வீரராஜேந்திர சோழன்
பொ.ஊ. 1069 சோழர் ஆட்சிப்பகுதிகள் | |
ஆட்சிக்காலம் | பொ.ஊ. 1063 - பொ.ஊ. 1070 |
பட்டம் | இராஜகேசரி வர்மன் |
தலைநகரம் | கங்கைகொண்ட சோழபுரம் |
அரசி | அருள்மொழிநங்கை |
பிள்ளைகள் | மதுராந்தகன் கங்கைகொண்ட சோழன் இராஜசுந்தரி |
முன்னவன் | இராஜேந்திர சோழன் II |
பின்னவன் | அதிராஜேந்திர சோழன் |
தந்தை | இராஜேந்திர சோழன் I |
பிறப்பு | அறியப்படவில்லை |
இறப்பு | பொ.ஊ. 1070 |
சோழ மன்னர்களின் பட்டியல் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முற்காலச் சோழர்கள் | ||||||||||||||||||||||||||||
மாற்றார் இடையாட்சி | ||||||||||||||||||||||||||||
இடைக்காலச் சோழர்கள் | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
சாளுக்கிய சோழர்கள் | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
சோழர் சமூகம் | ||||||||||||||||||||||||||||
இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன் (பொ.ஊ. 1063 - 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திரன், தந்தைக்கு முன்னரே இறந்து விட்டதால், வீரராஜேந்திரன் அரசனாக்கப்பட்டான்.
இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
போர்கள்
[தொகு]வீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான சாளுக்கியருடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கீழைச் சாளுக்கியப் பகுதியான வேங்கி மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், பாண்டி நாட்டிலும், ஈழத்திலும் சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.
ஆரம்பகாலப் போர்கள்
[தொகு]இவனுடைய ஆரம்ப காலத்தில், சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கே சென்று போரிட்டான். பாண்டி நாட்டிலும், சில பாண்டிய இளவரசர்களின் கிளர்ச்சிகளை முறியடித்தான். இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி மேற்குச் சாளுக்கிய மன்னனான முதலாம் சோமேசுவரன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான்.
சாளுக்கியப் போர்கள்
[தொகு]வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. வீரராஜேந்திரன் மன்னன் ஆகுமுன்பே, அப்போதைய முடிக்குரிய இளவரசனான இராஜமகேந்திரனின் தலைமையில் சாளுக்கியருடன் போரிட்டுள்ளான். இப்போரில் சாளுக்கியரை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவமானமுற்ற சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். அவன் முன்னர் தோல்வியடைந்த அதே கூடல் சங்கமம் என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான்.
அழைப்பை ஏற்ற வீரராஜேந்திரன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தான். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான 10 செப்டெம்பர் 1067 அன்று சாளுக்கியப் படைகள் தென்படவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திரன் சுற்றியிருந்த சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினான்.
தானே அழைப்பு விடுத்த போருக்குச் சோமேஸ்வரன் வராது விட்ட காரணம் தெரியவில்லை ஆனாலும், இந் நிகழ்வினால் முன்னரிலும் கூடிய அவமானப்பட்ட சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
கூடல் சங்கமத்தில் இருந்து கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரான வெங்கிக்குச் சென்ற வீரராஜேந்திரனின் படைகள் அங்கே சோழர் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை முறியடித்தன. இப் போரில் வீரராஜேந்திரன், ஜனநாதன் என்பவன் தலைமையிலான மேலைச் சாளுக்கியப் படைகளைக் கிருஷ்ணா நதிக் கரையில் முறியடித்தான். வெங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கீழைச் சாளுக்கியர் பகுதி முழுவதையும் வீரராஜேந்திரன் அடிப்படுத்தினான். விஜயாதித்தன் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசனை வெங்கியில் மன்னனாக்கினான். வடபகுதிப் போர்களில் கலிங்க நாடு, மேலைச் சாளுக்கியருக்கு உதவியாக இருந்தது. இதனால் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான்.
இலங்கைப் போர்
[தொகு]சோழரின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைத் தீவின் தென் பகுதியில் தன்னை உறுதிப்படுத்தி வந்த விஜயபாகு என்ன்னும் சிங்கள அரசன், சோழர்களை இலங்கையில் இருந்து துரத்த எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். வீரராஜேந்திரன் இவனை அடக்குவதற்காக இலங்கையில் இருந்த சோழர் படைகளை இலங்கையின் தென்பகுதியான உறுகுணைப் பகுதிக்கு அனுப்பினான். விஜயபாகுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பர்மாவின் அரசன் அவனுக்குத் துணையாகக் கப்பல்களையும் படைகளையும் அனுப்பினான். இவற்றின் துணையுடன் இலங்கையின் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதில் விஜயபாகு வெற்றி பெற்றான். இலங்கையில் ஏற்கெனவேயிருந்த சோழர் படைகளுக்குத் துணையாகச் சோழநாட்டிலிருந்தும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் வீரபாண்டியன் கிளர்ச்சிகளை அடக்கினான் எனினும், உருகுணைப் பகுதியில் தனது பலத்தை, விஜயபாகு மேலும் அதிகரித்துக் கொண்டான். விஜயபாகுவின் நடவடிக்கைகள் பின் வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது.
கடாரப் படையெடுப்பு
[தொகு]வீரராஜேந்திரனின் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று, அவன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கடாரத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகவும், அதனை அம்மன்னனுக்குக் கையளித்ததாகவும் கூறுகின்றது. உதவி கோரிய மன்னன் தொடர்பான தகவல்களோ, வேறு தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. இந் நிகழ்ச்சி பொ.ஊ. 1068 இல் இடம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
சாளுக்கியருடனான தொடர்பு
[தொகு]முதலாம் சோமேஸ்வரனின் இறப்புக்குப் பின்னர், பொ.ஊ. 1068 ஆம் ஆண்டில், இரண்டாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய ஆட்சிபீடம் ஏறினான். தொடர்ந்து இவனுக்கும், இவனது தம்பியான விக்கிரமாதித்தனுக்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போடியினால் உள்நாட்டுக் கலகம் தோன்றியது. சோமேஸ்வரன் நாட்டின் தென் பகுதியை விக்கிரமாதித்தனுக்கு விட்டுக் கொடுத்தான். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட வீரராஜேந்திரன், விக்கிரமாதித்தனுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தனது மகளையும் அவனுக்கு மணமுடித்து வைத்தான்.
இறப்பு
[தொகு]வீரராஜேந்திரன் பொ.ஊ. 1070 ஆம் ஆண்டில் காலமானான். இவன் தனது ஆண் மக்களைச் சோழநாட்டின் பகுதிகளில் ஆளுநராக நியமித்திருந்தான். வீரராஜேந்திரனின் இறப்பைத் தொடர்ந்து இவர்களில் ஒருவன் அதிராஜேந்திரன் என்னும் பெயருடன் அரசனானான்.
உசாத்துணைகள்
[தொகு]- Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984). (ஆங்கில மொழியில்)
- Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).(ஆங்கில மொழியில்)
- South Indian Inscriptions - http://www.whatisindia.com/inscriptions/ (ஆங்கில மொழியில்)