உள்ளடக்கத்துக்குச் செல்

தளிச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தளிச்சேரி என்பது சோழர் காலத்தில் இருந்த ஆடல்வல்லார்கள் இருந்த குடியிருப்புப் பகுதியாகும். முதலாம் இராஜராஜன் காலத்தில் சோழ மண்டலம் முழுவதிலும் உள்ள நடன மற்றும் இசைக்கலைஞர்கள் ஆதரிக்கப்பட்டனர். கோவிலின் அருகில் இவர்களுக்கு வீடுகள் உருவாக்கப்பட்டன. இப்பகுதிகள் தளிச்சேரி எனப்பட்டது. இராசராசன் காலத்தில் இருந்த 400 நடனக் கலைஞர்கள் பெயர்கள் பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.[1][2] மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட நிலம் (பங்கு) பற்றியும் குறிப்பிடுகிறது.

குடியிருப்புகள்[தொகு]

இந்த நடனக் கலைஞர்கள் அவரவர் சேவை செய்து வந்த கோவில்களின் அருகிலேயே வசித்து வந்தனர். பெரிய கோவில் கல்வெட்டுகளில் மன்னரின் இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் ஆணையில் இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் வாழ்க்கைத் தேவைக்காகத் தரும் நெல் அளவைகளின் 50 பெயர்கள் உள்ளன. இரண்டாவது அரசாணையில் 400 பெண் நடனக் கலைஞர்களின் பெயர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் போன்றவை குறித்து விளக்கப்பட்டுள்ளன. கோவிலின் வடபகுதியில் அமைந்த தளிச்சேரி 'வடசிகரம்' என்றும் தெற்குப் பகுதியில் அமைந்தது 'தென்சிகரம்' என்றும் அழைக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் வரிசையாக அமைந்தன. ஒவ்வொரு அணியின் முதல் மற்றும் கடைசி வீடுகள் தலைவீடு மற்றும் கடைவீடு என அடையாளம் காணப்பட்டன. கோவிலின் மேற்குப் பக்கத்தில் தளிச்சேரிப் பெண்கள் நடனமாட இடங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் இருந்தன.[3]

பணிகள்[தொகு]

தளிச்சேரிப் பெண்டிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தனர். கோவிலில் பாட்டுப்பாட பாணர்கள் அமர்த்தப்பட்டனர். திருவிழாக்காலங்களில் தேவரடியார் நடனமாடினர். திருவொற்றியூர் திருவாதிரை விழாவில் திருவெம்பாவை ஓதப்பட்டதாகவும் இருபத்திரண்டு தளியிலார் நடனம் ஆடியதாகவும், தேவரடியார்கள் தேவாரப்பதிகங்களை அகமார்க்க முறையில் பாடினார்கள் என்றும் வரலாறு கூறுகிறது. இன்ன முறையில் இன்னவர் பாடவேண்டும் என வலியுறுத்தும் உரிமை தேவரடியார்களுக்கு இருந்தது. இவ்வுரிமையை அவர்கள் விற்றும் வந்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.

ஊதியம்[தொகு]

அவர்கள் பணியின் தன்மையைப் பொறுத்து நடனம் மற்றும் இசைக்கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட ஊதியங்களில் வேறுபாடுகள் இருந்தன. நட்டுவனாருக்கு ஒரு வேலிக்கு 100 களம் நெல் விளையும் இரண்டு வேலிகளும், ஆடல் மகளிர் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலி நிலமும் பிற இசைக் கலைஞர்களுக்கு மாறுபட்ட ஊதியமும் வழங்கப்பட்டன. ஒரு பெண் நடனக் கலைஞர் இறந்தாலோ வேறு நாட்டுக்குச் சென்றாலோ, அக்குடும்பத்தில் நடனத்தில் நன்கு தேர்ந்த மற்றொரு பெண் அதற்குப் பதிலியாக நியமிக்கப்பட்டாள்.[4]

சமூக மதிப்பு[தொகு]

சோழர் காலத்தில் இவர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்கு தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். சோழர்கள் இவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றி கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தான் விரும்பியவரை மணம் புரிந்து கொள்ள உரிமை இருந்தது. இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சை பற்றிய திராவிட முன்னேற்றக்கழக வலைப்பதிவு
  2. "இராஜராஜரின் தளிச்சேரிக் கல்வெட்டு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
  3. 26 செப்டம்பர் 2010 நாளிட்ட தினமணி இதழ்ச் செய்தி
  4. தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தளிச்சேரி&oldid=3634732" இலிருந்து மீள்விக்கப்பட்டது