உள்ளடக்கத்துக்குச் செல்

எல்லாளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மனுநீதிச் சோழன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எல்லாளன்
அனுராதபுரத்தின் சோழ மன்னன்
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள எல்லாளன் சிலை
ஆட்சிபொ.ஊ.மு. 205 – பொ.ஊ.மு. 161
முன்னிருந்தவர்அசேலன்
துட்டகாமினி
மொழிதமிழ் மொழி
அரச குலம்சோழர்
பிறப்புபொ.ஊ.மு. 235
இறப்புபொ.ஊ.மு. 161
சமயம்சைவ சமயம்

எல்லாளன் (ஆங்கிலம்: Ellalan) பொ.ஊ.மு. 205 இல் இருந்து பொ.ஊ.மு. 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். தமிழ் இலக்கியங்கள் திருவாரூரில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட மனு மன்னன் பெயர் கொண்ட அரசன் பசுவின் கன்று தன் மகன் சென்ற தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்பதற்காக, தன் மகனைத் தன் தேர்க்காலில் கிடத்திக் கொன்று தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கிய வரலாற்றைக் குறிப்பிடுகின்றன. இந்த நிகழ்வை எல்லாளன்[1] என்னும் மன்னன் செய்தாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இந்த நிகழ்வு நோக்கில் இக்கட்டுரை மனுநீதிச் சோழனையும், எல்லாளனையும் இணைத்துக் காட்டுகிறது.

எல்லாளன்

[தொகு]

எல்லாளன் பொ.ஊ.மு. 205 இல் இருந்து பொ.ஊ.மு. 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்தவர். இவர் "பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்" சேர்ந்தவர் என்று மகாவம்சம் கூறுகிறது.

ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவர் என்று சிலர் கருதுகிறார்கள்.[2] அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் தொடக்கத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார்.[3] எனினும் இது குறித்துத் தெளிவான முடிவு எடுப்பதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

வரலாறு

[தொகு]

பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கும் (பொ.ஊ.மு. 247) பொ.ஊ.மு. 1 ஆம் நூற்றாண்டிற்கும் (பொ.ஊ.மு. 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர்.[4] இதில் 44 ஆண்டுகள் எல்லாளனுக்கும் 22 ஆண்டுகள் அவனது தந்தை ஈழசேனனுக்குமுரியவை. ஆயினும், இக்கால வரலாற்றைப் பல பாகங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூற முடிக்கின்றது. எல்லாளன் என்ற சோழ மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.[5]

எல்லாளன் பற்றி மகாவம்சம்

[தொகு]
சோழ இளவரசனால் தேரேற்றி கன்று கொல்லப்படுதல். ஆந்திரப் பிரதேசத்தின், இலேபாட்சி வீரபத்திரன் கோவில் விதான ஓவியம்.
கன்று கொல்லப்பட்டதால் துயருற்ற பசு சோழனின் ஆராய்ச்சி மணியை அடித்தல்.
கன்றைக் கொன்ற இளவரசனை தேர்காலில் இட்டு கொல்லும் மனுநீதி சோழனின் தண்டனை
மனுநீதி சோழனுக்கு ஆசியளித்து கன்றையும், இளவரசனையும் உயிர்ப்பித்து அளிக்கும் சிவன் ஆந்திரப் பிரதேசத்தின், இலேபாட்சி வீரபத்திரன் கோவில் விதான ஓவியம்.

எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவர் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லை.[6] இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் கூறுகிறது.[7] எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் கோட்டைவாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.

  • எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். மகனின் பெயர் வீதிவிடங்கன். ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.[8]
  • பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது.[9]
  • ஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கிறது.[10]

மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் பெளத்த மதத்தை ஆதரவளித்து போற்றிப்பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது. தன் தாய் மரணித்ததை அறிந்த எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாதுகோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான். 'தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக. தூபத்தைத் திருத்தி விடுவோம்' என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தை புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப் பணங்களைச் செலவிட்டதுடன் தன் தாயின் இறுதிக்கிரியைக்குச் செல்லாமல் தாதுகோபம் புனரமைக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தான்.[11]

எனினும் இதே விடயம் இனவெறியை தூண்டுவதற்காக வவிகாரைமகாதேவியால் பயன்படுத்தப்படுவதையும் மகாவம்சம் நியாயப்படுத்தி கூறுகின்றது. அதில் விகாரைமகாதேவி தன் மகன் துட்டகாமினியிடம் 'எல்லாளன் அங்கு (அநுராதபுரத்தில்) பெளத்தவிகாரைகளை தேரால் இடித்து தரைமட்டமாக்கிறான்' என கூறுவதாக கூறப்பட்டுள்ளது.

விகாரைமகாதேவியும் எல்லாளனும்

[தொகு]

கல்யாணி இராசதானியின் மன்னன் களனிதீசனின் மகளே மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள். விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது.[12] பின்னாளில் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாகிறாள். எல்லாளனின் வலுவான கோட்டைகளாய் நிலவிய மகேல நகரக் கோட்டையின் தளபதியான மகேலனையும்[13], அம்பதித்தகக் கோட்டையின் தளபதியான தித்தம்பனையும் தன் அழகையும் மணம் செய்வதற்காக ஆசையும் காட்டி சூழ்ச்சியால் கைப்பற்றிக் கொள்கிறாள்.[14] இதை மகாவம்சம் போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது[15].

உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசன் ஆட்சி பீடம் ஏறுவதற்காக உருகுணையின் தமிழ் இளவரசி அயிஸ்வரியாவை மணந்திருந்தான்.[சான்று தேவை] பின்னர் பெளத்த இளவரசனே ஆட்சிக்கு வரவேண்டுமென்ற தன் ஆசையினால் விகாரைமகாதேவியினை மணந்தான்.[சான்று தேவை] திருமணத்தின் பின் துட்டகாமினியைக்கருவில் கொண்டிருந்த போது தன் கணவனிடம் மூன்று ஆசைகளை வெளிப்படுத்தியிருந்ததாக மகாவம்சம் கூறுகின்றது.

  • பிக்குகளுக்கு வழங்கித்தானும் பருகக்கூடிய பெரிய தேன் அடை
  • எல்லாளனின் படைத்தளபதி ஒருவனின் தலையைச்சீவிய இரத்தம் தோய்ந்த வாளினைக்கழுவிய நீரை அருந்த வேண்டும்
  • அநுராதபுரத்தின் வாடாத தாமரைகளால் மாலை கட்டி அணிய வேண்டும்

இந்த மசக்கை ஆசைகள் நிறைவேற்றப்பட்டன.

துட்டகைமுணுவும் எல்லாளனின் மரணமும்

[தொகு]
எல்லாளனின் சமாதியென நம்பப்படும் தக்கின தாது கோபுரம், அனுராதபுரம்.

காக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான். இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கெதிராக[16] உருவாக்கப்பட்டவன். துட்டகாமினி ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்திருந்தபோது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு 'வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா கால்களை நீட்டி படுக்கமுடியும்' என்றான்.

இவ்வாறு கருவிலிருந்தே இனவெறியூட்டப்பட்டு[16] வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும்படையுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான். இப்படையெடுப்பை பற்றிய போதிய ஆதாரங்கள் மஹாவம்சத்தில் காணப்படுகின்றது. இறுதி யுத்தமானது விஜிதபுரவில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. எவ்வளவு முயன்றும், துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த்தந்திரமையை வெற்றிகொள்ள முடியவில்லை. அவனது படையிலே இறப்புக்கள் அதிகமாக காணப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன. அதனால் எல்லாளனை தனிச்சமருக்கு அழைத்தான். துட்டகைமுணு சதியினாலே எல்லாளனைக் கொன்றதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மனுநீதிச் சோழன்

[தொகு]

மனுநீதிச் சோழன் அல்லது மனுநீதி கண்ட சோழன் என்பவன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன் எனக்கருதப்படுபவன். இவரும் எல்லாளனும் ஒன்று எனவும் வெவ்வேறானவர்கள் எனவும் கருதப்படுகிறது.

இலக்கியக் குறிப்புக்கள்

[தொகு]

சோழ நாட்டின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச் சோழன் பற்றிக் கண்ணகி குறிப்பிடுவதாகச் சிலப்பதிகாரத்தில் வருகிறது[17]. இக்காப்பியத்தில் வேறு சில இடங்களிலும் இக்கதை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன[18]. பதினெண் கீழ்க்கணக்கு நூலான பழமொழி நானூறு என்னும் நூலிலும் இக்கதை எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது[19]. சோழர் காலத்து நூலான சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே மனுநீதிச் சோழன் கதை விரிவாகக் காணப்படுகிறது. மனு திருவாரூரில் இருந்துகொண்டு சோழ நாட்டை ஆண்ட மன்னன். அவன் மகன் தேரில் விரைந்து சென்றபோது துள்ளியோடிய பசுக்கன்று தேர்க்காலில் சிக்கி இறந்தது. தாய்பசு ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் நிகழ்ந்தது அறிந்து பசுவுக்கு நீதி வழங்கும் அறநெறியில் கன்று இறந்தது போலவே தன் மகனைத் தேர்க்காலில் கிடத்திக் கொன்றான்.[20] இவை தவிரச் சோழ மன்னர் பெருமை கூற எழுந்த இராசராசசோழன் உலா, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா என்பவற்றிலும் இக்கதை வருகிறது.

முன்னர், சோழர் பெருமை கூறுவதற்காக மட்டும் பயன்பட்டுவந்த இக் கதை தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்தினதும் நீதி முறைசார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன்பட்டுவருகிறது.[21] சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலை இருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

கல்வெட்டறிஞர்கள் மற்றும் புலவர் கருத்துகள்

[தொகு]

கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம்

[தொகு]

கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் திருவாரூர் கல்வெட்டையும் திருவாரூர் சிற்பத்தையும் ஆதாரமாகக் கொண்டு, மனுநீதிச்சோழன் வாழ்ந்தது உண்மையே என்று குறிப்பிடுகின்றார்.[22]

கல்வெட்டறிஞர் கா. ம. வேங்கடராமையா

[தொகு]

கல்வெட்டறிஞர் கா. ம. வேங்கடராமையா தமது ஆய்வுப்பேழை எனும் நூலில் மனுசரிதக் கல்லெழுத்து முழுமையையும் அதன் தகவல்களையும் தருகின்றார். இதில் மனு திருவாரூரில் இருந்து அரசாண்டவர் என்றும் மனுவின் மந்திரி பெயர் இங்கனாட்டுப் பாலையூடையான் உபயகுலாமலன் என்றும் மனுவின் மகன் பிரியவிருத்தன் என்றும் திருவாரூர் கல்வெட்டுத் தகவல்களைத் தெரிவிக்கின்றார்.

புலவர் வே.மகாதேவன்

[தொகு]

"சேக்கிழார் சொல்லாத செய்திகள்" என்ற தலைப்பில் திருவாரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் மனுவின் அமைச்சர் பற்றிய செய்திகளையும், மனுவின் வரலாற்றைக்கூறிய சேக்கிழார் அதிலுள்ள பிற தகவல்களைச் சொல்லாது விட்டதற்கான காரணங்களையும் ஆராய்கிறார். அமைச்சர் பதவியிலிருந்தவரான சேக்கிழார் தகவல்களை மிகுந்து தேர்ந்தே கூறினார் என்பதை அடிப்படையாகக் கொள்கிறார். திருவாரூர் மனுசரிதக் கல்வெட்டு அறக்கொடை பற்றிய சாசனம். இதன் ஆரம்ப வரிகள் "பூலோக ராஜ்யம் செய்கிற சூர்ய புத்ரன் எனும் மனு தன் புத்ரன் ஏறி வருகிற தேரில்.."என்பது. சூர்யபுத்ரன் மனு எனும் தொடக்கக் கருத்தில் கருத்து வேறுபாடு கொண்ட சேக்கிழார் கல்வெட்டின் பிற செய்திகளையும் தவிர்த்துவிட்டார் என்று கருதுகிறார்.[23]

சூரிய மனுவிலிருந்து சோழ மன்னன் வேறுபட்டவன் என்ற கருத்தை சேக்கிழார் கொண்டிருந்தார் என்பதை புலவர் வே.மகாதேவன்,மெய்ம்மனுப் பெற்ற நீதியும் தம் பெயராக்கினான் (100), தொல்மனு நூல் தொடைமனுவால் துடைப்புண்டது (122) எனும் சேக்கிழாரின் பெரியபுராண வரிகள் கொண்டு சுட்டுகிறார்.[23]

எல்லாளன் - மனுநீதிச் சோழன் ஒப்பு நோக்கல்

[தொகு]
சோழனின் ஆராய்ச்சி மணியை அடிக்கும் பசு
  • மனுநீதிச் சோழனது மகன் வீதிவிடங்கன், தேரேறி வீதி உலாக் கிளம்பினான். அவனையே அறியாது அவன் சக்கரங்கள் ஏறி ஒரு பசுங்கன்று இறந்து விட்டது. இதைக் கண்ட தாய்ப் பசு மன்னன் அவை சென்று ஆராய்ச்சி மணியை முட்டி அடித்தது. பசுவின் துயர் அறிந்த மன்னவன் தானும் தன் மகனை இழத்தலே தகும் என்று மந்திரியிடம் இளவரசனை தேரேற்றிக் கொல்லப் பணித்தான். மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்யேன் என்று கூற, மன்னனே தன் வீதிவிடங்கனைத் தேரேற்றிக் கொன்றான். பொ.ஊ. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும், இலங்கையின் வரலாறு கூறும் பாளி நூலான மகாவம்சம் பொ.ஊ.மு. 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் இருந்து வந்து 44 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளன் மீது இக்கதையை ஏற்றிச் சொல்கிறது[24].

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. எல் < எல்லோன் = ஒளி தரும் கதிரவன், கதிரவன் குலத்தில் பிறந்தவன்
  2. Parker, Henry (1909). Ancient Ceylon. London: Luzac and Co.
  3. Parker.H, Ancient Ceylon. London : 1909
  4. Geiger,W., The Mahawamsa – Introduction, Colombo 1950. Page XXXVII
  5. புஸ்பரட்ணம், ப., இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி - ஒரு நோக்கு. நா.கிருஸ்ணனந்தன் நினைவுமலர், பொருளிதழ் 3, பக்கம் - 5.
  6. சிற்றம்பலம் சி.க.ஈழத்தமிழர் வரலாறு : 1 சாவகச்சேரி - 1994. பக்கம் 20
  7. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 34, பக்கம் : 145.
  8. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 15 – 18
  9. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 19 – 20
  10. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 27 – 33
  11. The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 21 – 26
  12. குணராசா, க. (2003). மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம். யாழ்ப்பாணம்: கமலா பதிப்பகம். p. 86.
  13. மகாவம்சம் 25: 48 – 49
  14. மகாவம்சம் 25: 8 – 9
  15. "The Victory of Duttha Gamani – king Dutthagamani and Elara". mahavamsa.org.
  16. 16.0 16.1 History grade 10 by Kumudini dias
  17. சிலப்பதிகாரம், வழக்குரை காதை 53-55
  18. சிலப்பதிகாரம், கட்டுரை காதை 58
  19. பழமொழி நானூறு, அரசியல்பு, பாடல் 242.
  20. பெரியபுராணம், திருமலைச் சருக்கம், திருநகரச் சிறப்பு, பாடல்கள் 13 – 50
  21. indianfolklorist.com இன் இந்தப்[தொடர்பிழந்த இணைப்பு] பக்கத்தில் இருந்து
  22. "மனுநீதிச் சோழன் கதை உண்மையா?". 16 March 2011.
  23. 23.0 23.1 அமுதசுரபி, தீபாவளிமலர் 2011;பக்கம் 61
  24. Wijesinha, L. C., 1996. பக். 82.

உசாத்துணைகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
எல்லாளன்
பிறப்பு: ? 235 BC இறப்பு: ? 161 BC
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர மன்னன்
205 BC–161 BC
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லாளன்&oldid=3727351" இலிருந்து மீள்விக்கப்பட்டது