்க்கலியோ.!!! என்று கூவி, கூவி வீதிகளில் சுற்றுவர். நகரத்தில் உள்ள பெண்மணிகள் இவர்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்ப்பர். ஏனெனில் இவர்கள் கூறும் பலன்கள் அப்படியே பலிக்கும் என முழு நம்பிக்கை வைத்திருப்பார்கள். கைரேகை பார்க்கும் பொழுது இந்த சமுதாய பெண்கள் தான் வாழும் மலைகளின் சிறப்புகளையும், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் பாட்டாக பாடி பலன் சொல்வார்கள். குறிப்பிட்ட நாட்களில் தங்களுடைய வியாபாரத்தை முடித்து கொண்டு மீண்டும் மலையை நோக்கி சென்று விடுவர்.

மொழி

குறவர்கள் ஆதி மொழியான தமிழை அறிந்திருந்தாலும், இவர்களுக்கென்று சங்கேத சொற்கள் உண்டு. இந்த பாசைகளை வெறும் பேச்சளவில் தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

காவலர் என்றால் "வாளான்" என்றும்,"வாளான்டி" என்றும்
மனிதரை குறிப்பிட்டு சொல்லும் போது " பூத்தை" என்றும்,
அந்த என்ற சொல்லுக்கு " அச்சு" என்றும்,
அந்த மனிதன் என்ற சொல்லுக்கு "அச்சு பூத்தை" என்றும்,
சோறு என்ற சொல்லுக்கு " மருக்கம் " என்றும்,
பெரிய மனிதர்கள் என்ற சொல்லுக்கு " பெருமாச்சி பூத்தை" என்றும்,
பெண்கள் என்ற சொல்லுக்கு " பொம்பூத்தை" என்றும்,
ஆண்கள் என்ற சொல்லுக்கு " ஆம்பூத்தை" என்றும்,
இரு என்ற சொல்லுக்கு " இருசு" என்றும்,
போ என்ற சொல்லுக்கு " பிச்சு" என்றும்,
கறி என்ற சொல்லுக்கு " பச்சம்பு" என்றும்,
பணம் என்ற சொல்லுக்கு "கவயம்" என்றும்,
காசு என்ற சொல்லுக்கு " சொனியம்' என்றும்,
சாப்பிடு என்ற சொல்லுக்கு " மோச்சு" என்றும்,
வீடு என்ற சொல்லுக்கு "பெரடு" என்றும்,
தண்ணீர் என்ற சொல்லுக்கு " உமுண்டி" என்றும்,
சாராயம், கள் என்ற சொல்லுக்கு "வேண்டி" என்றும்,
நாய் என்ற சொல்லுக்கு " காவா" என்றும்,
கோழி என்ற சொல்லுக்கு " பொருப்பத்தான்" என்றும்,
பன்றி என்ற சொல்லுக்கு " மூசுவான்" என்றும்,
பூனை என்ற சொல்லுக்கு " காஞ்சுவான்" என்றும்,

அவர்களுக்குள் பேசி கொள்ளும் பாசைகளில் இதுவும் சில சொற்கள் ஆகும்.

உறவுமுறைகள்

மலைகளில் வாழ்ந்த இந்த குறவர்கள் குல தெய்வமாக முருகனை வணங்கி இருக்கிறார்கள். இந்த முருகனை வழிபடும் பொழுது முருகன் சிலையினை ஒருவர் குளிப்பாட்டி வைத்துள்ளார். இன்னொருவர் அந்த சிலைக்கு அலங்காரம் செய்துள்ளார், மற்றொருவர் பூசை செய்யும் பொழுது மணி அடித்துள்ளார், மற்றொருவர் முருகனுக்கு காவடி எடுத்துள்ளார். இது வருடா வருடம் மலைகளில் வழிபாடு செய்துள்ளனர். இந்த பூசையின் அடிப்படையில் தான் இவர்கள் தங்களுக்குள் உறவு முறைகளை பிரித்திருக்கிறார்கள். அதாவது ; முருகனை குளிப்பாட்டியவர் முருகனின் மேலைத்தொட்டு குளிப்பாட்டியவர் " மேலுத்தர் " என்றும்,(முருகனுக்கு அலங்காரம் செய்தவர்) சந்தனம் பூசியவர் "சாத்தப்பாடியர் " என்றும், முருகனுக்கு பூசை செய்யும் பொழுது மணி அடித்தவர் " மாணிப்பாடியர் ' என்றும் முருகனுக்கு காவடி எடுத்தவர் " காவடியர் " என்றும் தங்களுக்குள் 4 குலங்களாக பிரித்து, முருனை குளிப்பாட்டும் போதும், சந்தனம் தடவும் போதும், முருகனின் உடம்பை தொடுவதால் அதன்படி மேலுத்தர், சாத்தப்பாடியார் ஆகிய இரு பிரிவினரும் அண்ணன் தம்பிகளாகவும், மணியடித்தும், காவடி தூக்கி திருவிழாவை முடித்துக் கொடுப்பதால் மாணிப்பாடியர், காவடியர் ஆகிய இரு பிரிவினரும் அண்ணன் தம்பிகளாகவும் பிரித்து கொண்டார்கள். அண்ணன் தம்பிகளாக பிரித்து கொண்ட குலத்தினர் மற்ற குலத்தினரை மாமன், மைத்துனராக உறவு வைத்து கொண்டார்கள்.

நகர வாழ்க்கை

மலைகளில் வாழ்ந்து வந்த குறவர்கள், தொடர்ந்து பெய்து வரும் மழையினாலும், காட்டு மிருகங்களின் அச்சுருத்தத்தினாலும், பச்சிளம் குழந்தைகளை பேணி காண்பதற்காகவும், தாங்கள் செய்து வரும் தொழிலுக்கு சரியான வருமானம் இல்லாததாலும் சிறுக, சிறுக மலைகளை விட்டு நகரங்களை நோக்கி வரத்தொடங்கினர். நகரங்களில் வாழ்வதற்கு சரியான இருப்பிடம் இல்லாத காரணத்தினால் ஊருக்கு வெளியே ஒதுக்கு புறமாக வாழ துவங்கினர். அப்போது அவர்களின் பிரதான தொழில் நகரத்தில் வசிக்கும் பெண்களுக்கு காது வளர்த்து விடுதல் போன்ற தொழிலை ஆண்கள் செய்து வந்தார்கள். அதாவது; பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப காதை குத்தி, சோளதட்டையை அந்த ஒட்டையில் வைத்து விடுவார்கள். பிறகு அந்த காது சிறுதாக, சிறுதாக காதின் அடிப்பகுதி கீழ் நோக்கி வளர ஆரம்பிக்கும். நன்றாக வளர்ந்த பிறகு அந்த ஒட்டையில் தங்கத்தினால் செய்யப்பட்ட தண்டட்டி, பாம்படான், புனுக்கெட்டான் என பெயரிடப்பட்ட உலோகங்களை காதில் அணிவர். அந்த காது வளர்ந்து வரும் வரை இந்த சமுதாய மக்கள் தான் அவர்களின் இல்ல்த்துக்கு சென்று பராமரிப்பு செய்து இருக்கிறார்கள். பெண்கள் வழக்கம் போல் கைரேகை பார்க்கும் தொழிலை பார்த்து வந்தார்கள். கூடை முறம் பின்னுதல்,பனை மரத்தில் இருக்கும் பனை ஒலையை எடுத்து ஒலைகொட்டான், கிளுகிளுப்பை, விளக்குமாரு, போன்றவைகளையும் விற்பனை செய்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்களின் வறுமையை போக்குவதற்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை.

குறவர்களின் சமுதாய வளர்ச்சி

இந்தியா விடுதலை அடைந்த பிறகு சமூக நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள், குற்ற பரம்பரையினர் என்ற சட்டத்தை நீக்கம் செய்தார்கள். அந்த சட்டம் நீக்கப்பட்டு விட்டாலும், அந்த சட்டத்தினால் முழுதும் பாதிக்கப்பட்ட இந்த குறவர்கள் வருமானம் இன்றி சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் இருந்தார்கள்.

குறவர்களின் இன்றைய வளர்ச்சி

பல பிரிவுகளில் பிரிக்கப்பட்ட குறவர்கள் தற்சமயம் தமிழ்நாட்டில் மட்டும் 4% உள்ளனர். இவர்களில் படிப்பறிவு உள்ளவர்கள் 1% வீதமே உள்ளனர். மீதி 3% மக்கள் படிப்பறிவு இல்லாததால் வேளாண்மை தொழிலில் ஈடுபடுகின்றனர். சிலர் சொந்தமான நிலங்களைக் கொண்டு நல்ல நிலையிலும் உள்ளனர். அதே சமயத்தில் இந்த சமுதாயத்தில் படித்தவர்கள் ஒரு சிலர் அரசாங்க பணிகளில் பெரிய பதவிகளில் இருந்து வருகிறார்கள். ஒரு சிலர் அரசியலிலும் தன் பங்கை நிலை நாட்டியுள்ளனர்.

  • அண்ணா நம்பி - பொள்ளாச்சித் தொகுதியிலிருந்து, அ.தி.மு.க சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஈசுவரமூர்த்தி தாராபுரம் தொகுதி, சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் காதி கைத்தறித்துறை அமைச்சராகவும் இருந்தார்.
  • நடிகர் விக்னேஷ் கிழக்குச் சீமையிலே என்ற படத்தின் கதாநாயகன்.

மேற்கோள்கள்

  1. சிலப்பதிகாரம் (11:62-67)
  2. பண்டைத் தமிழர் போர் நெறி - புலவர் கா.கோவிந்தன் பக்கம்: 94-95
  3. "நவீன காலத்தில் குறவர் பழங்குடியினர் நிலை".

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறவர்&oldid=3399276" இலிருந்து மீள்விக்கப்பட்டது