கம்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கம்பர் (கி.பி. 1180-1250) என்பவர் தமிழ் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றிய கம்பராமாயணம் நூலானது புகழ் பெற்றதாகும். கம்பராமாயணத்தினை படித்த பலரும் கம்பரின் கவித்திறனைப் பாராட்டியுள்ளார்கள். கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்ரவர்த்தி" போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர். கம்பரின் கவித்திறனால், "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற முதுமொழி தமிழில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம் என கருதப்படுகிறது.

பெயர்க்காரணம்[தொகு]

இன்று கம்பர் குலம் என்று அழைக்கப்படும் உவச்சர்கள் குலத்தில் பிறந்தமையால் பெற்ற பெயர் என்று கூறுவர். காளி கோயிலில் பூசை செய்யும் மரபினர் என்று உவச்சர்கள் சுட்டப்பெறுகின்றனர். கம்பர் குழந்தையாகக் காளி கோயில் கம்பத்தின் அருகே கிடந்தமையால் இப்பெயர் பெற்றார் என்பர். கம்பங் கொல்லையைக் காத்து வந்தமையால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர். காஞ்சிபுரத்தில் உள்ள இறைவனாகிய ஏகம்பன் தேவாரப் பதிகங்களில் 'கம்பர்' என்றே சுட்டப்படுகிறார். அந்தப் பெயர் இவருக்கும் இடப்பட்டது என்பர்.[1]

வரலாறு[தொகு]

கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர்.[1] கம்பருடைய தந்தை ஆதித்தன் என்றும், கம்பருடைய மகன் அம்பிகாபதி என்றும் கூறப்படுகிறது. அம்பிகாபதி கவிஞனாக இருந்து, சோழ மன்னனின் மகளான அமராவதி என்பவளைக் காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக சோழ மன்னன் அம்பிகாபதியைக் கொன்றுவிட்டார் என்றும், அதன் காரணமாகவே இராமாயணத்தில் புத்திர சோகத்தினைக் கொண்ட தரசதன் பாடும் பாடல்களில் புத்திர சோகம் அதிகம் வெளிபடுவதாகவும் கூறுகின்றனர். சோழ மன்னனுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் கம்பர், சோழநாட்டிலிருந்து ஆந்திர நாட்டிற்குச் சென்று தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கம்பரை சடையப்ப வள்ளல் என்பவர் ஆதரித்து வந்துள்ளார். இவர் திரிகார்த்த சிற்றரசனாவார். இவரே கம்பரை இளமைக் காலத்தில் பேணிக்காத்தவர் என்றும்[2], பின்பே சோழ மன்னன் கம்பரை ஆதரித்து வந்ததாகவும் கூறுகின்றனர். சோழ மன்னன் கம்பநாடு என்ற பகுதியைக் கம்பருக்கு தந்துள்ளார். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டமும் சோழன் தந்தது என்று கூறுகின்றனர்.

கம்பர் வள்ளி என்ற தாசியைக் காதலித்து வந்ததாகவும், கம்பரை வேறு பெண்ணொருத்தி காதலித்து வந்தாலும், அவளை கம்பர் ஏற்கவில்லை எனவும் தமிழ் நாவலர் சரிதியில் சில செய்யுள்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.[சான்று தேவை] கம்பரை பாண்டிய மன்னனும், காகதிய ருத்திரன் என்ற மன்னனும் பாராட்டியுள்ளதாகவும், சோழ அரசன் கம்பரைக் கொல்ல திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.[சான்று தேவை]

கம்பனின் காலம்[தொகு]

கம்பரின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியாகும்.[1] கம்பருடைய இராமாயணத்தில் சீவக சிந்தாமணியின் தாக்கம் இருப்பதால், கம்பர் திருத்தக்க தேவரின் காலத்திற்குப் பிந்தையவர் என்றும், ஓரங்கல் நாட்டில் அவர் தங்கியிருந்த காலத்தில் அங்கு பிரதாபருத்திரன் என்ற மன்னன் ஆண்டு வந்ததையும் கண்டறிந்துள்ளனர்.[1] கம்பர் தமிழகத்தில் மூன்றாம் குலோத்துங்கச் சோழனிடம் கருத்து மாறுபட்டு ஆந்திர நாட்டில் தங்கியிருந்தமையால், பிரதாபருத்திரன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் காலத்தினைக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் கம்பர் வாழ்ந்திருப்பதாகக் கருதுகின்றனர்.[1]

ஆனால் கம்பருடைய காலம் ஒன்பதாம் நூற்றாண்டு, பத்தாம் நூற்றாண்டு எனவும் கருத்துகள் உள்ளன.[1] கம்பர் தனியன்கள் என்ற தனிப்பாடல்களின் தொகுதியிலிருந்து "எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழின் மேல்" என்ற பாடலைக் கொண்டு கம்பராமாயணம் கி.பி. 885 இயற்றப்பட்டதாக கூறுகின்றனர்.[1] ஆனால் இக்கருத்தினை வையாபுரிப் பிள்ளை என்ற ஆய்வாளர் மறுத்துள்ளார்.[1] இந்த கம்பர் தனியன்கள் பிற்காலத்தின் இடைச்செருகலாகக் கருதுகிறார். "ஆவின் கொடைச் சகரர்" என்ற பாடலினைக் கொண்டு கி.பி. 978 என்றும் முதலாம் இராசராச சோழனுக்கு முன்பு இருந்த உத்தம சோழன் காலம் என்றும் சிலர் கூறினர். ஆனால் இந்த கணிப்பும் தவறானது என்று ஆய்வாளர்கள் மறுத்துள்ளர்.[1] மா. இராசமாணிக்கனார் கி.பி. 1325க்கு முன்பே கம்பர் காவியத்தினை இயற்றியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.[1]

நூல்கள்[தொகு]

மேலும்

கம்பராமாயணம்[தொகு]

கம்பராமயணமும் சாலிவாகன வருடம் கி.பி. 733. பிறகு எழுதப்பட்டதாக அறியப்படுகிறது.[3]. கம்பர் வால்மீகி இராமாயணத்தினை மூல நூலாகக் கொண்டு கம்ப இராமாயணத்தினைப் படைத்தார். எனிலும் கம்பராமாயணம் மூல நூலின் தழுவலாகவும், மொழிபெயர்ப்பு நூலாகவும் அல்லாமல், மூலநூலின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு பல்வேறு மாற்றங்களுடன் எழுதப்பட்டுள்ளதாகும்.[4]. கம்பராமயணத்திற்கும் வால்மீகி இராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி ஆய்வுகளை அறிஞர்கள் செய்துள்ளார்கள்.

கம்பராமாயணத்தில் இராமன் முடிசூடுவதை மட்டுமே கம்பர் எழுதினார். அதன் பிறகு உத்திர காண்டம் என்பது ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது என்றும், வாணிதான் என்ற வாணியன் தாதன் என்பவர் எழுதியுள்ளார் என்றும் கூறுவர்.[சான்று தேவை]

கம்பரின் சிறப்பு[தொகு]

"கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்" எனும் பழமொழி அவரது கவித்திறத்தை உணர்த்தும் ஒன்று. கம்பர் "கவிச்சக்கரவத்தி" என்றும் புகழப்படுகிறார்.

 • கம்பர் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் என தன்னுடைய சுயசரிதையில் மகாகவி பாரதியார் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்னுடைய பாடலில் “கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” எனப் பாடியுள்ளார்.
 • “அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி” என கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
 • “தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே” என நாமக்கல் கவிஞர் கூறியுள்ளார்.
 • கல்வியிற் பெரியன் கம்பன் - முதுமொழி
 • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் - முதுமொழி
 • பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடல் இவரை விருத்தம் என்னும் ஒண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர் என்று குறிப்பிடுகிறது.

"வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
சயங்கொண்டான் விருத்தமென்னும்
ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
அந்தாதிக் கொட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாடக் காள மேகம்
பண்பாகப் பகர்சந்தம் படிக்காச
லாலொருவர் பகரொ ணாதே." - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

நினைவிடங்கள்[தொகு]

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்_கோட்டை அருகேயுள்ள கருதுப்பட்டி என்ற கிராமத்தில்தான் 1,000 ஆண்டுகள் பழமையான கம்பர் நினைவிடம் அமைந்துள்ளது. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். கம்பர் இயற்றிய ராமாயணத்தில் காதல் தமிழ், வீரத் தமிழ், ஆன்மிகத் தமிழ் என அனைத்தும் இருக்கும். அதனால்தான் இன்றும் இந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பர் சமாதி உள்ள இடத்திலிருந்து மண் எடுத்து குழந்தையின் நாக்கில் வைப்பது வழக்கமாக உள்ளது. அப்படிச் செய்வதால், குழந்தை  நல்ல தமிழாற்றலுடனும் மிகுந்த தமிழ் அறிவுடனும் வளரும் என்பது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை [5].

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கம்பன் அடிப்பொடியாகிய திரு.சா._கணேசன் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட "கம்பன் மணிமண்டபம்". இந்த வளாகத்திலேயே தனிச்சிறப்பாக தமிழ்த்தாய்_கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது [6].

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தேரழந்தூரில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.[7]

கம்பன் கழகம்[தொகு]

கம்பன் கழகம் என்பது கம்பராமாயணத்தினை மக்களுக்கு கொண்டு செல்லவும், கம்பராமாயணத்தில் கம்பரின் திறனை கூறவும் ஏற்படுத்தப்பட்டதாகும். தற்போது பல்வேறு நாடுகளிலும், மாநிலங்களிலும் இந்தக் கம்பன் கழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

கம்பனைப் பற்றிய நூல்கள்[தொகு]

 • கம்பன் புதிய பார்வை - அ.ச.ஞானசம்பந்தன் - கங்கை புத்தக நிலையம்
 • கம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள் - பேராசிரியர் இரத்தின நடராசன் - ஏகம் பதிப்பகம்
 • கம்பன் தொட்டதெல்லாம் பொன் - கமலா சங்கரன் - விகடன் பிரசுரம்
 • கம்பன் கருத்துக் களஞ்சியம் - வானதி பதிப்பகம்
 • கம்பன் என் காதலன் - சிவகுமார் - அல்லயன்ஸ் கம்பெனி
 • கம்பன் சில சிந்தனைகள் = முனைவர் பால.இரமணி - ஏகம் பதிப்பகம்
 • கம்பன் கண்ட தமிழகம் - சாமி சிதம்பரனார் - பாவை பதிப்பதிகம்
 • கம்பன் காணும் திருமால் - ஆ.கிருஷ்ணன் - வானதி பதிப்பகம்
 • கம்பன் என்றொரு மானிடம் - சாமி. தியாகராசன் -
 • காசில் கொற்றத்துக் கவிச்சக்கரவர்த்தி கம்பன் - கபிலன் வெளியீடு
 • கம்பன் தனிப்பாடல்கள் - புலியூர்க் கேசிகன்
 • பாட்டரங்கில் கம்பன் - பாவலர் மணி சித்தன் - வானதி பதிப்பகம்
 • கம்பன் கல்வியில் பெரியன் - கம்பனடிசூடி பழ. பழனியப்பன் - மணிமேகலைப் பிரசுரம்
 • கம்பரசம் - பேரறிஞர் அண்ணா
 • கம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள் - முனைவர் க. முருகேசன் - சீதை பதிப்பகம்
 • கம்பனில் அறிவு - பாவலர் சு. வேல்முருகன் -கம்பன் பதிப்பகம்
 • கம்பன் பாடிய அறம் - பாவலர் சு. வேல்முருகன் - கம்பன் பதிப்பகம்
 • கம்பன் பாடிய வண்ணங்கள் - முனைவர் இரா. திருமுகன்
 • கம்பன் கண்ட அரசியல் - டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன்
 • சிறியன சிந்தியாதான் - எஸ். இராமகிருஷ்ணன் - தையல் வெளியீடு

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 "கவிச்சக்கரவர்த்தி கம்பர் தமிழாய்வு தளம்".
 2. Classified catalogue of Tamil printed books By John Murdoch
 3. A Comparative Grammar of the Dravidian, Or South-Indian Family of Languages by R. Caldwell
 4. The Calcutta Review, Volume 25
 5. "கம்பர் சமாதி".
 6. "கம்பன் மணிமண்டபம்".
 7. "கம்பர் மேட்டை மறைக்கும் கருவேலமரங்கள்". பார்த்த நாள் 31 மே 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பர்&oldid=2963075" இருந்து மீள்விக்கப்பட்டது