சோழர் இலக்கியங்கள்
சோழர் இலக்கியங்கள் என விளிக்கப்படுவது தென்னிந்தியாவினை சோழ மன்னர்கள் வலிமை பெற்று ஆட்சி புரிந்த பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலபகுதியிலே எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும்.சோழர் வலிமையாக ஆட்சி புரிந்த காலப்பகுதியிலே அந்நிய படையெடுப்பு,கலகம்,குழப்பம் எதுமற்ற நிலமையும், சைவம், வைணவம் பக்தி இயக்கங்களின் எழுச்சியும், சோழமன்னர்கள் கலை, இலக்கியங்கள் மீதான விருப்பும், புலவர்கள் மீது காட்டிய பரிவும் மிகச் சிறந்த இலக்கியங்கள் தமிழில் தோன்ற காரணமாயிற்று. சாளுக்கிய சோழர்கள்ளுடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய கலை,இலக்கியங்களின் பொற்காலம் என சரித்திர ஆய்வாளர்கள வியந்து குறிப்பிடுவர். ஒரு சில இலக்கியப் பிரதிகள் தவிர சோழர்கால இலக்கியங்கள் பலதும் தற்போதும் அழியாது கிடைக்கப்பெற்றுள்ளன.சோழர் காலத்தில் எழுதப்பட்ட இலக்கிய பிரதிகள் பற்றிய விபரங்கள் பல கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.
இக்காலகட்டத்தில் எழுதப்பெற்றவற்றை பக்தி இலக்கியங்கள்,தமிழ் இலக்கணங்கள்,அரசர் புகழ்பாடும் துதி இலக்கியங்கள் என வகைப் பிரிக்கலாம்.
சங்க காலமும் அதன் தொடர்ச்சியும்
[தொகு]ஏனைய துறைகள் பலவற்றைப் போலவே, இலக்கியத் துறையிலும் சோழப்பேரரசர்களின் காலமே, தென்னிந்திய சரித்திரத்தில் ஆக்கத்திற்கு உரிய காலப்பகுதியாகச் சிறந்து விளங்குகிறது. சங்க காலத்தில், சோழ வம்சத்து(அரசர்களும்) இளவரசர்களும் கவிஞர்களைப் போற்றும் புரவலர்களாகவும் சில சமயம் தாங்களே புலவர்கள் அல்லது நூலாசிரியர்களாகவும் விளங்கினர். சங்க காலம், இலக்கியத் துறையில் ஏற்றம் பெற்று விளங்கியது. அதன் பிறகு, அடுத்த நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பல்லவர்கள், பாண்டியர்கள் ஆதரவில், பாதுகாப்பில், இலக்கியமும் கலைகளும் இருந்து வந்தன.
இந்தக் காலத்தில் தமிழ் இலக்கியமும் சமசுகிருத இலக்கியமும் விரிவான வளர்ச்சியடைந்தன. குறிப்பாக புத்த சமயத் துறவிகள், இக்காலத்தில் பாலி மொழியிலும் சில நூல்களை உருவாக்கினர். தேவாரம், திருவாசகம் தமிழ் வைணவர்களுடைய நாலாயிர திவ்ய பிரபந்தந்தத்தின் பெரும்பகுதி ஆகியவை இக்காலத்தில் தோன்றியவையே என்பதில் ஒரு சிறிதும் சந்தேகம் இல்லை[1] பாண்டிக்கோவை, சூளாமணி, நந்திக் கலம்பகம், பெருந்தேவனாரின் பாரத வெண்பா ஆகியவையும் இதே காலத்தைச் சேர்ந்தவையே. சமசுகிருத இலக்கியத்தில் புகழுடன் விளங்குபவர்களான குமாரலரும் சங்கரரும் இக்காலத்தவரே.
சோழப் பேரரசு விரிவடைந்ததின் விளைவு
[தொகு]சோழர் கை ஓங்கியதிலிருந்தே, இலக்கியம் பல வடிவங்களில் பெருகியது. தென்னிந்தியாவில் முதல் தடவையாக ஒரு பேரரசு ஏற்பட்டது என்பதையொட்டி, உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தது. அதன் எதிரொலி இலக்கியங்களில் பிரதிபலிக்கலாயிற்று. சோழப்பேரரசு தோன்றியது என்பது புதிதாக ஏற்பட்ட அரசியல் உண்மை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் புதிய இலக்கிய படைப்புக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. [2]
கல்வெட்டுக்களில் இலக்கியம்
[தொகு]சோழர் காலத்துக் கல்வெட்டுக்களில் அலங்காரமான மெய்க்கீர்த்தி (பிரசத்தி) வாசகங்களையும் கவிதைகளையும் அவற்றின் வீறு நடையையும், முன்காலத்திய கல்வெட்டுக்களின் உப்புச்சப்பில்லாத வாசகத்துடன் ஒப்பிட்டால் எவ்வாறு சோழப் பேரரசு தோன்றியதன் பயனால் புதிய இலக்கிய படைப்புக்கள் தோன்றியது என்ற கேள்விக்கு, தெளிவான விடை கிடைக்கும். படித்தவர்களின் மொழி அல்லது புலமை மொழியான சமசுகிருதத்தைக் காட்டிலும், மக்கள் பேசிய மொழியான தமிழ் தெளிவாக நாம் காணுமாறு இந்த வேற்றுமை உள்ளது. முதலாம் இராசராச சோழன் காலத்திலிருந்து சோழ அரசர்களின் மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் ஒரு சில விதிவிலக்குகள் நீங்கலாக, அக்காலத்து இலக்கியத்துக்குச் சிறந்த சான்றாக, எடுத்துக்காட்டாக வகைப்படுத்திச் சொல்லலாம்.
அவற்றின் இராசகம்பீரமான வாசகம், செய்யுள்களின் ஆற்றொழுக்குப் போன்ற நடையும் வரலாற்று நிகழ்ச்சிகளை விறுவிறுப்புடன் தொகுத்துச் சொல்லும் பாங்கும் போக்கும் அவற்றுக்குத் தமிழ் இலக்கியத்தில் தனி இடத்தைத் தருகின்றன. பேரரசர்களின் பிரசத்திகள் தவிர, கல்வெட்டுக்களில் எத்தனையோ இலக்கிய வகைகள் உள்ளன. சிதம்பர, திருஆரூர்க் கல்வெட்டுக்கள், இவ்வகையில் உதாரணங்கள். இவை முதலாம் குலோத்துங்க சோழனிடமும் விக்ரம சோழனிடமும் அதிகாரியாக இருந்து பெரும் புகழுடன் விளங்கிய நரலோக வீரனின் வரலாற்றையும் சாதனைகளையும் கூறுவனவாகும். அட்டி, வயலூர் (வைலூர்), விருத்தாச்சலம் ஆகிய ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் காடவர்களின் பிரசத்திகளும் குறிப்பிடத்தக்கன.
இவை அனைத்திலும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பல செய்யுள் வகைகளும் திறமையாக ஆளப் பெற்றிருக்கின்றன. தமிழ் யாப்பிலக்கண விதிகள் கரடுமுரடானவையாக இருந்த பொழுதிலும் அவையும் நயமுறக் கையாளப் பெற்றிருக்கின்றன. ஆசிரியர்கள், விளங்காத சொற்களையும் செயற்கையான வாக்கியப் போக்கையும் தவிர்த்திருக்கிறார்கள். வருணனைப் பாடல்கள் என்ற வகையில் இந்தக் கல்வெட்டுக்கள், பேரரசுகளின் பிரசத்திகளில் மிகச் சிறந்து விளங்குகின்றன. எனவே, இந்தக் கவிதைகளைப் புலமை நிறைந்த அவைக்களக் கவிஞர்கள் இயற்றினார்கள் என்பதற்கும் அவர்களை அடிக்கடி நன்கு பயன்படுத்திப் போற்றி, ஊக்குவித்து வந்ததால் அக்காலத்தில் சமயச் சார்பற்ற இலக்கியம் ஏற்றம் பெற்றது என்பதற்கும் சிறிதளவும் சந்தேகம் கிடையாது.
அழிந்த பாடல்கள்
[தொகு]கல்வெட்டுக்களில் சில நூல்களின் பெயர்கள் தற்செயலாக சொல்லப் பெற்றிருக்கின்றன. மற்றபடி இவை பற்றி ஒன்றும் தெரியவில்லை; ஒரு காலத்தில் அந்த நூல்கள் போற்றப்பட்ட போதிலும், நமக்கு இப்போது அந்த நூல்கள் கிடைக்காததால், அந்த நூல்களுக்கு இருந்த பெருமை அவற்றின் இலக்கியச் சிறப்பாலா அல்லது ஆற்றை எழுதியவர் உள்ளூர்க்காரர் என்ற பற்றுதலாலா அல்லது நூலாசிரியரின் தனிப்பட்ட செல்வாக்காலா என்பதை முடிவு செய்யமுடியவில்லை. இந்த நூல்களின் பெயரிலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும் இவை சொல்லப்பட்டிருக்கிற சந்தர்ப்பங்களிலிருந்தும் மக்களுக்கு இவற்றில் ஆர்வம் இருந்ததென்றும் இவ்வகை இலக்கியங்களை அக்காலத்தார் விரும்பி வரவேற்றார்கள் என்றும் தெரிகிறது. சோழப் பரம்பரையில் ஈடும் இணையும் இல்லாதவன் முதலாம் இராசராசன். இந்த ஒப்பற்ற சக்கரவர்த்தியைப் பற்றி ஒரு நாடகமும் ஒரு காவியமும் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றின் பெயர் இராசராசேச்சர நாடகம், இராசராச விசயம்.
முதலில் சொல்லிய தஞ்சைப் பெரியகோயிலில் திருவிழாக்களில் நடிப்பதற்காக எழுதப் பெற்றது. இரண்டாவது நூல், திருப்பூந்துருத்திக் கோயிலில் படிப்பதற்காக ஆக்கப் பெற்றது. இவற்றை நடிப்பதற்கும் படிப்பதற்குமாக அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த நூல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தனவையா சமசுகிருதத்தில் எழுதப்பட்டிருந்தனவையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்த நாடகம் இராசராச சோழனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடக நூலாக இருந்திராது. சைவ சமயத்தாரிடம் வழிவழியாக வழங்கி வருகிற ஒரு சில கதைகளைப் பரப்புவதோடு நிற்காமல் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய பெருமையையே சுவையுடன் தெரிவிப்பதற்காக, நாடக பாணியில் இதை எழுதியிருக்க வேண்டும்.[3]
பெருங்கதை
[தொகு]பெருங்கதை அல்லது உதயணன் கதை என்பது பிரகத்து கதையின் தமிழ்வடிவம். இது ஒரு முக்கியமான நூல், கொங்கு நாட்டைச் சேர்ந்த சிற்றரசரனான கொங்கு வேளிர் என்ற புலவர் இதை எழுதியிருக்கிறார். பாண்டிய-பல்லவர் காலத்தின் இறுதியில் இது உருவாகியிருக்கலாம். கொங்கு வேளிரின் வாழ்க்கையைப் பற்றிய விவரமான செய்திகள் அவ்வளவாகத் தெரியவில்லை. இரண்டாம் சங்க காலத்தில் பல நூல்களைப் படித்து 'உதயணன் கதை' எழுதப்பட்டதாக சிலப்பதிகாரத்திற்குச் சிறந்ததொரு உரை எழுதியுள்ள அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நூல் பொ.ஊ. 3ம் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ எழுதப்பட்டிருக்கலாமென்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இது முடிந்த முடிவு அல்ல. அடியார்க்கு நல்லார் வாழ்ந்த பொ.ஊ. 12-ம் நூற்றாண்டில், 'உதயணன் கதை'யைப் பற்றிய இந்த நம்பிக்கை நிலவியது என்று சொல்லலாம். இந்த நூலில் எஞ்சியுள்ள பகுதிகளுக்கு மிகச் சிறந்த பதிப்பைத் தந்துள்ளார் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர். வருணனைக் கவிதைகளுக்கு ஏற்றதான அகவற்பாவில் இந்த நூல் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியருடைய நடை கூர்மையாயும் (திட்பமாயும்) தெளிவாயும் இருக்கிறது. தமிழ் இலக்கிய உலகம், இந்த நூலை சிறந்ததொரு காப்பியமாக மதித்து வருகிறது.
சிந்தாமணி
[தொகு]திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகாகாவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்மனின் சத்திர சூடாமணியைப் பின்பற்றியது, அந்த மூல நூலோ, பொ.ஊ. 898-ல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை சனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்க தேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை.
நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையது. ஆசிரியர் 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில் சில அவருடைய குருஆலும் வேறு சில வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, இவை குருவால் எழுதப்பட்டவை என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை. பெரிய புராணம் எழுத சீவக சிந்தாமணி நேரடியாகக் காரணமாக இல்லை; ஆனாலும், சீவக சிந்தாமணி அதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது. [4]
வளையாபதியும் குண்டலகேசியும்
[தொகு]ஐம்பெரும் காப்பியங்கள் என்பவற்றுள் வளையாபதியும், குண்டலகேசியும் அடங்கும். இவை முழுமையாகக் கிடைக்கவில்லை. வேறு சில நூல்களில், இவற்றின் சில சில பகுதிகள் மட்டுமே காணப்படுகின்றன. இவையும் ஏறத்தாழ சீவக சிந்தாமணியின் காலத்தில் செய்யப்பட்டவையே. பௌத்த மதத்தார்த் தமிழுக்கு வழங்கியுள்ள இலக்கியச் செல்வங்கள் மிகக்குறைவு. அவற்றுள் ஒன்று குண்டலகேசி. புகழ்பெற்ற மணிமேகலை என்னும் நூலும் பௌத்தர்களால் படைக்கப்பட்டதே.
கல்லாடம்
[தொகு]கல்லாடனார் இயற்றியது கல்லாடம் என்னும் கவிதை நூல், ஓர் ஊரின் பெயரை வைத்து நூலுக்கும் நூலாசிரியருக்கும் பெயர் இடம் பெற்றிருக்கின்றன. கல்லாடர் என்ற பெயரில் சங்க காலப் புலவர் ஒருவரும் இருந்திருக்கிறார்; அவருடைய பாடல்களாக, புறநானூற்றில் ஐந்து செய்யுள்களும் அகநானூற்றிலும் குறுந்தோகையிலும் பல செய்யுள்கள் காணப்படுகிறன. கல்லாடத்தின் ஆசிரியர் திருச்சிற்றம்பலக்கோவையைத் தன் நூலுக்கு அடிப்படையாகக் கொண்டார் என்றும் செவிவழிச் செய்திஉள்ளது; இது நம்பத்தகுந்ததே.[5] மரபுக்கு மாறுபட்டும் செயற்கை நடையிலும் இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது. சங்க காலக் கவிதைப் பாணியையும் சொல்லமைப்பு முறையையும் இவர் கொண்டிருக்கிறார்.
கர்வம் அல்லது புலமைச் செருக்கு உடைய ஒருவரின் படைப்பு என்பது இந்நூலை மேற்போக்காகப் பார்த்தாலும் தெரியவரும். இதிலுள்ள நூறு செய்யுள்கள் ஒவ்வொன்றும் அகத்துறையில் ஒரு இயல்பைப் படம் பிடித்துக் காட்டுவன. கோவை என்னும் பிரபந்த வகையில் வரும் காதல் கவிதைகளை உயிரோட்டமின்றி, கல்லாடத்தில் காணலாம். திருக்கோவையிலிருந்து செய்யுள்களைத் தொகுத்து முன்மாதிரியாக வைத்து, நூலாசிரியர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டுவிட்டார். மேலும் தான் வாழ்ந்த காலத்திற்குப் பொருத்தமில்லாத மொழிமரபைப் பின்பற்ற வேண்டுமென்று வலிய முயன்று அதில் தோல்வி கண்டுள்ளார். ஒரு பரிகாசமான நூலாகவோ கேலிச்சித்திரமாகவோ அவர் இதை எழுதவில்லை.
திருக்கோவை சிறப்பை கல்லாடர் கூறிய விளக்கங்களுக்குப் பின்னரே, சங்க காலப் புலவர்கள் ஒப்புக்கொண்டதாக ஒரு வதந்தி உண்டு. இந்த நூல் ஆடம்பரமான நடையில் அமைந்தது ஆகையால் 'கல்லாடம் கற்றவனோடு மல்லாடதே' என்று ஒரு பழமொழி உண்டு. அண்மைக் காலங்களில் கூட சில அறிஞர்களும் புலவர்களும் இந்நூலைப் பெரிதும் மதித்து வருகிறார்கள். மதுரையில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்களைக் கல்லாடர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். மாணிக்கவாசகர், தருமி, இடைக்காடர் முதலிய பலருக்காக சிவபெருமான் நிகழ்த்திய அற்புதச் செயல்களைக் கல்லாடர் எடுத்துக் கூறுகிறார்.
கலிங்கத்துப் பரணி
[தொகு]முதல் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியில் அரசவை கவிஞரான செயங்கொண்டார், கலிங்கத்துப் பரணியைப் பாடினார். நமக்குக் கிடைத்துள்ள பரணிகளுள் இதுவே காலத்தால் முந்தியதும் சிறப்புமிக்கதும் ஆகும். 'பரணிக்கு ஒரு செயங்கொண்டான்' என்ற பழமொழியிலிருந்து இந்நூலின் அருமையும் பெருமையையும் உணரலாம். எது வரலாறு, எது கட்டுக்கதை எது கற்பனை என்று வாசகர்களுக்குத் தெரியுமாறு எழுதியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்புக்களுள் ஒன்று. ஆசிரியரின் சொல் வளமும், பலவகைச் செய்யுள்களை ஒருங்கே இணைக்கும் திறமும் அவற்றுடன் நிகழ்ச்சிக்களைப் பின்னிப் பிணைக்கும் ஆற்றலும் குறிப்பிடத்தக்கவை. பரணி என்பது போர் பற்றியது; போரின் விவரங்களையும் சூழல்களையும் மட்டுமின்றிப் போர்க்களத்து நிகழ்ச்சிகளையும் சோகம், விரம் முதலிய சுவைகள் தோன்ற எடுத்துரைப்பது.
குலோத்துங்கனின் கலிங்கப் போரைப் பிண்ணனியாகக் கொண்ட பல்வேறு இலக்கியங்கள் தோன்றியதாகத் தெரிகிறது. வீரசோழியம் உரை, தண்டியலங்காரம் உரை ஆகியாவ்ற்றில் ஒரு சில செய்யுள்கள் மட்டுமே கிடைக்கின்றன; கலிங்கத்துப் போர் பற்றிய ஏனைய பல செய்யுள்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அவை இனி நமக்குக் கிடைப்பதற்கு வழியில்லை. கலிங்கத்துப் பரணி அழியாது கிடைத்திருக்கிற்றது எனினும், அதன் மிக உன்னதமான இலக்கியத்தரமே அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஒரு சிறந்த நூல், மட்டமான ஏனைய நூல்களை அழித்துவிடும் என்பதற்கு, இந்திய இலக்கியங்களில் வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. செயங்கொண்டாரைப் பார்த்து எழுதியவர்கள் பலர்; ஆனால், பிற்காலப் புலவர்களில் எவரையும் செயங்கொண்டானுக்குச் சமமானவர்கள் என்றோ அவருடன் போட்டியிடக் கூடியவர்கள் என்றோ சொல்வதற்கில்லை.
கூத்தன்
[தொகு]கூத்தன் என்பது ஓட்டக்கூத்தனின் சுருக்கமான பெயர். இவர் செங்குந்தர் மரபினர். அம்மரபினர் போர்ப்படையில் சாதாரணப் பட்டாளத்துக்காரன் முதல் படைத்தலைவன் வரை பல வேலைகளில், மற்றும் நெசவுத் துறையிலும் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளலின் தகப்பனுமான சங்கரன் என்பவனிடம் ஊழியம் செய்து வந்தார். சங்கரனிடம் வீட்டு ஏவல்களைச் செய்வதை விட வேறு பெரிய பதவிக்கு உரிய தகுதிகள் ஒட்டக்கூத்தனுக்கு இருப்பதை ஒரு காங்கேயன் உணர்ந்தான்; தன் பெருமையை அறிந்து அந்த வள்ளலுக்கு நன்றி கூறத்தான், கூத்தன் ஒரு 'நாலாயிரக்கோவை' பாடினர்.
கூத்தனின் புகழைக் கேள்விப்பட்ட மூன்று சோழப் பேரரசர்கள் அவரை அரண்மனைப் புலவனாக்கிக் கொண்டார். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் அவர் ஒரு உலாவைப் பாடினார். ஒரு பரணி பாடி, விக்கிரமச் சோழனின் கலிங்கப் போர் வெற்றியைச் சிறப்பித்தார். இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒரு பிள்ளைத் தமிழும் பாடினார். இந்தப் பிள்ளைத் தமிழே ஒட்டக்கூத்தனின் படைப்புக்களிலெல்லாம் சீரும் சிறப்பும் உடையது. காரணம் - சொல்வளம், செய்யுள்களின் ஓசை நயம், அழகான உருவகத் திறமை வாய்ந்தமையாகும். ஈட்டி எழுபது, எழுப்பெழுபது, தக்கயாகப் பரணி ஆகியவற்றைக் கூத்தன் எத்தகைய சூழ்நிலையில் பாடினார் என்பதைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன.
கம்பன்
[தொகு]கம்ப இராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர் கம்பன். தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம். வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும், கம்பராமாயணம் சமசுகிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது; அதன் தழுவலும் இல்லை; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான். தமிழ் இலக்கியத்தில் எங்குமே ஒப்பிட்டுக் காட்ட முடியாதபடி, ஆழமான கவிதை அனுபவத்தையும் புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம்.
எத்தனையோ பெரும் புலவர்கள் இந்திய மொழிகளையும் கீழைநாட்டு மொழிகளையும் இராம காதை எழுதிப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய கதையில், அதன் வருணனையில் தன் காலத்து நிகழ்ச்சிகளையும் தான் வாழும் தமிழ்நாட்டின் சாயலையும் இடையிடையே புகுத்துகிறான் அல்லது படம் பிடித்துக் காட்டுகிறான். எனவே அவன் காட்டும் கோசலநாடு சோழநாடே என்று கூறலாம். நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய வள்ளலான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ் போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று சொல்லி தன் வாசகர்களைக் கம்பன், காந்தம் போல தன்பாலும் தன்னைப் புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான். சமசுகிருத மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும் சொல்வன்மை(நாவன்மை) பெற்றிருந்தான்.
சில சமயம், கம்பனும் ஏனைய தமிழ்ப்புலவர்கள் போல, பாவியல் மரபில் சிக்கிக் கொள்கிறான்; அவற்றின் போக்குக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். சான்று: மிதிலைக்கு இராமன் வந்தவுடன் எதிர்பாராத விதமாக இராமனும் சீதையும் சந்தித்துவிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை, மிக விரிவாக விவரிக்கிறான். இராமனுடைய மோதிரத்தை அநுமான், சீதையிடம் கொடுத்த பொழுது சீதைக்கு இருந்த உணர்ச்சிகளையும் கம்பன் விவரிக்கிறான்; கணவனுடன் மீண்டும் கூடி விட்டது போலச் சீதை நினைத்து மகிழ்ந்தாள் என்று மட்டும் வால்மீகி சொல்லியிருக்கிறான். கம்பன் அதோடு நிறுத்தவில்லை, அதை இன்னும் விரிவாகக் கூறுகிறான். ஆனால், தசரதனுடைய அசுவமேதயாகம் முதலியவற்றை வால்மீகி சொல்வதைவிடச் சுருக்கமாகவே கம்பன் தெரிவிக்கிறான்.
புகழேந்தி
[தொகு]புகழேந்தி, ஒட்டக்கூத்தன் காலத்தவர் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது, அவர் தொண்டை நாட்டில் 'களந்தை' என்னும் ஊரில் பிறந்து, பாண்டிய அரசர்களிடம் பணிபுரிந்ததாகக் கூறுவது வழக்கம். பிறகு சோழ அரசன் ஒருவன் பாண்டிய இளவரசி ஒருத்தியை திருமணம் செய்து கொண்ட பொழுது, இவனும் பாண்டிய அரசனால் சோழர் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு கூத்தன், அவன் மீது பொறாமை கொண்டான். கூத்தனுக்கு புகழேந்திக்கும் ஏற்பட்ட பூசல் அரச குடும்பத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது. கடைசியில் அரசனே தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினான். பிறகு அவர்கள் தங்கள் சண்டைகளை நிறுத்துக் கொண்டார்கள் என்று செவிவழிக்கதைகள் உள்ளன. ஆனால் இதை நம்புவதற்கு ஆதாரங்கள் இல்லை.
மேலும் செஞ்சியர்கோன் என்றழைக்கப்படும் செஞ்சி நாட்டுச் சிற்றரசனான கொற்றண்டை என்பவனைப் பலவகைப் பாக்களில் புகழ்ந்து புகழேந்தி ஒரு கலம்பகம் பாடியதாகத் தொண்டை மண்டல சதகம் கூறுகிறது. ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் சமகாலத்தவர் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால் செஞ்சியை ஆண்ட இந்தச் சிற்றரசன் விக்கிரம சோழ உலாவில் குறிப்பிடப்பட்டவனாகயிருக்கவேண்டும். ஆனால் இது சந்தேகத்திற்குரியது. புகழேந்தி கூத்தருக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின்னரே வாழ்ந்ததாகக் கொள்ளலாம். புகழேந்தி நளவெண்பா மூலம் புகழ் பெற்றவர். "வெண்பாவிற் புகழேந்தி" என்பது ஒரு சொற்றொடர். நளவெண்பா நளன் கதையை 400 வெண்பாக்களில் கூறுகிறது சமசுகிருதத்தில் அனுட்டுப் என்பதற்குச் சமமானது தமிழ் வெண்பா; தக்க திறமையும் புலமைமுடைய கவிஞர்கள் கையாண்டால், வெண்பா சிறந்த பலன் தரும்.
புகழேந்தியின் வெண்பாக்கள் மிகச்சிறந்த தரம் உடையன. நளன் கதையில் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தால் நளவெண்பா மிகவும் பரவியது, இலக்கியச் சிறப்பில்லாத பல நூல்களைப் புகழேந்தியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறன. நளவெண்பாவைப் புகழேந்தி, எளிய முறையில் எழுதியதால், அதே முறையைப் பின்பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களையும் புகழேந்தியுடன் தொடர்புபடுத்திச் சொல்லும் மரபு உண்டாயிற்று. ஆனால் நளவெண்பாவுக்கும், இந்த நூல்களுக்கும் உள்ள வேற்றுமை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது. புகழேந்தியின் காலத்தைப் பற்றி அறிதியிட்டு ஒன்றும் சொல்லமுடிவதில்லை.
மாளுவ நாட்டில் முரணைநகர் சந்திரன் சுவர்க்கி என்பவனைப் புகழேந்தி குறிப்பிடுகிறார். இவனைப் பற்றி எந்தக் கல்வெட்டிலும் தகவல் இல்லை. கம்பனுடைய கருத்துக்களும், கம்பன் கையாண்டுள்ள சொற்றொடர்களும், புகழேந்தியின் நளவெண்பாவில் காணப்படுவதால், புகழேந்தி, கம்பனுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது என்ற தீர்வுக்கு வரலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 870.
- ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 871.
- ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 873.
- ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 877.
- ↑ சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 878.