உள்ளடக்கத்துக்குச் செல்

சோழர் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோழர் படை
கவனத்திற்கு: உசாத்துணைற்று, கற்பனையில் உருவாக்கப்பட்ட சோழர் கொடி
நிறுவப்பட்டதுபொ.ஊ.மு. 300
கலைக்கப்பட்டதுபொ.ஊ. 1279
சேவை கிளைகள்சோழ இராணுவம்
 • தேர்ப்படை
 • யானைப்படை
 • குதிரைப்படை
 • காலாட்படை
 • துணைப்படை
 • ஏனைய
  • வில்வீரர்
  • வாள் வீச்சு வீரர்
  • வேளைக்காரர்
  • தாக்குதல் அணி
  • மருத்துவ அணி

சோழர் கடற்படை

 • கண்ணி
 • தளம்
 • மண்டலம்
 • கனம்
 • அணி
 • பிரிவு
தலைமைத்துவம்
கட்டளைத் தளபதிஅரசர் அல்லது பேரரசர்
தொடர்புடைய கட்டுரைகள்
வரலாறுபடையெடுப்புக்கள்

போர்கள்

தரங்கள்சேனாதிபதி

தளபதி

அணிபதி

சோழர் படை (Chola Military) என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாகச் சோழர் கடற்படை காணப்பட்டது. அரசர் அல்லது பேரரசர் சோழர் படையின் தலைவராக இருந்தார்.

படை[தொகு]

கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் பெயர்களும் நமக்கு கல்வெட்டுக்களின் மூலம் கிடைத்துள்ளன. இப்படைகளின் இராணுவ வாழ்க்கை முறையைவிட, வீரர்கள் தம் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த பணிகளைப் பற்றித்தான் அதிகமாக அறியக் கிடைக்கிறது.

ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட இப்படைப் பிரிவுகளின் பெயர்களை இராஜராஜனின் கல்வெட்டுக்களிலிருந்து அறிஞர் திரு. வெங்கய்யா அவர்கள் சேகரித்திருக்கிறார். இவற்றை இராஜராஜனுக்கு முன்னும் பின்னும் இருந்த பிரிவுகளுடன் சேர்த்துக் கணக்கிட்டால் சுமார் 70 ஆக உயரும். இவை ஒவ்வொன்றின் பெயரும், அப்படையை துவக்கிய காலத்தையும் சூழ்நிலையையும் மக்களுக்கு நினைவூட்டுவதாய் இருந்திருக்கக்கூடும். இதுவரை நாம் அறியாத அரசர்களின் பல விருதுகளே இவற்றின் பெயர்களாயின. உதாரணத்திற்கு பார்த்திப சேகரன், சமரகேசரி, விக்கிரமசிங்கன், தாயதொங்கன், தானதொங்கன், சண்டபராக்கிரமன், இராஜகுஞ்சரயன் போன்ற பெயர்களைச் சொல்லலாம்.

அமைப்பும் நிர்வாகமும்[தொகு]

சோழர் படை புராதன இந்திய பாரம்பரியமான அறுமடி முறையை அமைப்புக்கும், அறுமடி முறையை நிர்வாகத்திற்கும் பயன்படுத்தினர். சோழப்படையின் வளர்ச்சியைப் பற்றிய பல்வேறு பகுதிகளைப் பற்றியும் இப்பெயர்களிலிருந்தே அறியலாம். "ஆனையாட்கள்" அல்லது "குஞ்சரமல்லர்" என்றும் குறிப்பிடப்பட்ட யானைப்படையைப் பற்றியும் "குதிரைச் சேவகர்" என்று அழைக்கப்பட்ட குதிரைப்படையைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. மற்றும் காலாட்படையின் பல பகுதிகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுக்களின் காணப்படுகின்றன. நெசவாளர்களைக் கொண்ட பிரிவு "கைக்கோளப் படை" என்று அழைக்கப்பட்டது. இவர்களை கொண்ட இப்படைப் பிரிவே சோழர் படையின் முதன்மைப் படையாகத் தொடக்க காலம் முதல் இருந்து வந்துள்ளது.[1][2][3]


வில்லேந்திய வீரர்கள் "வில்லிகள்" என்று குறிக்கப்படுகின்றனர். வலங்கை வகுப்பைச் சேர்ந்த வேளைக்காரர் என்போர் போர்ப் படையில் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். இலங்கையில் பொலன்னறுவையிலிருக்கும் விஜயபாகு மன்னன் கல்வெட்டில் இலங்கை வேளைக்காரர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவ்வேளைக்காரர் என்போர் தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட படைச் சேவகர்கள் என்ற கருத்து உள்ளது.

பிற்கால இலக்கியச் சான்றுகள் சில இக்கருத்துக்கு வலிவு தருகின்றன. பிற்காலப் பாண்டிய நாட்டில் பணியாற்றிய "தென்னவன் ஆபத்துதவிகள்" என்போர் இவ்வேளைக்காரரைப் போன்றவரே. இவர்கள் அனைவரும் அரசரின் அருகிலேயே இருந்தனர் என்றும், மிக்க அதிகாரம் பெற்றிருந்தனர் என்றும் மார்க்கோபோலோ குறித்துள்ளார். படைகளுக்குள் சிறுதனம் பெருதனம் என்ற பாகுபாடும் இருந்ததாகக் கல்வெட்டுக்களில் இருந்து தெரியவருகிறது.

அத்துடன் "நடப்பு" என்ற உணவு உடையளிக்கும் பிரிவும், "பயணம்" என்ற கடற்படை நிர்வாக உணவு உடை விடயங்களைக் கவனிக்கும் பிரிவும் காணப்பட்டன. இவ்வாறு படையினுள் காணப்பட்ட பிரிவினால் சோழர் படை புத்தாக்கம் பெற்ற பாரிய வெற்றிகளை ஈட்டக்கூடியவாறு காணப்பட்டது.[4]

சேனை[தொகு]

கவனத்திற்கு: உசாத்துணைற்று, கற்பனையில் நிகழ்பட விளையாட்டுக்காக உருவாக்கப்பட்ட சோழ குதிரைப்படை வீரர்கள்

கட்டளையிடும் அதிகாரியின் தரம்: சேனாதிபதி
தற்கால சமமான தரம்: படைத்தலைவர்

பல சேனைகளினால் படை ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. ஒன்றுகூட்டப்பட்ட ஒவ்வொரு சேனையும் அதனுடைய இடம், பங்கு என்பனவற்றுக்கு ஏற்ப அமைந்திருந்தது. பொதுவாகச் சோழர் சேனை பெரிய அமைப்புப் பிரிவாகக் காணப்பட்டது. பல காலகட்டத்திற்கேற்ப படை ஒன்று முதல் மூன்று சேனைகளைக் கொண்டிருந்தது.[5]

தளம்[தொகு]

கட்டளையிடும் அதிகாரியின் தரம்: தளபதி - (கடற்படையின் தளபதி தரத்திற்கு ஒப்பானது)
தற்கால சமமான தரம்: தளபதி

சேனை பல தளங்களாகப் பிரிக்கப்பட்டது. சேனை சுய அமைப்பான படையும் தன்னகத்தே வளங்களையும் பொருட்களையும் கொண்டது. தளம் பொதுவாகப் பின்வரும் பிரிவுகளைக் கொண்டது.

 • 3 யானைப்படை - ஒவ்வொன்றும் 300-500 யானைகளைக் கொண்டிருக்கும்
 • 3 குதிரைப்படை - ஒவ்வொன்றும் 500-1000 குதிரைகளைக் கொண்டிருக்கும்
 • 6 காலாட்படை - ஒவ்வொன்றும் 2000-3000 வீரர்களைக் கொண்டிருக்கும்
 • 2 தளப்படை - காலாட்படையும் குதிரைப்படையும் கலந்த துணைப்படை - ஒவ்வொன்றும் 1000-2000 வீரர்களையும் 500-1000 குதிரைகளையும் கொண்டிருக்கும் (இவர்கள் பின்புல பாதுகாப்பு பிரிவாகவும் பின்வாங்கும்போது பதுங்கித் தாக்கும் படையாகவும் பாவிக்கப்படுவர்.)
 • 2 'மருத்துவர் அணி - கிட்டத்தட்ட 200-300 மருத்துவர்கள் மருந்துப்பொருட்களை வண்டிகளில் இழுக்கும் குதிரைகளுடன் காணபப்டுவர்
 • 1 அல்லது 2 ஊசிப்படை - தாக்கும் பிரிவு

அணி[தொகு]

கட்டளையிடும் அதிகாரியின் தரம்: அணிபதி
தற்கால சமமான தரம்: துணைத் தளபதி

தளம் பல சிறு அணிகளாகப் பிரிக்கப்பட்டது. அணி என்பது பொதுவாகத் தளத்தின் 1/3 ஆகும். அணி பொதுவாகப் பின்வருமாறு காணப்படும்.

 • 1 யானைப்படை
 • 1 குதிரைப்படை
 • 2 காலாட்படை
 • 1 தளப்படை

படையணி[தொகு]

படையணிகள் சிறப்பித்துக் காட்டப்பட அவை தனிப் பெயர்களால் அழைக்கப்பட்டன. தஞ்சாவூர் கல்வெட்டு 33 படையணிகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.

வேளைக்காரப் படை அல்லது வேளைக்காரர் என்பது அரசனின் படையணியிலுள்ள காவல் படையணியாகும். ஸ்டெயின் போன்ற வரலாற்றாளர்கள் சிலர் கருத்துப்படி, இவர்கள் சாதாரண மக்களாகவிருந்து போர்க்காலத்தில் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் தேசிய காவலாளிகளாக இருந்திருக்கலாம் என ஸ்டெயின் கருதுகிறார். இவர்கள் மகாவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதன்படி, சிங்கள அரசு சோழ அரசுக்கு எதிராக இவர்களைப் பயன்படுத்த முற்பட்டது. பின்னர் இவர்கள் கலகம் செய்ததும் கலைக்கப்பட்டனர்.[6]

கோட்டைக் காவற்படைகள்[தொகு]

நாட்டில் தங்கியிருந்த கோட்டைக் காவற்படைகளும் அவர்களின் பாளையமும் "கடகம்" எனப்பட்டது. பாண்டிய நாட்டுடன் ஏற்பட்ட குழப்பத்தின் பின் முதலாம் குலோத்துங்க சோழன் தன் படையினரை பாண்டிய நாட்டுக்கும் சோழ நாட்டிற்கும் இடையேயான பிரதான பாதையில் படை குடியேற்றங்களை ஏற்படுத்தி நிறுத்தினான். அவ்வாறான குடியிருப்புக்களில் இரண்டு தமிழ்நாட்டின் தென் ஆற்காட்டிற்கு அருகிலுள்ள மடவிலகத்திலும் மற்றது கோட்டாறிலும் கண்டுபிடிக்கப்பட்டன.[7]

ஆட்சேர்ப்பு[தொகு]

ஆட்சேர்ப்பு எவ்வாறு நடைபெற்றது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆயினும், படைவீரர்களின் வாரிசுகள் தங்களை படையில் இணைத்துக் கொண்டிருப்பர் என நம்பப்படுகின்றது. படையில் இருந்தவர்களுக்கு கடினமான, ஊக்கமளிக்கக்கூடிய பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கலாம். சங்க இலக்கியம் குறிப்பிடும் "கடகம்" தொடர்ச்சியான பயிற்சிகளும் படை முறைகளும் இருந்தன எனக் குறிப்பிடுகின்றது.

மூன்று கை மகாசேனையைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள திருவாலீசுரத்திலிருக்கும் அரியதொரு கல்வெட்டு அங்கிருந்த மூன்று கை மகாசேனை(மூன்று அங்கங்களைக் கொண்ட பெரும் சேனை)யைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைத் தருகிறது. அக்கல்வெட்டு முதலாம் இராஜராஜன் அல்லது முதலாம் இராஜேந்திரன் காலத்திலோ எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். அக்கல்வெட்டில் காணப்படுபவை.

இவர்கள் விஷ்ணுவையையும் சிவபெருமானையும் வழிபட்டனர். கன்னரதேவனைத் தோற்கடித்துத் துரத்தினர்; காங்கேயனை வென்றனர்; கல்பாடம் என்ற ஊரையும் கடற்கரையிலுள்ள விழிஞத்தையும் அழித்தனர். கடல் கடந்து கிழக்கே சென்று மாதோட்டத்தை அழித்தனர்; மலை நாட்டைக் கைப்பற்றினர்; சாலையிலுள்ள கடற்படையை அறுத்தனர்; வள்ளாளன் என்ற சாளுக்கியரை புறம்காட்டி ஓடச் செய்தனர்; வனவாசி நகரைக் கைப்பற்றினர்; இச்சாதனைகளுக்காக காளஹஸ்தியிலுள்ள தமிழ்ப் புலவர்களால் புகழ்ந்து பாடப் பெற்றனர்; மேலும், குச்சி மலையிலுள்ள கோட்டையை அழித்து உச்சந்தி நகரைப் பிடித்தனர். தங்களை எதிர்த்த வடுகர்களை முறியடித்தனர். வாதாபிக் கோட்டையைத் தகர்த்து அந்நகரையும் கைப்பற்றினர். இம்மகா சேனையினர் பாண்டிய நாட்டில் தங்கியிருந்தனர் என்றும் மூவகையான பெரும் சேனையைச் சார்ந்த அஞ்சாநெஞ்சம் படைத்த வீரர்கள் என்றும் குறிக்கப்படுகின்றனர். திருவாலீசுரம் கோயிலையும் அதைச் சார்ந்த பூசாரி மற்றும் பணியாட்கள் உட்பட அனைத்தையும் இச்சேனையினர் பேணிவந்தனர்.

மேலே குறிப்பிட்டுள்ள வெற்றிகள் அனைத்தும் இராஜராஜன், அவரது மகன் இராஜேந்திரன் காலத்தில் அடைந்த வெற்றிகளாகும். பொ.ஊ. 1096ல் பொறிக்கப்பட்ட சேரன் மாதேவி(சேரமாதேவி) கல்வெட்டு ஒன்றில் இம்மாசேனையினரின் வீரக்கனவுகள் பற்றிக் கூறப்படுகிறது. மற்றொரு கோயிலையும் அதன் சொத்துக்களையும் இம்மான்சேனை தன் பாதுகாப்பின் கீழ்க் கொண்டுவந்தது என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

சீன அறிஞரின் சோழர் படையைப் பற்றிய குறிப்பு[தொகு]

பொ.ஊ. 1225-ல் ஒரு சீன புவியியலாளர் சா யூ-குவா சோழ நாட்டைப் பற்றியும் சோழர் படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார்.

"இந்நாடு மேற்கு இந்திய நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 7 அல்லது 8 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர்.[8]

கடற்படை[தொகு]

கவனத்திற்கு: உசாத்துணைற்று, கற்பனையில் நிகழ்பட விளையாட்டுக்காக உருவாக்கப்பட்ட சோழ ஈரூடகப் படை வீரர்கள்

சங்க காலத்திலேயே சோழர்கள் கடல் வாணிகத்திற்கு அடிகோலினர். பிறகு பல்லவர் காலத்தில் கப்பல் போக்குவரத்துப் பெருகிய காரணத்தால் தென்னிந்தியாவிற்கும், மலேயா (மலேசியா, சிங்கப்பூர்) இந்தோசீனா போன்ற தீவுகளுக்குமிடையில் வாணிகக்கலைப் பண்பாட்டுறவு மேலும் வளர்ந்தது.

9-ம் நூற்றாண்டில் "மணிக்கிராமம்" என்னும் தென்னிந்திய வர்த்தகக் குழு வங்கக்கடலைக் கடந்து எதிர்க் கடற்கரை ஓரத்தில் இயங்கத் தொடங்கிய செய்தியை அங்குள்ள தகுவாபா என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. பண்டைய வழக்கப்படியே சோழர்களும் தங்கள் கடல் ஆதிக்கத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு பல வெற்றிகளைக் கண்டனர். ஈழம், மாலைதீவு ஆகியவற்றைக் கைப்பற்றியது. சீன வரலாற்றில் குறிக்கப்பெற்றது போல, சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியது.

சோழர் காலத்திய கலங்களின் அமைப்பு எப்படி இருந்தது என்பதைப் பற்றி நேரடியான சான்றுகள் யாதும் கிடைக்கவில்லை. ஆனால் இதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மூன்று வகைக் கலங்கள் சோழ மண்டலக் கரையில் உலாவின என்று பெரிப்ளசு என்னும் நூல் கூறியுள்ளதையும் பிறகு இராஜேந்திரன் பெரியதொரு கப்பற்படையைக் கொண்டு வெற்றிகள் பெற்றதனையும் நோக்கும் பொழுது, சோழர் கப்பற்படை சிறியதும் பெரியதுமான பல கொண்ட சிறந்த படையாக அமைக்கப் பெற்றிருந்ததாகத் தோன்றுகிறது. இதில் சொழாந்தியம், சங்கரா எனும் கடற்கலங்கள் பாவனையில் இருந்துள்ளன.[9][10]

போர் விளைவுகள்[தொகு]

ஐராவதேஸ்வரர் கோயிலில் காணப்படும் குதிரை இழுத்துச் செல்லும் தேர்

போர் என்பது இருதரப்பிலுமுள்ள படை வீரர்களுக்கிடையே மட்டும் நடந்த சண்டை எனக்கருதவும், நாட்டின் அன்றாட வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கவில்லை என்ற ஓர் எண்ணத்திற்குச் சிறிதும் ஆதாரம் இல்லை. சோழர் கல்வெட்டுக்களிலிருந்தும் அவர்களுடன் போரிட்ட சாளுக்கியரின் கல்வெட்டுக்களிலிருந்தும் நமக்கு தெரியவருவது, அவர்கள் செய்த கடும் போரினால் துங்கபத்திரை நதியின் இரு பக்கங்களில் இருந்த மக்களிடையே பல தலைமுறைக்குத் தாங்கமுடியாத துயரங்களை அப்போர் உண்டாக்கியது. போரிடும் பொழுது கடைபிடிக்கவேண்டிய சில உயர்ந்த மரபுகளையும் கண்ணியத்தையும் கூட மறந்து, அமைதியாக வாழ்ந்த மக்கள் பலவாறு துன்புறுத்தப்பட்டனர்.

ஈழத்திலும் கருநாடகப் பகுதியிலும் கிடைத்துள்ள சான்றுகளை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. சாளுக்கியக் கல்வெட்டுக்கள் முதலாம் இராஜேந்திரன் கோயில்களை அழித்தான் என்றும் குற்றம் சாட்டுகின்றன. சமய வேறுபாட்டினால் இது செய்யப்பட்டிருக்கலாம் என்றாலும், பொருளாசையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சாளுக்கிய நாட்டில் செல்வச் செழிப்புடன் இருந்த பல சமணப் பள்ளிகள்(பஸ்திக்குகள்) ஆழ்ந்த சிவபக்தனான ராஜேந்திரனுக்கு நல்ல வேட்டைக் களமாக அமைந்தன என்று தெரிகிறது. அயல்நாட்டுப் படையெடுப்புக்களிலிருந்து சோழர்களுக்குக் கிடைத்த பொருள்கள் ஏராளம். அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பொன்னையும் பொருளையும் தான், அரசர்கள் தானமாக வாரிக்கொடுத்தனர் என்று அவர்கள் கல்வெட்டுக்கள் வெளிப்படையாகக் கூறுகின்றன.

பொதுவாகப் போர்க்களத்தின் மூலம் கிடைத்த பொருள் எல்லாம் அரசரையே சாரும். அவைகளை தன் விருப்பம் போல் பயன்படுத்தலாம். சீப்புலி பாகி நாடுகளில் கைப்பற்றப்பட்ட தொள்ளாயிரம் ஆடுகளை முதலாம் இராஜராஜன் தமது 6ம் ஆட்சி ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருக்கும் துர்க்கைக் கோயிலுக்குத் தானமாக அளித்துத் தனது பெயரில் பத்து நந்தா விளக்கேற்றி வைக்கப் பணித்தார் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மற்றொரு கல்வெட்டில் மலைநாட்டைக் கைப்பற்றி, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட படிமங்களில் மரகதத்தேவர் படிமம் ஒன்றை அதிகார் ஒருவர் அரசனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு அதைத் திருப்பழனம் என்னும் ஊரில் கோயில் கொள்ளச் செய்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "TVU Courses". www.tamilvu.org.
 2. Kul̲u, Tamil̲nāṭṭu Varalār̲r̲uk (14 February 1990). "Tamiḷnāṭṭu varalāṟu: pts. 1-2. Cōḷap peruvēntar kālam". Tamil̲ Vaḷarcci Iyakkakam – via Google Books.
 3. ":: TVU ::". www.tamilvu.org.
 4. The Encyclopedia of Military History from 3500 B.C. to the Present", Page 1458-59 by Richard Ernest Dupuy, Trevor Nevitt Dupuy -1986,
 5. Historical Military Heritage of the Tamils By Ca. Vē. Cuppiramaṇiyan̲, Ka.Ta. Tirunāvukkaracu, International Institute of Tamil Studies, Pages 152-156
 6. K. A. Nilakanta Sastri (1935). "Kulottunga I". The Cholas. University of Madras. pp. 314–316.
 7. South Indian Inscriptions, vol. 3
 8. The kings themselves used to fight in battlefields riding on such war elephants. There are a few occasions of the king dying in the battlefied on these elephants. Parantaka I's son Rajaditya died at Sripurambayam. The Chola king Rajadhiraja Chola I died on an elephant fighting the Chalukya army at Koppam. The epithet Yanai-mel-thunjiya (who died on an elephant) is attached to these kings in their inscriptions indicating their valour.
 9. "Periplus mentions 3 ports in tamil country of which kaveripatnam as center, as the places from which great ships which calls colondia sailed to pacific islands" - K.M.Panikkar in "geographical factors in indian history", ப-81.
 10. http://www.google.co.in/#hl=en&q=colandia&gs_sm=e&gs_upl=2238l6956l0l7953l8l8l0l0l0l0l1362l1362l7-1l1l0&um=1&ie=UTF-8&tbo=u&tbm=bks&source=og&sa=N&tab=wp&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&fp=e120df0eaafdebbc&biw=1366&bih=646 The Colandia type of vessels were employed for voyages between the Coramandel coast on the one hand and the Gangetic delta and Khryse

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்_படை&oldid=3913788" இலிருந்து மீள்விக்கப்பட்டது